World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions accept budget cuts

இலங்கை தொழிற்சங்கங்கள் வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றன

By W.A. Sunil
11 December 2010
Back to screen version

இலங்கை தொழிற்சங்கங்கள் நவம்பர் 22 அன்று ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட சிக்கன வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தமது மட்டுப்படுத்தப்பட்ட சம்பள கோரிக்கைகளையும் கூட கைவிட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளவாறு, இராஜபக்ஷ வரவு செலவுப் பற்றாக்குறையை 8 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமான வெட்டிக் குறைத்துள்ளார். இது 19 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும் வெட்டாகும். பொதுத் துறை சம்பள உயர்வை தொடர்ந்தும் நிறுத்தி வைத்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வரி அதிகரிப்பை திணிப்பதோடு விலை மானியங்களை மேலும் அவர் வெட்டிக் குறைத்துள்ளார்.

வாழ்க்கைத் தரங்களின் மீதான அரசாங்கத்தின் இடைவிடாத தாக்குதல்கள் சம்பந்தமாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ச்சி கண்டு வரும் சீற்றத்தை தணிக்க தொழிற்சங்கங்கள் எடுத்த முயற்சியின் பாகமாகவே, அவை இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு சற்று முன்னதாக சம்பளக் கோரிக்கைகளை எழுப்பின. சம்பள உயர்வை நிறுத்திவைத்துள்ள அதே வேளை, வாழ்க்கைச் செலவை உயர்த்தியுள்ளதன் மூலம், இந்த வரவு செலவுத் திட்டம் சமூக நெருக்கடியை மேலும் ஆழமடையச் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்ட கால யுத்தம் கடந்த ஆண்டு முடிவடைந்த பின்னர் சமூக நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியைச் (ஜே.வி.பி.) சார்ந்த தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யூ.சி.) அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் 8,000 ரூபா (71 டொலர்) அதிகரிப்பை முன்வைத்து ஒரு வரவு செலவுத் திட்டப் பிரேரணையை முன்வைத்தது. பின்னர் பணவீக்கம் துரிதமாக அதிகரிப்பதாக கூறிய என்.டி.யூ.சி., அந்தப் பிரேரணையை 9,000 ரூபாவரை அதிகரித்து.

அரசாங்கத் துறை தொழிற்சங்கங்களின் ஒரு குழுவான தொழிற் சங்க சம்மேளனம், 2,500 ரூபா மாத சம்பள அதிகரிப்புக்கு அழைப்பு விடுத்தது. இது, அரசாங்க மற்றும் தனியார் துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு கொடுப்பதாக ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இராஜபக்ஷவுக்கு வேண்டுகோள் விடுப்பதே அன்றி வேறொன்றுமல்ல.

எவ்வாறெனினும், இராஜபக்ஷ இரு பிரேரணைகளையும் முழுமையாக நிராகரித்துவிட்டார். அவர், அரசாங்கத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 1,000 ரூபா அளவிலான கொடுப்பணவு தொகையொன்றை வரவு செலவுத் திட்டத்தில் பிரேரித்தார். அவர் தனியார்துறை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு சம்பந்தமாக எந்தவொரு அழைப்பும் விடுக்கவில்லை.

வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது, தனியார் துறை சம்பளங்கள் ஏற்கனவே அண்மையில் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் காமினி லொகுகே பொய்யாக அறவித்தார். உண்மையில், இந்தத் தொகையிலான குறைந்தபட்ச அதிகரிப்பு புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு கிட்டத்தட்ட மாதம் 1,150 ரூபாவுக்கு சமனாகும் (தனியார்துறையில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கான அடிப்படை சம்பளம் மாதம் 5,750 ரூபாவாகும்). இந்த அதிகரிப்பும் கூட ஆடைத்துறை தொழிலாளர்களுக்கு அடுத்த செப்டெம்பர் வரையும் மற்றும் ஏனையவர்களுக்கு ஜூலை வரையும் தாமதப்படுத்தப்படும்.

சம்பளக் கோரிக்கைகளை இராஜபக்ஷ நிராகரித்தமை, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சலுகைகள் பெறமுடியும் என்று தொழிற்சங்கங்களால் பரப்பப்பட்ட மாயைகளை அம்பலப்படுத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாக, என்.டி.யூ.சி. தலைவர் கே. டி. லால்காந்த, அரசாங்கம் கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாமல் உள்ளதால், பொது வேலை நிறுத்தமொன்று தவிர்க்க முடியாது என அறிவித்தார். லால்காந்த பொது வேலைநிறுத்தமொன்றை ஏற்பாடு செய்வதாக அரசாங்கத்தை அச்சுறுத்தவில்லை. மாறாக, ஒரு சமூக வெடிப்புத் தயாராகின்றது என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்.

