World Socialist Web Site www.wsws.org |
Protesters denounce legal persecution of
Assange Back to screen versionவிக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாங்கேயை விடுதலை செய்வதற்கு ஆதரவாக இலண்டன் உயர்நீதி மன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் செய்த ஆவணப்பட இயக்குநர் John Pilger உட்பட்ட ஏராளமானோரிடம் உலக சோசலிச வலைத் தளம் பேசியது. பில்கெர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறினார்: “இந்த வழக்கில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த வழக்கிற்கும் விக்கிலீக்ஸ் விவகாரத்திற்கும் தொடர்பில்லை என்று நீதிபதி கூறினாலும் கூட, விக்கிலீக்ஸுடன் சம்பந்தம் இருக்கிறது என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும். அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கான உண்மையான சாத்தியக்கூறு தான் நீதிமன்றத்தில் பேசப்படாமல் போன ஒரு விடயமாகும். ”அரசாங்கத் தலைமை வழக்கறிஞரான எரிக் ஹோல்டர் ஜூலியன் அசாங்கேயை விசாரிப்பதற்கு தான் ஒரு புதிய சட்டத்தை கண்டுபிடிக்க இருப்பதை, ஆம் அது ஏறக்குறைய புதிதாகக் கண்டுபிடிப்பது தான், தெளிவாகக் கூறியிருக்கிறார். இச்சமயத்தில் அதற்கு எந்த சட்டமும் இல்லை. முதலாம் உலகப் போர் காலத்தைய ஒற்றுவேலைச் சட்டத்திற்கு அவர் பின்நோக்கி போயிருக்கிறார். அமெரிக்கா முதல் திருத்தம் கொண்டிருக்கக் கூடிய பூமி ஆகும். அமெரிக்காவின் இப்போதைய சட்டத்தின் படி ஜூலியன் அசாங்கே எந்த குற்றத்தையும் இழைக்கவில்லை. 9/11க்குப் பிந்தைய குவோண்டானோமோ காலத்தில் அவருக்காக ஒரு புதுச் சட்டம் உருவாக்கப்படவிருப்பதற்கான ஒவ்வொரு சாத்தியமும் இருக்கிறது. ”இவை அனைத்துமே அநாவசியமானவை. சுவீடனிலும் சரி இந்த நாட்டிலும் சரி வழக்கு தொடுத்தவரை சந்திப்பதற்கும் அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் ஜூலியன் அசாங்கே தயாராய் இருந்தார். அவர் இன்னும் முறையான குற்றச்சாட்டுக்கு ஆளாகவில்லை. அவரை நாடு கடத்த அவர்கள் விரும்புகிறார்கள் எனினும் அவர் மீது குற்றச்சாட்டு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இந்த நீதிமன்ற நடைமுறைகளுக்கு அவசியமில்லாமல் இது தீர்க்கப்பட்டிருக்க முடியும். “சுவீடன் அதிகாரிகளின் அனுமதியுடன் தான் அவர் சுவீடனை விட்டு வெளியேறினார். ஆயினும் அவருக்குப் பின்னால் இண்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை நாடுகடத்தும் உத்தரவை அவர்கள் அனுப்பினர்.” அசாங்கேவுக்கு பிணை மறுப்பதற்கு நிர்ப்பந்திப்பவர்கள் சுவீடன் அதிகாரிகளா அல்லது பிரிட்டிஷ் அதிகாரிகளா என்பதை அவரால் நீதிமன்ற மேல்முறையீட்டில் இருந்து தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறதா என்று உலக சோசலிச வலைத் தளம் பில்கெரிடம் கேட்டது. அவர் பதிலளித்தார்: “யார் நிர்ப்பந்திக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கிறது. ஆனால் அரச விசாரணை சேவை (கிரவுன் பிராசிக்யூஷன் சர்வீஸ்) தங்களது இந்த வழக்கு தொடுப்பில் நிச்சயமாக ஆர்வத்துடன் இருந்தனர். ஏன் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்? என்பது அவர்களுக்கான ஒரு நல்ல கேள்வியாகும். பார்த்தாலே கபடநாடகம் எனத் தெரியும் ஒன்றை விசாரிக்க வரிசெலுத்துவோரின் பணத்தை ஏன் அவர்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்? "வழக்குத் தொடுத்த ஒரு மூத்த வழக்குரைஞர் அதனை