சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

The political significance of the WikiLeaks revelations

விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் அரசியல் முக்கியத்துவம்

By Nick Beams
23 December 2010

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) தேசிய செயலாளர் நிக் பீம்ஸால், டிசம்பர் 20 மற்றும் 21இல் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சி பொதுக்கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட உரை கீழே அளிக்கப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கோகனின் அறிக்கையை இங்கே வாசிக்கலாம்.


Nick Beams

அமெரிக்க கசிவுகள் எதை வெளிப்படுத்தி இருக்கின்றனவோ, அந்த ஆழமான அரசியல் முக்கியத்துவத்திற்காக, விக்கிலீக்ஸிற்கும், அதன் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேவிற்கும் எதிராக அமெரிக்க அரசினாலும், உலகெங்கிலும் உள்ள ஏனைய ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் அசாதாரணமான முறைமைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த தசாப்தம் முக்கிய அரசியல் அனுபவங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது; அவை மக்களின் நனவில் அவற்றின் அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கின்றன. 2000த்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் இருந்தே, அந்த திருட்டுத்தனம் தொடங்கியது. பின்னர், இன்றுவரை விளக்கப்படாத செப்டம்பர் 2001 நிகழ்வுகள், 2003இல் ஆப்கானிஸ்தான் தாக்குதல், ஈராக்கிய அரசு "பேரழிவுமிக்க ஆயுதங்களை" வைத்திருந்தது என்ற பொய்யின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான யுத்தம், ஆகியவை தொடர்ந்தன.

இராஜதந்திரம் என்றழைக்கப்படுவதன் உண்மையான இயல்பு வெளியிடப்பட்டு வருவதால், விக்கிலீக்ஸின் வெளியீடு உலகெங்கிலும் ஓர் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது.

இது, இராஜாங்க இரகசியங்களின் முந்தைய ஒரு வெளியீட்டின் போது ஏற்பட்ட அதிர்வுகளை மீண்டும் நினைவுபடுத்துகிறதுஅது நவம்பர் 1917 ரஷ்ய புரட்சியில், அதிகாரத்தை கைப்பற்றிய சோவியத் அரசின் வெளியுறவு விவகாரத்துறைக்கான மக்கள் கமிஷனராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியால் வெளியிடப்பட்டது.

ஜார் அரசாங்கத்தின் கோப்புகளிலிருந்து ஆவணங்களை வெளியிட்ட பின்னர் ட்ரொட்ஸ்கி எழுதிய ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்: “உடைமைகளைக் கொண்டிருக்கும் சிறுபான்மை, அதன் நலன்களுக்கு ஏற்ப பெரும்பான்மையை வளையச் செய்வதற்காக, அவர்களை ஏமாற்ற பலவந்தப்படுத்தும். அதற்காக அந்த சிறுபான்மைக்கு, இரகசிய இராஜதந்திரங்கள் ஓர் அவசியமான கருவியாக இருக்கிறது. வெற்றி கொள்வதற்கான அதன் நிழலுலக திட்டங்கள், அதன் கொள்ளைகூட்ட கூட்டணிகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றுடன், ஏகாதிபத்தியம் இரகசிய இராஜதந்திர அமைப்புமுறையை உச்சக்கட்டத்திற்கு அபிவிருத்தி செய்தது. ஐரோப்பிய மக்களை உறிஞ்சும், மற்றும் அழித்து கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமானது, அதே நேரத்தில், ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்று அச்சப்படுவதற்கு போதிய காரணத்தைக் கொண்டிருக்கும் முதலாளித்துவ இராஜதந்திரத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக இருக்கிறது. நிதியியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களால், அவர்களின் நாடாளுமன்ற மற்றும் இராஜதந்திர முகவர்களுடன் சேர்ந்து இரகியமாக தீட்டப்பட்ட திட்டங்கள் குறித்த ஆவணங்களின் உண்மையை ரஷ்ய மக்களும், ஐரோப்பிய மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய மக்கள், எண்ணிலடங்கா தியாகங்களை செய்தும், உலக பொருளாதாரத்தை இழந்தும் இந்த உண்மையை அறிவதற்கான உரிமைக்கு விலை கொடுத்துள்ளார்கள்.”

90 ஆண்டுகளுக்கும் முன்னால் எழுதப்பட்ட இச்சொற்கள், இன்றைக்கு மிக சக்திவாய்ந்த வகையில் பொருந்தி நிற்கின்றன. ஏனென்றால், உலக மக்களுக்கு எதிரான அதே ஏகாதிபத்திய கபடத்தனங்கள் இன்றும் கையாளப்பட்டு வருகின்றன. ஜார் ஆட்சியின் ஆவணங்கள் முதலாம் உலக யுத்தத்தின் மத்தியில் வெளியிடப்பட்டு, யுத்தத்தின் உண்மையான இயல்பை வெளிகொணர்ந்து காட்டின. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்' இரண்டாவது தசாப்தத்திற்குள் நாம் நுழைந்திருக்கும் நிலையில், சீனாவிற்கு எதிரான யுத்த தயாரிப்புகள் குறித்து ஏகாதிபத்திய இராணுவ மற்றும் அரசியல் வட்டாரங்களுக்குள் சுறுசுறுப்பாக விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இந்த ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன.

