தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி Italian Prime Minister Berlusconi narrowly survives confidence voteஇத்தாலிய பிரதம மந்திரி பெர்லுஸ்கோனி மிகக் குறுகிய வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கைப் பெறுகிறார்
By Peter Schwarz
Use this version to print | Send feedback இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி தற்காலிகமேனும் பதவியில் தொடர்வார். செவ்வாயன்று அவர் பெரும் அழுத்தம் நிறைந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மிக குறுகிய பெரும்பான்மையில் தப்பிப் பிழைத்தார். பிரதிநிதிகள் மன்றத்தில் 314 பேர் பெர்லுஸ்கோனிக்கு ஆதரவாகவும் 311 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். செனட் மன்றத்தில் முடிவு எதிர்பார்த்தபடி இருந்தது. 162 செனட்டர்கள் பிரதம மந்திரிக்கு ஆதரவு கொடுத்தனர், 135 பேர் எதிர்த்து வாக்களித்தனர். மே 2008ல் பெர்லுஸ்கோனி 1994ல் இருந்து 4ம் தடவையாகப் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய கூட்டணி அரசாங்கம், அவருடைய கட்சி, சுதந்திர மக்கள் கட்சி (People of Freedom-PDL), வெளிநாட்டவர்கள் எதிர்ப்பு வடக்கு லீக் ஆகியவற்றைக் கொண்ட பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளிலும் போதுமான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. ஆனால் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு பெர்லுஸ்கோனி அரசாங்கத்தை விரைவாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது. கிரேக்த்திற்குப் பின்னர், இத்தாலியின் அரசாங்கக் கடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது அதிகபட்சமானதாகும். இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 25 சதவிகிதம் என்றுள்ளது. மேலும் 60 மில்லியன் இத்தாலியர்களில் 8 மில்லியன் பேர் மாதம் ஒன்றிற்கு 800 ஈரோக்களை விடக் குறைவாகத்தான் சம்பாதிக்கிறார்கள். இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம் பெரிதும் முடங்கி இருப்பதுடன் போதாது என்று ஒரு அவதூறு ஊழலில் இருந்து மற்றொன்றிற்கும் தடுமாறி விழுகிறது. பெர்லுஸ்கோனியின் செய்தி ஊடகப் பேரரசின் ஊழல்கள் மற்றும் குண்டர்களின் குறுக்கீடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள், அவற்றைத் தொடர்ந்து 74 வயது பெர்லுஸ்கோனியை சிறுவயதினருடன் பாலியலில் இணைத்துக் கூறப்படும் ஊழல்கள் ஆகியவை பல வாரங்கள் தொடர்ந்து தலையங்கங்களாக வந்திருந்தன. பெர்லுஸ்கோனி அகற்றிவிடுவதாகக் கூறியிருந்த நாபிள்ஸில் குப்பைக் குவியல் இன்னும் அதிகமாகத்தான் இன்று போய்விட்டது. அவரைப் பின்பற்றுபவர்களின் மத்தியிலேயே பெர்லுஸ்கோனி பெருகிய முறையில் ஆதரவை இழந்து வருகிறார். முக்கிய வணிகப் பிரதிநிதிகள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். தொழில்துறை அதிபர்கள் சங்கத்தின் தலைவரான எம்மா மார்சிகாகலியா அவரைப் பகிரங்காமாகத் தாக்கினார். அந்த அம்மையாருக்கு முன்பு அப்பதவியில் இருந்த பெராரியின் தலைமை நிர்வாக அதிகாரி லுக்கா டி மோன்டெஜெமோ, “15 ஆண்டுகளாகச் செயல்படத் தவறிய பின், இப்பொழுது இந்த ஒரு நபர் காட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது முக்கியமாகும்” என்றார். இறுதியில், பாராளுமன்றத் தலைவர் கியான்பிராங்கோ பினி எதிர்ப்பிற்குத் தலைமை தாங்கினார். 