தூக்கிப் போடுகிறார். சிலர் தலையிடுகிறார்கள், பின் மீண்டும் அதனை ஆரம்பிக்கிறார்கள். அசாங்கே வழக்கு தொடுத்தவரை சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார். அவர்கள் அவரைக் காண விரும்பவில்லை. அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதி கோரிப் பெறுகிறார். அதன்பின் ஒரு இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கையைக் கொண்டு அவரைப் பின் தொடர்கிறார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது?” Verena ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். இலண்டனில் வசித்து வருகிறார். அவர் கூறினார்: “ஜூலியனுக்கு உதவுவதற்காக ஒரு வலைத் தளத்தில் வேலை செய்து வரும் ஒரு சிறிய குழுவில் நான் இருக்கிறேன். ஒரு வேலையை தொடக்குவதாய் இருந்தேன், இதனைச் செய்ய வேண்டி வந்ததால் அதனைத் தள்ளி வைத்து விட்டேன். 20 வருடங்கள் கழித்து திரும்பிப் பார்த்தால் “நான் இதைச் செய்தேன். சும்மா ஒதுங்கி நிற்கவில்லை” என்று கூறும்படியாய் இருக்க வேண்டும் அல்லவா. காலையில் சும்மா கண்ணாடியைப் பார்த்து விட்டு எதுவும் செய்யாமலிருக்க என்னால் முடியாது. “அமெரிக்கா சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் தான் இவர்கள் இங்கே நிற்கிறார்கள். வேறு ஏதாவது சிறிய நாடாக இருந்தால் அசாங்கே இந்நேரம் வெளியில் வந்திருப்பார். அவரைப் பிடித்து வைப்பதில் சம்பந்தப்பட்ட நாடுகள் இப்பிரச்சினை பேசும் உண்மையான விடயங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கே விரும்புகிறார்கள். “ஐரோப்பாவில் பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை இப்போது நாம் உண்மையாகவே கண்டுணர முடியும். உண்மையில் அப்படி ஒன்று நம்மிடம் இல்லை. இங்கிலாந்தின் அரச விசாரணை சேவை தான் அவரை சிறையில் வைத்திருக்க முயலுகிறது என்பதை அறிந்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிரிட்டிஷ் சட்ட அமைப்புக்கு கொஞ்சம் முதுகெலும்பு இருப்பதாகவே நான் நினைத்திருந்தேன். அமெரிக்கா என்கிற ஒரு நாடு ஒட்டுமொத்த உலகத்தையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறது. நான் அமெரிக்க விரோதி அல்ல என்றாலும் நடக்கும் விடயம் அபத்தமானதாய் இருக்கிறது. ”அமெரிக்கா ஈராக்கில் ஹெலிகாப்டர் தாக்குதலில் அப்பாவிகளையும் குழந்தைகளையும் படுகொலை செய்த வீடியோ மீது பதில் கொடுக்க வேண்டும். இந்த மோசடியான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல் அவர்கள் அதில் கவனத்தை செலுத்த வேண்டும்.” தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசகரான மார்க் கூறினார்: “பிணைக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சுவீடன் கூறிவிட்டது என்றே நினைக்கிறேன். அப்படியிருக்க இங்கிலாந்தின் அரச விசாரணை சேவை அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருக்க விரும்புவது நியாயமற்றது. அது இன்று என்னை ஒரு பிரிட்டிஷ் என்று கூறிக் கொள்ளவே வெட்கப்பட வைக்கிறது. ஏஞ்சல் பல்கேரியாவைச் சேர்ந்தவர். இப்போது இலண்டனில் வசித்து வருகிறார். அவர் கூறினார்: “ஜூலியன் அசாங்கே எந்த தவறும் செய்யவில்லை. உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையே அவர் காட்டிக் கொண்டிருக்கிறார். ஜூலியனின் வழக்கு காட்டுவதைப் போல, நாம் இப்போது கொண்டிருப்பது ஜனநாயகமே அல்ல. என்ன நடந்திருந்தது என்பதை உலகுக்குக் கூறுவதற்கு பேச்சு சுதந்திரம் இல்லை. ”அவரை