World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Eurozone crisis spreads: Portugal, Italy, Belgium hit by fallout from Irish bailout

யூரோ மண்டல நெருக்கடி பரவுகிறது: அயர்லாந்தின் பிணெயெடுப்பின் விளைவால் போர்த்துகல், இத்தாலி, பெல்ஜியம் பாதிக்கப்பட்டுள்ளன

By Stefan Steinberg
2 December 2010

Back to screen version

சென்ற வார இறுதியில் நடந்த அயர்லாந்தின் பிணையெடுப்பை ஒட்டி, ஐரோப்பிய மண்டலத்தின் நிதி நெருக்கடி போர்த்துகலை உலுக்கியுள்ளதுடன் இத்தாலி, பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினின் நாளாந்த நிதிச்செயல்பாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நான்கு நாடுகளுமே 10 வருட அரசு பத்திரங்களுக்கு முன்னொருபோதுமில்லா வட்டியை (மீது சாதனை அளவான வருவாயை) வழங்கும் நிர்ப்பந்திற்குள்ளாகின. கடன்பொறுப்பாளர்கள்  1999 இல் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதிக்கூடிய வட்டியை கொடுக்க நிர்ப்பந்தித்தனர். ஜேர்மன் பிரஞ்சு பத்திரங்களும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஊகவாணிபர்கள் இந்த வருட கோடைகாலத்திலும் பார்க்க அரை விகித வட்டி உயர்வை கோரியுள்ளனர்.

போர்த்துகல் புதனன்று காலை ஒரு பேரழிவில் இருந்து தப்பித்தது. 500 மில்லியன் யூரோக்களுக்கான 12 மாத பத்திரங்களை அது வெற்றிகரமாய் வெளியிட்டது. ஆயினும் இரண்டு வாரங்களுக்கு முன் இதே போன்ற நடந்த ஏலத்தின் போது வழங்கப்பட்ட 4.813 சதவீத வட்டி அளவை அதிகரித்து 5.281 சதவீத வட்டிவீதத்தில் வழங்க அது நிர்ப்பந்தமுற்றது. இந்நாட்டின் கடன் தர மதிப்பீட்டு அளவை குறைக்கப் போவதாக அமெரிக்க பத்திர-தரமதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு & பூவர் (Standard & Poor’s -S&P) மிரட்டிய ஒரு சில மணி நேரங்களில் இந்த ஏலம் நடந்தது.

போர்த்துகல் அரசாங்கம் ஏற்கனவே எற்றுக் கொண்டிருக்கும் மிருகத்தனமான வரவு-செலவுத் திட்ட வெட்டுகள் நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளி விடக்கூடும் என்று S&P பகுப்பாய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அட்டவணையிடப்பட்டிருக்கும் 2011 வரவு-செலவுத் திட்ட வெட்டுகளினால் உருவாகக்கூடிய நிதிய தடைகளை சரிசெய்யும் அளவிற்கான வளர்ச்சி-மேம்பாட்டு சீர்திருத்தங்கள் எதிலும் அரசாங்கம் வெகு குறைவான முன்னேற்றமே கண்டுள்ளது என்று S&P எச்சரித்தது. போர்த்துகல் பொருளாதாரத்தின் அமைப்புரீதியான இறுகியதன்மைகள் மற்றும் ஸ்திரம்குலைந்த புற நிலைமைகளின் ஒரு பின்விளைவாக, நாட்டின்  பொருளாதாரம் 2011 ஆம் ஆண்டில் குறைந்தது 2 சதவீதமேனும் சுருங்கும் என நாங்கள் கருதுகிறோம்என்றது.

