சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Australian refugee boat disaster and the Labor government’s “border protection” regime

ஆஸ்திரேலியா: அகதிப் படகு துயரமும் தொழிற்கட்சி அரசாங்கத்தின் “எல்லைப் பாதுகாப்பு” ஆட்சிமுறையும்

Patrick O’Connor
23 December 2010
Use this version to print | Send feedback

டிசம்பர் 15 அன்று ஆஸ்திரேலியக் கரையோரத்தில் அகதிப் படகு மூழ்கியதில் 50 ஆண், பெண், மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இச்சம்பவம் தொழிற்கட்சி அரசாங்கத்தின் இராணுவமயமாக்கப்பட்ட  “எல்லைப் பாதுகாப்பு” அரசாட்சியின் அழிவார்ந்த பின்விளைவில் சமீபத்தியது ஆகும். புகலிடம் கோருவோருக்கான சட்டரீதியான சர்வதேச மரபுகள் மற்றும் ஒரு நாட்டில் குடியேற முனைவோருக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை பகிரங்கமாக உதாசீனப்படுத்தி விட்டு, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபிப்பும் ஆஸ்திரேலிய அரசு தனது எல்லைகளைக் காவல் காப்பதற்கும் அகதிகளும் புலம்பெயர்வோரும் வருவதைக் கட்டுப்படுத்துவதற்கும் கொண்டிருக்கக் கூடிய “உரிமையை” உறுதிசெய்கிறது.

புகலிடம் கோருவோர் மற்றும் புலம் பெயர்வோர் உரிமைகள் மீது தாக்குதல்கள் நடத்துவது ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், மற்றும் சர்வதேசரீதியாகவும் அதிகரித்து வருகிறது. இத்தாலியிலும் மற்ற தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கக் கூடிய புலம் பெயர்வோர் வெறுப்புக் குடியேற்றக் கொள்கைகளின் விளைவாக ஆபிரிக்காவில் இருந்து ஓடி வரும் மக்களில் நூற்றுக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் மத்தியத் தரைக்கடலில் மூழ்கி இறக்கின்றனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இறப்புகள் என்பது வழமையான நிகழ்வாக இருக்கின்றன. இப்போது இந்த எல்லை ஆளில்லா வேட்டை விமானங்களாலும் மற்றும் 20,000 எல்லை ரோந்து முகவர்களாலும் கண்காணிக்கப்படுகிறது. அதே சமயத்தில், தங்கள் எல்லைக்குள் வந்து ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளையும் அரசாங்கங்கள் குறிவைத்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க மாநிலமான அரிசோனா இலத்தீன் அமெரிக்காவை பூர்வீகமாய்க் கொண்ட தொழிலாளர்களின் அடிப்படை அரசியல்சட்ட உரிமைகளை அகற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறது; பிரான்ஸ் அரசாங்கம் ரோமா மக்களை மொத்தமாய் சொந்த நாட்டுக்கு அனுப்பி விடுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது; ஐரோப்பா முழுவதிலுமே முஸ்லீம்கள் திட்டமிட்டு பலியாக்கப்படுகின்றனர். 

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாழ்க்கைத் தரங்களின் வீழ்ச்சிக்கும் வேலைவாய்ப்பு குறைவதற்கும் புலம்பெயர்வோரையும் அகதிகளையும் பலிகடாவாக்குகிற பிற்போக்குவாத பிரச்சாரங்கள் இத்தகைய நடவடிக்கைகளுடன் உடன்வந்திருக்கின்றன. சமூக நெருக்கடிக்கான உண்மையான மூலத்தில் (முதலாளித்துவ இலாப அமைப்பு) இருந்தும், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையை நிரந்தரமாகக் கீழறுக்கும் நோக்கத்துடன் இப்போது உலகெங்கிலும் செயல்படுத்தப்பட்டு வரும் நச்சுத்தன்மையுடைய சிக்கன நடவடிக்கைகளில் இருந்தும் கவனத்தைத் திருப்புவது தான் இவற்றின் நோக்கமாகும்.

ஆஸ்திரேலியாவில் தேசிய அரசு அதன் ஸ்தாபகத்தில் இருந்தே இனவெறி மற்றும் அந்நியர் அச்சம் பொதிந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. “வெள்ளை ஆஸ்திரேலிய” குடியேற்றக் கொள்கையின் மூலமாக ஆசிய “மஞ்சள் ஆபத்தை” விலக்கி வைப்பதன் ஊடாகத் தான் தொழிலாள வர்க்கம் தனது வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிற கருத்தை ஊக்குவித்து தொழிற் கட்சியானது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசுக்கு அடிபணியச் செய்ததில் மையப் பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. இந்த கொள்கையாட்சி உத்தியோகப்பூர்வமாக பல தசாப்தங்களுக்கு முன்பே கைவிடப்பட்டது என்றாலும் அதன் மைய தத்துவார்த்த சாரம் இன்னும் எஞ்சியிருக்கிறது என்பதையே சமீபத்திய அகதிகள் படகு சம்பவத்தில் உத்தியோகபூர்வ எதிர்வினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கிறிஸ்துமஸ் தீவின் முனையில் நொருங்கிய படகில் இருந்த ஈராக்கிய, ஈரானிய, மற்றும் குர்தீஷ் அகதிகளின் நிலைக்கு சாதாரண மக்கள் பெரும் அனுதாபம் தெரிவித்தார்கள். உயிர்பிழைத்த 42 பேரிடம் இருந்து தொடர்ந்து வெளிவரும் விபரங்கள் பயமுறுத்துகின்றன. மூன்று குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மூழ்கி விட்டதால், அநாதையாகி நிற்கின்றனர். இதில் 8 வயது ஈரான் சிறுவன் ஒருவனும் உள்ளான். இப்பையனின் இரண்டு சித்திகள் இன்னொரு படகில் வந்து சேரும் வரை ஆஸ்திரேலியாவில் அச்சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் என்று யாரும் இல்லை. தொழிற்கட்சி அரசாங்கத்தின் குடியேற்றத்துறை அமைச்சர் இந்த மூன்று அநாதைக் குழந்தைகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாவலராய் ஆகியுள்ளார். இதனையடுத்து தனியாரால் இயக்கப்படும் தடுப்புக்காவல் மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் துணையின்றி வந்து புகலிடம் கோரிய சிறுவர்களின் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்துள்ளது. 

அரசியல் ஸ்தாபனமோ அகதிகளின் துயரத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் பதிலளித்தது. படகு நொருங்கி மூழ்கும் முன்னதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் குறுக்கிடாதது ஏன், அத்துடன் அந்த படகு இந்தோனேசியாவில் இருந்து கிளம்பிய பின் கடற்படையின், சுங்கத்துறையின் அல்லது பெடரல் போலிசின் ஒருவரும் கூட அதனைக் கண்காணித்திருக்கவில்லை எனக் கூறப்படுவது எவ்வாறு என்பது குறித்த தீவிரமான கேள்விகள் எல்லாம் அமுக்கப்பட்டு விட்டன அல்லது உதாசீனப்படுத்தப்பட்டு விட்டன. இதுதவிர, இந்த துயர சம்பவத்தைச் சுரண்டி இன்னும் மிருகத்தனமானதாக  புகலிடம் கோருவோருக்கான முறைகளை உருவாக்குவதற்கு முர்டோக் ஊடகங்களின் தலைமையில் ஒரு ஒன்றிணைந்த பிரச்சாரக் கச்சேரியும் இப்போது நடக்கிறது.

தொழிற்கட்சி பிரதமர் ஜூலியா கிலார்ட் தான் இந்த பிரச்சாரத்தில் முன்னணியில் இருக்கிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை. அகதி-விரோத ஆவேசம் தான் அவரது அரசியல் எழுச்சியின் மையமாகவே இருந்து வந்துள்ளது. 2001 மற்றும் 2002ல் தான் கிலார்ட் முதன்முதலில் தேசிய அளவில் அறியப் பெற்றார். அப்போது எதிர்க்கட்சியின் நிழல் கேபினட்டில் மக்கள்தொகை மற்றும் குடியேற்றத்துறைக்கான செய்தித்தொடர்பாளராக இருந்த அவர் புகலிடம் கோருவோர் மீதான தாக்குதல்களிலும், அவர்களுக்கு எதிரான அவதூறுகளிலும், ஹோவார்ட் அரசாங்கத்துடன் தொழிற்கட்சியை ஓரணியில் நிறுத்தினார். இவர் சென்ற ஜூன் மாதத்தில் கெவின் ரூட்டுக்கு எதிராக அமெரிக்க ஆதரவிலான கவிழ்ப்பின் மூலம் தான் பிரதமரான உடனேயே அகதிகள் விடயத்தில் “அரசியல் நேர்மைநிலைக்கு” ஒரு முடிவு கோரினார். புகலிடம் கோருவோர் “சிறப்பு அணுகுமுறை”யைப் பெற்றுக் கொண்டிருப்பதாக வலியுறுத்தியவர்களின் கூற்றுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தினார். சென்ற ஆகஸ்டு மாதத்தில் பெடரல் தேர்தல் சமயத்தில், மக்கள்தொகை மிகுந்து போனதால் தான் பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள் மற்றும் பிற சமுதாய சேவைகள் எல்லாம் சீர்கெட்ட நிலையில் இருப்பதாகக் கூறி, புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அளவுகள் மீதான தாக்குதலைக் கோடிட்டு காட்டினார்.

