World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: State-backed police riot signals new lurch to the right

பிரான்ஸ்: அரச ஆதரவுடனான போலிஸ் கலகம் வலது நோக்கிய புதிய திருப்பத்தின் அறிகுறி

By Antoine Lerougetel
20 December 2010
Back to screen version

ஒரு போலிஸ் கலகத்திற்கு முன்னணி பிரெஞ்சு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதானது ஜனாதிபதி நிகோலோ சார்க்கோசியின் அரசாங்கம் மேலும் வலது நோக்கிய சட்டம்-ஒழுங்கு கொள்கைகளை நோக்கி திரும்புவதன் ஒரு அறிகுறியாகும். ஒரு அப்பாவி மீது போலியாகக் குற்றம் சுமத்த முனைந்த ஏழு சக போலிசார் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 10 அன்று, 200 போலிஸ் அதிகாரிகள் பாரிசின் வடகிழக்கு புறநகர்ப் பகுதியில் இருக்கும் பொபினி நீதிமன்றத்திற்கு வெளியே எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்த போலிஸ் கலகம் குறித்து டிசம்பர் 13 அன்றான Le Monde தலையங்கம் பின்வருமாறு விவரித்தது: வெள்ளியன்று மாலை பொபினி நீதிமன்றத்தை முற்றுகையிட்டு சீருடையில் போலிசார் சுழல் விளக்குகள் எரிய நின்று கொண்டிருந்த போது பிரான்சின் மக்களால் தங்களது கண்களையே நம்ப முடியவில்லை. ஒழுங்கு காக்க வேண்டிய பிரதிநிதிகளில் 200 பேர் தங்களது சைரன்கள் ஒலிக்க வீதியில் ஒழுங்கின்மையை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஏழு பேருக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்பதற்கு அங்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு போலிஸ்காரருக்கு ஏற்பட்ட காயத்திற்கு ஒரு அப்பாவியைக் குற்றம் சாட்டியதற்கு நீதிமன்றம் அவர்களைக் கண்டனம் செய்திருந்தது. ஒரு கார்த் திருடனை விரட்டிச் செல்லும் போது போலிசார் தங்களது சகா ஒருவரின் மீது மோதி அவரின் காலை காயமாக்கி விட்டனர். தங்களது தவறை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக அவர்கள் இந்த சம்பவம் குறித்த ஒரு போலியான அறிக்கையை அளித்திருந்தனர்.

போலிசார் குற்றம் சுமத்த முயன்ற அந்த மனிதர் தண்டிக்கப்பட்டிருந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைத்திருக்கக் கூடும். போலிசார் போலி வழக்கு பதிய முனைந்த பகுதி கடும் சமூக பதட்டங்களுக்கு ஆளான பகுதி ஆகும். பிரான்சில் மொத்தம் 751 வறுமை பீடித்த பதட்டத்திற்குரிய நகர்ப்புற மண்டலங்கள் (ZUS) உள்ளன. இதில் பொபினியைச் சுற்றியுள்ள Seine-Saint-Denis மிக அதிக அடர்த்தி கொண்டதாகும். 2009ன் இறுதியில், இந்த பகுதிகளில் இருக்கும் இளைஞர்களில் 43 சதவீதம் பேரும் இளம் பெண்களில் 37 சதவீதம் பேரும் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக ZUS க்களுக்கான தேசிய ஆய்வகம் (OZUS) சமீபத்தில் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த அளவு இந்த வயதோருக்கு தேசிய அளவில் ஏற்கனவே நிலவி வரும் சீரழிவான அளவைக் காட்டிலும் இருமடங்கானதாகும்.

ஏழு போலிசார் தடுப்புக்காவல் தண்டனைக்குள்ளாகும் தீர்ப்பை பெற்றிருப்பதை அறிந்ததும், சமீபத்தில் Seine-Saint-Denis போலிஸ் ஆணையராகி இருக்கும் கிறிஸ்டியன் லாம்பர்ட் நேராக Aulnay-sous-Boisல் இருக்கும் குற்றம்சாட்டப்பட்ட போலிசாரின் காவல்நிலையத்திற்குச் சென்றார். அவர் அறிவித்தார், “அவர்கள் செய்த தவறை மறுக்கமுடியாதுஆயினும் நீதிமன்றத் தீர்ப்பு திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. போலிசாரின் எதிர்ப்பை தான் புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

லாம்பர்ட் கூறியதற்குப் பின் அடுத்தடுத்து உயர் அரசாங்க அதிகாரிகளிடம் இருந்தான ஆதரவு அறிக்கைகளும் வெளிவந்தன. இவை லாம்பர்டுக்கு மேலிட நிர்வாகத்தின், அதாவது சார்க்கோசியின், ஆதரவு இருப்பதை தெளிவாக்கின. உள்துறை அமைச்சரும் சார்க்கோசியின் நெருங்கிய அரசியல் சகாக்களில் ஒருவருமான Brice Hortefeux, “சட்டத்தை செயல்படுத்துவோரின் கண்களில் இந்த அபராதம் ரொம்பவும் அதிகமானதாய் முறையான வகையில் தோன்றலாம்.