விக்கிலீக்ஸின் வெளியீடுகள் மீது வெளியுறவுத்துறை மந்திரி கெவின் ரூட் அளித்த முதல் கருத்துக்களில் ஒன்றில், அவர் இரகசிய இராஜதந்திரங்களின் தேவை குறித்து வலியுறுத்தும் போது, அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்காகவும் அவர் குரல் கொடுத்தார். அவருடைய கருத்துக்களை முழுமையாக இங்கே மேற்கோளிடுவது மதிப்புடையதாக இருக்கும்:

 “இரகசிய தகவல்களை அதிகாரமின்றி வெளியிட்டதில் என்ன நிகழ்ந்திருக்கிறதோ, அதனால் யாரும் பயன் அடைந்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இராஜதந்திரம் என்பது அவசியமானது. பொதுத்தீர்வு இல்லாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இராஜதந்திரம் தேவைப்படுவதால் தான், அது இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சர்வதேச பிரச்சினைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதன் சாரம் தான் இங்கே பணயமாக இருக்கிறது; சர்வதேச பிரச்சினைகளை எதன் மூலம் கையாள்கிறோமோ அந்த இயந்திரம் தான்அதாவது சர்வதேச பிரச்சினைகளை எதன் மூலம் கையாள்கிறோமோ அந்த இயந்திரநுட்பம் தான் பணயமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பொதுவான களத்தில் வைக்கப்பட்டால், நம்முடைய சில அடிப்படை சவால்களைக் கையாள்வதில் நம்முடைய முயற்சிகளை ஒருங்கிணைக்க, நம் அனைவருக்குமே அதுவொரு பிரச்சினையாக இருக்கும். ஆகவே ஆஸ்திரேலியாவில் நாங்கள் இந்த தகவல்களின் வெளியீட்டைக் கண்டிக்கிறோம். இது யாருக்கும் உதவுவதாக இல்லை. உண்மையில், இது அனைவருக்குமே ஒரு பிரச்சினையாக இருக்கிறது.”

அப்படி பொதுத்தீர்வுகள் இல்லாத சில பிரச்சினைகள் என்பவை என்ன? மேலும் இரகசிய பேச்சுவார்த்தை குறித்த அவை வெளியிடப்பட்டால், "நமக்கு உண்மையான பிரச்சினையை உருவாக்குவது" எது?

கடவுச்சொல் தகவலையும், பயோ-மெட்ரிக் விபரங்களையும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளின் கடன் அட்டை எண்களையும் பெற, அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு அளிக்கப்பட்ட ஹிலாரி கிளின்டனின் உத்தரவுகளும் இந்த பிரிவின்கீழ் தான் வந்து சேர்கின்றன. மிரட்டுவதற்காக இதுபோன்ற தகவல்களைச் சேகரித்து பயன்படுத்தப்படுகின்றன. இதுவொரு குற்ற நடவடிக்கையாகும். இதுபோன்ற தகவல் அவசியம் பயனுள்ளதாக இருக்கிறது, எதற்கென்றால்ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் இராஜாங்க பிரதிநிதி, ஒரு குறிப்பிட்ட விதத்தில் வாக்களிக்கவில்லையென்றால், கிரெடிட் கார்டு மற்றும் ஏனைய விபரங்களை அணுகுவதன் மூலமாக பெறப்பட்ட அந்த குறிப்பிட்ட முக்கியமான தகவல்கள், பொதுக்களத்திற்கு அதன் வழியைக் காணக்கூடும் என்று அவரிடம் கூறப்படலாம்.

செப்டம்பர் 2006இல், அப்போதைய தொழிற்கட்சி தலைவர் கெம் பீஜ்லெவால் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்புகள் வெளிவந்தால், நிச்சயமாக அது "எல்லோருக்கும் உண்மையிலேயே பிரச்சினையைத்" தான் உருவாக்கும். கசிவுகளின்படி: “தாய்வான் தொடர்பாக சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு மோதல் வெடித்தால், அதில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க ஆஸ்திரேலியாவின் ANZUS உடன்படிக்கையை தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை என்று டௌனர், பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 2004இல் கூறிய போது, பீஜ்லெ அதற்கு கண்டனம் தெரிவித்தார். குறிப்பாக அரசாங்கமும், வெளியுறவுத்துறை மந்திரி டௌனரும் மிக மோசமாக அந்த உண்மைகளை திரித்திருந்தார்கள். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு யுத்தத்தில், அமெரிக்காவிற்கு பின்னால் இராணுவத்தை நிறுத்துவதைத் தவிர ஆஸ்திரேலியாவிற்கு வேறுவழி கிடையாது என்று பீஜ்லெ தெரிவித்தார். இல்லையென்றால், அந்த கூட்டணி முற்றிலுமாக உடைந்து, கருகிப் போகும். இவ்வாறு நிகழ்வதை ஆஸ்திரேலியா ஒருபோதும் விரும்பவில்லை.”

அதே உரையாடலில், சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான யுத்தத்தில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்கும் என்பதற்கு அவர் உத்தரவாதமளித்தார். ஆப்கானிஸ்தானிலுள்ள இராணுவ தலையீட்டைத் தொழிற்கட்சி ஆதரித்தது என்றும், “அந்த நரக நிலை தணியும் வரையில், அது அதே நிலைப்பாட்டைத் தொடரும்" என்றும் பீஜ்லெ குறிப்பிட்டார்.

இதற்குப்பின்னர், 2009 மார்ச் 24இல் புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டனுடன் ரூட்டின் கலந்துரையாடலும் இருக்கிறது. “சீனாவின் மீது ஒரு காட்டுமிராண்டித்தனமான யதார்த்தவாதி" (“brutal realist on China”) என்று தம்மைத்தாமே அழைத்துக்கொண்ட ரூட், சீனாவை சர்வதேச சமூகத்திற்குள் "கொண்டு வரவும்", ஏதேனும் குளறுபடி நடந்தால், துருப்புகளைக் களத்தில் இறக்க தயாராவது குறித்தும்" வாதிட்டார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவால் அவசியப்படுத்தப்பட்ட புவி-அரசியல் கட்டமைப்பைச் சீனா ஏற்கவில்லை என்றால்இதுதான் சர்வதேச சமூகத்திற்குள் கொண்டு வருவதைக் குறிக்கிறதுயுத்தம் விளையும்.

இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உலக மக்களின் முதுகிற்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடல்களின் உள்ளடக்கம், ட்ரொட்ஸ்கி விவரிப்பதைப் போல … "வெற்றி கொள்வதற்கான நிழலுலக திட்டங்கள்கொள்ளைக் கூட்டணிகள் மற்றும் உடன்படிக்கைகள்" என்பதற்குத் துல்லியமாக பொருந்தி நிற்கின்றன.

இப்போது, விக்கிலீக்ஸால் எழுப்பப்பட்ட பரந்த பிரச்சினைகளுக்கும், உலகெங்கிலும் உள்ள மக்களால் வாசிக்கப்பட்டு பின்தொடரப்பட்டு வரும் முக்கிய நலன்களைக் குறித்தும் திரும்புவோம். அசாங்கேவிற்கு ஆதரவான ஒரு சிட்னி ஆர்ப்பாட்டத்தில், இளம் பெண்மணி ஒருவர் குறிப்பிட்டார்: 'உலகம் முழுவதும் வஞ்சகம் நிறைந்திருக்கும் ஒரு காலக்கட்டத்தில், உண்மையைக் கூறுவதே ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்' என்று ஜோர்ஜ் ஓவெல் குறிப்பிட்டார். நாமும் இப்போது வஞ்சகம் நிறைந்த உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

அவர் சொல்வது சரிதான். ஆனால் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் இந்த வஞ்சகம், தனிநபர்களின் விளைபொருளல்ல. இது ஒரு சமூக அமைப்புமுறையின் விளைவு.

அரசியலில், ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, பொய்மையானது சமூகத்தின் வர்க்க கட்டமைப்பிற்கு உதவும் ஒரு செயல்முறையாக இருக்கிறது: “ஒடுக்குபவர்கள் அவர்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, பெருந்திரளான மக்களைக் குழப்பும் ஓர் அமைப்புமுறைக்குள் பொய்மையைக் கட்டமைக்கிறார்கள். … புரட்சி சமூக பொய்மைகளை வெளியில் எடுத்து வந்து காட்டுகிறது. புரட்சி உண்மையைப் பேசுகிறது. விஷயங்களுக்கும், சமூக உறவுகளுக்கும் அவற்றின் உண்மையான பெயர்களை அளிப்பதிலிருந்து புரட்சி தொடங்குகிறது.”

நாம் அதை தலைகீழாகவும் கூற முடியும், உண்மையைத் தேடும் ஆவல், உண்மைக்கான தேவை, ஆழ்ந்து உணர்வுபூர்வமாக உண்மையை ஏற்றுக் கொள்வது ஆகியவை சமூகப் புரட்சியின் ஒரு புதிய காலக்கட்டத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.

இராஜதந்திர விவகாரங்களிலும், மற்றும் ஏகாதிபத்திய அதிகாரங்களின் உறவுகளுக்கு இடையில் மட்டும் பொய்மை இல்லை, அது ஒரு முக்கிய சமூக மற்றும் அரசியல் செயல்முறையாக இருக்கிறது. பொய்மைகளும், பிரமாண்டங்களும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் மற்றும் சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பிற்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. மூலதனத்தில் உள்ளதற்கும் மேலாக, மார்க்ஸின் மொத்த பகுப்பாய்வும், பொய்மைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சமூக உறவுகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக ஒதுக்கபட்டுள்ளது. ஆனால் இந்த பொய்மையானது, முதலாளித்துவத்தின் ஒவ்வொருநாள் "எதார்த்தங்கள்" அல்லது தோற்ற-வடிவங்களில் உள்ளார்ந்து மறைந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ முன்னோக்கானது, சமூக உறவுகளை மூடிமறைத்திருக்கும் முகத்திரைகளைக் கிழிப்பதிலும், முதலாளித்துவ சமூகத்தின் உண்மையையும், அதன் வர்க்க கட்டமைப்பையும் அவிழ்த்துக் காட்டுவதிலும், அதன் அடிப்படையில் அதை தூக்கியெறிய, ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டியமைப்பதிலும் அக்கறை கொண்டுள்ளது.

பரந்த மக்களால் எந்தளவிற்கு மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வை உள்வாங்கி கொள்ள முடிகிறது என்பதும், அதன் அடிப்படையில் அவர்களின் அரசியல் போராட்டங்களையும், முயற்சிகளையும் அமைத்துக் கொள்ள முடிகிறது என்பதும், புறநிலைமைகளின் அபிவிருத்தியைச் சார்ந்துள்ளது. அது தான், உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னதாக எதைப் பார்க்கக்கூடாது, புரிந்துகொள்ளக் கூடாது என்பதை மில்லியன்கணக்கானவர்களுக்கு சாத்தியப்படுத்தும்.

உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்துவரும் நெருக்கடிஇதற்குள் தான், விக்கிலீக்ஸ் கசிவுகள் முக்கியமான உட்பார்வைகளை அளிக்கின்றனபுறநிலைமைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன. இந்த புறநிலைமைகளின்கீழ், பிரமாண்டங்களாலும் மற்றும் பொய்மைகளால் பல தசாப்தங்களாக மூடிமறைக்கப்பட்டிருந்த சமூக, பொருளாதார, அரசியல் உறவுகளை இப்போது அவிழ்த்துக்காட்ட முடியும்.

