World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Central Bank promises unlimited liquidity

ஐரோப்பிய மத்திய வங்கி வரம்பற்ற பணத்தைப் பாய்ச்ச வாக்குறுதியளிக்கிறது

By Stefan Steinberg
4 December 2010

Back to screen version

சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி ஊக நிறுவனங்களுக்கான இன்னுமொரு சலுகையாக, வங்கிகளுக்கு வரம்பற்று பணம் பாய்ச்சும் தனது கொள்கையை ஐரோப்பிய மத்திய வங்கி அடுத்த ஆண்டும் தொடர இருப்பதாக அதன் தலைவர் ஜோன் குளோட் த்திரிஷே வியாழனன்று அறிவித்தார்

பிராங்க்பேர்டில் மாதாந்திர செய்தியாளர் கூட்டத்தில் பேசிய த்திரிஷே வங்கி தொடர்ந்து ஐரோப்பிய வங்கி அமைப்புக்குள் பெரும் தொகைகளைப் பாய்ச்சும் என்றார். எனவே வங்கிகள் 1 சதவீதம் என்னும் சாதனை அளவான குறைந்த வட்டிவீதத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து தொடர்ந்து பணத்தை பெற்று வர முடியும்.

தான் பேசும் வியாபாரம் சந்தைகளுக்கு மேலும் நன்கு புரியும் வகையில், ஊக வணிகர்களிடம் இருந்தான ஆத்திரத்தால் நேரடியாகப் பாதிப்புற்றிருக்கும் இரண்டு நாடுகளில் இருந்து பெரும் அளவிலான பத்திரங்களை ஐரோப்பிய மத்திய வங்கி வாங்க த்திரிஷே உத்தரவிட்டார். இந்த ஆண்டின் மே மாதம் முதலே ஐரோப்பிய மத்திய வங்கி வாங்கிக் குவித்து வருகிறது. பிரதானமாக போர்த்துகீசிய மற்றும் அயர்லாந்து அரசாங்கப் பத்திரங்களை 100 பில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியிருக்கிறது.

த்திரிஷேயின் கருத்து மற்றும் நடவடிக்கைகளில் பங்குச் சந்தைகள் திருப்தியை வெளிக்காட்டின. முக்கியமான ஐரோப்பிய சந்தைக் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. அமெரிக்காவின் டவ் 0.76 சதவீதம் உயர்ந்தது. டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பும் உயர்ந்தது த்திரிஷேயின் கருத்துகளுக்கும் சந்தையில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலையீட்டுக்குமான பங்குபத்திரச் சந்தைகளின் நேர்மறையான பதிலை பிரதிபலித்தது.  

சர்வதேச நிதி நிறுவனங்களும் தர மதிப்பீட்டு நிறுவனங்களும் தேசிய அரசாங்கங்களுக்கு மட்டுமன்றி ஐரோப்பாவின் மத்திய வங்கிக்கும் கூட எத்தகைய வகையில் கொள்கையை உத்தரவிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கான இன்னுமொரு சான்றாய் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நொடிந்த ஐரோப்பிய நாடுகளின் அரசாங்க பத்திரங்களை பத்திரச் சந்தைகள் கோரும் உயர்ந்த வட்டி வீதங்களில் பெரும் எண்ணிக்கையில் வாங்கிக் குவிக்கும் ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கையை தொடர்வதை தான் எதிர்ப்பதாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் த்திரிஷே ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியிருந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கிரேக்க அரசாங்க பத்திரங்களில் ஏற்கனவே பில்லியன்கணக்கில் கொள்முதல் செய்திருந்த நிலையில், அயர்லாந்து வங்கி அமைப்பு நிலைகுலையாமல் தடுக்க அயர்லாந்து பத்திரங்களையும் வாங்கும் பெருகிய நெருக்கடிக்குள் ஐரோப்பிய மத்திய வங்கி தள்ளப்பட்டது.

ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் அவசர அவசரமாக 85 பில்லியன் யூரோ பிணையெடுப்புத் தொகுப்பை முன்வைத்தனர். பாரிய பெருந்திரள் வெட்டுக்களும் நாட்டின் ஓய்வூதிய நிதி கொள்ளையடிக்கப்படுவதும் இதில் இணைக்கப்பட்டிருந்தன.

