World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

WikiLeaks and Sri Lanka: Who are the real criminals?

விக்கிலீக்ஸ் மற்றும் இலங்கை: யார் உண்மையான குற்றவாளிகள்?

K. Ratnayake
9 December 2010

Back to screen version

இலங்கை ஜனாதிபதி இராஜபக்ச மற்றும் அவரது கூட இருந்தவர்கள் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்ட காலங்களில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்து ஒபாமா நிர்வாகம் நன்கு அறிந்து வைத்திருந்தது என்பதை விக்கிலீக்ஸ் இதுவரை வெளியிட்டிருக்கும் நூற்றுக்கணக்கான இரகசிய இராஜதந்திர ஆவணங்களில் இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்த ஒன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. யார் குற்றவாளியாகக் கருதப்பட வேண்டும் அல்லது கூடாது என்பது ஒட்டுமொத்தமாய் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் அவர்களின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களின் தேவைக்கேற்பவே தீர்மானிக்கப்படுகிறது என்கிற உண்மையை இந்த ஆவணம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கூறப்படும் குற்றங்களில் அநேகத்திற்கான பொறுப்பு ஜனாதிபதி இராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள் மற்றும் எதிர்க்கூட்டணி வேட்பாளரான தளபதி பொன்சேகா ஆகியோர் உள்ளிட்ட நாட்டின் மூத்த மக்கட் தலைமை மற்றும் இராணுவத் தலைமையின் மீது இருக்கிறதுஎன்கிற உண்மை இலங்கையில் போர்க்குற்றங்கள் மீதான விசாரணையின் சாத்தியத்தை சிக்கலாக்கியிருந்ததாக இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கான அமெரிக்க தூதரான பேட்ரிசியா புடேனிஸ் அறிக்கை அளித்திருந்தது இந்த ஆவணத்தின் மூலம் வெளிவந்துள்ளது.

ஒபாமா நிர்வாகமும் அதன் கூட்டாளிகளும் விக்கிலீக்ஸை ஈவிரக்கமின்றி வேட்டையாடி வருவதோடு அதன் நிறுவனரான ஜூலியன் அசாங்கேயை குற்றவாளியாக்கவும் முனைந்து வருகின்றனர். அவர் செய்த ஒரேகுற்றம்அமெரிக்க ஏகாதிபத்தியம் நிகழ்த்திய அசிங்கமான சூழ்ச்சிகளையும் குற்றங்களையும் உலகத்திற்கு அம்பலப்படுத்த உதவியது தான்.

சர்வதேசரீதியாக சாதாரண மக்களும், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் தொடங்கி இலங்கை வரை இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமான பகுதிகளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் இரகசிய இராஜதந்திரம் பற்றிய ஒரு கண நேரக் கண்ணோட்டத்தை  பெறுவதற்கு விக்கிலீக்ஸ் ஒரு தீர்மானமான சேவையை ஆற்றியிருக்கிறது.  

அமெரிக்க நெருக்குதலின் விளைவாக பிரிட்டனில் இப்போது கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அசாங்கே இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராய்ப் போராடிக் கொண்டிருக்கிறார். நேரெதிராய், போர்க் குற்றங்களுக்கு நேரடிப் பொறுப்பான ஜனாதிபதி இராஜபக்சவோ உலகெங்கும் சுதந்திரமாய் சுற்றி வர முடிகிறது. சென்ற வாரம் இலண்டனில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வரவேற்கப் பெற்றார். பொது அரங்கில் ஆதாரங்கள் மலைபோல் குவிந்திருந்த போதிலும் கூட இராஜபக்சவையோ, அவரது சகோதரர்களையோ அல்லது முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகாவையோ இலங்கையில் நடந்த கொடுமைகளுக்கான பொறுப்பாய் அமெரிக்கா ஒருபோதும் வெளிப்படையாய் கூறியதில்லை.

அரசாங்கத்தால்அமைதி மண்டலமாய் அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் சிக்குண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களின் மீதும் பாதுகாப்புப் படைகள் பலமுறை தாக்குதல் நடத்தியதில் 2009 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலத்தில் குறைந்தது 7,000 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாய் ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

மருத்துவமனைகள் மீது திட்டமிட்டு குண்டுவீசப்பட்டதில் 30,000 முதல் 75,000 வரை அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை சர்வதேச நெருக்கடிநிலைக் குழு (The International Crisis Group) தொகுத்திருக்கிறது. இலங்கை முழுவதும் பயமின்றி உலவிய அரசு ஆதரவு கொலைப்படைகளின் கரங்களில் சிக்கி செய்தியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