கடந்த 30 ஆண்டுகளைக் கவனித்துப் பாருங்கள். 1980களில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சர்—"மாற்றீடே கிடையாது" (There Is No Alternative) என்ற ஆளும் மேற்தட்டின் முழக்கத்தை முன்னெடுத்தார். அது "TINA” என்றவொரு சுருக்கெழுத்தையும் கூட பெற்றது. “சந்தையின்" செல்வாக்கிற்கும், அதற்கு உதவி வரும் நிதியியல் மற்றும் அரசியல் நலன்களுக்கும் எந்த சாத்தியப்படும் மாற்றீடும் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தங்களுக்கான அழைப்புகள், பணம் இல்லை என்ற பெரும் கதறலுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையானது, வர்க்க சமூக கட்டமைப்பின் மற்றும் அதன் பொருளாதாரத்தின் விளைபொருள் அல்ல, மாறாக தனிநபர்களின் தவறுகள் மற்றும் அவர்களின் தோல்விகளால் ஏற்படுகின்றன என்று கூறப்பட்டது.

ஆனால் 2008 செப்டம்பரில் லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவுடன் உலகளாவிய நிதியியல் நெருக்கடி ஏற்பட்ட போது, வங்கிகளையும், நிதியியல் அமைப்புகளையும் பிணையெடுக்க அங்கே பணப்பற்றாக்குறை இருக்கவில்லை. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு கால் பகுதி பணம், அவர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மட்டுமே, காங்கிரஸின் முன்னால் எந்த சட்டவரைவையும் கொண்டு வராமல், மொத்தம் 3,000 பில்லியன் டாலரை வங்கிகளுக்கும், நிதியியல் நிறுவனங்களுக்கும் அளித்தது. பைனான்சியல் டைம்ஸின் ஒரு கருத்துரை குறிப்பிட்டது: “வரிசெலுத்துவோர்கள் அவற்றைக் காப்பாற்றியதால் தான், இன்று வோல்ஸ்ட்ரீட் அமைப்புகள் தலைநிமிரிந்து நடக்கின்றன.” கோல்ட்மென் சாச்ஸ் நிதி வேண்டி 84 முறை பெடரல் பக்கம் திரும்பியது; மோர்கன் ஸ்டான்லெ 212 முறை.

மற்றொரு அரசியல் வித்தையும், அரசின் பாத்திரத்தைக் குறித்து கவலையைத் தருகிறது. நவீன அரசின் செயலதிகாரி, ஒட்டுமொத்தமாக, பூர்ஷூவாவின் பொதுவிவகாரங்களை நிர்வகிக்கும் ஒரு குழுவாக இருக்கிறார் என்ற மார்க்ஸின் பகுப்பாய்வை மறுத்துரைக்கும் ஒரு முயற்சியில், எத்தனை கேலியன் மை பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் வரலாற்று நிகழ்வுகளின் பரிசோதனை எதை வெளிப்படுத்தியுள்ளது?

உலகளாவிய நிதியியல் நெருக்கடி முறிவு கண்ட நிலையில், வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் மதிப்பிழந்த நாசகரமான சொத்துக்களாக இருந்த தங்களின் புத்தகங்களை ஒவ்வொரு நாட்டிலிருந்த அரசாங்கங்களும், மத்திய வங்கிகளும் கையிலெடுத்த போது, துல்லியமாக அவை மார்க்ஸ் பகுத்தாராய்ந்திருந்ததைப் போன்றே செயல்பட்டன. இன்று நிதியியல் சந்தைகளின் தேவைகளின்கீழ், பெரும்பாலும் வங்கிகளின் குற்றம் மிகுந்த மற்றும் பாதியளவிற்கு குற்றம் நிறைந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட கடன்களைத் திருப்பி அளிப்பதற்கான ஆதாரவளங்களை வழங்க, இந்த அரசாங்கங்கள் சமூக நலத்திட்டங்களில் எஞ்சியுள்ளவற்றை அழிக்க ஒருங்கிணைந்துள்ளன.

பகுப்பாய்வின் இறுதியில், முதலாளித்துவ சர்வாதிகாரத்தைத் திணிக்கவே, அரசு ஆயுதந்தாங்கிய அமைப்புகளைக் கொண்டிருக்கிறது என்ற மார்க்சிஸ்ட் கருத்துருவுடன், தாராளவாத அரசியல் தத்துவம் எப்போதுமே பிரச்சினையைக் கையிலெடுத்துள்ளது. "ஒருபோதும் இல்லை!”—என்று தான், கல்வியாளர்களும், இதழாளர்களும், ஏனைய பண்டிதர்களும் கூச்சலிடுகிறார்கள். “இது மற்றொரு மார்க்சிய அரைவேக்காட்டுத்தனம்!” என்கிறார்கள்.

அரசு என்பது சட்டவிதிகளின் அடிப்படையில் இருக்கிறது; நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் இயங்குகிறது என்று அவர்கள் நமக்கு சொல்கிறார்கள். ஆனால் ஸ்பெயினிலும், கிரீஸிலும், பிரிட்டனிலும், ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் நிதியியல் சந்தைகளால் கொண்டு வரப்படும் வெட்டு நிதியறிக்கைகளுக்கு எதிராக போராடும், ஆர்பாட்டத்தில் ஈடுபடும், மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக இராணுவமும், பொலிஸூம் ஒன்றுதிரட்டப்படுகின்றன நிலையில், மார்க்சிச பகுப்பாய்வின் உண்மை ஒவ்வொரு நாளும் பரிசோதித்துக் காட்டப்பட்டு வருகிறது.

இந்த நாட்டில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளையும் பாதுகாப்பதாக கூறிக் கொண்டே, அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் தோற்றப்பாட்டளவில் சட்டத்திலிருந்து அகற்றும் தொழிற்கட்சியின், 'நேர்மையாக செயல்படும் ஆஸ்திரேலிய சட்டஅமைப்பின் விதிவிலக்குகள்', உயர்ந்த மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான பொலிஸ் தாக்குதல்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, ஏதேனும் ஒருவகையில் வர்க்க நலனின் மேலெழுந்து நிற்கும் நீதி, அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் செயல்படும் நீதித்துறை அதிகாரிகளால், ஜூலியன் அசாங்கேவிற்கு அளிக்கப்படும் இன்னல்களினூடாக ஒவ்வொரு நாளும் மறுக்கப்பட்டு வருகிறது.

