World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama administration seeks to criminalize WikiLeaks

ஒபாமா நிர்வாகம் விக்கிலீக்ஸைக் குற்றவாளியாக ஆக்க முற்படுகிறது

By Patrick Martin
1 December 2010

Back to screen version

ஒபாமா நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அதன் சமீபத்திய அமெரிக்க அரசாங்க இராஜதந்திர இரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக குற்றவிதிகளின்படி விக்கிலீக்ஸ்க்கு நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியுள்ளனர். திங்களன்று அரசாங்கத் தலைமை வக்கீல் எரிக் ஹோல்டர், ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “குற்றங்கள் இங்கு செய்யப்பட்டுள்ளன என்று நம்புவதற்கான முன்னனுமானிப்புக்கள் எங்களிடம் உள்ளன, இக்குற்றங்கள் குறித்து விசாரணை வழிவகையை ஆராய்ந்துவருகிறோம்என்று அறிவித்தார்.

வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ரோபர்ட் கிப்ஸ் விக்கிலீக்ஸ் குற்றம் புரிந்துள்ளது என்று எந்த விசாரணையும் இன்றி அப்பட்டமாக அறிவிக்கும் வகையில், “விக்கிலீக்ஸும் இது போல் மக்களுக்கு தகவல்கள் கொடுப்போர் அனைவரும் குற்றவாளிகள்என்று கூறினார்.

நீதித்துறை விசாரணையின் கவனக்குவிப்பு உளவுச் சட்டப்படி குற்றங்களைச் சுமத்தமுடியுமா என்பது குறித்து உள்ளது என செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. “இந்த ஆவணங்கள் வைத்துள்ளோர் ஒவ்வொருவர் பற்றியும் FBI ஆராய்கிறது, இதில் விக்கிலீக்ஸுக்குத் தகவல்கள் கொடுத்தவர் மற்றும் அந்த அமைப்பும் கூட அடங்கும்என்று வாஷிங்டன் போஸ்ட்  கூறியுள்ளது.

அரசாங்க ஊழியர்களை தவிர வேறு எவரும் உளவுச் சட்டத்தின் கீழ் வெற்றிகரமான  குற்ற வழக்கிற்கு உட்படுத்தப்பட்டதில்லைஇது இரகசிய ஆவணங்களைக்  கொடுத்தல், பெறுதல் ஆகியவற்றைப் பற்றியது. இச்சட்டம் 1917ல் முதல் உலகப் போர்க் காலத்தில் இயற்றப்பட்டு அபூர்வமாகத்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸின் தலைவர்கள் ஜூலியன் அசாங்கே போன்றவர்கள் மீது அரச துரோகக் குற்றம் போன்றவற்றை சாட்ட இயலாது, ஏனெனில் அவர்கள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல. அசாங்கே ஓர் ஆஸ்திரேலியர், அவருடைய கூட்டாளிகள் பலரும் ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற மேற்கு ஐரோப்பாவிலிருந்து வருபவர்கள்.

விக்கிலீக்ஸைச் சமாளிக்க ஒரு புதிய சட்டம் தேவைப்படக்கூடும் என்று ஹோல்டர் தெரிவித்துள்ளார். “நம்முடைய சட்டத்தில் விரிசல்கள் உள்ளவைகளை, நாம் மூட முற்படுவோம். இதனால் இந்தக் கட்டத்தில் தங்கள் குடியுரிமை, வசிக்கும் அந்தஸ்து ஆகியவற்றினால் எவரும் நடக்கும் விசாரணையில் பங்கு பெற இலக்காக மாட்டார்கள் என்று பொருள் ஆகாது.”

புஷ் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க உளவுத்துறைப் பகுப்பாய்வாளர் லாரி பிராங்ளினிடமிருந்து தகவல்ளை அறிந்து இஸ்ரேலுக்கு அதை அனுப்ப முயன்ற, ஜியோனிசச் செல்வாக்குச் செலுத்தும் குழுவான AIPAC ஊழியர்கள் இருவர் மீது உளவு சட்டத்தை பிரயோகிக்கும் முயற்சி தோல்வியில் முடிவுற்றது. ஏனெனில் கசிவிற்கு ஆதாரமாக இருந்த பகுப்பாய்வாளர் லாரி பிராங்ளின் கொடுத்த சாட்சியம் இருந்தபோதிலும் இருவரையும் நீதிமன்றங்கள் விடுவித்துவிட்டன.