வரவு செலவுத் திட்டத்தின் பின்னர், என்.டீ.யூ.சி. எப்போதும் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்காது என்பதை லால்காந்த விரைவில் தெளவுபடுத்தினார். நவம்பர் 25 அன்று நடந்த நிருபர்கள் மாநாட்டில் பேசிய அவர், தனியார் மற்றும் அரசாங்கத்துறை தொழிலாளர்கள் ஒரு பொது வேலை நிறுத்தத்துக்கு தயாரானால், தேசிய சேவகர்கள் சங்கத்துடன் (ஜே.எஸ்.எஸ்) சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் அதற்கு தலைமை கொடுக்க நாம் தயாராக உள்ளோம், (ஜே.எஸ்.எஸ். எதிர்க்கட்சியான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.).

உலக சோசலிச வலைத் தள நிருபர், என்.டீ.யூ.சி. ஏற்பாட்டாளர் சமந்த கோரலேயாராச்சியை தொடர்புகொண்ட போது, அவர் சமாளித்துக்கொள்ள முயற்சித்தார். அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டது. ஆயினும், வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் நாம் (அரசாங்கத்துக்கு) கொஞ்சம் அவகாசம் கொடுக்கத் தீர்மானித்தோம். அதன் பின்னர் நாம் நடவடிக்கை பற்றி கலந்துரையாடுவோம், என்றார். என்ன நடவடிக்கை என்பதைப் பற்றி அவர் விளக்கவில்லை.

உலக சோசலிச வலைத் தளம் கேள்வியெழுப்பிய போது, இதே போன்ற கருத்துக்களையே டீ.யூ.சி. தலைவர் சமன் ரத்னப்பிரயவும் கூறினார். அவர் தெரிவித்ததாவது: நாங்கள் பிரச்சினையை கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எப்போது, என்ன செய்வது, என்பது பற்றிய எந்தவொரு முடிவும் இன்னமும் எடுக்கவில்லை. முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்களும் இந்த தொழிற்சங்க முன்னணியுடன் ஒத்துழைக்கின்றன. ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் லீனஸ் ஜயதிலக்க, தாம் டீ.யூ.சி. மற்றும் ஏனைய சங்கங்களையும் அடுத்த வாரம் சந்தித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிப்பதாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், புலிகளுக்கு எதிரான யுத்த முயற்சிகளுக்கு தொழிலாளர்கள் அர்ப்பணிக்க வேண்டும் என கோரிய அரசாங்கம், 2006ல் இருந்தே சம்பள அதிகரிப்பை நிறுத்தி வைத்துள்ளது. ஆயினும், சம்பளப் போராட்டங்கள் வெடித்த போது, புலிகளுக்கு உதவுவதாக தொழிலாளர்கள் மீது இராஜபக்ஷ குற்றஞ்சாட்டியதோடு, தொழிற்சங்கங்கள் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முடித்துக்கொண்டன.

புலிகளை தோற்கடித்த பின்னர், அந்நிய செலாவனி பற்றாக்குறை நெருக்கடியொன்றை தவிர்ப்பதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.5 பில்லியன் டொலர் கடன் பெறத் தள்ளப்பட்டது. அதற்குப் பிரதியுபகாரமாக, அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி, அரசாங்க செலவுகளை வெட்டிக் குறைக்கும் அதே வேளை, பெரும் வர்த்தகர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சலுகைகள் வழங்கவும் வாக்குறுதியளித்தது.

எதிர்க் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. உடன் செயற்படுபவை உட்பட தொழிற்சங்கங்கள், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு அரசியல் மற்றும் தொழிற்சங்கப் பிரச்சாரத்தையும் தொடர்ந்தும் தடுக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அதிருப்தி வளர்ச்சி கண்ட நிலையில் ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. தொழிற்சங்கங்கள் பெற்றோலியம், மின்சாரம், துறைமுகம் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் மட்டுப்படுத்தப்பட்ட வேலை நிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டன. இன்னமும் அமுலில் உள்ள யுத்தகால அவசரகாலச் சட்டங்களின் கீழ், உடனடியாக இராஜபக்ஷ தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்த நிலையில், தொழிற்சங்கங்கள் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டன.

அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் வளர்ச்சிகண்டு வருகின்றது. இந்த வாரம் நமது நிருபர்கள் பல தொழிலாளர் பிரிவினருடன் உரையாடினர்.