அசாங்கேவிற்கு எதிரான முறைமைகள், சட்டபூர்வமாகவே தீர்மானிக்கப்படுகின்றன என்று ஒருவர் நம்பினால், சந்தேகமே இல்லை, அவர் வெள்ளிக்கிழமை இரவு வானத்திலிருந்து சாந்தா கிளாஸ் இறங்கி வருவதை வரவேற்று கொண்டிருப்பார்.

பெரிய பெரிய வரலாற்று பொய்மைகளும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்ய புரட்சியானது, மலர இருந்த ரஷ்ய தாராளவாத ஜனநாயக மொட்டை நசுக்கிய ஒருவகையான குற்றம் மிக்க சூழ்ச்சி என்பது, அவற்றில் எல்லாவற்றையும் விட மிகப்பெரிய ஒன்றாக இருக்கிறது. முதலாளித்துவம் மீட்டு நிறுவப்பட்டால் மட்டும் தான், சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பாவிலும் ஜனநாயகம் மலரும் என்று, ஒவ்வொரு புதிய ஆண்டிலும், கடந்து போகும் ஆண்டிலும், பனிப்போர்கால தாராளவாதிகள் வலியுறுத்தினார்கள். அவர்கள் ஆசை நிறைவேற இருபது ஆண்டுகள் ஆயின. அதன் விளைவு என்ன? மாஃபியாவைப் போன்று ஒருவகையாகச் செயல்படும் கிரிமினல் புடினின் ஆட்சியால் ரஷ்யா ஆளப்படுகிறது; ஒரேயொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டைப் பெயரிட்டு கூற வேண்டுமானால், ஹங்கேரியில் செமிட்டிக்களுக்கு எதிரான கட்சிகள் தோன்றும் அச்சத்தில் மீண்டும் யூதர்கள் வாழ்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் எந்தளவிற்கு அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பது, விக்கிலீக்ஸ் கசிவுகளால் அவிழ்த்துக் காட்டப்பட்டிருக்கும் மிக முக்கியமான அரசியல் உண்மைகளில் ஒன்றாக உள்ளது. ஆஸ்திரேலிய, தோற்றப்பாட்டளவில் அமெரிக்காவின் ஒரு துணை அரசு என்று கூறினால் மிகையாகாது. ஆஸ்திரேலிய தொழிற்கட்சியும், தொழிற்சங்க அதிகாரத்துவமும் இந்த நாட்டின் வெளியுறவு விவகாரத்துறைக்கான முக்கிய வாய்க்கால்களாக இருக்கின்றன.

ஜூன் 23-24 சூழ்ச்சியின் மூலம் ரூட்டை வெளியேற்றியதில் யார் யார் தொடர்புபட்டிருந்தார்களோ அவர்கள் அனைவருமே, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் வழக்கமான தொடர்பையும், விவாதங்களையும் கொண்டிருந்தார்கள். இந்த முக்கிய பிரமுகர்களில், வலதுசாரி NSW செனட்டர் மார்க் அர்பீப்பும் ஒருவராக இருந்தார். NSW தொழிற் கட்சியின் பதவிகளில் அவர் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலக்கட்டதிலிருந்தே, அவர் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒரு "பாதுகாப்பான" தொடர்பை வைத்திருந்தார். முன்னாள் CIA செயலதிகாரி பிலிப் அகி, CIA இல் அவரின் வேலைகள் குறித்து எழுதிய புத்தகமான inside the Company என்பதில், செயலதிகாரிகளையும், முகவர்களையும் வேறுபடுத்தி காட்டினார். செயலதிகாரி என்பவர்கள், CIAவினால் நேரடியாக நியமிக்கப்படுபவர்கள். முகவர்கள் என்பவர்கள், அதற்கு தகவல்கள் அளிப்பவர்கள்; அதன் நலன்களுக்காக செயல்படுபவர்கள். இந்த விதத்தில், அர்பீப், அமெரிக்க அரசின் ஒரு முகவராக இருந்தார்.

அவருடைய பாத்திரம் வெளிப்பட்டபோது, அவருடைய ஆலோசகர்களில் ஒருவரான முன்னாள் NSW வலதுசாரி ALP அதிகாரத்துவவாதியும், தொழிற்கட்சி செனட்டருமான ஸ்டீபன் லூஸ்லெ, அர்பீப்பின் நடவடிக்கைகளில் எதுவும் அசாதாரணமானதோ அல்லது பாதகமானதோ கிடையாது என்று கூறினார். தொழிற்கட்சி பதவியில் இருந்தவர்களுக்கும், அமெரிக்க தூதரகத்திற்கும் இடையில் வழக்கமான கலந்துரையாடல்களும், தொடர்புகளும் இருந்தன. 1991இல் கீட்டிங், ஹாவ்கினால் தொழிற்கட்சி தலைவராகவும், பிரதம மந்திரியாகவும் மாற்றப்படுவார் என்று தூதரகத்திற்கு தகவல் அளித்ததை லூஸ்லெ நினைவுகூர்ந்தார்.

அர்பீப் எதைச் செய்தாரோ, அது பல தசாப்தங்களாக நடந்த வந்து கொண்டிருந்தது தான் என்பதை லூஸ்லெ தெளிவுபடுத்தினார். தூதரகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள அர்பீப், முயற்சிக்க வேண்டி இருக்கவில்லை. அவர் ஏற்கனவே நிலவிய வலையமைப்பிற்குள் ஒன்று கலந்திருந்தார்.

