சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

International campaign targets WikiLeaks web site

சர்வதேச பிரசாரம் விக்கிலீக்ஸ் வலைத் தளத்தை குறிவைக்கிறது

By Joseph Kishore
4 December 2010

Use this version to print | Send feedback

விக்கிலீக்ஸால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் வெளியீட்டை தடுக்கும் முயற்சியின் பகுதியாக, அந்த அமைப்பின் வலைத் தளத்தை முடக்க அமெரிக்க அரசாங்கம் தலைமையில் ஒரு தீவிர பிரச்சாரம் நிலவுகிறது. இந்த முயற்சி, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேயை பிடிக்க குறிவைத்திருக்கும் ஒரு சர்வதேச கண்ணி வலையோடு சேர்ந்து நடந்து வருகிறது

அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை இரவு, விக்கிலீக்ஸின் டொமைன் பெயரை ஹோஸ்ட் செய்து வந்த EveryDNS.net நிறுவனம், 'அதனின் சேவை விதிமுறைகளை விக்கிலீக்ஸ் மீறியமைக்காக அதை முடக்கிவிட்டதாக' அறிவித்தது. DNS ஹோஸ்ட் என்பது வலைத் தளத்தின் தகவல்களைக் கொண்டிருகும் ஒரு குறிப்பிட்ட சர்வர் கணினியின் முகவரியை ஒரு டொமைன் பெயருடன் (-டு: wikileaks.org) இணைப்பதாகும்.

EveryDNS நடவடிக்கையின் விளைவாக, wikileaks.org டொமைன் விக்கிலீக்ஸ் சர்வர்களுக்கு திரும்புவதில்லை. வெள்ளிக்கிழமையன்று, பல டொமைன் பெயர்களில் (wikileaks.ch, wikileaks.de, wikileaks.fi, and wikileaks.nl) அது மீண்டும் திறந்துவிடப்படும் வரையில், சுமார் 6 மணிநேரத்திற்கு அத்தளத்தை அணுக முடியாமல் இருந்தது.

'வலைத் தளத்தை அணுகும் போது ஏற்படும் சேவை பகிர்வு மறுப்பின் (distributed denial of service - DDoS) விளைவாக, தமது நிறுவனத்தால் சேவையளிக்கப்பட்டு வந்த ஏனைய அனைத்து டொமைன் பெயர்களையும், விக்கிலீக்ஸ் வலைத் தளம் ஓர் ஆபத்திற்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டது' என்று EveryDNS, அதன் நடவடிக்கையை நியாயப்படுத்த, விளக்கமளித்தது. சமீபத்தில் அமெரிக்க அரசுத்துறை கசிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, விக்கிலீக்ஸின் சர்வர்களை அதிகச்சுமையில் (overloading) ஆழ்த்தும் நோக்கில் தரவுகளுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகளை அனுப்புதல் மற்றும் பெரும் இணையவழி தாக்குதலை உண்டாக்குதல் ஆகியவற்றிற்கு அந்நிறுவனம் உள்ளாகி இருந்தது.    

எவ்வாறிருப்பினும், அதனுடைய நடவடிக்கைகளுக்கு EveryDNS நிறுவனத்தால் அளிக்கப்பட்டவைகளை பெருமதிப்பான காரணங்களாக எடுத்துக்கொள்ள முடியாது; வியாபார அல்லது அரசியல் அழுத்தத்தால் அது முடிவு செய்யப்பட்டிருப்பதற்கான பெரும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் Dyn Inc. நிறுவனத்தால் EveryDNS விலைக்கு வாங்கப்பட்டது. அந்நிறுவனம் ஏற்கனவே DynDNS எனும் நிறுவனத்தையும் கொண்டுள்ளது. டிஎன்எஸ் சந்தையின் சுதந்திரத்தை ஒன்றுதிரட்டிக்கொள்வதன் ஒரு பகுதியாக இருக்கும் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை, இணையச் சேவையின் சுதந்திரத்திற்கு கணிசமான அபாயங்களை முன்னிறுத்துகிறது.       

அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் அழுத்தத்தின்கீழ், விக்கிலீக்ஸ் ஹோஸ்ட் செய்திருந்த அதன் (அமேஜானின்) சர்வர்களில் இருந்து அதை நீக்குவது என்று அமேஜானால் முடிவெடுக்கப்பட்ட அடுத்த நாள், EveryDNS அதன் நடவடிக்கையை நடத்தியது. அமேஜானின் அந்த நடவடிக்கைக்குச் சற்று முன்னர், உள்நாட்டு பாதுகாப்பிற்கான செனட் குழு தலைவரான அமெரிக்க செனட்டர் ஜோசப் லெய்பெர்மெனின் அலுவலகத்தால் அமேஜான் தொடர்பு கொள்ளப்பட்டிருந்தது.