2009ல் இந்த முன்னாள் பாசிஸ்ட் தன்னுடைய Alleanza Nazionale (AN) ஐ பெர்லுஸ்கோனியுடையதுடன் இணைத்திருந்தார். இப்பொழுது அவர் பெர்லுஸ்கோனிக்குப் பின்னர் பதவிக்குத் தான் வரக்கூடிய வாய்ப்பைக் காண்பதால் அவரை எதிர்த்துள்ளார். 2010 கோடையின்போது அவரும் அவருடைய சார்பாளர்களான 36 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இருந்து விலகி அவர் தன்னுடைய சொந்தக்குழுவான FLI எனப்படும் இத்தாலியின் வருங்காலமும் சுதந்திரமும் என்னும் கட்சியைத் தொடங்கினார். இது பிரதிநிதிகள் மன்றத்தில் பெர்லுஸ்கோனிக்கு தேவையான பெரும்பான்மையை இழக்கச் செய்துவிட்டது. சிறிது தயக்கத்திற்குப் பின்னர், பினியின் FLI யும் ஒரு அவநம்பிக்கை தீர்மானத்தை முன்வைத்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியில் இணையற்ற வகையில் கறைபடிந்த பூசல் ஏற்பட்டது. பெர்லுஸ்கோனி முகாம் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 500,000 ஈரோக்கள் இலஞ்சம் கொடுத்து, மற்றும் ஒருவருக்கு அவருடைய நிறுவனத்திற்கு பணிகளைக் கொடுத்து, நான்காம் நபருக்கு வருங்கால அரசாங்கத்தில் இடம் அளிப்பதாகவும் உறுதி கொடுத்தது. மற்றவர்களும் தங்கள் இடங்களை இழக்கக்கூடும் என்ற நிலையை எதிர்நோக்கி அச்சுறுத்தப்பட்டனர், ஆனால் வருங்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு இருக்கும் என்று கூறப்பட்டது. நம்பிக்கை வாக்களிப்பிற்கு ஒரு நாள் முன்னதாக பெர்லுஸ்கோனி அவரைப் பதவி நீக்கம் செய்வது என்பது நாட்டை ஐரோப்பியக் கடன் நெருக்கடியின் இதயத்தானத்தில் ஆழ்த்திவிடும் என்று அச்சுறுத்தினார். நிதியச் சந்தைகளில் தொடர்ந்து இருக்கும் ஊகங்களை ஒட்டி, “ஒரு நெருக்கடியை எந்த வெளிப்படையாக, நம்பகத்தன்மையற்ற காரணங்களுக்காகக் கொண்டுவருதல் பைத்தியக்காரத்தனம்” என்று அவர் கூறினார். அதே நேரத்தில் அவர் எதிர்த்தரப்பு கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுக்கு, (UDC) வருங்கால அரசில் பதவிகளையும் கொடுத்தார். பீனியின் ஆதரவாளர்கள் பலர் பெர்லுஸ்கோனியின் பரிசளிப்புக்கள் அல்லது அச்சுறுத்தல்களுக்கு வரவேற்பு அளித்தனர். 36 FLI பிரதிநிதிகளில் 6 பேர் அத்தகைய அரசாங்க நெருக்கடியை ஏற்படுத்துவது நியாயமற்றது என்றும் அவர்கள் “நாட்டின் மீது உள்ள ஆழ்ந்த பற்றினால்” பெர்லுஸ்கோனிக்கு வாக்களிக்கப் போவதாகவும் கூறினர். ஆயினும்கூட, நம்பிக்கை வாக்கு மிக நெருக்கமாகப் போயிற்று, கூட்டம் இரு பிரதிநிதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டபோது தடைக்கு உட்பட்டது. நம்பிக்கை வாக்களிக்கப்பட்டுள்ளது ஒன்றும் இத்தாலியின் அரசியல் நெருக்கடியை