World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The resurgence of nationalism in the European Union

ஐரோப்பிய ஒன்றியத்தில் தேசியவாதத்தின் மறுஎழுச்சி

Stefan Steinberg
14 December 2010
 
Back to screen version

ஐரோப்பிய கடன் நெருக்கடியிலான சமீபத்திய கட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றில் மிகத் தீவிரமான பிளவுகள் எழுவதைக் கண்டிருக்கிறது.

இக்கண்டத்தின் பொதுவான நாணய மதிப்பு நிலைகுலைவது பற்றி தலையங்க ஆசிரியர்களும், பொருளாதார வர்ணனையாளர்களும் வெளிப்படையாய் ஊகித்துக் கொண்டிருக்கின்றனர். யூரோ செயலிழந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலிழப்பையே குறிப்பதாய் இருக்கும் என்று ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் ஜேர்மனியின் சான்சலரான அங்கேலா மேர்க்கெல் எச்சரித்திருந்தார்.

இக்கண்டத்தின் வருங்காலம் குறித்த விடயத்தில் ஐரோப்பிய தலைவர்களிடையே நிலவும் குரோதம், நெருக்கடியில் ஜேர்மனியின் பாத்திரம் குறித்து ஐரோப்பிய மண்டல நிதி அமைச்சர்களின் தலைவரான ஜோன் குளோட் ஜங்கர் தெரிவித்த விமர்சனத்தில் உச்சமுற்றிருந்தது. ஒரு ஐரோப்பிய பங்குப்பத்திரத்திற்கான அவரது முன்மொழிவை சென்றவாரத்தில் ஜேர்மனி நிராகரித்ததைத் தொடர்ந்து, ஜேர்மனிக்கு நெருக்கமான நபராக வெகுகாலமாய் கருதப்பட்டு வந்திருக்கக் கூடிய ஜங்கர், தனது பதிலடியில் அசாதாரணமான ஆவேசம் கொண்டிருந்தார். “ஜேர்மனி சற்று எளிதாக எண்ணிக் கொண்டிருக்கிறதுஎன்று கூறிய அவர், அது ஐரோப்பிய விவகாரங்களைஐரோப்பிய வகையல்லாத பாணியில்கையாள்வதாய் சேர்த்துக் கொண்டார்.

ஜேர்மனிக்குள்ளாக, ஐரோப்பாவிற்கான அதன் பங்களிப்பிலிருந்து அதனை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு புதிய தேசியவாத பரப்புரை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மன் வர்த்தகக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான ஹென்ஸ் ஓலாஃப் ஹெங்கெல் நமது பணத்தை மீட்டெடுங்கள்’ (Rescue Our Money) என்னும் தனது புதிய புத்தகத்தில், ஐரோப்பிய மண்டலத்தை வடக்கு ஐரோப்பா ஒரு முகாமிலும் (ஜேர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா) ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற தெற்கு நாடுகளை இன்னொரு முகாமிலுமாக இரண்டாகப் பிரிக்க ஆதரித்து வாதிடுகிறார்.

ஹெங்கெலின் ஆலோசனை பின்பற்றப்பட்டால் அது, யூரோ உடைக்கப்படுவதற்கும் ஒட்டுமொத்தமாய் ஐரோப்பா நொருக்கப்படுவதற்குமான ஒரு முகவுரை ஆகிவிடும். இவரது இரண்டு அடுக்கு ஐரோப்பா என்னும் கருத்துக்கு வசை பெற்ற சமூக ஜனநாயகவாதியான திலோ சராசினின் ஆதரவு இருக்கிறது. இவர் புலம்பெயர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இனவாத விவாதங்களை முன்னெடுத்து தனது சொந்த புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். ’நமது பணத்தை மீட்டெடுங்கள்புத்தகத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு விழாவில் அதனை வழங்கியது வேறு யாரும் அல்ல, ஜேர்மன் நிதி அமைச்சரான ரைய்னர் புரூடெர்லே தான்.  