அடுத்தடுத்து நடந்த தொடர்ச்சியான கூட்டங்களில், இக்கண்டத்தில் நடப்பு 445 பில்லியன் மீட்பு நிதியத்துக்குப் பதிலாக (இது 2013ல் காலாவதியாகிறது) ஒரு புதிய நிதியத்திற்கான திட்டத்திற்கும் ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர். “அதிர்ச்சி வைத்திய தந்திரங்களை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு (பாரம்பரியமாக சர்வதேச நாணய நிதியத்துடன் சம்பந்தப்பட்டதாய் இருந்தவை) புதிதாக வரவிருக்கும் ஐரோப்பிய ஸ்திரநிலை எந்திரவகைமுறை (ESM) உருவாக்கப்படுகிறது. அத்துடன் படுபயங்கர சங்கடத்தில் இருக்கும் பொருளாதாரங்கள் தவணையை திருப்பி செலுத்துவதில் தவறுவதற்கும் (பத்திரங்களைக் கொண்டுள்ளவர்களும் முக்கியமான கடனளிப்பாளர்களுக்கும் இழப்புகளை ஏற்படுத்துவதில் விளையும் வண்ணம்) இந்த புதிய வகைமுறை அனுமதியளிக்கிறது.

இழப்புகளை எடுத்துக் கொள்ளும் சாத்தியத்திற்கு முகம் கொடுத்த நிதிச் சந்தைகள் ஒரு புதுத் தாக்குதலுடன் எதிர்வினையாற்றின. ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து நிதிகளை திரும்பப் பெறத் தொடங்கின. பத்திரதாரர்களுக்கு இழப்புகளையும் கொண்டுவரத்தக்க ESMக்கான திட்டங்களை விமர்சனம் செய்து தரமதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு பூவர் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தனது குரோத நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக, கிரேக்க பொருளாதாரத்தையும் முன்னணி போர்த்துகீசிய வங்கிகளையும் தனதுசரிவுக் கவனிப்பு பட்டியலில் வைப்பதாக இந்த முகவாண்மை இந்த வாரத்தில் அறிவித்துள்ளது. த்திரிஷேயின் சமீபத்திய சலுகையும் நிதிச் சந்தைகளின் பண தாகத்தை தணிப்பதாய் இல்லை. த்திரிஷேயின் கருத்துகள் சில முன்னணி வங்கிகளைதளர்வடையச் செய்துள்ளதாக வெள்ளியன்று பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்தது. ஒரு முதலீட்டு நிபுணர் அறிவித்தார்: “த்திரிஷேயின் கருத்துகள் ஏமாற்றமளிக்கின்றன. சந்தைகள் கூடுதலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.”

இன்னொரு வங்கியாளர் கோரினார்: ”மனோநிலையை ஒரு நீடித்த வகையில் உயர்த்துவதற்கு ஐரோப்பிய மத்திய வங்கி ஏவுகணைத் துப்பாக்கி (bazooka) உத்தியைப் பயன்படுத்த வேண்டும். அது ஒன்று தான் இந்த நெருக்கடி பரவுவதைத் தடுக்கும் ஒரே வழி. இன்று நல்லபடியாய் சென்றது என்றாலும், ஐரோப்பிய மத்திய வங்கி வாங்கிக் கொண்டிருப்பதால் பத்திர வருவாய் குறையவே செய்கிறது. தொடர்ந்து இவ்வாறு செய்வதோடு அளவும் பெரியதாய் இருக்க வேண்டும்.”