சார்க்கோசி இந்த விடயத்தில் பேசவில்லை, ஆயினும் ஆளும் UMPயின் (மக்கள் பெரும்பான்மைக்கான ஒன்றியம்) பலரும் Hortefeux ஐ ஆதரித்து கருத்துகளை வெளியிட்டனர்.

ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் காலில் போட்டு மிதிப்பது என்பது இன்னும் மிக அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அதனால் ஒரு தீவிரமான குற்றத்தில் போலிசார் சம்பந்தப்பட்டிருப்பதை நீதிமன்றம் கண்டறிந்திருப்பதை ஒருவர் கூட மறுப்பதற்கில்லை.

போதுமான ஆதாரம் மற்றும் குற்றமற்ற தன்மைக்கான அனுமானம் ஆகிய அடிப்படை நிர்ணயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிற போலிஸ் தொழிற்சங்கங்கள் இந்த கோட்பாடுகளை செயல்படுத்தும் நீதிபதிகளை (இவர்களை எப்போதும் பொறுப்பற்றவர்களாக போலிசார் தொடர்ந்து குற்றம்சாட்டுவர்) தாக்கியிருக்கின்றன. போதைமருந்து கடத்துபவர்கள், வழிப்பறித் திருடர்கள், படுகொலை செய்தவர்கள் இவர்களைப் போன்றவர்களை எல்லாம் ஏதேனும் சாக்குப்போக்கு காரணத்தைச் சொல்லி வெளியில் விடுகிற மோசமான சித்தாந்தத்தை மறைப்பதற்கு இந்த நீதிமன்றம் பிரபலமானதாகும்என்று Synergie-Officers என்னும் போலிசார் தொழிற்சங்கம் அறிவித்தது. இந்த நீதிமன்றத்திலும் சரி மற்ற எங்கிலும் சரி மறுபடி மறுபடி தவறு செய்பவர்கள் தண்டனையில்லாமல் விடுதலைசெய்யப்பட்டு விடுகிறார்கள்என்று அலையன்ஸ் போலிஸ் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலரான Jean-Claude Delage ஊடகங்களிடம் முறையீடு செய்தார்.

Hortefeuxன் கருத்துகளுக்கு நீதிபதிகளின் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிகாரங்களின் பிரிப்புக் கோட்பாட்டை மீறியதற்காகநீதிபதிகளின் சங்கத்தின் (SM) பொதுச் செயலரான Matthieu Bonduelle, Le Nouvel Observateurக்கு அளித்த நேர்காணலில் Hortefeux ஐக் கண்டித்தார்.

தண்டனைச் சட்டத்தின் 434-25 பிரிவை Bonduelle மேற்கோள் காட்டினார்: நீதியின் அதிகாரத்தை பாதிக்கும் விதத்தில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பிற்கு வெளிப்படையாக அவமதிப்பு சேர்க்க முயலும் நடவடிக்கை....6 மாதங்களுக்கு அதிகமான சிறைத் தண்டனைக்கும் 7,500 யூரோ அபராதத்திற்கும் உரிய குற்றமாகும்.ஆயினும்  Hortefeuxக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதனையும் எடுக்க நீதிபதிகள் சங்கம் பரிசீலிக்கவில்லை.

Bonduelle மேலும் கூறினார்: ”Brice Hortefeux இத்தகையதொரு நிலைப்பாடுகளை எடுப்பது இதுதான் முதல்முறையல்ல. ஜூலையில் ஒரு ஜிப்சி இனத்தை சேர்ந்தவரை போலிஸ் கொன்று விட்டது, அவருக்கு இந்த அமைச்சர் ஆதரவளித்தார்.

இந்த கொலையை ரோமாக்கள் வெளியேற்ற அலையைத் தொடங்குவதற்கு சார்க்கோசி பயன்படுத்திக் கொண்டார். முன்னதாக இந்த நடவடிக்கை மக்களிடம் அவப்பெயரை சம்பாதித்திருந்ததோடு ஐரோப்பிய ஆணையரான விவியேன் ரெடிங்கிடம் இருந்தும் கூட கண்டனத்தைப் பெற்றிருந்தது. ஆயினும் அதன்பின் ரெடிங் பின்வாங்கி விட்டார்

Hortefeuxன் கருத்துகளுக்களை விமர்சிக்கும் அரசியல் மற்றும் ஊடக எதிர்வினைகள் முனைமழுங்கி இருக்கின்றன. Hortefeux ஐ அல்லது கலகத்தில் ஈடுபட்ட போலிசாரை பதவிநீக்க ஒருவர் கூட கோரவில்லை. போலிஸ் படைகள் நீதிமன்றங்களின் அதிகாரத்தை எதிர்த்து நிற்கலாம் (ஒரு போலிஸ் அரசுக்கான அத்தியாவசியமான குணம்) என்பதே அவற்றுக்கு அளிக்கப்படுகிற செய்தியாக அமைந்திருக்கிறது.

