World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Julian Assange and the defense of democratic rights

ஜூலியன் அசாங்கேயும், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும்

Joseph Kishore
21 December 2010
Back to screen version

கடந்த பல மாதங்களாகவே, முறைகேடான பாலியல் நடத்தை மீது இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அரசுகளால் தம்பட்டம் அடிக்கப்படும் ஒரு பிரச்சாரத்திற்கு விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கே இலக்காக்கப்பட்டிருக்கிறார். கைது செய்வதற்கான ஒரு சர்வதேச பிடியாணையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டது; பின்னர் இலண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்; தொடக்கத்தில் பிணையளிக்க மறுக்கப்பட்டு, ஒன்பது நாட்கள் தனித்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் வீட்டுக்காவலின்கீழ் இருந்துவரும் நிலையில், அவரை ஸ்வீடனிடம் ஒப்படைப்பதற்கு எதிராக அசாங்கேயின் வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள்.

அசாங்கே ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்பட்டால், அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம். அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அமெரிக்க உளவுவேலை தொடர்பான சட்டத்தை மீறியமைக்காக அசாங்கேயின் மீது வழக்குத்தொடுக்க வெர்ஜீனியாவில் ஒரு நீதிபதிகள் குழு கூட்டாக அறிக்கை வெளியிட அழைப்புவிடுத்திருந்ததாகவும் செய்திகள் நிலவுகின்றன. அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அசாங்கேயை ஒரு "பயங்கரவாதியாக" முத்திரைக் குத்தி இருக்கிறார்கள். சிலர் அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று முறையிட்டுள்ளனர்.

அசாங்கேயிற்கு எதிராக பழிதீர்க்கும் எண்ணம், ஓர் இழிவான உத்திகளின் குணாதியசங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் ஓர் அரசியல் தூண்டுதலாக உள்ளது.

ஓர் அரசியல் தாக்குதலை மூடி மறைப்பதற்காக, தனிப்பட்ட பாலியல் முறைகேடு என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதென்பது, நன்கு அறியப்பட்ட ஒரு வழக்கமான ஒன்று தான். ஸ்வீடனின் குற்றச்சாட்டுக்களுக்கு மதிப்பளித்து எளிதில் ஏமார்ந்துவிடக்கூடியவர்கள், பழைய வழக்குகளைச் சற்று நினைவுக்கூர்ந்து பார்க்க வேண்டும்: மார்டின் லூதர் கிங், ஜூனியரின் திருமண வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட விவகாரங்கள் குறித்து சாட்சியங்கள் சேகரித்துக் கொள்ள, ஹோட்டல் அறைகளிலும், படுக்கையறைகளிலும் FBI-ஆல் பதிவு செய்யப்பட்டது; பெண்டகன் ஆவணங்களின் கசிவிலிருந்து தனிப்பட்ட விஷயங்களை அழிக்க டானியல் எல்ஸ்பேர்க்கின் மருத்துவரின் அலுவலகத்திற்குள் நிக்சனின் தலையீடு; மிக சமீபத்தில், பதவியிலிருந்த ஜனாதிபதி பில் கிளிண்டனை தொடரச் செய்ய, குடியரசு கட்சியாலும், அதன் ஊடக பின்புலத்தாராலும் மொனிக்கா லிவென்ஸ்க்கி பிரச்சினை பயன்படுத்தப்பட்ட வலதுசாரி சூழ்ச்சி ஆகியவை.

அசாங்கேயைப் பிணையில் வெளியில் விட்ட பின்னரும், அவருக்கு எதிரான ஒரு தீவிரமான பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாரயிறுதிவாக்கில், அவருக்கு எதிராக Guardian இதழ் ஒரு நீளமான குற்றச்சாட்டுப் பட்டியலை வெளியிட்டது. ஸ்வீடன் பொலிசால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதில் பாலியல் நடத்தை விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. தகவல்களின் வெளியீடுகளை நியாயப்படுத்தவும், அசாங்கேவிற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக முறைப்படுத்தவும் கோரும் ஒரு நேர்மையற்ற தலையங்கமும் இதனோடு சேர்ந்திருந்தது.

Guardian இதழின் கட்டுரைகள் வெளிப்படையாகவே அசாங்கேயிற்கும், அவருடைய வழக்கறிஞர்களுக்கும் ஆச்சரியமூட்டுவதாக வெளியாயின. இதுவரையில், விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க அரசுத்துறை இரகசிய கசிவுகளின் அடிப்படையில், தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்த சில பத்திரிக்கைகளில் ஒன்றாக அந்த பத்திரிகையும் இருந்தது. அசாங்கேயிடமிருந்து அந்த இதழ் விலகி நிற்கிறது என்பதை எடுத்துக்காட்ட, ஓர் ஆத்திரமூட்டும் மற்றும் நெறிமுறையில்லா முயற்சியின் ஒரு பாகமாக அது இருந்தது என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.

அந்த இதழ் எழுதியது: “குற்றச்சாட்டுகள் வெறுமனே ஒரு சூழ்ச்சி அல்லது வெளிப்பூச்சு தான், அதை ஆராய வேண்டியதில்லை என்ற கருத்து தவறானதாகும். ஒரு பாலியல் குற்றச்சாட்டு வழக்கைச் சட்டமுறைகளுக்கு வெளியே, இதுபோன்று [Guardian செய்ய நினைத்ததைப் போல] கொண்டு வருவதென்பது வழக்கமான ஒன்றல்ல. ஆனால் அப்படி செய்தால் பிரதிவாதியும் கேள்வி கேட்கப்படாமலேயே விடப்படுவார், அவருடைய சட்டக்குழுவும், மற்றும் ஆதரவாளர்களும் ஒரு கற்பழிப்பு வழக்கின் மையத்திலிருக்கும் பெண்களை வெளிப்படையாகவும், உக்கிரமாகவும் தாக்கக்கூடும்.”

அசாங்கேயின் வாழ்க்கையே பணயத்தில் இருக்கும் நிலைமைகளின் கீழ்ஊடகத்தின் உதவியுடன் நடக்கும் போலித்தனமான பிரச்சாரத்திலிருந்து தன்னைத்தானே காத்துக் கொள்வதற்கான அசாங்கேயின் முயற்சியில், Guardian இன் சமன்பாடு முற்றிலும் நேர்மையற்றதாக இருக்கிறது. அசாங்கே மௌனமாக இருந்துவிட்டாலும் கூட, அது குற்றச்சாட்டை ஒத்துக்கொள்வதாக காட்டப்படக்கூடும்.

அந்த இதழால் பயன்படுத்தப்பட்ட மொழிநடை, வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதாக உள்ளது. அசாங்கேயும், அவருடைய ஆதரவாளர்களும் அந்த பெண்களைத் "தாக்கவில்லை". ஆனால் அவரை மௌனமாக்கவும், விக்கிலீக்ஸிற்கு குழிபறிக்கவும் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அவரைக் காப்பாற்றவே அவர்கள் விரும்புகிறார்கள்.

மேலும் அந்த வழக்கு "கற்பழிப்பு" சம்பந்தப்பட்டதும், அல்லகுறைந்தபட்சம் அந்த வார்த்தையின் எந்த அர்த்தமுள்ள விளக்கத்தின் அடிப்படையிலும் அவ்வாறு இல்லை. பொலிஸ் அறிக்கைகளின் விபரங்களை வெளியிட்டிருப்பதன் மூலமாக, சந்தேகத்திற்கு இடமின்றி, Guardian அதன் வாசகர்களை ஏமாற்ற முயலுகின்ற போதினும், அதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், அவை அனைத்தையுமே உண்மையென்று கொண்டாலும் கூட, அது அசாங்கேயுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பிய பெண்களுடன் மனமுவந்து, வன்முறையற்ற உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட ஒரு விஷயமாக உள்ளது.