பிரிட்டனின் Guardian நாளிழிதலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் இணையவழி கேள்வி-பதில் அமர்வில், அமேஜானின் தீர்மானத்திற்குப் பிரதிபலிப்பாக அசாங்கே பின்வருமாறு குறிப்பிட்டார்:“உண்மையிலிருந்து வாய்ஜாலங்களை பிரித்துக்காட்ட கருத்து சுதந்திரம் இல்லை என்று நாங்கள் கருதியதால், 2007இல் இருந்தே நாங்கள் திட்டமிட்டே எங்களின் சில சர்வர்களை சட்டமுறைமைகளுக்கு உட்பட்டு நிறுத்தி இருக்கிறோம். அமேஜானும் அவற்றில் ஒன்றாகும்.”

அதன் நடவடிக்கை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வந்த அழுத்தத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருந்தது என்பதை அமேஜான் பின்னர் மறுத்தது; எவ்வாறிருப்பினும், அதன் அறிக்கை வெறுமனே விக்கிலீக்ஸிற்கு எதிரான அரசாங்க வரிகளையே மீண்டும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆவண வகைகள் "அதற்கு சொந்தமானவை அல்ல அல்லது அவற்றிற்கான உரிமைகளை அது கொண்டிருக்கவில்லை" என்பது தெளிவாக உள்ளது என்று அமேஜான் குறிப்பிட்டது. அதாவது, கசிவான ஆவணங்களை வெளியிடுவதற்கான சட்டப்பூர்வமான உரிமை விக்கிலீக்ஸிற்கு கிடையாது என்ற ஒபாமா நிர்வாகத்தின் நிலைப்பாட்டை அமேஜான் கேள்வியின்றி ஏற்றுக் கொள்கிறது.

250,000 ஆவணங்களில் உள்ள தகவல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த விக்கிலீக்ஸ் போதிய முறைமைகளை எடுத்திருக்கிறது என்பது "நம்பும்படியாக" இல்லை என்று, ஒரேயொரு ஆதாரத்துணுக்குக் கூட இல்லாமல், அந்நிறுவனம் அறிவித்தது. கிடைத்திருக்கும் ஆவணங்களைச் சரிபார்த்து தொகுக்க மிகக் குறைந்த வளங்களே அதனிடம் இருக்கின்றன என்ற நிலையில், அந்த ஆவணங்களின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது என்ற உண்மையை அந்த முறையீடு கைவிட்டுவிடுகிறது.

அமேஜானின் ஜனநாயக விரோத முடிவு, விக்கிலீக்ஸூடனான அனைத்து தொடர்புகளையும் உடைத்து கொள்வதில் பிற நிறுவனங்களுக்கும் அழுத்தம் அளிக்க உதவும்; இது இன்னும் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

இந்த உள்நோக்கம் லெய்பெர்மெனால் தெளிவுபடுத்தப்பட்டது. அவர் ஓர் அறிக்கையில் அறிவித்ததாவது, “அமேஜான் எடுத்த முடிவு மிகச் சரியான முடிவு, சட்டத்திற்குப்புறம்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வினியோகிப்பதற்கு, விக்கிலீக்ஸ் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் இதுவொரு முன்னுதாரணமாக அமையும். விக்கிலீக்ஸ் ஆவணங்களை ஹோஸ்ட் செய்து கொண்டிருக்கும் பிற நிறுவனங்களும் அதனுடனான தொடர்புகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்றார். சந்தேகத்திற்கு இடமின்றி, லெய்பெர்மென் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களைத் தான் ஏனைய நிறுவனங்களில் பட்டியலில் வைத்திருக்கிறார். அதனுடைய புதிய டொமைன் பெயர்கள் குறித்த தகவல்கள் உட்பட—தகவல்களைப் பரப்ப விக்கிலீக்ஸ் இவற்றைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது

கசிவான ஆவணங்களில் இருந்து தரவு விளக்கப்படக்காட்சிகளை உருவாக்கியிருந்த ஒரு நிறுவனமான Tableau Software நிறுவனம், விக்கிலீக்ஸூடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும்  நீக்கிவிட்டதாக அறிவித்தது. சுய-தணிக்கை குறித்த மிகவும் வெளிப்படையாக ஓர் ஒப்புகையாக, அந்த நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கை குறிப்பிட்டதாவது: “விக்கிலீக்ஸ் வலைத்தளத்துடன் இருக்கும் தொடர்புகளை அதனை ஹோஸ்ட் செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று செனட்டின் உள்நாட்டு பாதுக்காப்புக்குழு தலைவர் ஜோ லெய்பெர்மென் பொதுக்கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பிரதிபலிப்பாகவே, எங்களின் சர்வர்களில் இருந்து தரவுகளை நீக்குவதற்கு நாங்கள் முடிவெடுத்தோம்.”    