நுவரெலியா மாவட்டத்தில் ராகலையில் இருந்து சிவராம் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளி தெரிவித்ததாவது: ஏனையவர்களைப் போல், நானும் யுத்தத்தின் பின்னர் மக்கள் நன்மையடைவர் என எதிர்பார்த்தேன். ஆனால், எங்களது சம்பளம் இருந்த இடத்திலேயே இருக்கும் அதே வேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டன. 285 ரூபா ஒரு நாள் சம்பளத்தில் நாம் என்ன செய்வது? [கடந்த ஆண்டு] கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர், எங்களுக்கு நாளொன்றுக்கு 405 ரூபா சம்பளம் கிடைப்பதாக தொழிற்சங்கத் தலைவர்களும் தோட்ட நிர்வாகமும் கூறிக்கொள்கின்றன. அதைப் பெறுவதற்கு நாங்கள் [மாதத்தில்] 24 நாட்களுக்கும் மேலாக வேலை செய்ய வேண்டும். எந்தத் தோட்டத்தில் 24 நாட்கள் வேலை கொடுக்கின்றார்கள்?

அரசாங்கத்தின் ஆளும் கூட்டணியின் ஒரு பாகமாக உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), ஏனைய பல தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, கடந்த ஆண்டு திணித்த சம்பள உடன்படிக்கையைப் பற்றி சிவராம் பேசினார். தாம் உடன்படிக்கையை எதிர்ப்பதாகவும் தங்களது தொழிற்சங்கங்களின் பின்னால் தொழிலாளர்கள் அணிதிரள வேண்டுமென்றும் எதிர்த் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இப்போது ஏறத்தாழ அவர்கள் அனைவரும் அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர். எங்களுக்கு உதவி செய்வதற்காகவே அரசாங்கத்தில் இணைந்துகொண்டதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர். எங்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைப்பதை காணவில்லை. ஆனால் அவர்கள் அதிக நன்மைகளைப் பெறுகின்றனர், என்றார்.

வர்த்தகர்கள் மீதான வரியை நாடகபாணியில் குறைத்த வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு பாடசாலை ஆசிரியை, அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிட்டிருப்தால் சம்பள அதிகரிப்பு ஒன்றை கொடுக்க முடியாது என வரவு செலவுத் திட்ட உரைக்கு முன்னதாகவே ஜனாதிபதி தெரிவித்து விட்டார். இது பணக்காரர்களுக்கு சார்பான வரவு-செலவுத் திட்டம். எல்லா சலுகைகளும் அவர்களுக்கே. சகல சுமைகளும் வறியவர்களுக்கே. பெரும் பணக்காரர்கள் பெற்றுள்ள நன்மைகளைப் பாருங்கள்! என்றார்.

தொழிற்சங்கங்களைப் பற்றி கேட்ட போது, எங்களது தொழிற்சங்கம் (இலங்கை ஆசிரியர் சங்கம்) எங்களது சம்பள மீதியை கோருவதற்காக கொழும்பு வலய கல்விக் காரியாலயத்தின் முன் கூடுமாறு எங்களுக்கு அழைப்பு விடுத்தது. மத்திய அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என பணிப்பாளர் தெரிவித்துவிட்டார். இப்போது தொழிற்சங்கம் மௌனமாக உள்ளது, எனத் தெரிவித்தார்.

தெற்கில் காலி மாவட்டத்தில் பலபிட்டிய அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் ஒருவர் தெரிவித்ததாவது: எனது மாத சம்பளம் 11,700 ரூபா. எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு தொழில் இல்லை. இந்த அற்பத் தொகையை வைத்துக்கொண்டு நான் எப்படி ஒரு குடும்பத்தை சமாளிப்பது? எனது சக ஊழியர்கள் பலர் கடுமையான நெருக்கடிகளின் மத்தியில் வாழ்கின்றனர். தேர்தலின் போது அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என தொழிலாளர்கள் நினைத்தார்கள். எங்களுக்கு கொடுக்கப்பட்ட கொடுப்பணவு எங்களை ஏமாற்றுவதற்காகவே கொடுக்கப்பட்டது. தொழிற்சங்கங்களைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அவர்கள் எங்களுக்காகப் போராடுவதில்லை.

ஒரு ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். எங்களுக்கு 300 ரூபா அற்பத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. அது எங்களை மோசமாக அவமதிப்பதாகும். இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்து நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என பல தொழிலாளர்கள் என்னிடம் கூறினர். யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் பாதுகாப்புச் செலவை அதிகரித்தது ஏன்? என அவர் கேட்டார். அதற்கான உண்மையான காரணம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே என அவர் தெரிவித்தார். பெரும் போராட்டங்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராவது போல் தெரிகிறது, என அவர் கூறி முடித்தார்.