தீர்க்கப் போவதில்லை. குறைந்த, விளிம்பில் நிற்கும் பெரும்பான்மை இருக்கும் நிலையில் அரசாங்கம் அதிகம் செயல்பட முடியாது. வாக்களிப்பிற்கு முன் பெர்லுஸ்கோனியின் கூட்டணிப் பங்காளி, வடக்கு லீக்கைச் சேர்ந்த Umberto Bossi முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். “ஒரு நபர் பெரும்பான்மையுடன் ஒருவரும் ஆட்சி நடத்தக்கூடாது, ஒரே தீர்வு புதிய தேர்தல்கள்தான்” என்றார். இத்தாலியின் ஜனநாயக அமைப்புக்களின் சரிவு, ஊழல் புயல், லஞ்சம் மற்றும் பாலியல் விவகாரங்கள் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்டுள்ளது பல வாக்காளர்களிடையே பீதியையும் இழிவுணர்வையும் தூண்டிவிடக்கூடிய மட்டமான தரத்தை அடைந்துவிட்டது. அறிவுஜீவிகளும் கலாச்சாரத் துறை நபர்களும் பலமுறை தெருக்களுக்கு வந்து பெர்லுஸ்கோனியிடத்தில் தாங்கள் கொண்ட சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த சனியன்று, PD உடைய அழைப்பிற்கு இணங்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ரோம் நகரில் அரசாங்கத் தலைவரின் அரசியலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். “இந்த ஆர்ப்பாட்டம் ஒரு வரலாற்றுத் தன்மை நிறைந்த மாறுதலுக்குத் தொடக்கம், அது பெர்லுஸ்கோனி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று PD தலைவர் Pierfuigi Bersani அறிவித்தார். கூட்டத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் “நாளைய இத்தாலி” (யை உருவாக்குவர்) என்று அவர் அறிவித்தார் பெர்லுஸ்கோனி ஒவ்வொரு விவகாரத்திலும், பல பின்னடைவுகளில் இருந்து தப்பிப் பிழைத்து மீண்டும் மீண்டும் கடந்த 16 ஆண்டுகளில் பழையபடி பதவிக்கு வரும் நிலையினால் ஏற்பட்டுள்ள பெரும் திகைப்பை ஒட்டி பல அறிவுஜீவிகள் மக்களில் பெரும்பாலானவர்களைக் குறைகூறுகின்றனர். உம்பர்ட்டோ எக்கோ என்னும் விற்பனைகள் அதிகமாக உள்ள நூல்களை விற்கும் எழுத்தாளர், Frankfurter Rundschau இடம், “பல இத்தாலியர்கள் பெர்லுஸ்கோனியைக் கண்டு வியக்கின்றனர், ஏனெனில் அவர் ஒவ்வொரு இத்தாலியரும் செய்ய விரும்புவதைச் செய்து அவர்களை ஏமாற்றுகிறார்—அதாவது பெண்களுடன் சுற்றுதல், வரிகள் கொடுப்பதில்லை என்று. பெர்லுஸ்கோனி மக்களுடைய பெரும் கனவுகளைத்தான் பிரதிபலிக்கிறார்.” இதற்குத் தீர்வு இத்தாலிய சமூகத்தில் “அறநெறிப் புத்துயிர்ப்புத்தான்” என்று அவர் கூறுகிறார். உண்மையில் பெர்லுஸ்கோனி அதிகாரத்தில் தொடர்ந்திருப்பதற்கான பொறுப்பு எதிர்க்கட்சி என்று கூறப்படுபவற்றிடம்தான் உள்ளது. இதற்கு டெமக்ராட்டுக்கள் தலைமை தாங்குகின்றனர். இவர்கள் 1991ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளிப்பட்டவர்கள். அவர்கள் எப்பொழுதெல்லாம் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டனரோ—1996 முதல் 2001 வரை, பின் 2006 ல் இருந்து 2008 வரை—அவர்கள் சமூகநலச் செலவுத் திட்டங்களில் பாரிய குறைப்புக்களைச் செய்து தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி பெர்லுஸ்கோனி மீண்டும் அதிகாரத்திற்கு வருமாறு செய்துள்ளனர். “எதிர்க்கட்சிகள்” பல மத்தியதர வர்க்கக் குழுக்களின் ஆதரவிற்கு உட்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இவை அனைத்துமே Rifondazione Comunista கட்சியில் ஒன்றாக இணைந்துள்ளன. Rifondazione Comunista ஜனநாயகவாதிகள் குறைந்த தீமையுடையவர்கள் என்று வாதிடுகின்றது. 2006 தேர்தலில் அது பூர்ஷ்வா அரசியல்வாதி ரோமனோ ப்ரோடியின் அரசாங்கத்தில் கூட பங்கு கொண்டிருந்தது. அதையொட்டி தங்களுடைய அரசியல் வாழ்வையே கூட முறித்துக் கொண்டது. இரு ஆண்டுகளில் ப்ரோடி அரசாங்கம் வாக்களார்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டதால் பெர்லுஸ்கோனி மீண்டும் பதவியை வெற்றிகரமாகக் கைப்பற்ற முடிந்தது. செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களின் நலனுக்காக பெர்லுஸ்கோனி தன் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்காக ஜனாநாயகவாதிகள் அவரைத் தாக்கவில்லை. மாறாக அரசாங்கம் இன்னும் அதிக சிக்கன நடவடிக்கைகளை PD யின் ஜனநாயக சமூக நண்பர்கள் கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் போர்த்துக்கல்லிலும் பெரும் ஆர்வத்துடன் செய்வது போல் செய்யவில்லையே என்றுதான் கவலை கொண்டுள்ளனர். “இடது” என்று அழைக்கப்படுபவை மக்களின் பெரும்பான்மையில் இருந்து மிகத் தொலைவிற்குச் சென்றுவிட்டது, அவை இப்பொழுது புதிய தேர்தல்களைக் கண்டு அஞ்சுகின்றன, அதற்குப் பதிலாக “தொழில்துறை வல்லுனர்களின் அரசாங்கம்” அமைக்கப்படுவதை விரும்புகின்றன. வெளிநாட்டினர் மீது தீவிர வெறுப்பைக் கொண்டுள்ள வடக்கு லீக் புதிய தேர்தல்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. பெர்லுஸ்கோனியும் ஒரு புதிய தேர்தல் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். ஜனநாயகவாதிகள் பாசிச பீனிக்குப் பின்னே மறைந்துள்ளனர், இது அரசியல் முனைப்பை பெர்லுஸ்கோனிக்கு அளித்துள்ளது. “முன்னாள் புதிய பாசிஸ்ட்டுக்களின் விருப்பத்தைப் பின்பற்றும் கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். இது ஒரு விந்தையான அனுபவம் ஆகும்” என்று முக்கிய ஜனநாயகவாதியும் முன்னாள் பிரதம மந்திரி ப்ரோடியின் நெருக்கமான நண்பருமான எர்ரிக்கோ லெட்டா சனிக்கிழமையன்று ரோம் நகர ஆர்ப்பாட்டத்தில் கூறினார். இத்தாலி, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் மையப் பிரச்சினை தெளிவாக உள்ளது: ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட கட்சிகளுக்கு இடையே ஒன்றுகூட தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சீர்திருத்தக் கட்சிகளும் திட்டங்களும், சமூக முன்னேற்றங்களுக்கு உறுதியளிக்கின்றன, ஆனால் முதலாளித்துவ முறையைத்தான் பாதுகாக்கின்றன. இதையொட்டி அவை அனைத்தும் திவால்தன்மையைத்தான் கொண்டுள்ளன. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தாக்குல் ஒன்றுதான் அரசியல், சமூகப் பிற்போக்குத்தன பெர்லுஸ்கோனியின் பிரதிபலிப்பதை நிறுத்த முடியும். |
|
|