விக்கிலீக்ஸின் தகவல்களை அணுகுவதில் இருந்து தடுக்க அமெரிக்க அராசங்கத்தால் என்னென்ன செய்ய இயலுமோ அவற்றை அது செய்து கொண்டிருக்கிறது. பணியாளர்களும், ஒப்பந்ததாரர்களும் விக்கிலீக்ஸ் வலைத்தளத்திலிருந்து எவ்விதமான தகவல்களையும் அணுகாமல் இருக்க கோரி, வெள்ளியன்று வர்த்தகத்துறை ஓர் உத்தரவை வெளியிட்டது. காங்கிரஸ் நூலகமும் வலைத்தளத்தை அணுகாமல் இருக்க அதன் வலையமைப்புகளை தடுத்துள்ளது.

வெவ்வேறு நாடுகளில் ஏனைய பல சர்வர்களை விக்கிலீக்ஸ் ஏற்பாடு செய்து கொண்டுள்ளது; இருப்பினும் கூட, இவையும்—குறிப்பாக பிரான்ஸில் அதன் சர்வர்கள்—அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும். தனது ஹோஸ்டிங் சேவையை இரத்து செய்ய அமேஜோன் முடிவு செய்த பின்னர், விக்கிலீக்ஸின் சர்வர்களில் ஒன்று பிரெஞ்சு நிறுவனமான OVHஆல் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.

வெள்ளியன்று, அனைத்து பிரெஞ்சு சர்வர்களில் இருந்தும் விக்கிலீக்ஸைத் தடை செய்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் எடுக்கத் தொடங்கியது. “இராஜாங்கரீதியிலான உறவுகளை மீறும் மற்றும் இராஜாங்கரீதியிலான இரகசியங்களால் பாதுகாக்கப்பட்ட மனிதர்களை ஆபத்திற்குள்ளாக்கும் வலைத் தளங்களைப் பிரான்ஸிலிருந்து ஹோஸ்ட் செய்ய அனுமதிக்க முடியாது," என்று தொழில்துறை மந்திரி எரிக் பெஸ்சோன் அறிவித்தார். அமெரிக்காவிலிருந்து என்னமாதிரியான கடுமையான அழுத்தம் இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் முகமாக, பெஸ்சோன் கூடுதலாக குறிப்பிட்டதாவது, “தேசிய உரிமைகளைப் பாதிக்கும் என்ற அடிப்படையில் ஏனைய நாடுகளால் மறுக்கப்பட்ட மற்றும் சட்டவிரோதமானவை என்று அழைக்கப்பட்டிருக்கும் வலைத் தளங்களை எங்களால் ஹோஸ்ட் செய்ய முடியாது,” என்றார்

பிரெஞ்சு சர்வர் சேவை அளிப்போருக்கு ஒரு மிரட்டலை அளிக்கும் வகையில், விக்கிலீக்ஸூடன் தொடர்பு கொண்டிருக்கும் எந்த நிறுவனமும், “அதன் நடவடிக்கைகளின் விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்; இரண்டாவதாக அவற்றிற்கான பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்று பெஸ்சோன் எச்சரித்தார்.

விக்கிலீக்ஸிற்கு எதிரான இத்தகைய நேரடியான அரசு அல்லது பெருநிறுவன நடவடிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு, அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளுடன், DDoS பிரச்சினை குறித்த தகவலும் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளது. முஸ்லீம் அமைப்புகளைக் குறிவைப்பதில் நிபுணரான ஒரு வலது-சாரி ஹேக்கர், இதற்கு பொறுப்பேற்றிருக்கிறார்; இருந்த போதினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. நவம்பர் 30இல் விக்கிலீக்ஸ் அறிவித்தபடி, நொடிக்கு 10 கிகாபைட்ஸைத் தாண்டிச் செல்கிறது என்ற நிலையில், தாக்குதலின் அளவு மிகப் பெரியதாக இருக்கிறது.   

இதற்கிடையில், அமெரிக்காவின் தலைமையில் அரசியல் பிரபலங்களுடன் சேர்ந்து, அசேங்கைக்கு எதிரான பிரச்சாரமும் தொடர்கிறது. விக்கிலீக்ஸ் நிர்வாகிகள் கொல்லப்பட வேண்டும் என்ற முறையீடுகளைக் குறித்து (மிகச் சமீபத்தில்,“அசாங்கே படுகொலை” என்ற தலைப்பில் Washington Times ஒரு கட்டுரை வெளியிட்டது) விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் Guardian இதழின் கேள்வி&பதில் பகுதியில் குறிப்பிடுகையில், “எங்களைக் கொலை செய்வது குறித்த மிரட்டல்கள், ஒரு பொது ஆவணங்கள் சம்பந்தப்பட்டதாகும். எவ்வாறிருப்பினும், இதுபோன்ற பெரும்சக்திகளைக் கையாளும் போது எங்களால் முடிந்த வரைக்கும், போதிய அளவிற்கு முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்றார்.    