தேசியவாதம், ஆளும் உயரடுக்கு நலன்களின் பாதுகாப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால சமூக வெற்றிகள் மீதான சமரசமற்ற தாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய போலி-வெகுஜன வலதுசாரிக் கட்சி எழுகின்ற வகையில் ஜேர்மனியில் சக்திகள் ஒன்றுடன் ஒன்று கூடி வருகின்றன.

இத்தாலி, ஆஸ்திரியா, டென்மார்க், ஹாலந்து மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட ஏராளமான பிற ஐரோப்பிய நாடுகளில், தீவிர-வலது மற்றும் இனவாத அரசியல் உருவாக்கங்கள் எல்லாம் ஒன்று ஏற்கனவே அரசாங்கத்தில் இருக்கின்றன அல்லது அவை கொள்கை வகுப்பதில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துவருகின்றன. பிரான்சில் இஸ்லாமிய, சிந்தி மற்றும் ரோமா சமுதாயங்களுக்கு எதிரான பிரச்சாரங்களின் மூலம் நவ-பாசிச தேசிய முன்னணியின் நிறங்களைத் திருட ஜனாதிபதி சார்க்கோசி முனைந்து வருகிறார். ஒவ்வொரு இடத்திலும், தீவிர-வலது உச்சிக்கு எழுவது என்பது ஆளும் உயரடுக்கு ஐரோப்பிய தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராகவும் மற்றும் சமுதாய நல அமைப்புக்கு எதிராகவும் தொடுக்கும் தாக்குதலுடன் நெருக்கமாய் பிணைந்திருக்கிறது.  

இக்கண்டத்தின் வங்கிகளைப் பிணையெடுக்க டிரில்லியன் கணக்கான யூரோக்களை எடுத்துக் கொண்ட ஆளும் உயரடுக்கினர் உழைக்கும் மக்கள் அதற்கு விலை செலுத்துமாறு வலியுறுத்துகின்றனர். பெல்ஜியத் தலைநகரில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவங்களுடன் சேர்ந்து இப்போது ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்களும், கண்டமெங்கிலும் தண்டிக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருக்கின்றன. இவை இன்னுமுள்ள சமூகநல உதவிகளில் எஞ்சியிருப்பதையும் குறைத்து விடும் என்பதோடு கூடுதலாய் மில்லியன்கணக்கிலான மக்களை வறுமையில் தள்ளும். தொழிலாளர்களை தேசியவாத அடித்தளத்தில் பிளவுபடுத்தி அதன் மூலம் இத்தாக்குதலுக்கான சிறந்த நிலைமைகளை உருவாக்குவது தான் வலதுசாரி ஜனரஞ்சகவாதத்தை ஊக்குவிப்பதன் நோக்கமாக அமைந்திருக்கிறது. மிகவும் ஒடுக்கப்பட்ட சமூக தட்டுகளுக்கு எதிராக பல ஐரோப்பிய அரசாங்கங்கள் எடுக்கும் ஆதிக்க மனப்பான்மை பிரச்சாரங்களுக்கும் இதுவே மூலவளமாய் ஆகிறது.

வரலாற்றாசிரியரான ரொனி ஜூட் சமீபத்தில் தனது ஐரோப்பாவின் வரலாறு என்பதில் சுட்டிக் காட்டியது போல, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் படுகொலைகள் குறித்து நேரடி அனுபவம் கொண்டிருந்த, அவற்றை தெளிவுடன் நினைவுகூரக் கூடிய முக்கியமான பழமைவாத அரசியல்வாதிகள் தான் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய சமூக நல அமைப்புமுறையின் நிறுவனர்களாய் இருந்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிலாள வர்க்கம் தீவிரமயமுறுவதை உணர்ந்த அவர்கள் இக்கண்டத்தின் பரந்த மக்களின் சமூகநல உதவிகளுக்கு குறைந்தபட்ச நிபந்தனைகளை நிறுவுவதில் இறங்கினர். ஐரோப்பிய வணிகங்களுக்கு சந்தைகளைப் பாதுகாக்க சாதகமான நிலைமைகளை உருவாக்க வேண்டும், அதேசமயத்தில் ஐரோப்பாவை போருக்குள் மூழ்கடித்த அழிவுகர தேசியவாத வகைக்குத் திரும்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாய் இருந்தது.  

இப்போது போருக்குப் பிந்தைய ஒழுங்கின் இந்த அத்தனை தூண்களும் ஐரோப்பிய அரசியல் உயரடுக்கால் திட்டமிட்டு அகற்றப்பட்டு வருகிறது. ஐக்கிய முதலாளித்துவ ஐரோப்பா ஒன்றிற்கான திட்டத்தை காப்பாற்றி வரும் அரசியல் சட்டகத்திற்கு இறுதி அடி 2008ன் நிதி நெருக்கடி மூலம் விழுந்தது. ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் (அது கன்சர்வேடிவ் அரசாங்கமாயினும் ஆயினும் சரி அல்லது சமூக ஜனநாயக அரசாங்கமாயினும் சரி) வங்கிகளுக்கும் இடையிலான ஒட்டுண்ணி உறவினை இந்த நெருக்கடி அம்பலப்படுத்தியது.

இப்போது, பொருளாதார தேசியவாதம் தான் நாளாந்த நிகழ்ச்சி நிரலில் அதிகரித்தவகையில் உள்ளது. மற்ற நாட்டுத் தொழிலாளர்களின் நலன்களைப் பலிகொடுத்து தேசிய நலனை அடைவது என்பதையே மிக உயர்ந்த அரசியல் கோட்பாடாக ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தூக்கிப் பிடித்து வருகின்றன.

இறுதி ஆய்வில், ஐரோப்பாவை அமைதியானதொரு வழியிலும் முற்போக்கான வகையிலும் ஒருங்கிணைப்பதற்கு ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள் முற்றிலும் திறனற்று இருப்பதையே தற்போதைய நெருக்கடி வெளிக்காட்டுகிறது. ஐரோப்பா முழுவதிலும் தேசியவாதத்தின் எழுச்சியானது இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் மீண்டும் நிகழ்ச்சிநிரலில் கொண்டுவந்து நிறுத்துகிறது.

1920களில் ஐரோப்பிய பிரச்சினை குறித்த தனது எழுத்துகளில், ஐரோப்பிய சமூக நெருக்கடியை தொழிலாள வர்க்கம் தனது சொந்த வழிமுறைகளின் மூலம் தீர்க்கத் தவறுமானால் அந்த தீர்வு பிற்போக்குத்தனத்தால் கையிலெடுக்கப்படும்என லியோன் ட்ரொஸ்க்கி எச்சரித்திருந்தார். .

அந்த சமயத்தில் ட்ரொட்ஸ்கி செய்த திறம்படைத்த மதிப்பீடானது அதன் முக்கியத்துவம் எதனையும் இழந்து விடவில்லை. ”ஐரோப்பாவும் அமெரிக்காவும்என்னும் அவரது 1926ம் ஆண்டின் கட்டுரையில், ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மட்டுமே ஐரோப்பாவை ஒருமைப்படுத்த முடியும் என்று ட்ரொட்ஸ்கி முடித்தார். அவர் எழுதினார்: “முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள், சமரசவாதிகள், வணிக திருடர்கள், பகல்கனவு காண்பவர்கள் மற்றும் வெறுமனே முதலாளித்துவ பிதற்றல் செய்பவர்கள் இவர்களெல்லாம் இப்போது ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் குறித்து பேசுவதற்கு கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை. ஆயினும் அந்தப் பணி, முரண்பாடுகளால் முற்றாய் அரிக்கப்பட்டிருக்கிற ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும். வெற்றி பெறுகின்ற ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே ஐரோப்பா ஒன்றுபடுத்தப்பட முடியும்.”

ஐரோப்பிய அரசியலில் ஆழமான பிளவுக் கோடுகள் வெடிப்புடன் தோன்றி எழுவதானது, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் குறித்த ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கு மட்டுமே தேசியவாதத்தின் எழுச்சிக்கும் மற்றும் சர்வாதிகாரத்திற்கும் மற்றும் ஒரு புதிய உலகப் போருக்கான அச்சுறுத்தலுக்கும் ஒரே முற்போக்கான மாற்றாகத் திகழ்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது.