World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Lessons of the Stalinist CITU’s betrayal of the Foxconn and BYD strikes

இந்தியா: பாக்ஸ்கான் மற்றும் BYD வேலைநிறுத்தங்களை ஸ்ராலினிச சிஐடியு காட்டிக் கொடுத்ததன் படிப்பினைகள்

By Keith Jones and K. Ratnayake
10 December 2010

Back to screen version

சென்ற மாதத்தின் பிற்பகுதியில், தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் பெருகி வந்த தொழிற்துறை கிளர்ச்சியின் ஒரு பாகமாக பாக்ஸ்கான் மற்றும் BYDக்கு எதிராக நடந்த போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்களை இந்திய தொழிற் சங்கங்களின் மையம் (சிஐடியு) முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க இணைப்பான இந்த சிஐடியு பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்களை நிறுவனங்களின் தண்டிக்கும் கோரிக்கைகளுக்கு (வேலைநிறுத்தத்தில் முன்னணியில் நின்ற 40க்கும் அதிகமான சாதாரண தொழிலாளர்களை நீக்குவதும் இதில் இடம்பெறுகிறது) அடிபணிய உத்தரவிட்டது. ஸ்ரீபெரும்புதூரின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் பாக்ஸ்கான் வளாகத்தில் பணிபுரியும் ஏழாயிரம் தொழிலாளர்கள் உலகின் மிகப் பெரிய மின்னணு பாக உற்பத்தியாளரான தங்களது முதலாளிகளுக்கு எதிராக செப்டம்பர் 21 ஆரம்பித்து 58 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

நோக்கியாவுக்கான சப்ளையரும் சீனாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடு கடந்த நிறுவனமுமான BYD யில் மூவாயிரம் தொழிலாளிகள் (அநேகமானோர் இளம்பெண்கள்) மூன்று வார கால போராட்டத்தை நிகழ்த்தினர். அக்டோபர் 28 தொடங்கி இரண்டு நாட்களுக்கு சென்னையைச் சுற்றிய பகுதியில் அமைந்திருக்கும் BYD ஆலையில் தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம் செய்தனர். ஆலைக்குள் புகுந்து அவர்களை பலவந்தமாக வெளியேற்ற போலிஸ் அச்சுறுத்தியபோது உள்ளிருப்பு போராட்டத்தை முடித்துக் கொண்ட அவர்கள், பின் வழமையான முறையில் வேலைநிறுத்த நடவடிக்கையை தொடர்ந்தனர்

மேம்பட்ட ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளுக்கான கோரிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர்களைநிரந்தரம் செய்வது மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் போன்ற ஒரேமாதிரியான கோரிக்கைகளுக்காகத் தான் இரண்டு நிறுவனங்களின் தொழிலாளிகளும் போராடினர். இரண்டு வேலைநிறுத்தங்களுமே மாநிலத்தின் திமுக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட கோரமான போலிஸ் அடக்குமுறைக்கு முகம் கொடுத்தன.   

இந்த இரண்டு போராட்டங்களையும் ஐக்கியப்படுத்துவது குறித்த பிரச்சினையே ஸ்ராலினிச சிஐடியுவுக்கு இருக்கவில்லை எனும்போது, நாட்டை உலக முதலாளித்துவத்திற்கான ஒரு மலிவு உழைப்புக் களமாக ஆக்குவதை நோக்கி இந்திய முதலாளித்துவம் பயணிப்பதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை தொழிற்துறை ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அணிதிரட்டுவதற்கான ஈட்டிமுனையாக அந்த போராட்டங்களை ஆக்குவது என்பது பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

பாக்ஸ்கான் நிறுவனம் தொழிலாளர்களின் எந்த முக்கிய கோரிக்கையையும் ஏற்காமல் வேலைநிறுத்தத்தில் முன்னணியில் இருந்த 24 பேரை நீக்கியிருந்தும் நவம்பர் 17 அன்று சிஐடியு தலைவர்கள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பக் கூறினர். மேலும், வேலைக்குத் திரும்புவதற்கு முந்தைய நிபந்தனையாக, தொழிலாளர்கள்நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட மாட்டோம், நிறுவன வளாகத்திற்குள் சங்க அடையாளத்தை அணிந்து கொள்ள மாட்டோம், அல்லது நிறுவனத்திற்குள்ளாக வேறெந்த போராட்ட வடிவத்திலும் ஈடுபடமாட்டோம் ஆகிய உறுதிமொழிகள் கொண்ட நிர்வாகத்திடம் இருந்தான அவமதிக்கிற கடிதத்தில் கையெழுத்திட கூறப்பட்டனர். இந்த கடிதத்தின் ஐந்து நிபந்தனைகளில் முதலாவதாய் இருந்தது வேலைநிறுத்தத்தில் முன்னணியில் இருந்த 24 பேரை பலி கொடுப்பதற்கான ஏற்பாடாய் அமைக்கப்பட்டிருந்தது. அவர்களின்தூண்டுதலின் பேரில் தான் வேலைநிறுத்தம் செய்ததாய் வேலைக்குத் திரும்பிய பாக்ஸ்கான் தொழிலாளர்கள் தலையசைக்க வேண்டியதானது.

அந்த 24 தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி, 850 பாக்ஸ்கான் தொழிலாளர்கள் (அதாவது மொத்த ஊழியர்களில் பத்தில் ஒரு பங்கு) ஆரம்பத்தில் நிறுவனத்தையும் சிஐடியு தலைமையையும் மறுதலித்து வேலைநிறுத்த நடவடிக்கையை தொடர முனைந்தனர். இரண்டு நாட்களுக்கு வேலை செய்யாமல் அவர்கள் நிறுவனத்தின் உணவகத்தில் அமர்ந்திருந்தனர். நவம்பர் 20 அன்று, மாநிலத்தின் உதவி தொழிலாளர் ஆணையர், வரும் வாரத்தில் இந்த வேலைநீக்கங்கள் குறித்து விவாதிக்க தன்னை சந்திப்பதற்கு நிறுவனத்தை சம்மதிக்க வைத்திருப்பதாகக் கூறி, அத்தொழிலாளர்களை சமாதானப்படுத்திய பின் அவர்கள் வேலைசெய்ய ஒப்புக் கொண்டனர்.  

தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பச் செய்வதற்கு சிஐடியு தலைவர்களும் தங்களது பங்கிற்கு, அடுத்த ஆண்டின் மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் நிலைமை மேம்படும் என்று கூறி அவர்களின் மனதை மாற்ற முனைந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தேர்தல் கூட்டணிக்கு முயன்று கொண்டிருக்கும் அதிமுக கட்சி (திமுகவின் பரம எதிரி) அதிகாரத்திற்குத் திரும்பும் என்பதில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது தான் ஸ்ராலினிஸ்டுகளின் வாதம். அஇஅதிமுக வலது சாரி முதலாளித்துவ கட்சி என்பதோ, இக்கட்சி தான் சென்ற முறை அதிகாரத்தில் இருந்தபோது அரக்கத்தனமான தொழிலாள-விரோதஅடிப்படை சேவைகள்சட்டத்தை 2003ல் நிறைவேற்றி 200,000 அரசாங்க ஊழியர்களின் போராட்டத்தை நசுக்க துப்பாக்கி சூடுகளையும், கூட்டமாய் கைது செய்யும் நடவடிக்கைகளையும், கருங்காலிகளையும் பயன்படுத்தியது என்பதோ அவர்களுக்குப் பிரச்சினையில்லை.

ஸ்ராலினிஸ்டுகளின் நடவடிக்கைகளால் தைரியம் பெற்ற பாக்ஸ்கான் நிர்வாகம் இப்போது திமுக அரசாங்கத்துடன் இரகசியமாய் கைகோர்த்துக் கொண்டு தொழிலாளர் முன்னேற்ற முன்னணியையே (LPF) தொழிலாளிகளதுசங்கம் என திணிப்பதற்கு சிரமப்பட்டு முனைந்து வருகிறது. திமுகவின் தொழிற்சங்க கூட்டமைப்பான LPF முதலாளிகளுக்கான ஒரு காவல் படை போல் செயல்படுவதால், பல நாடுகடந்த நிறுவனங்களும் அதனை தொழிலாளிகளுடன் பேரம் பேசுவதற்கான முகவர்களாய் ஒருதரப்பாய் அறிவித்திருக்கின்றன. வேலைநிறுத்தம் முடிந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம், பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவிருப்பதாகக் கூறப்பட்டது, ஆனால் அவர்கள் LPFல் இணைந்தால் தான் அந்த சம்பள உயர்வு அவர்களுக்குக் கிடைக்கும்.

இதே அளவுக்கு BYDயிலும் சிஐடியுவின் சரணடைவு பூரணமாய் இருந்தது. 17 தொழிலாளிகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்த போதிலும், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும், பாக்ஸ்கான் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது போன்றதொரு கடிதத்தில் இவர்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் இத்தொழிற்சங்கம் தொழிலாளர்களிடம் கூறியது. BYD தொழிலாளர்கள் கடிதத்தில் கையெழுத்திட மறுத்தனர். ஆயினும் பழிவாங்கப்பட்ட தொழிலாளிகளின் விதி குறித்து நிர்வாகத்துடன் பேசுவதாக மாநிலத்தின் உதவி தொழிலாளர் ஆணையர் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து அவர்கள் நவம்பர் 22 அன்று வேலைக்குத் திரும்பினர்.

சுமார் மூன்று வாரங்களுக்குப் பின்னர், பாக்ஸ்கானிலும் சரி BYDயிலும் சரி பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களில் எவரும் மீண்டும் வேலைக்குத் திரும்பியிருக்கவில்லை. உண்மையில், இரண்டில் எந்த நிறுவனத்தின் நிர்வாகப் பிரதிநிதிகளும் உதவி தொழிலாளர் ஆணையருடன் வாக்குறுதியளிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வருவதற்கும் கூட அலட்டிக் கொள்ளவில்லை என்பதை உலக சோசலிச வலைத் தளம் உறுதியாய்க் கூற முடியும்.

பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்களை சிஐடியு கைவிட்டதற்கான காரணங்களை விவாதிக்க சிஐடியுவின் மாநிலச் செயலரான மாலதி சிட்டிபாபுவை உ.சோ... தொடர்பு கொண்ட போது, ’வேறு வழி எதுவும் இருக்கவில்லை என்று அவர் புலம்பினார். வேலைநிறுத்தங்களை முடித்ததால் குறைந்தபட்சம் தொழிலாளர்களுக்கு அவர்களது வேலையாவது திரும்பக் கிடைப்பதை சிஐடியு உறுதிசெய்திருப்பதாக அவர் கூறிக்கொண்டார். “எல்லா தொழிலாளிகளுமே புதியவர்கள் இளையவர்கள், அவர்களது வருங்காலத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அந்த சிஐடியு அலுவலர் கூறிக் கொண்டார்.

சரணடைவதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று கூறுவது ஒரு பொய் ஆகும்.

கண்ணியமான ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளுக்கான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் தாக்குதலை அபிவிருத்தி செய்வதுடன் இணைப்பதன் மூலமாக (அஇஅதிமுக போன்ற கட்சிகளில் இருந்தான வலது சாரி முதலாளித்துவ அரசியல்வாதிகளின் மீதோ அல்லது முதலாளிக்கு ஆதரவான மாநில தொழிலாளர் ஆணையம் போன்றவற்றிலோ நம்பிக்கை வைக்கும் வகையில் தவறாக செலுத்தப்படாமல்) ஒரு பரந்த தொழிலாள வர்க்க அணிதிரட்டலுக்கான ஈட்டிமுனையாக தங்களது போராட்டத்தை ஆக்குவதற்கு பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்களுக்கு நோக்குநிலை அளிக்கப்பட்டிருந்தால் அப்போராட்டங்கள் சிறப்பான ஆதரவைப் பெற்றிருக்கும்.

சமீப மாதங்களில் தமிழகத்தை உலுக்கியிருக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புகளின் அலை குறித்து ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரதிநிதிகளும் தங்களது எச்சரிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தொழிலாளர் போராட்டங்களைத் தூண்டிவிட்டு மாநிலத்தில் முதலீட்டை குறையச் செய்வதற்குசதி நடப்பதாக பீட்டர் அல்போன்ஸ் (இந்தியாவின் ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பிரிவின் ஒரு தலைவர்) குற்றம் சாட்டியிருக்கிறார். அத்துடன் சமீபத்தில், மாநிலத்தின் வளர்ந்து வரும் தொழிற்துறை பிரிவில்இடது சாரி அதிதீவிரவாதம் ஆதரவைப் பெறும் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி, தொழிலாளர்கள் மீதான போலிஸ் உளவு வேலையை அதிகரிப்பதற்கு மாநிலத்தின் காவல்துறை தலைவரான லத்திகா சரண் உறுதியெடுத்துக் கொண்டுள்ளார்.

பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள் என்றால் அதன் காரணம், சிஐடியு மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் இடது கூட்டணி ஆகியவை தொழிலாளர்களது போராட்டங்களை தனிமைப்படுத்தி அவர்களை மிகக் குறுகிய பேரம் பேசும் முன்னோக்கிற்குள் சுருக்கி விட முடிவு செய்தது தான்.

மலிவு ஊதியங்கள், 12 மணி நேர வேலை, மற்றும் கோரமான வேலைநிலைமைகள் ஆகியவற்றைத் திணிப்பதற்கு மாநில அரசாங்கம், போலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் நாடு கடந்த நிறுவனங்கள் ஆகியவை இணைந்த ரவுடிக் கும்பலுக்கு எதிராக உண்மையான தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி தீவிரமயப்படுத்துவதால் வரக்கூடிய பின்விளைவுகளைக் கண்டு ஸ்ராலினிஸ்டுகள் அஞ்சினர்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தொழிலாள வர்க்கத்தின் கட்சியாக காட்டிக் கொண்டாலும், நடைமுறையில் அது, இந்தியாவை அந்நிய முதலீட்டை ஈர்க்கும் காந்தமாகவும் ஒரு மலிவு உழைப்பு உற்பத்தியாளராகவும் மாற்றுவதற்கான செலுத்தத்தில் ஆளும் உயரடுக்குடன் இரகசியமாய் கைகோர்த்து செயல்பட்டு வந்திருக்கிறது. சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி ஆளும் மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், முதலீட்டாளர் ஆதரவு கொள்கைகளைத் தான் முன்னெடுத்து வந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைநிறுத்தங்களை தடைசெய்வது மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தங்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்க்கும் விவசாயிகளை சுட்டு வீழ்த்துவது ஆகியவையும் இதில் அடங்கும். 2004 முதல் 2008 வரையில், டெல்லியில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், பெரு வணிக ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுக்கிறது என்பதையும் முந்தைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து அதிக மாறுபாடில்லாத ஒரு அமெரிக்க-ஆதரவு அயலுறவுக் கொள்கையையே பின்பற்றுகிறது என்பதையும் ஒப்புக் கொண்டு, அதேசமயத்தில் அதற்கு ஆதரவளித்தும் வந்தது.  

சமீபத்திய வேலைநிறுத்தங்களின் போது, ஆலைகள் ஒரு பகுதியேனும் இயங்குவதை பராமரிப்பதற்கு, கிராமத்து ஏழை மக்களை கொண்டுவர தொழிலாளி ஒப்பந்ததாரர்களை பயன்படுத்துவதில் பாக்ஸ்கான் மற்றும் BYD வெற்றிகண்டதானது ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்க முன்னோக்கும் கூட கொஞ்சம் கூட போதுமானதாய் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியா போன்ற வளர்ச்சிகுறைந்த நாடுகளில், தொழிலாள வர்க்கம் அதன் சமூக நிலையை முன்னேற்றுவதற்கு நிகழ்த்தும் போராட்டமானது கிராமத்து ஜனங்கள் வறுமைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நிகழ்த்தும் போராட்டத்துடன் ஜீவனுடன் பிணைந்துள்ளது.

இந்தியத் தொழிலாளர்கள் கிராம ஏழை மக்களின் நலன்களில் வெற்றி காண வேண்டும். நிலப்பண்ணைகள், கந்து வட்டிக்காரர்கள் மற்றும் பெருவணிகங்களின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் அவர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அத்துடன் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க தலைமையிலான போராட்டத்தின் ஊடாக மட்டுமே உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட முடியும் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்களின் அனுபவம் உலகெங்குமான அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவானதாகும். பிரான்ஸ், கிரீஸ் மற்றும் வேறெங்கிலுமான சமீபத்திய போராட்டங்கள் தொழிலாளர்கள், முதலாளித்துவ நெருக்கடிக்கு அவர்களை தொகை செலுத்தச் செய்யும் பெரு வணிகங்களின் செலுத்தத்தை எதிப்பதற்குக் கொண்டுள்ள உறுதியை விளங்கப்படுத்தியிருக்கின்றன. அதேசமயத்தில், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை குலைப்பதற்கும் மூலதனத்தின் கட்டளைகளை திணிப்பதற்குமான கருவிகளாய் ஆகியிருப்பதையும் அப்போராட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.  

தொழிலாள வர்க்கத்தின் உடனடி நலன்களைப் பாதுகாத்து செய்யப்படும் போர்க்குண நடவடிக்கையை ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான (பொருளாதாரம் ஒரு சிலருக்கு மட்டும் ஆதாயமளிப்பதாய் இல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தீவிரமாய் மறுஒழுங்கு செய்யப்படும் வகையில் வங்கிகளையும் அடிப்படை தொழில்துறைகளையும் பொது உரிமைத்துவத்தின் கீழ் அந்த அரசாங்கம் வைக்கும்) போராட்டத்துடன் இணைப்பதற்கு ஒரு புதிய முன்னோக்கும், போராட்டத்தின் புதிய ஒழுங்கமைப்புகளும் மற்றும் ஒரு  புதிய கட்சியும் தொழிலாளர்களுக்கு அவசியமாய் உள்ளது.