இந்த கீழ்த்தரமான பிரச்சாரத்தில் பசுமைவாதிகள் மற்றும் பாராளுமன்ற சுயேச்சைகள் என்றழைக்கப்படுபவர்கள் உட்பட ஒவ்வொரு நாடாளுமன்ற போக்குமே உடந்தையாய் இருக்கிறது. முக்கிய பெரிய கட்சிகளின் அணுகுமுறை குறித்து அவர்கள் பல்வேறு விமர்சனங்களைச் செய்தாலும், அதன் கீழமைந்திருக்கும் “எல்லைப் பாதுகாப்புக்கான” அவசியம் அதாவது வரம்பிடப்பட்ட நுழைவு மற்றும் விலக்கங்களுக்கான அவசியம் என்கிற முதற்கோளுடன் அவர்கள் முழுமையாய் உடன்படுகின்றனர்.

நாட்டின் “எல்லைகளை”ப் பாதுகாப்பதற்கு படைவலிமை இறுதியாய் அவசியப்படுகிறது என்பதே இந்த முதற்கோளின் தர்க்கம். அதனால் தான் நாடாளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினரான ஆண்ட்ரூ வில்கி ஒரு பக்கத்தில் “இருள் மனோநிலைகளை” தூண்டிவிடுவதாக லிபரல் கட்சியைக் குற்றம் சாட்டிக் கொண்டே, அதே சமயத்தில் இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிப் படகுகள் கிளம்புவதைத் தடுக்க அங்கு ஆஸ்திரேலிய போலிஸ் மற்றும் உளவு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று இன்னொரு பக்கத்தில் கோரிக்கை விடுக்கிறார். இதே போன்ற வகையில் தான், பசுமைக் கட்சியின் அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் சாரா ஹேன்சன்-யங் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையில் ஒரு சிறு அதிகரிப்பை செய்யுமாறு அழைப்பு விடுக்கிறார். இதன் மூலம் மற்ற அனைவரையும் நிராகரிப்பதுடன் அவர் உடன்படுவதை சமிக்ஞை செய்கிறார். அகதி அந்தஸ்துக்கான மிகக் குறுகிய உத்தியோகப்பூர்வ தகுதிவரையறையை பூர்த்தி செய்யத் தவறுவோரை திருப்பி அனுப்பி விடுவதற்கு பசுமைவாதிகள் தங்களது ஆதரவை வழங்குவதை வழமையாய் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் தான் விரும்பும் எந்தப் பகுதியிலும் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் பிரிக்கவியலாத ஜனநாயக உரிமை உள்ளதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். உலகமயமாக்கப்பட்ட “சுதந்திரச் சந்தை”யினால் திறந்து விடப்பட்டிருக்கும் இலாபகரமான வாய்ப்புகளைத் தேடி பூமியெங்கும் சுற்றுவதற்கு மூலதனம் கொண்டிருக்கக் கூடிய “உரிமை”யை எந்த விவாதமுமின்றி மேலிடத்தில் உள்ளவர்கள் அனுமானித்துக் கொள்கின்றனர். பெரும் பணக்காரர்கள் தாங்கள் தெரிவு செய்யும் எந்த நாட்டிலும் அல்லது நாடுகளிலும் வாழ்வதில் எந்த பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பதில்லை. ஆனால் இந்த உரிமை உலகெங்கிலும் இருக்கக் கூடிய உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மட்டும் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியத் தொழிலாளர்களின் வர்க்க நலன்கள் எல்லா இடங்களிலும் இருக்கும் தொழிலாளர்களின் நலன்களைப் போன்றதே. இதில் தண்டனை, வன்முறை மற்றும் வறுமை ஆகியவற்றுக்குத் தப்பி ஓடிவர முயலுவோரும் சேர்த்துத் தான். ஒரு கண்ணியமான வேலை, வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளுக்கான உரிமை; அடுத்த தலைமுறைக்கான ஒரு கண்ணியமான வருங்காலத்திற்கான உரிமை; உயர்ந்த தரத்துடனான கல்வி, மருத்துவம் மற்றும் பிற சேவைகளுக்கு இலவச அணுகலுக்கான உரிமை; மற்றும் முழு ஜனநாயக உரிமைகள் ஆகியவையே இந்த நலன்கள். இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கம் ஆசியா முழுவதிலும் மற்றும் உலகமெங்கிலும் இருக்கும் தனது சகாக்களுடன் இணைந்து ஒரு ஐக்கியப்பட்ட புரட்சிகரப் போராட்டத்திற்கான களத்தினை தயாரிப்பதற்கு “எல்லைப் பாதுகாப்பு” என்னும் ஒட்டுமொத்த பிற்போக்கான சட்டகத்தையும் நிராகரிப்பது ஒரு அதிமுக்கிய நிபந்தனையாக இருக்கிறது. நெருக்கடி-மிகுந்த இலாப அமைப்பை கவிழ்த்துப் போடுவதற்கும் உலகின் அனைத்து மக்களுக்கும் சமூக சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் சோசலிசப் பாதையில் பொருளாதார வாழ்க்கையை மறுஒழுங்கு செய்வதற்கும் நோக்கம் கொண்ட ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட முடியும்.