ஆவணங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான முயற்சியிலும், அசாங்கேயிற்கு ஏதேனும் நேரிட்டாலும் கூட அவற்றை வெளியிடுவதை உறுதிப்படுத்தவும் அவற்றை குறியேற்றம் செய்த வடிவத்தில் சுமார் 100,000ற்கும் மேற்பட்ட “காப்பீட்டு கோப்புகளை" விக்கிலீக்ஸ் அதன் ஆதரவாளர்களுக்கு வினியோகித்துள்ளது. “எங்களுக்கு ஏதேனும் நேரிட்டால், ஆவணங்களின் முக்கிய பகுதிகள் தானாகவே வெளியிடப்படும்,” அசேங்கெ தெரிவித்தார்.

ஸ்வீடன் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அசாங்கைக் கைது செய்வதற்கான ஒரு பிடிவாரண்டு தான் அவருக்கு இருக்கும் மிக உடனடி அச்சுறுத்தலாக இருக்கிறது. எவ்வாறிருப்பினும், அசாங்கேவிற்கு எதிராக ஏற்கனவே ஓர் அமெரிக்க குற்றப்பத்திரிக்கையும் இருக்கலாம் என்ற ஊகமும் நிலவுகிறது. ஆனால் இந்த குற்றப்பத்திரிக்கை அவர் கைது செய்யப்படும் வரையில் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்

வியாழனன்று Christian Science Monitor குறிப்பிட்டதாவது: “அமெரிக்க அதிகாரிகள் இந்த விஷயத்தை புலனாய்வு செய்து வருவதாக வெளியில் மட்டும் தான் கூறுவார்கள்; ஆனால் எந்த சட்டப்பூர்வமான வாய்ப்பையும் விட்டு வைக்க மாட்டார்கள். இதுபோன்ற ஒரு முக்கியமான மத்திய அரசு விஷயம் மீதான ஒரு குற்றப்பத்திரிக்கை முதன்மை நீதிபதியிடம் தான் சமர்பிக்கப்படும்; அந்த நீதிபதியின் செயல்பாடுகளும் இரகசியமாக இருக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நிபுணரான ஸ்டீபன் விளாடெக் குறிப்பிடுகிறார். . . .”

"அமெரிக்கா அசாங்கைப் பிடிக்கும் வரையில், அல்லது ஒரு நாட்டில் பிடிக்கப்பட்டு அங்கிருந்து அவர் மீட்டுக் கொண்டு வரப்படும் வரையில், அசாங்கே மீதான ஒரு குற்றப்பத்திரிக்கையை மூடி முத்திரையிட்டு வைத்திருக்கும்படி நீதிபதி உத்தரவிடலாம்,” என்று Monitor குறிப்பிட்டது. “விக்கிலீக்ஸின் தலைவர் இன்னும் எச்சரிக்கையாக தலைமறைவாகி விடக்கூடாது என்பது தான் இதுபோன்று இரகசியம் கையாளப்படுவதன் நோக்கம்.”

விக்கிலீக்ஸிற்கும், அதன் உறுப்பினர்களும் இருக்கும் உடனடி அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டு, அந்த அமைப்பிற்கு எதிரான பிரச்சாரம் ஜனநாயக உரிமைகளை, குறிப்பாக இணைய சுதந்திரத்தைச் சவக்குழிக்கு அனுப்பும் ஓர் அச்சுறுத்தலையும் முன்நிறுத்துகிறது. அவ்வமைப்பின் வலைத் தளத்தை முடக்குவதற்கான பிரச்சாரமானது, தனியார் பெருநிறுவனங்கள் இணையத்துறையின் முக்கிய பிரிவுகளில் கொண்டிருக்கும் தனியுடைமை மற்றும் கட்டுப்பாட்டால் முன்னிறுத்தப்பட்டிருக்கும் அபாயத்தையும் உயர்த்திக் காட்டுகிறது.

சமீபத்திய வாரங்களில், வலைத்தளங்களை முடக்குவதற்கான அதன் திறனை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. திங்களன்று, தகவல்களைக் கைப்பற்றுவதில் சம்பந்தப்பட்டவையாக சந்தேகிக்கப்படும் 82 அமைப்புகளின் டொமைன் பெயர்களை ஒபாமா நிர்வாகம் முடக்கியது.