இந்த குற்றங்களுக்கு அமெரிக்கா துணைபோயிருந்ததோடு இவற்றுக்குப் பொறுப்பானவர்களை மறைக்கவும் உதவியிருந்தது. ராஜபக்ச அரசாங்கம் 2002 ஆம் ஆண்டின் போர்நிறுத்தத்தை அப்பட்டமாய் மீறி 2006 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை மீண்டும் தொடக்கிய போது அமெரிக்காவும் மற்ற முக்கிய சக்திகளும் அதனை உறுதியுடன் ஆதரித்தன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது தெளிவாய் தெரிந்தவுடனேயே அமெரிக்காமனித உரிமை மீறல்குறித்த கவலைகளை வெளியிடத் தொடங்கியது, ஆனால் அமெரிக்காவின் வரிசைக்கு வருவதற்கு இராஜபக்சவுக்கு நெருக்குதலளிக்கும் ஒரு வழியாகத் தான் அது செய்யப்பட்டது.

மூலோபாயரீதியாய் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் இந்த தீவின் மீதான போருக்குப் பிந்தைய செல்வாக்கில், போரைப் பயன்படுத்தி சீனா இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைக் கட்டியிருந்தது என்பது தான் ஒபாமா நிர்வாகத்தின் பிரதான கவலையாக இருந்தது. தெற்கில் ஹம்பந்தோட்டாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரும் புதிய துறைமுகத்திற்கான கடற்படை அணுகல் உட்பட தனக்கு வழங்கப்பட்ட பொருளாதார மற்றும் மூலோபாய சலுகைகளுக்கான பிரதிபலனாக, போரில் சீனா இராஜபக்சே அரசுக்கு ஆயுதங்களையும் நிதியாதாரத்தையும் வழங்கியிருந்தது.  

சென்ற வாரத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறைமனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு சர்வதேச விசாரணைக்கு மேம்போக்கான ஒரு அழைப்பை விடுத்திருந்தது, ஏதோ அவையெல்லாம் தனிநபர் சிப்பாய்கள் அல்லது நடுத்தர பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் செய்தவை என்பது போல. அதே சமயத்தில் நடந்த கொடுமைகளுக்கு விடுதலைப்புலிகள் மீதும் குற்றம் கூறப்பட்டது. ஜனாதிபதியாக மட்டுமல்லாமல், பாதுகாப்பு அமைச்சராகவும் இராணுவப் படைகளுக்கான தலைமைத் தளபதியாகவும் இருந்த ராஜபக்சவின் கீழ் தான் முக்கிய குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும் என்பது இப்போது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

மனித உரிமை வேடம் எல்லாம் இராஜபக்சேவை தாஜா பண்ணுவதற்கோ அல்லது பலவந்தப்படுத்துவதற்கோ உதவவில்லை மாறாக எதிர்மறை பலனைத் தான் தந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவானபோது அமெரிக்கா அதனைக் கைவிட்டு விட்டது. சென்ற டிசம்பரில் அமெரிக்க செனட்டின் அயலுறவு விவகாரக் குழு அறிக்கை, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதன் காரணமாக அமெரிக்காவின் மூலோபாய நலன்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதேபோன்றதொரு அணுகுமுறையைத் தான் புடேனிஸின் அறிக்கையும் கையாண்டிருந்தது. அமெரிக்காஇலங்கையை இழக்க முடியாது என்று அந்த அறிக்கை அறிவித்தது. “மனித உரிமைகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதென்பது, "பிராந்தியத்தில் அமெரிக்க புவிமூலோபாய நலன்களை குறையச் செய்து விடும்என அது தெரிவித்தது.

அதன்பின், கற்ற பாடங்கள் மற்றும் மறுசமரச ஆணையம் (Commission on Lessons Learnt and Reconciliation) என்ற பெயரில் இராஜபக்சவே நிறுவிக் கொண்டிருந்த ஒரு மோசடியான விசாரணையை ஒபாமா நிர்வாகம் பகிரங்கமாய் ஆதரித்தது. இராணுவக் கொடுமைகள் மற்றும் அரசாங்க ஆதரவு கொலைப் படைகள் குறித்து விசாரிக்க இராஜபக்சே நியமித்த முந்தைய விசாரணைகளைப் போலவே இந்த விசாரணையின் நோக்கமும் குற்றங்களை மறைப்பதும் அரசாங்கத்தின் பாத்திரத்தை பூசிமறைத்து போரையே நியாயப்படுத்துவதும் தான். இராஜபக்சேவின் விசாரணை ஆணையம்அநேகமாய் வெற்றிபெறும் சாத்தியம் கொண்டதாகஜூன் மாதத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்தார்.