போலிஸ் ஆணையர்களின் கூட்டத்தில் பிரதமர் பிரான்சுவா ஃபிய்யோன் பேசுகையில், குற்றம்சாட்டப்பட்ட போலிஸ்காரர்கள் மன்னிக்கமுடியாத செயல்களைச் செய்திருந்தனர்என்றும் போலிசாரின் மரியாதை காக்கப்படும் வகையில் முன்னுதாரணமாய் நடந்து கொண்டிருக்க வேண்டும்என்றும் தெரிவித்தார். ஆயினும் மக்களுக்கு எதிரான வகையில் தலையீடு செய்யும் போலிசாரின் திறமையை வலுப்படுத்துகிற நிலைப்பாட்டில் இருந்து தான் அவர் பேசிக் கொண்டிருந்தார். போலிசாருக்கும் மற்றும் நீதிபதிகளுக்கும் இடையிலான மோதல் அரசைப் பலவீனப்படுத்த கொண்டுவிடலாம் எனும் கவலையை அவர் வெளியிட்டார்.

கண்காணிப்பில் போதுமான அளவு முதலீடு செய்யாததற்கு சார்க்கோசியை விமர்சித்து சமீபத்தில் பாதுகாப்பு குறித்த ஆவணம் ஒன்றை வெளியிட்டிருக்கும் சோசலிஸ்ட் கட்சிக்காகப் பேசுகையில், முதல் செயலரான மார்டின் அப்ரி அறிவித்தார்: நீதிபதிகள் எடுத்திருக்கும் ஒரு முடிவுக்கு திரு. Hortefeux மீண்டுமொரு முறை அவர்கள் மீது தாக்கியிருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இளைஞர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அவர்கள் நாட்டின் நீதி அமைப்பை மதிக்கவில்லை என்றும் நீங்கள் அவர்களிடம் பெரும் உரைகள் ஆற்ற முடியாது.

Le Monde தலையங்கம் அறிவிக்கிறது: ஒவ்வொருவரும் தங்களது கருத்தைக் கூறக் கூடிய இந்த சமநிலையான நிகழ்முறையில் உள்துறை அமைச்சர் திடீரென மூக்கை நுழைப்பது சட்டவிரோதமானதாகும். ஒரு நீதிமன்றத் தீர்ப்பிற்கு அவமதிப்பு சேர்க்கும் கருத்துகளை சட்டம் எதிர்க்கிறது, இது திரும்பத் திரும்ப கூறப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.அதன்பின் Hortefeux சார்க்கோசியின் நண்பர் என்பதால் அவரும் தீண்டத்தகாதவரே என்று கூறி அத்தோடு அதனை இத்தலையங்கம் விட்டு விடுகிறது.

அரசு அல்லது போலிஸ் வட்டாரங்களில் இருந்து ஏறக்குறைய எந்த எதிர்ப்பும் வராமல் போலிசாரால் கலகத்தில் ஈடுபட முடிந்ததென்றால் அது சார்க்கோசியின் அரசாங்கம் ரோமாக்களுக்கு குறி வைத்தது போன்ற வலதுசாரி நடவடிக்கைகளுக்குத் திரும்புவதன் ஒரு அறிகுறி ஆகும். அந்த நடவடிக்கை இலையுதிர் காலத்தில் நடந்த ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களின் சமயத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வேலைநிறுத்தங்கள் ஒடுக்கப்பட்டதும் காட்டிக் கொடுக்கப்பட்டதும் அரசை அதன் போலிஸ் தூண்டுதல்களுக்கும் சட்டம் ஒழுங்கு குறித்த பதற்றத்தை கிளறி விடுவதற்கும் திரும்ப அனுமதித்திருக்கிறது. எந்த உண்மையான இடதுசாரி இயக்கமும் இல்லாதிருப்பதும் தொழிலாள வர்க்க போராட்டம் கழுத்து நெரிபடுவதும் தான் அரசின் சட்டவரம்பின்மையையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் முன்செல்வதற்கு அனுமதிக்கிற அத்தியாவசியமான முன்நிபந்தனை ஆகும்.

பெருந்திரளான மக்களின் வாழ்க்கைத் தரங்களை மிகப்பெருமளவில் குறைக்கிற பொருளாதார நெருக்கடியாலும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளாலும் உருவாக்கப்படுகின்ற சமூக உளைச்சலுக்கு ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பு போலிஸ் அல்லது இராணுவ அரசு நடவடிக்கைகளை நோக்கித் திரும்புவது என்பதாகத் தான் இருக்கிறது. கிரீஸிலும் ஸ்பெயினிலும் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்தப்பட்டது, இங்கிலாந்தில் பல்கலைக்கழக கட்டணங்களில் ஏற்பட்ட மிகப்பெரும் அதிகரிப்புகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பிரிட்டன் போலிஸ் அடக்குமுறையைக் கையாண்டது, பிரான்சில் வேலைநிறுத்தம் செய்த எண்ணெய் சுத்திகரிப்புத் துறை தொழிலாளர்களுக்கு எதிராக கலகத் தடுப்பு போலிசார் களமிறக்கப்பட்டனர்.