World Socialist Web Site www.wsws.org |
Statement of the International Students for Social Equality (UK)Britain: Which way forward for the student movement?
பிரிட்டன்: மாணவர் இயக்கத்திற்கு எது முன்னேற்றப் பாதை?
பிரிட்டனில் மாணவர்களும் பள்ளி மாணவர்ளும் கல்வித்துறையில் மிருகத்தன வெட்டுக்களுக்கு எதிரான ஒரு மூன்றாம் நடவடிக்கை தினத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகையில், இதுவரையிலான அனுபவத்தை பற்றிப் பரிசீலிப்பது முக்கியமாகும். நவம்பர் 24ம் தேதி மத்திய லண்டனில் நடந்த மாணவர் எதிர்ப்பு முன்கூட்டியே அரசாங்கம் தாக்குதல் நடத்த இலக்குக் கொண்டிருந்த இரண்டாம் அத்தகைய நிகழ்வு ஆகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் டௌனிங் தெருவிற்கு ஒரு அணிவகுப்பைத் திட்டமிட்டிருந்தனர். இது எதிர்ப்பினை முடிவிற்கு கொண்டுவருவதை குறிப்பிடவும் மற்றும் பொலிசாரின் முன்கூட்டிய ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் இது ஒருதலைப்பட்சமாக தாக்குதலுக்கு உட்பட்டது; ஏனெனில் Whitehall இற்கு செல்லும் வழியில் அணிவகுப்பாளர்களை ஒரு பொறியில் வீழ்த்தப் பொலிசார் திட்டமிட்டுச் செயல்பட்டனர். அடுத்த சில மணிநேரங்களில் அதிகாரிகள் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர். இவர்களுள் மிக இளய வயதான 13 நிரம்பியவர்கள் கூட இருந்தனர். ஒளிப்பட பதிவுக்காட்சிகள், கலகத் தடுப்புப் பிரிவுப் பொலிசார் பெருமளவிலான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே நுழைந்து அவர்களை சிறு குழுக்களாகப் பிரித்து நெருக்கமாக வரிசையில் நின்ற பொலிஸ் அதிகாரிகளின் கீழ் சுற்றிவளைத்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. இக்கொள்கை “வளைத்துப் பிடித்தல்” என்பதாகும்; இதன்படி எதிர்ப்பாளர்கள் படிப்படியாக இறுக்கமான, மிக இறுக்கமான இடத்திற்குள் நெரிசலாக இருத்தப்படுவர். “ஒரு கலகத்தைத் தூண்டும் வகையில் எங்களை நசுக்குகிறீர்கள்” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் வாதிட்டனர். அதுதான் பொலிஸ் தந்திரோபாயத்தின் நோக்கம் என்பதைத்தான் ஒவ்வொரு குறிப்பும் அடையாளம்காட்டுகிறது. கிட்டத்தட்ட எட்டு மணி நேரம், பெரும்பாலான இளவயதான 5,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வரிசைகளுக்குப் பின்னால் சிறைவைக்கப்பட்டனர். உணவு, குடிநீர், கழிப்பறை ஆகியவற்றிற்கு அணுகமுடியாத நிலை ஏற்பட்டது. மாலையில் இன்னும் திறந்த வெளியில் காவலில் இருந்தவர்கள் திடீரென குதிரைப் பொலிசாரின் தாக்குதலுக்கு உட்பட்டனர். ஆரம்பத்தில் மெட்ரோபொலிடன் பொலிஸ் குதிரைப் படைத்தாக்குதல் நடைபெறவில்லை என்று மறுத்தனர். செய்தி ஊடகத்தின் புகைப்படக்கருவிகள், ஒவ்வொரு சிறிய மாணவர் சீற்றத்தையும், பொறிக்குட்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் நாச வேலையையும் பதிவு செய்தவை இத்தாக்குதலை நழுவ விட்டது போலும். ஒரு திரைப்படத்துறை மாணவர் ஆன்லைனில் பொலிசாரின் குதிரைப்படைத் தாக்குதல் ஒளிப்பதிவை வெளியிட்ட பின்னர்தான் அதிகாரிகள் இத்தாக்குதலை “ஒரு உரிய, பொருத்தமான தந்திரோபாயம்” என்று ஒப்புக் கொண்டனர். மெட்ரொபொலிடன் பொலிஸ் பிரிவின் தலைவர் போல் ஸ்டீபன்சன் பொலிஸ் நடவடிக்கைகளைப் பாதுகாத்துப் பேசினார். மாணவர்கள் மில்பாங்க் டவரிலுள்ள கன்சர்வேடிவ் தலைமையகத்தை ஆக்கிரமிக்க முடிந்த நவம்பர் 10 எதிர்ப்பிற்கு மாறாக இம்முறை தன் அதிகாரிகள் “நேர்த்தியாகச் செயல்பட்டனர்” என்று தற்பெருமையும் அடித்துக் கொண்டார். இந்த நடவடிக்கை எதிர்ப்பாளர்கள் செய்திருந்த வன்முறைக்கு ஏற்றதுதான் என்றும் நியாயப்படுத்திப் பேசினார். இது உண்மையைத் தலைகீழாக்குவதுபோல் ஆகும். பொலிஸ் செயற்பாடு ஒரு வேண்டுமென்றே நடாத்தப்பட்ட ஆத்திரமூட்டும் செயல் ஆகும். இது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அனைத்து எதிர்ப்பையும் குற்றத்தன்மை உடையதாகச் செய்வதற்கான அடித்தளத்தைத் தயாரிக்கும் திட்டமிட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும். உலக சோசலிச வலைத் தளம், தேசிய மாணவர் சங்கம் (NUS) நவம்பர் 10 அணிவகுப்பை நடத்தியபோது நடந்த சூனிய வேட்டைகள் மற்றும் ஏராளமான கைதுகளுக்கு விடையிறுக்கும் வகையில் கொடுத்த எச்சரிக்கையைத்தான் இது உறுதிப்படுத்துகிறது. செலவுக் குறைப்புக்கள் மற்றும் பயிற்சிக் கட்ட அதிகரிப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிரான எதிர்ப்புக்களில் இதுவரைமொத்தம் 109 எதிர்ப்பாளர்கள் முதல் ஆர்ப்பாட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்; பொலிசார் இன்னும் பல தொடர உள்ளன என்று கூறியுள்ளனர். இங்கிலந்து ஒரு புதிய சமூக அமைதியின்மையை எதிர்கொள்கிறது என்னும் ஸ்டீபன்சனுடைய அறிவிப்பு தயாரிக்கப்படும் நடவடிக்கைகளின் கடுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. Whitehall ஆர்ப்பாட்டத்தை “ஒரு குற்றக் காட்சி” என்று விவரித்த அவர், “விளையாட்டு இப்பொழுது மாறிவிட்டது, நாங்கள் செயல்பட வேண்டும்” என்றார். குறிப்பிடத்தக்க வகையில் தீய தன்மை நிறைந்திருந்த எதிர்கால பொலிஸ் நடவடிக்கை “ஒரு உளவினை அடித்தளமாக கொண்ட மாதிரியில்” இருக்கும் என்று கூறியதுதான். ஏற்கனவே பொலிசார் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்கள் இவற்றிற்குப் புறத்தே மக்களை இலக்கு கொண்டிருக்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக “அரசாங்கத்தில் செலவுக் குறைப்புக்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமயப்படுத்தப்பட்ட பிரிவில் இருப்பவர்கள்” என்று கருதப்படுபவர்கள் மீது. துப்பறியும் கண்காணிப்பாளர் ஆட்ரியன் டட்வே, இங்கிலாந்தில் உள்நாட்டுத் தீவிரவாதம் பற்றிய தேசிய ஒருங்கிணைப்பாளர் கூறினார்: “ கோல்கீப்பர் என்னும் APCO [பொலிஸ் தலைமைஅதிகாரிகள் அமைப்பு] என்ற எங்களுடைய பங்கில் இச்சமூக எதிர்ப்புக்கள் எத்திசையில் செல்கின்றன, எப்படி வளர்ச்சி அடைகின்றன என்பதைக் கவனிப்பது முற்றிலும் சரியே” என்றார். தேசிய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க மறுப்பது இளைஞர்கள் அதன்மீது கொண்டுள்ள சீற்றம் மற்றும் விரோதப் போக்கை நியாயப்படுத்துகிறது. NUS தலைவர் ஆரன் போட்டர் நவம்பர் 10ம் தேதி கன்சர்வேடிவ் தலைமையகத்தை ஆக்கிரமித்ததில் தொடர்புடைய எதிர்ப்பாளர்களைத் தாக்க விரைந்ததில் இழிவடைந்தார். அது NUS கிட்டத்தட்ட பின்னர் நடந்த எதிர்ப்புக்கள், பல்கலைக்கழக ஆக்கிரமிப்புக்களில் பங்கு பெறாமல் போனதை உறுதிபடுத்தியது. 12,000 மாணவர்களும் பள்ளி மாணவர்களும் தேசிய நடவடிக்கைகளில் இன்று பங்கு பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகையில், NUS இடம் இருந்து சுயாதீனமாக என்னும் முறையிலும், எதிர்ப்புக்களுக்கு பொது மக்கள் ஆதரவு இல்லை என்ற தன் “முதுகெலும்பற்ற தன்மைக்கு” போர்ட்டர் மன்னிப்புக் கேட்கும் கட்டாயம் ஏற்பட்டது. அவருடைய கருத்துக்கள் மாணவர்கள் NUSA ஐக் கண்டித்து அதன் தலைமை அகற்றப்பட வேண்டும் என்று கோரியபோது வந்துள்ளது. இதைத்தவிர NUS மற்றும் போர்ட்டரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் பல பல்கலைக்கழக ஆக்கிரமிப்புக்களில் நிறைவேற்றப்பட்டன. பொலிஸ் நடவடிக்கைகள் மற்றும் NUS தலைமையின் தந்திரங்கள் பற்றி ஒரு எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும். Educational Activitist Network, National Campaign Against Cuts and Fees (NCACF) போன்ற தற்காலிக ஆர்ப்பாட்டங்களை அமைப்பவர்களுடைய முன்னோக்கு அடிப்படையில் NUS கொள்கையில் இருந்து மாறுபட்டவை அல்ல. மாணவர்கள் இன்னும் அதிக ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்களை “கட்டமைக்கும் எதிர்ப்புக்களைக் கொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தாலும், இக்குழுக்களின் இலக்கு லிபரல் டெமக்ராட்டுக்கள் மீது அழுத்தம் கொடுத்து பயிற்சிக் கட்டண உயர்வு மற்றும்/அல்லது அரசாங்கக் கொள்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றுதான் உள்ளது. இவ்விதத்தில் அவை தொழிலாளர்கள், இளைஞர்கள் சீற்றத்தை உத்தியோகபூர்வக் கட்சிகள் மற்றும் குறிப்பாக தொழிற்சங்கங்கள் மூலம் இயக்க விரும்புகின்றன. NCACF மாணவர்கள் எதிர்ப்புக்களுக்கு தொழிற்சங்க ஆதவு கொடுப்பதின் மூலம் இந்த முன்னோக்கைச் செயல்படுத்த விரும்புகிறது. ஆனால் சில தொழிற்சங்கங்கள் தெளிவற்ற பரிவுணர்வுக் குரல்களைக் கொடுத்தாலும், அவை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துத் தாங்கள் ஏதும் செய்வதாக இல்லை என்ற உண்மையில் இருந்து திசைதிருப்பத்தான் அவ்வாறு செய்கின்றன. நவம்பர் 24 ஆர்ப்பாட்டத்தில் தன்னால் பங்கு பெற இயலாது என்று போர்ட்டர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது; ஏனெனில் அவர் தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். “எனக்கு அங்கு வரவேண்டும் என்ற விருப்பம்தான், ஆனால் அதைவிட முக்கியம் நிறைய பிற தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்து இந்த இயக்கம் ஒரு மாணவர் இயக்கம் என்பதோடு நின்றுவிடாமல் காப்பதுதான் இன்னும் முக்கியம் என நினைக்கிறேன்” என்றார் அவர். எனவே பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை லண்டன் தெருக்களில் தாக்கிச் சிறைபிடித்துக் கொண்டிருக்கையில், போர்ட்டரும் “பிற தொழிற்சங்கத் தலைவர்களும்” அவர்களைப் பாதுகாப்பதற்கு முற்றிலும் எதுவும் செய்யவில்லை, எதுவும் கூறவும் இல்லை. “உடனடி நடவடிக்கைகளை” கட்டமைத்த சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் பிற மத்தியதர வர்க்க “இடது” அமைப்புக்களின் அதிக எண்ணிக்கையைத் தெருவிற்குள் கொண்டு வந்தால் வெட்டுக்கள் தோற்கடிக்கப் போதுமான மூலோபாயம் ஆகும் என்ற கூற்றுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும். சோசலிச தொழிலாளர் கட்சி மாணவர்கள் கூடுதலான எதிர்ப்பு நடவடிக்கைமீது அனைத்து வலியுறுத்தலையும் முன்வைப்பது, தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் வெட்டுக் குறைப்புக்கள் சுமத்தப்பட உடந்தையாக இருப்பதை மூடி மறைக்கும் இழிந்த முயற்சிகள் என்பதோடு அப்பிரிவினருக்கு எதிராக மாணவர்கள் அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவதை திசைதிருப்பும் தன்மையையும் கொண்டது. குறிப்பாக அரசாங்கம் இன்னும் கடுமையான அடக்குமுறையை எதிர்ப்பாளர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொண்டிருக்கையில், இதன் பொருள் பொலிசார் அவர்களைப் பிடித்து சீர்குலைக்கும் விதத்தில் மாணவர்களை தன்னந்தனியே போராட விட்டுவிடுவதாகும். இளைஞர்கள், அதிருப்தி அடைந்துள்ள லிபரல்கள், தொழிற்கட்சியினர் அல்லது தொழிற்சங்கங்கள் உலகப் பொருளாதார நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் சுமத்தும் முயற்சிகளுக்கு எதிராகப் போராட உதவும் என எதிர்பார்க்கக் கூடாது. அவை பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல, அவர்கள் பிரச்சினையின் ஒரு பகுதியாகும். மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு முழு நனவான அரசியல் திருப்பத்தை கொள்ள வேண்டும். இது தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) இன்னும் பல அமைப்புக்கள் முன்வைக்கும் நிலைசார்பில் இருந்து முற்றிலும் எதிரிடையானதாகும். இதன் பொருள் தங்கள் வேலைகள், ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றில் வெட்டுக்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களின் அனைத்துப் பிரிவுகளும், தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒரு எழுச்சியில் அடிமட்டத் தொழிலாளர்களின் குழுக்கள் அமைப்பதின் மூலம் போராடுதல் ஆகும். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ இலாப முறைக்கு எதிரான போராட்டத்தைத் தளமாகக் கொள்ள வேண்டும், அது கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்தி சோசலிசக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்குப் போராட வேண்டும். |
|