இம்மாதிரியாக நிலவிய வலையமைப்பைக் குறித்து, இதழியல் வட்டாரங்களிலும் பரவலாக அறியப்பட்டிருந்தது. The Australian இதழின் பத்திரிகையாளர் போல் கெல்லி குறிப்பிட்டார்: “ ALP வலதுசாரிக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான அரசியல் உறவின் பாரம்பரியம் ஒரு புதிய தலைமுறைக்குள் நுழைந்துள்ளது; கிரிஸ் போவென், ஸ்டீபன் கொன்ரோய், பில் ஷார்டென், அர்பீப் போன்றவர்கள் இதற்கு சாட்சியாக இருக்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருவரும் அமெரிக்க வலையமைப்பிற்குள் அதிகளவில் பிணைந்துள்ளார்கள்.” [The Australian, December 10, 2010]

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அர்பீப் மற்றும் ஏனையவர்கள் குறித்த வெளியீடுகள், ஆழமாக தொடர்ந்து கொண்டிருந்த வரலாற்று உறவின், சமகாலத்திய வெளிப்பாடு தான். அடுத்து, அதன் தோற்றுவாய்களைக் குறித்தும், அது எழுப்பியிருக்கும் முக்கிய அரசியல் பிரச்சினைகளையும் ஆராய்வோம்.

பொதுவாக, தொழிற்கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளின் அடிப்படை பாத்திரம், நாங்கள் அறிந்த வரையில், முதலாளித்துவ சமூகத்தைத் தூக்கி எறிவதற்காக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி போராடுவதாக இல்லை. மாறாக, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஆட்சியின்கீழ் மண்டியிட செய்வதே அதன் மைய வேலையாக இருக்கிறது.

ஏனைய அனைத்தையும் விட, சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதில் தலைவராக இருப்பவர் பூர்ஷூவா தான் என்பதை சமூக ஜனநாயக கட்சியினர் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் எந்த நாட்டின் பூர்ஷூவாவிற்குள் இருக்கும் உறவுகளும், மற்றும் சர்வதேச பூர்ஷூவாக்களின் வெவ்வேறு உட்கூறுகளுக்கு இடையில் இருக்கும் வேறுபாடும், வரலாற்று அபிவிருத்தியின் விளைவுகளால் மாறுகின்றன. இத்தகைய மாற்றங்கள் சமூக ஜனநாயக கட்சிகளின் நிலைநோக்கில் அவற்றின் வெளிப்பாடுகளைக் காண்கின்றன.

1920களில், ஐரோப்பாவின் சூழ்நிலை குறித்து ட்ரொட்ஸ்கி எழுதுகையில், இந்த பிரச்சினையின் மீது ஒரு முக்கியமான பகுப்பாய்வை செய்தார். ஐரோப்பாவில் இருக்கும் சமூக ஜனநாயகவாதிகள், அவர்களின் "சொந்த" பூர்ஷூவாவுடன் மிகவும் நெருக்கடியில் இருந்து வந்தார்கள், என்று அவர் குறிப்பிட்டார். இதை எவ்வாறு விளக்குவது? இது அவர்களின் தலைவர்கள் மத்தியில் நிலவிய சில எதிர்ப்புணர்வின் விளைவால் ஏற்பட்டதல்ல. அவர்கள் அனைவரும், ரஷ்ய புரட்சியைத் தொடர்ந்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடையே ஏற்பட்ட எழுச்சியை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்கள், ஆனால் ஐரோப்பிய பூர்ஷூவாவின் மாறிய நிலைப்பாட்டை அவர்கள் பிரதிபலித்தார்கள்.

முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சியுடனும், மற்றும் முந்தைய ஐரோப்பிய விவகாரங்களுக்குள் அதன் தலையீட்டுடனும், ஒரு புதிய தலைவர் உள்நாட்டிற்குள் நுழைந்திருந்தார். ட்ரொட்ஸ்கி விளக்கினார்: இப்போது சமூக ஜனநாயக கட்சியினர், தாங்களே முன்வந்து "தலைவர்களுக்கு எல்லாம் தலைவரை", அதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டதை ஒப்புக் கொண்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் வரலாற்று அபிவிருத்தி சற்றே வித்தியாசமான போக்கை எடுத்தது. ஆஸ்திரேலிய பூர்ஷூவா அதன் நலன்களையும், தனிச்சலுகைகளையும் பிரிட்டிஷ் பேரரசின் கட்டமைப்பிற்குள் வரையறுத்தது. மேலும் அந்த மனோபாவம், தொழிற்கட்சியின் நிலைப்பாட்டிலும் பிரதிபலிப்பைக் காட்டியது. பிரிட்டிஷ் பேரரசின் பாதுகாப்பிற்கு, “கடைசி நபர் மற்றும் கடைசி ஷில்லிங் (பிரிட்டனின் நாணயம்) வரைக்கும்", தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று, முதலாம் உலக யுத்தத்தை ஒட்டி, தொழிற்கட்சி தலைவர் ஆண்ட்ரூ பிஷர் அறிவித்தார்.

யுத்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலை பெரும் மாற்றங்களையும், புதிய ஏகாதிபத்திய அதிகாரங்களின் எழுச்சியையும் கொண்டு வந்தது. அவர்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாட்டில், ஆஸ்திரேலிய பூர்ஷூவா ஜப்பானுக்கு எதிராக அதனை எந்த ஏகாதிபத்திய சக்தி மிகச் சிறப்பாக பாதுகாக்குமோ, அதை நோக்கி சாயும் என்று 1930களில் நான்காம் அகிலம் விளக்கியது. 1941 டிசம்பர் 7இல், பெர்ல் துறைமுகத்தில் குண்டுவீசப்பட்டு பசிபிக் யுத்தம் வெடித்த உடனே, அதுபோன்ற ஒரு வேலையை பிரிட்டனால் கையாள முடியாது என்பது தெளிவானது. ஜப்பான் முன்னேறி வந்த வேகமானது, வெள்ளையரங்கம் (Whitehall) எதை "தொலைதூர கிழக்கு" (“Far East”) என்று அழைத்ததோ, அதன்மீதான பிரிட்டிஷின் பிடி பொறிந்து விட்டிருந்தை எடுத்துக்காட்டியது.