ஏதோவொரு காரணத்திற்காக, இதுவரை விளக்கப்படாமல், இந்த உறவுகள் ஒரு கிரிமினல் குணாதியசத்துடனே புகட்டப்படுகின்றன; அதுவும் அந்த சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின்னால். அசாங்கேயிற்கு ஆதரவான ஓர் இதழாளர் ஜோன் பில்கெர், அவருடைய சமீபத்திய தலையங்கத்தில் எழுதினார்: “இந்த 'குற்றத்திற்கு' பின்னர், அந்த பெண்களில் ஒருவர் டிவிட்டரில் எழுதுகையில், 'தான் உலகின் மென்மையான, அருமையான மனிதரோடு இருந்ததாக' எழுதினார். மேலும் அவருடைய வீட்டைவிட்டு வெளியேற வேண்டுமா என்று அசாங்கே கேட்ட போது, 'இல்லை, பிரச்சினையொன்றுமில்லை. அவர் அங்கேயே தங்கி கொள்ளலாம்' என்று கூறியிருந்தார். அவர்கள் ஒன்றாக இருந்த அந்த இரவைக் குறிப்பிட்டுக் கூறுகையில், அவர் படுக்கையை விட்டுவிட்டு அவருடைய கணினியில் வேலை செய்ய சென்றபோது, தாம் 'தனித்துவிடப்பட்டதாக உணர்ந்ததாகவும்' கூறினார்.”

இன்று வரையில், சளைக்காத ஓர் ஊடக பிரச்சாரத்தின் விளைவாக, "கற்பழிப்பு" குறித்து இணையத்தில் காணக்கிடைக்கும் 50 சதவீத குறிப்புகள், தற்போது அசாங்கேயை உட்கொண்டிருக்கின்றன.

அரசு தூண்டுதல்களினால் தம்பட்டம் அடிக்கப்படாமல், 'அசாங்கே ஒரு குற்றவாளி' என்ற சந்தேகங்களுக்கு ஆதரவாக மேலெழுந்திருக்கும் தகவல்கள், எந்தவித கோட்பாடும் இல்லாத தனிநபர்களின் நடவடிக்கைகளாகும். இவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்களில் ஒருவர், காஸ்ட்ரோவிற்கு எதிரான ஒரு வலதுசாரி குழுவைச் சேர்ந்தவர்; அவர், கடந்தகால காதலியை எவ்வாறு பழிவாங்குவது என்பதை விவரித்தும் கூட ஓர் ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.

அசாங்கே மீதான தாக்குதல், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். சமீபத்திய விக்கிலீக்ஸ் கசிவுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் அதன் கூட்டாளிகளின் தினசரி கபடச்செயல்களை வெளிகொண்டு வர உதவி வருகின்றன. வெளியீடுகளின் நீண்ட பட்டியலுக்கு மத்தியில், விசாரணைகளைச் சித்திரவதைகளுக்குள் திருப்பிவிடுவதையும்; சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளின்மீது அரசுத்துறையின் அவமதிப்புகளையும்; சீனா மற்றும் ரஷ்யாவுடனான யுத்தத்தின் சாத்தியக்கூறு மீதான இரகசிய விவாதங்களையும் குறித்த விவகாரங்களில் ஜேர்மனி மற்றும் ஸ்பானிய அரசாங்கங்களுடன் அமெரிக்காவின் கூட்டுறவை குறித்து ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ஆவணங்களைப் படிப்பதென்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான, இராணுவத்தன்மைமிக்க, கிரிமினல் தன்மையைக் குறித்த கல்வியாக இருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தால் முறையிடப்பட்டிருப்பதைப் போல, வெளிநாட்டு விவகாரங்கள் குறித்த அமெரிக்க இராஜதந்திரத்திற்கு இந்த வெளியீடுகள் குழிபறிக்கும் என்றால், இதற்காக மட்டுமாவது அசாங்கேயும், விக்கிலீக்ஸூம் உலக மக்களின் பாராட்டுக்கு தகுதியுடையவர்களாக ஆகிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து அழுத்தமளிப்பதை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. அமெசன், பே-பால், மாஸ்டர்கார்ட், விசா மற்றும், மிக சமீபத்தில், பேங்க் ஆப் அமெரிக்கா உட்பட, அமெரிக்காவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் நிறுவனங்களை ஒன்றுதிரட்டுவதற்கு இடையில், கசிவுகள் தொடர்ந்து வெளியாவதைத் தடுக்க முடியாதிருப்பதையும் ஒபாமா நிர்வாகம் நிரூபித்துள்ளது. அசாங்கேயை முற்றிலும் பெரும் விலைமதிப்புடைய மற்றும் முழுமையான சட்டப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் அப்பாற்பட்டு, பாலியல் குற்றச்சாட்டானது, விக்கிலீக்ஸ் ஆவணங்களில் இருக்கும் வெளிப்பாடுகளில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்பும் நோக்கங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