ஒபாமா நிர்வாகம் இராஜபக்சவுடனான உறவுகளை சீர்செய்து கொண்டிருப்பதால் தான், அசாங்கே போலல்லாமல் இராஜபக்சவால், உலக அரங்கில் பெருநடை போட்டு சுதந்திரமாய் உலா வர முடிகிறது. சென்ற வாரத்தில் ஒரு பெரும் பரிவாரத்துடன் அவர் இலண்டனுக்கு விஜயம் செய்தார். தமிழர்களின் எதிர்ப்புகளால் ஆக்ஸ்போர்டு சங்கத்தின் விவாத அமைப்பு (Oxford Union Debating Society) திட்டமிட்டிருந்த ஒரு உரையை இரத்து செய்ய வேண்டியதானது எனினும் ராஜபக்சேவால் இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சரான லியான் ஃபாக்ஸ் உடன் சந்திப்பு நிகழ்த்த முடிந்தது. இவர்கள் இலங்கைக்கான பிரிட்டிஷ் உதவி குறித்து, குறிப்பாக முன்னர் புலிகள் வசம் இருந்த வடக்குப் பகுதிகளிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் இந்நாட்டில் பிரிட்டிஷ் முதலீட்டிற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து பேசியதாய் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு நேரெதிராய், அசாங்கே விவகாரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கம் மிகத் துரிதமாய் அசாங்கேயே கைது செய்தது. அசாங்கேயை கைது செய்ய பிரிட்டிஷ் போலிசார் தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில், பிரதமர் டேவிட் கேமரூனின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்: “இரகசிய தகவல்களை முறையற்று வெளியிட்டதை நாங்கள் ஐயப்பாட்டிற்கு இடமின்றி கண்டிக்கிறோம். இக்கசிவுகளும் அவை வெளியிடப்பட்டதும் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் அல்லது வேறெங்கிலும் தேசியப் பாதுகாப்புக்கு சேதாரம் விளைவித்துக் கொண்டிருக்கின்றன.”

இந்ததேசிய பாதுகாப்பில்சாதாரண மக்களைப் பாதுகாப்பதற்கான எதுவும் இல்லை, மாறாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் தங்களது மூலோபாய மற்றும் பெருநிறுவன நலன்களின் நாட்டத்தினால் நிகழ்த்தக் கூடிய கொலைகள், அரசியல் படுகொலைகள், ஆட்சி மாற்றக் கவிழ்ப்புகள் மற்றும் பிற ஏகாதிபத்திய சதிகள் ஆகியவற்றை அந்த சாதாரண மக்களின் கண்களில் இருந்து மறைப்பது தான் இருக்கிறது. அமெரிக்காவுடன் சேர்ந்து, பிரிட்டன் தான் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் நடந்து வரும் ஒபாமாவின் அதிகரித்த தாக்குதலுக்கு இரண்டாவது பெரும் இராணுவ பங்களிப்பாளராய் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் மீதான நவ-காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு தோன்றியுள்ள எதிர்ப்பை நசுக்குவதற்கான முயற்சிகளில் செய்யப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல் படுகொலைகள், வான் வழிக் குண்டுவீச்சுகள் மற்றும் இராணுவக் கொலைப் படைகள் ஆகியவை உள்ளிட்ட போர்க் குற்றங்களுக்கு இந்த இரண்டு அரசாங்கங்கள் தான் பொறுப்பாயிருக்கின்றன.

விக்கிலீக்ஸ் ஆவணங்களை அம்பலப்படுத்தியதில் ஒபாமா நிர்வாகம் தேள் கொட்டியது போல உணரக் காரணம் அவை உண்மையான குற்றவாளிகளின் மீது ஒளிவெள்ளத்தை பாய்ச்சியிருப்பதால் தான். வலிந்து நடத்திய போர்கள் முதல் கைதிகளை சித்திரவதை நாடுகளிடம் ஒப்படைப்பது, சித்திரவதை மற்றும் சர்வதேச பயங்கரத்தின் நடவடிக்கைகள் வரை, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் முதுகின் பின்னால் பல தசாப்தங்களாக நிகழ்த்தி வரப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆளும் உயரடுக்கின் பாகமே அக்குற்றவாளிகள். இந்த அருவெருப்பூட்டும் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை மற்றும் போர்களை உருவாக்கிய ஒட்டுமொத்த சமூக-பொருளாதார ஒழுங்கையும் புரட்டிப் போட வேண்டிய அவசியத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கம் நிற்பதையே இலங்கை அம்பலப்படுத்தல்கள் சுட்டிக் காட்டுகின்றன.