1941இன் இறுதியில் தம்முடைய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், தொழிற்கட்சி பிரதம மந்திரி ஜோன் கர்டின், அவருடைய புதிய நிலைநோக்கை அறிவித்தார்: “எந்தவிதமான ஒரேயொரு தடையாணையும் இல்லாமல், ஐக்கிய இங்கிலாந்துடனான நம்முடைய பாரம்பரிய தொடர்புகளை விடுவித்துக் கொண்டு அல்லது அரசு பதவியிருப்பவர்களுக்கு எவ்வித வேதனைகளையும் தராமல், ஆஸ்திரேலியா அமெரிக்காவின் பக்கம் திரும்புகிறது என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்,” என்றார்.

Europe and America எனும் ட்ரொட்ஸ்கியின் துண்டறிக்கையை கெம் பீஜ்லெ எப்போதாவது வாசித்திருப்பாரா என்பது எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது. அது சமூக ஜனநாயக கட்சியின் கூட்டணிகளை மாற்றுவது குறித்து ஆராய்கிறது. ஆனால் செப்டம்பர் 2006இல் அமெரிக்க தூதருடனான தம்முடைய உரையாடலில், முன்னாள் தொழிற்கட்சி தலைவர் ட்ரொட்ஸ்கி முடிவுகளின் ஒரு சுருக்கவுரை தொகுப்பை அளித்தார்.

அந்த உரையாடலின் குறிப்புகள் இவ்வாறு இருக்கின்றன: “யுத்தத்திற்கு பின்னர் உடனடியாக மென்ஜீஸ் தலைமையிலான தாராளவாத அரசாங்கம் அக்காலக்கட்டத்தில் வாஷிங்டனின் கொள்கைகள் மீது கொண்டிருந்த உண்மையான கவலைகளை நினைவுபடுத்திய பீஜ்லெ, கூட்டணிக்கான தொழிற்கட்சியின் வரலாற்றுரீதியிலான ஆதரவிற்கு ரூட் எடுத்துக்காட்டிய வலுவான கருத்துக்களை மீண்டும் நிலைநிறுத்தினார். அப்போதைய தாராளவாத அரசாங்கம், தென்கிழக்கு ஆசியாவில் காலனியாதிக்க கலைப்பின் ஸ்திரத்தன்மையை கலைக்க ஊக்கப்படுத்தப்படும் என்று நம்பியது. முரண்பாடாக, யுத்தத்திற்குப் பிந்தைய அமைதியின்மீது அப்பிராந்தியத்தின் அடிப்படை நம்பிக்கை குலைந்து வந்த நிலையில், இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரதம மந்திரி கர்டின் அமெரிக்காவைக் கட்டித்தழுவி இருந்த விதத்தில், தொழிற்கட்சி வழிநடத்தப்பட்டது. … அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியர்கள் கொள்கைப்பிடிப்புடன் இருந்தனர்; வாஷிங்டனின் ஒவ்வொரு நகர்வையும், ஒருவேளை தவறாக இருந்தாலும் கூட, பின்பற்றினர்.”

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், மெர்ஜீஸின்கீழ் இருந்த தாராளவாதிகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வந்த பிரிட்டிஷ் பேரரசுடன் அவர்களை அவர்களே சாய்த்துக் கொண்டிருந்த நிலையில், யுத்தத்திலும், அதற்கு உடனடி பிந்தைய காலப்பகுதியிலும் தொழிற்கட்சியானது, புதிய "தலைவர்களுக்கு எல்லாம் தலைவரை", அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கட்டித் தழுவியது.

இப்போது இந்த நிலைமையில் ஒரு புதிய மாற்றம் இருக்கிறதுஅதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வெளிப்படையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அது தன்னுடைய சொந்த பலவீனப்பட்ட பொருளாதார நிலைமையை எதிர்கொண்டிருப்பதாலும், புதிய போட்டியாளர்கள் உயர்ந்திருப்பதாலும், அது இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறையை நாடுகிறது. இவற்றை அது ஒவ்வொரு நாளும், திரைமறைவுக்குப் பின்னால் ஒருங்கிணைக்கிறது. விக்கிலீக்ஸ் இத்தகைய நடவடிக்கைகளில் சிலவற்றை வெளியில் கொண்டு வந்திருக்கிறது என்பது தான் அதன் மிகச்சிறந்த சேவையாக உள்ளது.

விக்கிலீக்ஸ் மீதான தாக்குதல் மற்றும் ஜூலியன் அசாங்யிற்கு அளிக்கப்படும் இன்னல்கள், மிகச் சரியாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடையே எதிர்ப்பை எழுப்பிவிட்டிருக்கின்றன. இது ஏனென்றால், கடந்த காலத்தின் சில கசப்பான அனுபவங்களின் மீது இந்த வெளியீடுகள் வெளிச்சத்தைப் பாய்ச்சி இருக்கின்றனஅவற்றில் சிலவற்றைப் பெயரிட்டுக் காட்ட வேண்டுமானால், ஜோடிக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்", ஈராக் மீது யுத்தம் தொடுக்க பயன்படுத்தப்பட்ட பொய்கள், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ஜனநாயக உரிமைகள் மீதான ஆழமான தாக்குதல்கள், சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு, குற்றம் மிக்க நிதியியல் நடவடிக்கைகள் என்று மட்டுமே கூறப்படக்கூடிய நடவடிக்கைகள் மூலமாக சமூகத்தின் ஒரு சிறிய மேற்தட்டை செறிவூட்டியது ஆகியவை.