வர்ஜீனிய மாநிலத்தின் அலெக்சாந்திரியாவிலுள்ள அமெரிக்க அரசாங்க வக்கீலின் அலுவலகம், AIPAC குற்ற வழக்கை நடத்தியது, விக்கிலீக்ஸுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றிய நீதித்துறையின் பரிசீலனையில் தொடர்பு உடையதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பென்டகன் விசாரணையில் முன்னிற்கும் என்றும், “எந்தக் கூடுதலான குற்றச்சாட்டுக்களும் இராணுவ அல்லது நீதித்துறை முறைகளில் கொண்டுவரப்பட உள்ளனவா என்பது தெளிவாகவில்லைஎன்று போஸ்ட் கூறியுள்ளது. இது  முதல் வகுப்பு இராணுவ வீரர் பிராட்லி மானிங்கிற்கு எதிராக நடக்கும் விசாரணையை மட்டும் குறிப்பிடவில்லை. அவர்தான் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சில தகவல்களுக்கு ஆதாரம் என்று கருதப்படுபவர். அசாங்கே மற்றும் பிறரை இராணுவ நீதிமன்றங்கள் முன் விசாரிப்பது பற்றி குறிக்கிறதுஇது குவாண்டநாமோ குடாவில் பயங்கரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடைபெற்ற விசாரணைக்கு ஒப்பாகும்.

அரச அலுவலகம் விக்கிலீக்ஸை ஒரு பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டும் என்று குறைந்தபட்சம் ஒரு காங்கிரஸ் உறுப்பினரான குடியரசுக் கட்சியின் நியூ யோர்க் தொகுதி பீட்டர் கிங் முறையீடு செய்துள்ளார். இத்தகைய சட்ட நடவடிக்கை அமெரிக்க இணைய தளக் குழுவிற்குஆதரவுகொடுக்கும் நாட்டின் மீது பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கையைக் கூட எடுக்க வைக்க உதவும்.

 “தலைமைத் தளபதி”  என்ற பதவியைக் கொண்டிருக்கும் ஒபாமாவின் கீழுள்ள நிர்வாகம் பெற்றுள்ள அதிகாரங்களுக்கு விக்கிலீக்ஸை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அறிவிப்பது ஒபாமாவிற்கு, அசாங்கேயையும் அமைப்பில் தொடர்புடைய மற்றவர்களையும் கடத்த அல்லது  படுகொலை செய்யும் சட்ட அடிப்படைத் தளத்தைக் கொடுத்துவிடும்.

வலதுசாரி செய்தி ஊடகச் செய்தித் தொடர்பாளர்கள் ஏற்கனவே அத்தகைய நடவடிக்கைகளுக்கு இசைவு கொடுத்துள்ளனர். செவ்வாயன்று தன் தலையங்கத்தில் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் அசாங்கேயே  “அமெரிக்காவின் எதிரி என்று அறிவித்து, “சீன அல்லது ரஷ்ய இரகசியங்களை அவர் வெளியிட்டிருந்தால், ஏற்கனவே இந்நேரத்திற்குள் அடையாளம் தெரியாத நபரால் தேடப்பட்டு இறந்திருப்பார்என்று கூறியுள்ளது.

அமெரிக்க அரசாங்கமும் அதேபோல் இரக்கமற்றுத்தான் இருக்க வேண்டும் என்று தலையங்கம் வாதிட்டுள்ளது: “ஒரு வெளிநாட்டினர் (ஆஸ்திரேலியக் குடிமகன்) அமெரிக்காவிற்கு எதிரான விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், திருவாளர் அசாங்கே அமெரிக்காவில்  போர்ச் சட்டங்களின் கீழ் பதிலடிக்கு எதிராகப் பாதுகாப்புப் பெறமுடியாது.”

அசாங்கேயின்விரோதச் செயல்கள்இணைய தளத் தகவல்கள் அளித்தலைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று கொண்டால், இது ஒரு கொடுமையான கோட்பாடுதான். உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் எதிராளிகள் அழிக்கப்பட்டுவிடுவதற்கு ஜேர்னல் ஒப்புதல் கொடுப்பதற்குத் தயாராக உள்ளது என்பதுதான் வெளிப்படை.