ஞாயிறன்று, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பெடென், அசாங்கேயை ஒரு "உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி" என்று குறிப்பிட்டதன் மூலமாக, மிகவும் திட்டமிட்ட ஒரு படியை முன்னெடுத்தார். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னரில் இருந்தே, அமெரிக்காவால் கையாளப்பட்ட பொலிஸ்-அரசு சட்டதிட்ட கட்டமைப்பின் சூழ்நிலைகளுக்குள்"பயங்கரவாதி" என்ற வார்த்தையின் எந்தவித புறநிலை விளக்கதோடும் முற்றிலுமாக தொடர்பற்று இருக்கும் இந்த மூர்க்கத்தனமான குற்றச்சாட்டானதுகுற்றச்சாட்டே இல்லாமல் இருந்தாலும் பெயர் குறிப்பிடப்பட்ட தனிநபர்களைக் கைது செய்யவும், இராணுவ சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கவும், அல்லது அவர்களைத் தூக்கிலிடவும் கூட அரசாங்கத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது.

இந்த தாக்குதலுக்கு, தங்களைத்தாங்களே இடதின்பக்கம் இருப்பதாக கூறிக்கொள்ளும் பலரின் பிரதிபலிப்பு முதுகெலும்பு இல்லாமலும், கோட்பாடற்றும் இருக்கின்றன. முன்னாள் தீவிர "தெருச்சண்டைக்காரராக" இருந்து, பின்னர் முதலாளித்துவ இதழாளரான தாரிக் அலி, இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

பிரிட்டிஷின் ஒரு தலைச்சிறந்த ஏமாற்றுத்தனத்தில், அசாங்கேயிற்கும் விக்கிலீக்ஸிற்கும் தமது ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டே, அலி அவருடைய சமீபத்திய நேர்காணலில், “ஒவ்வொரு அமைப்பும் அதற்குள் இருக்கும் தனிநபர்களையும் விட பெரியது; என்ன ஆனாலும் விக்கிலீக்ஸ் தொடர்ந்து நீடித்திருக்கும்,” என்றார்.

இது உண்மையில்லை. அசாங்கே மீது வெற்றிகரமாக தண்டனை அளிக்கப்பட்டால், அது விக்கிலீக்ஸை மட்டும் அழிக்காது என்பதோடு, பேச்சு சுதந்திரம், இணைய பயன்பாட்டு சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் என ஒட்டுமொத்தத்திற்கு எதிராகவும் அரசு அதிகாரத்தின் பெரும் தாக்குதலைப் பிரதிநிதித்துவப்படுத்தும். அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு மிகவும் கட்டுப்பட்டஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதற்காக விக்கிலீக்ஸின் ஒரு பிரிவு ஏற்கனவே உடைந்து கொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ், அசாங்கேயை ஓநாய்களுக்குத் தூக்கியெறிவதற்கான அலியின் விருப்பமாக மட்டுமே, அவருடைய கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜூலியன் அசாங்கேயை முழு பலத்துடன் ஆதரிக்க வேண்டும். உலக சோசலிச வலைத் தளம், அனைத்து உழைக்கும் மக்களையும் மற்றும் ஏகாதிபத்தியத்தையும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலையும் எதிர்க்கும் ஒவ்வொருவரையும் அசாங்கே மற்றும் விக்கிலீக்ஸின் வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முறையிடுவதற்காக, அவர்களின் ஒட்டுமொத்த வலிமையையும் ஒன்றிணைக்க அழைப்புவிடுக்கின்றது.