மக்களின் பரந்த அடுக்குகளின், குறிப்பாக இளைஞர்களின் மத்தியில், உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது; ஒரு பொய்மைகளின் வலைக்குப் பின்னால், பெயரளவிற்கு அரசியல் சாயங்களை பூசிநிற்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகள், மனித இனத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் கொள்கைகளை நிறுவி வருகிறார்கள் என்ற கவலை இருக்கிறது.

இந்த உணர்வுகள் முற்றிலும் சரியானவை. ஆனால் இருந்தபோதினும், அவர்கள் ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு இல்லாமல் இருக்கிறார்கள். அது - பிரச்சினைகளை அதன் அடிமட்டத்திலிருந்து எதிர்கொள்வதன் மூலமாகவும், யுத்தத்தின் அபாயங்களை புரிந்து கொள்வதன் மூலமாகவும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைக் குறித்த, மற்றும் ஆழமடைந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சீர்கேடுகள் முதலாளித்துவ அமைப்புமுறையில் ஏற்பட்டிருக்கும் ஓர் உடைவின் மொத்த வெளிப்பாடாக இருக்கின்றன என்ற புரிதலில் இருந்தும் தான் அபிவிருத்தி செய்ய முடியும்.

உண்மைக்கும், ஜனநாயக உரிமைக்குமான போராட்டம் என்பது, சமூக அமைப்புமுறையைத் தூக்கியெறிவதற்கான ஒரு போராட்டத்தை குறிக்கிறது. சமூக அமைப்புமுறை, அதன் அடிப்படை சாரத்தில், பொய்மைகள் மற்றும் ஒடுக்குமுறையின் ஆதாரமாக இருக்கிறது. மேலும் இது, ஏகாதிபத்திய அமைப்பைத் தூக்கியெறிய தகுதிப்படைத்த ஒரே சமூக சக்தியாக இருக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தைத்திற்கு ஒரு திருப்பத்தை அளிப்பதையும், அதை ஒரு புரட்சிகர முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டதுடன் ஆயுதபாணியாக்குவதையும் குறிக்கிறது.

விக்கிலீக்ஸ் மீதான தாக்குதல் மற்றும் அசாங்யிற்கு அளிக்கப்படும் இன்னல்களுக்கு, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் விடையிறுப்பானது, ஆளும் வட்டாரங்களுக்குள், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எந்த அரசியல்பிரிவும் இல்லை என்பதையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. திரைக்குப் பின்னால் போட்டி அதிகாரங்களுக்கு எதிராக இராணுவ தாக்குதல்களுக்கு தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் மீது ஒவ்வொரு அரசாங்கமும் தாக்குதல்களை நிலைநிறுத்தி வரும் நிலையில், இது எப்படி இருக்க முடியும்.

இதை கூறுவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது, 'ஜனநாயக உரிமைகளுக்காகவே சில விதிவிலக்கான ஆஸ்திரேலிய பொறுப்புணர்வு இருக்கிறது; விக்கிலீக்ஸ் மீதான தாக்குதலுக்கு இந்த நாட்டின் முன்னனி ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் அவற்றையே பிரதிபலிக்கின்றன என்று கூறினால், அதை யாரும் நம்பமாட்டார்கள். விக்கிலீக்ஸிற்கு எதிரான தாக்குதல்கள் மீது கவலையை வெளிப்படுத்தும் அறிக்கையில் கையெழுத்திட்ட, மற்றும் ஒரு "தைரியமான பத்திரிகை சுதந்திரத்திற்கு" தங்களின் பொறுப்புக்களை அறிவித்த அதே ஊடக பிரபலங்கள் அனைவரும், “பேரழிவு ஆயுதங்கள்" குறித்த பொய்களைத் தான் கக்கினார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அவர்களின் பெரும் கவலையல்ல, மாறாக முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சீனாவைச் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்தத்தில் இரத்தந்தோய்ந்த ஊர்தியில் பிணைக்கப்படுகிறதே என்று தான் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஜனநாயக உரிமைகள் மீதான பாதுகாப்பு என்பது ஒரு வர்க்க பிரச்சினையாகும். அது தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் போராட்டத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட வேண்டும். அதாவது, ஒரு புதிய மக்கள் புரட்சிகர சோசலிச கட்சியைக் கட்டுவது. தொழிற்கட்சி மற்றும் ஒட்டுமொத்த தொழிற்சங்க இயந்திரங்களுடன் மட்டுமன்றிஇவை முற்றிலுமாக ஏகாதிபத்தியத்தின் முகமைகளால் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கின்றனமாறாக, ஏதோவொரு வகையில் அல்லது வேறொரு வகையில், இத்தகைய இயந்திரங்களுடன் தொழிலாள வர்க்கத்தைப் பிணைத்து வைக்க முயலும் போலி-இடது அமைப்புகள் அனைத்திடமிருந்தும் முழுமையாக உடைத்துக் கொண்டு வரவேண்டும்.

பொருளாதார கோளத்தில், உலகளாவிய நிதியியல் நெருக்கடியானது, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளும் சர்வதேச தன்மையை பெற்றிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. தற்போதைய விக்கிலீக்ஸ் கசிவுகள், அரசியல் கோளத்திலும் அதே புள்ளியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

தனது வேலைத்திட்டத்திலும், நிலைநோக்கிலும், தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதற்காக போராடும் ஒரு கட்சியை கட்டியமைப்பதில்தான் முன்னோக்கிய பாதை தங்கியுள்ளது. இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின், உலக சோசலிச புரட்சிக் கட்சியின், மற்றும் அதன் ஆஸ்திரேலிய பிரிவின், சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோக்காகும். இதில் நீங்கள் சேர வேண்டும் என்று நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.