போர்த்துகலின் மத்திய வங்கி செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், அது பணப்புழக்க நெருக்கடியில் பாதிப்புற்றுள்ளதாகவும் ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்தான கடன்களின் மூலம் மட்டும் தான் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்தது. முதல்முறையாக போர்த்துகலின் ஒரு முன்னணி அரசியல்வாதியும் (சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் Pedro Passos Coelho) நாடு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கலாம் என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவ்வாறான பட்சத்தில் கிரீஸ் மற்றும் அயர்லாந்தைத் தொடர்ந்து இத்தகையதொரு கடனைப் பெறும் யூரோமண்டலத்தின் மூன்றாவது நாடாக போர்த்துகல் ஆகும். 

இத்தாலியில், அரசுப் பத்திரங்களுக்கு சாதனை அளவான வட்டிவிகிதங்களை அளிப்பதன் சாத்தியமான எதிர்விளைவுகள் குறித்து பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது அமைச்சரவை சகாக்களை எச்சரித்தார். அவரது அமைச்சரவை சகாவான கியானி லெட்டா பணச் சந்தைகளிலான சமீபத்திய நடவடிக்கைகளை எயிட்ஸ் நோயுடன் ஒப்பிட்டார். ஐரோப்பிய சந்தை அதிர்ச்சிகள் ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் இத்தாலி போன்ற கூடுதல் ஸ்திரமுடையதான மற்ற நாடுகளையும் பாழாக்கலாம்என்று தான் அஞ்சுவதாயும் சந்தை கொந்தளிப்புகள் எயிட்ஸை விடவும் பயங்கர தொற்றாய் இருக்கிறது, ஒரு தடுப்பு மருந்து அவசியப்படுகிறது என்றும் லெட்டா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தொடரும் நெருக்கடியானது யூரோவின் மதிப்பில் ஒரு கூர்மையான சரிவுக்கும் இட்டுச் சென்றது. செப்டம்பருக்குப் பின் முதல்முறையாக இந்த வாரத்தின் ஒரு சமயத்தில் யூரோ 1.30 அமெரிக்க டாலருக்கும் கீழான மதிப்பிற்கு சென்றது. சர்வதேச சந்தைகளில் டாலரின் மதிப்பைக் குறைக்க அமெரிக்க நிர்வாகம் ஒன்றுபட்ட வர்த்தகப் போர் பிரச்சாரத்தை செய்துவரும் நிலையிலும் யூரோ தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

நிதிச் சந்தைகளை முட்டுக் கொடுப்பதற்கு பலவீனமான நாடுகளின் பத்திரக் கொள்முதலை அதிகப்படுத்துவதற்கு அழுத்தம் பெருகி வருவதற்கு இடையில் ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆட்சிமன்றக்குழு  வியாழனன்று சந்திக்கிறது.

கடந்த சில வார காலங்களில் முன்னணி ஐரோப்பிய சக்திகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றுடன் சேர்ந்து, பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் இரத்த வேட்கையை தணிப்பதற்கு தொடர்ச்சியான அசாதாரணமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வங்கிகளின் வேகத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஐரோப்பிய ஸ்திர செயலமைப்புத்திட்டத்தை (European Stability Mechanism - ESM) உருவாக்குவதன் மூலமாக இப்போதிருக்கிற ஐரோப்பிய அவசரகால பிணையெடுப்பு நிதியத்தை நீட்டிப்பதற்கு வார இறுதியில் ஜேர்மனியால் முன்வைக்கப்பட்டு பிரான்சால் ஆதரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை ஐரோப்பிய நிதி அமைச்சர் வேகமாய் ஒப்புக் கொண்டார்.