அசாங்கே படுகொலை இசைவுத் தோற்றம் அளிப்பதையும் மீறி  வீரர் மானிங் தூக்கிலிடப்படுவதற்கும் ஆதரவு தரும் வகையில் ஜேர்னல் தெரிவிப்பதாவது, “குறைந்த பட்சம் நிர்வாகம் சட்ட ஆற்றல் அனைத்தையும் கசியவிடுபவர்கள் மீது செலுத்தவேண்டும், இதில் மரணதண்டனையும் உட்பட இருக்க வேண்டும். அதுதான் ஒருவேளை  எப்பொழுதேனும் உளவு புரிபவர்கள் அல்லது தகவல்களை கசிய விடுபவர்கள் மற்றும் தங்களை உயர் சிந்தனையாளர்கள் என்று கருதிக் கொள்பவர்களுக்கு ஒரு செயலில் ஈடுபடுமுன் இருமுறை சிந்திக்க வைக்கும்என்று கூறியுள்ளது.

செய்தி ஊடகத் தகவல்களின்படி, விக்கிலீக்ஸ் சமீபத்திய ஆவணங்களை ஜேர்னல்  க்கு அளிக்க முன் வந்தது, ஏனெனில் நியூ யோர்க் டைம்ஸ்  முந்தைய வெளியீடுகளைக் கையாண்டது பற்றி அதற்குத் திருப்தி இல்லை. தவிரவும் அசாங்கே பற்றி ஒரு பெரும் காழ்ப்பு நிறைந்த கட்டுரையையும் அது வெளியிட்டது. ஆனால் இந்த ஆவணங்களை எடுத்துக் கொள்ள ஜேர்னல் மறுத்துவிட்டது. பின்னர் தொலைக்காட்சி கேபிள் வலையமைப்பான CNN அதை மூடிமறைக்கச் செய்த முயற்சிகளிலும் சேர்ந்துகொண்டது.

விக்கிலீக்ஸ் இந்தக் கோடை காலத்தில் அமெரிக்க இராணுவப் படைகள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்த கொடுமைகள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டபின், ஒபாமா நிர்வாகம் ஸ்வீடனில் அசாங்கே மீது அரசியல் உந்துதலில் குற்றவிசாரணைக்கான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தது. அங்கு அரசாங்க வக்கீல்கள் அவருக்கு எதிராக பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுக்களை கொண்டுவரத் தூண்டப்பட்டனர். கடந்த மாதம் சர்வதேச பொலிசார் ஸ்வீடனின் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு அசாங்கே மீது கைது பிடி ஆணையைப் பிறப்பித்தது.

அசாங்கே எங்கு உள்ளார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் அவருடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தொடர்ந்து தலைமுறைவாக எங்கேனும் சென்று கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ஒரு நாடாவதுஈக்குவடோர்அவருக்கு வசிக்கும் உரிமையைக் கொடுக்க முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரபேல் கோரியாவின் தேசியவாத அரசாங்கம் மான்டாவில் அமெரிக்க விமானத் தளம் மூடப்படக் கட்டாயப்படுத்தியதுடன், அண்டை நாடான கொலம்பியா மீது அங்குள்ள FARC கெரில்லாக்களுக்கு எதிரான இராணுவச் செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியது.

துணை வெளியுறவு மந்திரி Kintto Lucas திங்களன்று அசாங்கே ஈக்குவடோரில் வரவேற்கப்படுவார் என்று கூறினார். “ஈக்குவடோரில் அவருக்கு நாங்கள் வசிக்கும் உரிமையைத் தருவோம், இதில் பிரச்சினை ஏதும் இல்லை, முன்னிபந்தனைகளும் இல்லை என்றார் அவர்.

ஈக்குவடோருக்கு அவரை அழைத்து, இங்கு அவர் சுதந்திரமாக இருக்கவும் செய்வோம், இணையத் தளத்தின் மூலம் என்று இல்லாமல் பல பொது அரங்குங்களில் அவர் கலந்து கொள்ளலாம், அவர் வைத்துள்ள தகவல்கள் ஆவணங்கள் பற்றிப் பேசலாம்என்று அவர் தெரிவித்தார்.

ஈக்குவடோர் உட்பட, பல நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்கள் நடத்தும் உளவுகள் பற்றி ஈக்குவடோர் கவலை கொண்டுள்ளது. குவிட்டோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து வெளிப்பட்ட, அதன் இருப்பில் இருக்கும் 1,600க்கும் மேற்பட்ட தகவல் தந்திகளை விக்கிலீக்ஸ் இன்னும் பகிரங்கமாக ஆக்கவில்லை.