சிறையில் வைத்திருப்பதில் பிரிட்டன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதே எப்போதும் என் சந்தேகமாய் இருந்தது. பிரிட்டன், சுவீடன் மற்றும் அமெரிக்கா அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து தான் வேலை செய்து கொண்டிருப்பதாகவே நான் சந்தேகப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக, ஜூலியன் உலகெங்கும் ஏராளமான ஆதரவாளர்களைப் பெற்றிருக்கிறார். ”ஜூலியனுக்கு எதிராக உலகெங்கும் இருக்கக் கூடிய இந்த அரசியல்வாதிகள் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்காவின் ஒரு வருங்கால ஜனாதிபதியாக எதிர்பார்க்கப்படும் சாரா பாலின் ஜூலியன் அசாங்கேவை மிரட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜூலியன் ஒரு பயங்கரவாதி அல்ல. யார் பயங்கரவாதி என்பதை உங்களை யோசிக்கும்படி இது செய்து விடுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மற்ற இடங்களில் உள்ள மக்கள் பயங்கரவாதிகள் அல்லர். “உலகில் நடக்கும் பிரச்சினைகளைக் குறித்து நான் பேசும்போது அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிராக நான் ஏதாவது தவறாய் கூறினால் நாளை எனக்கு என்ன நடக்கும்? என்ன தவறு என்பதில் தாங்கள் விரும்பியதைக் கூற முடியும் என்று சாதாரண மக்கள் இனியும் நினைக்க முடியாது. உலகில் இன்று நடந்து கொண்டிருப்பதைப் பாருங்கள். இங்கே ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன, ரோம் மற்றும் கிரீஸில் நடக்கின்றன. தவறு நடப்பதை நாம் மாற்ற வேண்டும்.” மொனிக்கா கலை மற்றும் வடிவமைப்பு கல்வி பயின்று வருகிறார். அவர் கூறினார்: ”அரசாங்கங்கள் எந்த அளவுக்கு கறைபடிந்து இருக்கின்றன என்பதையே இந்த வழக்கு காட்டுவதாய் நான் கருதுகிறேன். தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று சுவீடன் அரசாங்கம் சொல்கிறது. ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் அதன் ஊதுகுழல்களுக்கு சுவீடனும் இங்கிலாந்தும் நடனமாடுவதைக் காண அதிர்ச்சியாய் உள்ளது. ”ஏராளமான மக்கள் பேச்சு சுதந்திரத்தை விரும்புகின்றனர், எங்கள் வாயை மூட முடியாது....எனவே விக்கிலீக்ஸ் உண்மையிலேயே ஒரு உண்மையான ஊடகத்தை நோக்கிய ஒரு பெரிய அடியை எடுத்து வைத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆர்வலர்களின் ஒரு சிறு குழு நான்கு வருடங்களில் என்ன பெரிய வேலை செய்திருக்கிறது என்பது அற்புதமானதாய் இருக்கிறது “இது முடிந்து விட்டதாய் நான் நினைக்கவில்லை. அவருக்கு எதிராக இன்னும் அவர்கள் மிரட்டல்களை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர் இறந்தாலோ அல்லது படுகொலை செய்யப்பட்டாலோ மக்கள் திருப்பிப் போராடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.. நாங்கள் மிக மிக உறுதியாய் உணர்கிறோம். ரோஸ் கூறினார்: “அமெரிக்காவின் அரசியல் திட்டத்திற்கு ஒரு அப்பாவி பலியாவதை நாங்கள் விரும்பவில்லை. விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கக் கூடிய விவரங்களும் முன்னர் வெளியான “துணை மரணங்கள் (‘collateral deaths’) வீடியோவும், எங்களுக்கு பார்க்க அனுமதிக்கப்படாதிருந்த விடயங்களை இறுதியாய் பார்க்க வழிசெய்தது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதில் இது பலரின் கண்களைத் திறந்திருக்கிறது. முன்னர் மக்களுக்கு சந்தேகங்கள் தான் இருந்தது, இப்போது நம்மிடம் ஆதாரம் இருக்கிறது. இது தான் இந்த ஆவணங்கள் நமக்களிக்கும் பலம். அவர்களின் மோசடி, ஏமாற்று மற்றும் அதிகார வெறி குறித்த ஒரு உட்பார்வையை அவை நமக்கு அளித்துக் கொண்டிருக்கின்றன. “திரைமறைவில் அவர்கள் எவ்வாறு வேலை செய்கின்றனர் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அரசாங்கங்கள் எல்லாம் விக்கிலீக்ஸை மூடச் செய்வதற்கு வெகு தீவிரமாய் முயற்சி செய்து கொண்டிருப்பது நமக்குத் தெரியும். இணையத்தின் பகுதிகளையே மூடுவதற்கும் அவர்கள் முயற்சி செய்வார்கள் என்றே நான் சந்தேகிக்கிறேன். அன்னா கூறினார்: “ஹிலாரி கிளிண்டனும் அவரைப் போன்றவர்களும் தான் உண்மையான குற்றவாளிகள். அவர்களின் குற்றங்களை யார் பார்க்கிறார்கள்? ஒருவரும் இல்லை. ஏனென்றால் அவர்களிடம் அதிகாரமும் பணமும் இருக்கிறது. மக்களிடம் அதிகாரம் கைமாறுவதற்கான காலம் வந்து விட்டது. அங்கு தான் அது இருக்க வேண்டும். “ஜூலியனை பின் தொடர்வதற்கு அரசியல்வாதிகள் விடும் அழைப்பு அருவெறுப்பூட்டுகிறது. எந்த அரசியல்வாதியையும் குறித்து நான் ஏதாவது கூறினால், அரசாங்கத்திடம் இருந்தும் போலிசிடம் இருந்தும் பிரச்சினைகள் வரும். வழக்கு தொடுத்த வழக்குரைஞர்கள் சுவீடன் அரசாங்கத்தின் சார்பாக செயல்படுவதாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று காலையில் தான் தெரிந்தது பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களது சொந்த திட்டத்திற்குத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று. எந்த அளவுக்கு மோசடி இத்தருணத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த விடயங்களை பகிரங்கமாக செய்து கொண்டு தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் அந்த அளவுக்கு மமதை கொண்டிருக்க வேண்டும்.” ஷரோன் வார்ட் கூறினார்: “அசாங்கே பிரச்சாரத்திற்கான நீதி கோரி நாங்கள் பிரதிநிதித்துவம் செய்கிறோம். இங்கே நீதியின் கேலிக்கூத்து நடந்து கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். பதில் கூற விரும்பும் ஒருவரை விசாரிப்பதற்கான விசாரணை அமர்வாகவே இது இருக்கிறது. கேள்வி கேட்கப்படுவதில் மகிழ்ச்சியுறுகிற அத்துடன் கேள்விகள் தொடுக்கப்படுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் செய்திருக்கக் கூடிய ஒருவரைப் பிடிக்க இவ்வளவு வேலைகள் செய்ய வேண்டுமா என்பது விநோதமானதாகத் தான் இருக்கிறது. “அவர் ஓடி விடுவார் என்று வாதிட்டு அவருக்கு பிணை கிடைக்காது எனக் கூறுவது அபத்தமானது. அந்த மனிதர் தனது கடவுச் சீட்டை ஒப்படைத்து இருக்கிறார். நண்பர்களிடம் இருந்து ஆயிரமாயிரம் பவுண்டுகளுக்கு அவருக்கு பிணைத்தொகை தயாராக இருக்கிறது. இந்த மனிதர் உறுதிபடைத்த ஒழுக்கமானவராய் இருக்கிறார். அவர் தனது நண்பர்களைக் கைவிடப் போவதில்லை. அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். ஒரு மின்னணு அட்டையையும் அவர் அணியவிருக்கிறார். அதாவது இந்த தருணத்தில் உலகின் மிக எளிதில் அடையாளம் காணத்தக்க மனிதராக அவர் இருக்கிறார் என்பதைக் கூறுகிறேன். ”பிரிட்டிஷ் தரப்பும் இதில் தீவிரமாய் இருப்பது குழப்புவதாய் இருக்கிறது. இப்படியொன்று நடந்தை நான் முன்னர் கேட்டதில்லை. ஆக அவரைப் பிடிக்க சுவீடன் நாட்டினர் மட்டுமல்லாது, அமெரிக்க நாட்டினர் மட்டுமல்லாது, இப்போது பிரிட்டிஷாரும் கிளம்பியிருக்கின்றனர். “இந்த வழக்கில் இயல்பானதென்று எதுவுமே இல்லை. இயல்பான நீதிக்கான எந்த அடையாளமும் இல்லை. மார்க் ஸ்டீபன்ஸ் கூறியதைப் போல இது ஒரு தண்டனையே தவிர, விசாரணை அல்ல.” |
|