இந்த வருடத்தின் மே மாதத்தில் கிரேக்க கடன் நெருக்கடியை ஒட்டி ஐரோப்பிய அரசாங்கங்களால் ஸ்தாபிக்கப்பட்ட இப்போதிருக்கும் 440 பில்லியன் யூரோ (583 பில்லியன் அமெரிக்க டாலர்) மீட்பு நிதியத்தை இடம்பெயர்க்கும் ஒரு நிதியத்தை அமைப்பது இப்புதிய உடன்பாட்டின் பிரதான கூறாக இருக்கிறது. ஐரோப்பிய நிதி ஸ்திர முறை என்று அழைக்கப்படும் இந்த நிதியம் 2013ல் காலாவதியாக இருக்கிறது. இந்த புதிய நிதியம் (ESM) 2013ல் செயல்பாட்டிற்கு வரும். திவால்நிலையை எதிர்கொள்ளும் பலவீனமான நாடுகளின் மீது அதிர்ச்சி வைத்தியம் போன்ற தண்டனை நடவடிக்கைகளை திணிப்பதற்கு சக்திவாய்ந்த ஐரோப்பிய சக்திகளுக்கு வழிவகை செய்துதரும் தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை இது அறிமுகப்படுத்துகிறது. இதில் தங்களது கடன்களைச் செலுத்தமுடியாத சாத்தியமான நாடுகளில் மேற்கொள்ளப்படவுள்ள ஒரு புதிய பொறிமுறையும் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐரோப்பிய அவசரகால நிதியத்தை நீட்டிக்க வேண்டும் என்பது கொஞ்ச காலமாகவே வங்கிகளின் மற்றும் பணச் சந்தைகளின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. ஒரு பெரும் ஐரோப்பிய மீட்புக்கடன் பெற்ற முதல் நாடான கிரீஸ் தனது கடன்களை காலத்தே திரும்பச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாய் இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஆணையம் அறிவித்தபோது வங்கிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு கூடுதலான எந்திரவகைமுறை அவசியப்படுவது அம்பலப்பட்டது. இப்போது கிரேக்கம் கடன்களைத் திரும்ப செலுத்துவதற்கான காலத்தை கூடுதலாய் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க (அதாவது 2017 ஆம் ஆண்டு வரை) ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் ஆலோசனையை முன்வைத்துள்ளது.  

வங்கிகளுக்கான இன்னுமொரு சலுகையாக, வருங்கால பிணையெடுப்புகளிலான இழப்புகளை தனியார் கடனளிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை (ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கேல் முதலில் எழுப்பினார்) ESM உடன்பாடு கைவிட்டது. பிரான்சில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே இந்த கோரிக்கை முக்கியமாகக் கைவிடப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற ESMன் உண்மையான தாக்கங்கள், அதனை உருவாக்குவதில் வேலைசெய்த நிபுணர்களில் ஒருவர் கூறிய கருத்தில் வெளிப்பட்டது. புரூசெல்ஸ் சிந்தனைக் கூடத்தினொரு முன்னணி உறுப்பினரான ஆண்ட்ரே சபிர் அறிவித்தார்: “ஒருவருடத்திற்கு முன்னர் கேட்டிருந்தால் இத்தகையதொரு யோசனை சாத்தியமில்லாதது என்று தான் சொல்லியிருப்பேன்....ஒரு யூரோ பகுதி நாட்டின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படலாம் என்பதான ஒரு யோசனையை ஒருவர் ஏற்றுக் கொள்கிறார் என்பதே நம்பமுடியாத பாய்ச்சலாகும். சிந்தித்து பார்க்க முடியாத ஒன்றாகவும், வளரும் நாடுகளுக்கு மட்டுமேயான ஒன்றாகவும் அது இருந்தது. அந்த அர்த்தத்தில் இது ஒரு உண்மையான புரட்சி என்றும் சொல்லலாம்.”  

கடந்தகாலத்தில் பல நாடுகளில் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதியம் அமல்படுத்திய அதிர்ச்சி வைத்திய கொள்கைகளின் வகையை ஐரோப்பிய ஒன்றியம் செயல்படுத்துவதற்கு அதிகாரம் பெறுவதையே புரட்சிஎன்று சபிர் இங்கே குறிப்பிடுகிறார். ஆர்ஜெண்டினாவில் 1990களில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டிற்குப் பின்னர், அந்நாட்டின் பொருளாதாரம் 27 சதவீதம் சுருங்கி மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானோர் வறுமைக்குள் மூழ்கினர்.