இத்தகையதொருஏவுகணைத் துப்பாக்கி உத்தி விவரங்கள் இன்னொரு நிதி உத்தி நிபுணரால் வழங்கப்பட்டது. நொடிந்த ஐரோப்பிய நாடுகளின் பத்திரங்கள் மீதான ஐரோப்பிய மத்திய வங்கியின் செலவினத்தை 1 டிரில்லியன் யூரோவில் இருந்து 2 டிரில்லியன் யூரோவாக மாற்றுவதற்கு அவர் ஆலோசனையளித்தார். ஐரோப்பிய மத்திய வங்கி இத்தகையதொரு மூலோபாயத்தை கையிலெடுப்பது குறித்து மற்ற மூத்த வங்கியாளர்களும் நிதி நிபுணர்களும் எச்சரிக்கையுடன் அணுகுகின்றனர். 22 அங்கத்தவர் கொண்ட ஐரோப்பிய மத்திய வங்கி வாரியத்தில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுடன் தான் வங்கிகளுக்கான வரம்பற்ற பணப்புழக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக த்திரிஷே அறிவித்தார். ஜேர்மன் மத்திய வங்கியின் தலைவரான ஆக்செல் வேபர் எதிர்ப்பாளர்களில் ஒருவராய் நம்பப்படுகிறது. மத்திய வங்கி பத்திரச் சந்தைகளில் பெருமளவு தலையிடுவதால் ஏற்படக் கூடிய பணவீக்க அபாயங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்து எச்சரித்து வருவதோடு மாற்று மூலோபாயத்திற்கும் வாதிட்டு வருகிறார்.  

கடன்களை மறுசீரமைப்பது மற்றும் வங்கிகளுக்கு தவிர்க்கமுடியாத இழப்பு ஆகியவை கொண்ட ஒரு கொள்கையை அமல்படுத்த தேசிய அரசாங்கங்கள் விருப்பமின்றி உள்ள நிலையில் வங்கிகள் ஐரோப்பாவை ஒரு பேரழிவுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றன என்று ஜேர்மனியின் முன்னணி வணிக செய்தித்தாளான Handelsblattன் பத்திப் பிரிவின் தலைவராய் இருக்கும் தோமஸ் ஹாங்கே வியாழனன்று வெளிவந்த தனதுவங்கிகள் ஐரோப்பாவை வளமழிந்த பூமியாக மாற்றுகின்றன” (“The Banks are Turning Europe into Scorched Earth”) என்ற தலைப்பிலான தலையங்கத்தில் எழுதினார்.

ஹாங்கே நடப்பு சூழ்நிலையை 1992 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்துடன் ஒப்பிட்டார். அப்போது ஊக வணிகர்களின் தொடர்ந்த தாக்குதலில் ஐரோப்பிய நாணய ஒருமை (யூரோவின் முன்னோடி) உடைந்து கண்டம் முழுவதிலும் நாணய மதிப்புக் குறைப்புகளுக்கு அழைத்துச் சென்றது. இம்முறை யூரோ அபாயத்தில் இருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களாக தீயை அணைக்க அரசாங்கங்கள் எந்த வழியும் காணவில்லை என்று ஹாங்கே எழுதினார். “2007 முதல் நிறைய மாறாமல் இருக்கின்றன, அல்லது இன்னும் மோசமாகி இருக்கின்றன. வரம்பற்ற பணம் பாய்ச்சுவதை அடிப்படையாகக் கொண்டதொரு கொள்கையின் மூலமாக, மத்திய வங்கிகள் இந்த நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றியிருக்கின்றன”. ”இந்த கொள்கை மாறாமல் தொடர்ந்தால் நெருப்பு இன்னும் பரந்து விரிந்து மொத்த ஐரோப்பாவையும் விழுங்கி விடும் என்று அவர் முடித்தார்.

வங்கிகளுக்கு தொகை நிரப்பாமல் கையெழுத்திட்ட காசோலைகளை வழங்குவதை

ஹாங்கேயும் மற்றும் ஜேர்மன் மத்திய வங்கி தலைவரான வேபரும் எதிர்க்கின்றனர். ஆனால் ஒரு கடுமையான நிதி ஆட்சியை செயல்படுத்துவதற்கும் ஐரோப்பாவெங்கிலும் இன்னும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை அமலாக்குவதற்கும் ஜேர்மன் தலைமையிலான ஒரு அரசியல் வகைமுறையே அவர்கள் கூறும் சொந்த மாற்றாக உள்ளது.