வங்கிகளின் உத்தரவின் பேரில் சமுகப் பேரழிவைத் திணிக்கும் நோக்கம் கொண்டு அரசியல்ரீதியான நாட்டாண்மைத்தனத்தை பெற (பாரம்பரியமாய் சர்வதேச நாணய நிதியம் செய்து வந்த வேலை) ஜேர்மனியும் பிரான்சும் முயன்று வந்த போதிலும் கூட, பணச் சந்தைகள் புதிய திட்டத்திற்கு இசைவு தெரிவிக்கவில்லை. திட்டத்தின் செயல்பாட்டு மற்றும் நிதியாதார செயலமைப்புத்திட்டங்கள் தொடர்பான ஏராளமான விவரங்கள் தெளிவின்றி இருக்கின்றன, அத்துடன் வங்கிகள் அவை கோரும் பணத்தைப் பெறுவதில் பொறுமையிழக்கச் செய்யும் வண்ணம் திட்டமும் ரொம்ப தாமதமாகவே செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. திட்டம் வெளியிடப்பட்ட ஒரே நாளுக்குப் பின், அவலம் வெளிப்பட்ட பொருளாதாரங்களின் மீது நிதி ஊக நிபுணர்கள் ஒரு புதிய தாக்குதலைத் தொடக்கினர்.    

நெருக்கடியின் சமீபத்திய கட்டம் (இதனை சில வருணனைகள் 1931 ஆம் ஆண்டின் வங்கித் துறை பொறிவுடன் ஒப்பிடுகின்றன) முன்னணி ஐரோப்பிய அரசியல்வாதிகளையும் மற்றும் வங்கிகளையும் இன்னும் தீவிரப்பட்ட நடவடிக்கைகளுக்கு தள்ளியுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான Jean-Claude Trichet கடனை மிகப்பெரும் அளவில் விரிவாக்குவதற்கான நெருக்குதலின் கீழ் இருக்கிறார்.

ECBன் பாத்திரம் குறித்து கருத்து தெரிவித்த சிட்டிகுழுமத்தின் தலைமை பொருளாதார நிபுணர் விலெம் புடெர் அறிவித்தார்: “ECBன்  அறிக்கைகளும் மற்றும் அநேகமாய் அதன் விருப்பங்களும் எதிராய் இருந்தாலும் கூட அதன் தலையீடு அதிகரிக்க இருக்கிறது.”

அயர்லாந்தை கடனை திருப்பியளிக்க முடியாத நிலையை எட்டியிருக்கும் நாடுஎன்றும் போர்த்துகல் கடனை திருப்பியளிக்க முடியாத நிலையை ஓரளவுக்கு எட்டியிருக்கும் நாடுஎன்றும் கிரீஸை தவணை செலுத்துவதில் தவறியிருக்கக் கூடிய நாடுஎன்றும் அவர் விவரித்தார். ஸ்பெயின் அதன் வங்கிகளின் கடனை பெருமளவு மறுசீரமைப்பது அவசியமாய் உள்ளது என்றார்ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகளும் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த நிதிப் பேரிடரில் யூரோமண்டல நெருக்கடி ஒரு ஆரம்ப காட்சி மட்டுமே என புடர் மேலும் கூறினார்.

ஐரோப்பாவின் அதிகரித்துவரும் நெருக்கடியில் அமெரிக்க முதலாளித்துவத்தின் நிலைமையும் பணயம் வைக்கப்பட்டுள்ளதை சர்வதேச விவகாரங்களுக்கான துணைச்செயலரான Lael Brainard சிறப்புத் தூதராய் ஐரோப்பாவில் பொருளாதார அபிவிருத்திகள்குறித்து பேசுவதற்கு அவர் ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு செய்யும் பயணங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறன.