WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
இராஜதந்திர இரகசியமும்
ஏகாதிபத்தியக் குற்றங்களும்
Bill Van Auken
30 November 2010
Use
this version to print | Send
feedback
உலகெங்கிலுமான அமெரிக்க தூதரகங்களில் இருந்து கசிந்த சுமார் கால் மில்லியன் இரகசிய
ஆவணங்களில் முதலாவது தொகுப்பை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருப்பது அமெரிக்கா மற்றும்
அதன் கூட்டாளிகளிடம் இருந்து ஆவேசத்தின் வெளிப்பாடுகளையும் தண்டனைக்கான
கோரிக்கைகளையும் தூண்டியுள்ளது.
நீதித் துறை,
இராணுவ உளவு
அமைப்பின் உதவியுடன்,
“செயலூக்கமிக்க
குற்றவியல் விசாரணையை”
நடத்திக் கொண்டிருப்பதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர்
திங்களன்று வலியுறுத்தினார். இந்த விசாரணை விக்கிலீக்ஸ் மற்றும் அதன் நிறுவனரான
ஜூலியன் அசாஞ் மீது குறிவைத்து நடத்தப்படுவது என்பது அனுமானிக்கத்தக்கதே.
கண்டனங்களிலும் அச்சுறுத்தல்களிலும் ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினர்
இருவருமே சேர்ந்து கொண்டனர். 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க ஹெலிகாப்டர் குண்டுவீச்சில்
ஈராக்கின் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் காணொளியை
விக்கிலீக்ஸ்க்கு கசியச் செய்ததாக குற்றம்சாட்டப்படும் பிராட்லி மானிங்கை
இராஜதுரோகக் குற்றச்சாட்டின் கீழ் விசாரித்து தூக்கில் போட வேண்டும் என்று அழைப்பு
விடும் அளவுக்கு சிலர் சென்று விட்டனர்.
அடுத்தடுத்த
கசிவுகளில் மானிங் தான்
“நலம்
கொண்ட நபராக”
குறிப்பிடப்பட்டிருகிறார். சென்ற ஜூலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட,
20,000க்கும்
அதிகமான ஆப்கானிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஆவணப்படுத்தும் சுமார் 92,000
ஆப்கானிஸ்தான் போர்க்கள அறிக்கைகள்,
மற்றும் ஈராக்கில்
ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு தகவல் மறைக்கப்பட்டதையும் சித்திரவதை
பயன்படுத்தப்பட்டதையும் அம்பலப்படுத்துகின்ற இன்னுமொரு 400,000
ஆவணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
விக்கிலீக்ஸ்
“அந்நிய
பயங்கரவாத அமைப்பாக”
முத்திரை குத்தப்பட வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினரான பீட்டர் கிங் அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு செய்வது அந்த அமைப்பின்
உறுப்பினர்கள் அமெரிக்க உளவுத்துறை அல்லது இராணுவ கொலைப் படைகளால் படுகொலை
செய்யப்படுவதற்கு வழி உருவாக்கித் தரும்.
விக்கிலீக்ஸ் குறித்த மிகக் கவலை தோய்ந்த கண்டனங்களில் ஒன்று செனட்டரும்,
செனட் ஹோம்லேண்ட்
பாதுகாப்புக் குழு தலைவருமான ஜோசப் லீபர்மேனிடம் இருந்து வந்தது. சமீபத்திய கசிவு
“நமது
ஜனநாயகத்திற்கும் ஒளிவுமறைவற்ற கோட்பாட்டிற்கும் எதிரான தாக்குதலாகும்”
ஏனென்றால் அரசாங்கம்
இரகசியமாகக் கருதிய ஆவணங்களை பகிரங்கமாக ஆக்க தீர்மானித்ததன் மூலம் இந்த அமைப்பு
“ஜனநாயக
நடைமுறையை” “குறுக்கறுக்கும்”
வகையில் நடந்து கொண்டிருந்தது என்று அவர் சென்ற வாரத்தில்
தெரிவித்தார்.
இதே
மாதிரியான நிலைப்பாடு தான் எலிசே மாளிகை சார்பாக பேசிய ஒரு பிரெஞ்சு அமைச்சரின்
வழியும் முன்வைக்கப்பட்டது.
“நாடுகளின்
அதிகாரத்தையும் அவற்றின் சேவைகளின் தரத்தையும் சேதாரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,
ஒரு நாட்டின்
சேவைக்கென வேலை செய்யும் மனிதர்களையும் அபாயத்திற்குள்ளாக்கக் கூடிய விடயங்களைத்
தடுக்க அமெரிக்க நிர்வாகம் செய்யும் முயற்சிகளில் நாங்கள் மிகவும் ஆதரவுடன்
இருப்போம்”
என்று செய்தித்
தொடர்பாளர்
François Baroin
கூறினார். “ஒரு
ஒளிவுமறைவற்ற சமூகம் என்பது எதேச்சாதிகார சமூகம் தான் என்று நான் எப்போதும்
கருதியிருக்கிறேன்.”
அரசின்
இரகசியத்தை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் சமப்படுத்தி பேசுவதும்,
பொதுமக்களுக்கு
இரகசியங்களை அம்பலப்படுத்துவதை ஜனநாயகவிரோதம் எதேச்சாதிகாரம் என்பதுமான இந்த
வக்கிரமான முயற்சி அமெரிக்காவிலும் முதலாளித்துவ உலகின் பிறவெங்கிலும்
“ஜனநாயகம்”
என்பதன் மோசடியான தன்மை குறித்தும் அதேபோல் விக்கிலீக்ஸ் மீதான
தாக்குதல்களின் வெறியுடனான பிற்போக்குத் தன்மை குறித்தும் பக்கம்பக்கமாய்
பேசுகின்றன.
விக்கிலீக்ஸ் புதிய ஆவணங்களை பதிவிட்டிருப்பதற்கு பிரதான பதிலை வழங்கிய வெளியுறவுத்
துறை செயலரான ஹிலாரி கிளின்டனும் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதற்கு அழைப்பு
விடுத்தார்.
“கடந்த
காலத்தில் தவறுகளை அம்பலப்படுத்துவதன் பேரில் உத்தியோகபூர்வமான நடத்தைகள்
பகிரங்கமாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து இருக்கின்றன,
ஆனால் இது அத்தகைய
ஒன்று அல்ல”
என்று அவர்
வலியுறுத்தினார். இந்த கசிவுகள்
“அமெரிக்க
இராஜதந்திர அலுவலர்கள் நாம் அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதைத் தான் செய்து
கொண்டிருக்கிறார்கள்”
என்பதையும்
“அது
நாம் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்ய வேண்டும்”
என்பதையுமே காட்டுவதாக அவர் கூறிக் கொண்டார்.
யாரும் இந்த
ஆவணங்களைப் படிப்பதில்லை என்பதிலும் இந்த ஆவணங்களின் பெரும்பகுதியை இருட்டடிப்பு
செய்கின்ற வளைந்து கொடுக்கும் ஊடகங்களிலும் நம்பிக்கை கொண்டு தான் தெளிவாய் ஹிலாரி
இவ்வாறு கூறுகிறார். இதுவரை அம்பலப்பட்டிருக்கும் விடயங்களில் சில:
ஜெனரல்
டேவிட் பெட்ரேஸ்க்கும் ஊழலடைந்த ஏமன் சர்வாதிகாரி அலி அப்துல்லா சலேகிற்கும்
இடையில் நடந்த ஒரு உரையாடலை விவரிக்கும் 2010 ஜனவரி ஆவணம். இதில் அமெரிக்க
இராணுவத்தால் இரகசியமாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்கு யேமன் ஆட்சி
பொறுப்பேற்றுக் கொள்வதற்கு ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு
தான் அமெரிக்க ஏவுகணை ஒன்று யேமன் குக்கிராமம் ஒன்றை தரைமட்டமாக்கி இருந்தது. அதில்
55 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் குறைந்தது 41 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
அயலக
அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளின் கடன் அட்டை,
விமானப் பயண சலுகைக்
கணக்கு எண்கள் தொடங்கி இணைய கடவுச் சொற்கள்,
வேலை கால அட்டவணைகள் மற்றும் இன்னும் மரபணு மாதிரிகள் வரையான
தகவல்களும் உட்பட்ட தனிநபர் விவரங்களை சேகரிப்பதற்கு அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு
உத்தரவிடும் வெளியுறவுத் துறை ஆவணம்.
ஒரு அப்பாவி
ஜேர்மனிய குடிமகனை கடத்தி,
கைதுசெய்து சித்தரவதை செய்த விவகாரத்தில் சிஐஏ முகவர்களுக்கு எதிராக
கைது ஆணை பெறுவதை ஜேர்மனி கைவிடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் அதனை எவ்வாறெல்லாம்
பயமுறுத்தியது என்பதை விளக்கும் ஒரு ஆவணம்.
ஹோண்டுராஸில் ஜனாதிபதி மானுவேல் செலாயா ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் ஒரு சட்டவிரோத
அரசியலமைப்பு விரோத கவிழ்ப்பு இருந்ததை சுட்டிக் காட்டும் வகையில் டகுசிகல்பாவில்
உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்தான அக்டோபர் 2009 ஆவணம். இந்த கவிழ்ப்புக்கான
அமெரிக்க ஆதரவு மற்றும் மறைப்பு வேலையையும் அத்துடன் அதனைத் தொடர்ந்து நடந்த
அடக்குமுறையையும் இந்த கசிவு ஆவணப்படுத்துகிறது.
விக்கிலீக்ஸ் வருகின்ற மாதங்களில் வெளியிடவிருக்கும் ஆவணங்களின் ஒரு சிறு பகுதியின்
பதிவில் இருந்து இவை வெளிவந்துள்ளன. இந்த அமைப்பும் அதன் தலைவர்களும் விசாரணை
செய்யப்படவோ,
அல்லது அதனினும்
மோசமான நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படவோ அமெரிக்க அதிகாரிகள் கோருகிறார்கள்
என்றால் அதன் காரணம் செயலர் ஹிலாரி திங்களன்று கூறியது போல,
இரகசிய ஆவணங்கள்
அம்பலப்பட்டுள்ளதால்
“மற்ற
நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் பிரச்சினைகளை தீர்வு காணும் முயற்சிகளுக்கு”
இடையூறு
தோன்றியிருப்பதால் அல்ல. கொலை செய்யப்பட்ட யேமனின் அப்பாவி மக்கள் முதல்
ஹோண்டுராஸின் சிறை செய்யப்பட்ட,
சித்திரவதை செய்யப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட தொழிலாளர்கள்
மற்றும் விவசாயிகள் வரை உண்மை வாழ்க்கையில் அமெரிக்க அரசாங்கத்தால்
செய்யப்பட்டிருக்கும் ஏராளமான குற்றங்களை அவை தோலுரிக்கின்றன என்பதால் தான்.
இந்த
இரகசியங்கள் தோலுரிக்கப்படுவது அமெரிக்காவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும்
மக்களின் நலனின்பாற் பட்டதாகும்.
விக்கிலீக்ஸ் குறித்த ஊடக செய்திகளில் எல்லாம் இந்த அளவு இரகசிய ஆவணங்கள் பாரிய
அளவில் அம்பலப்பட்டிருப்பது
“முன்கண்டிராத”
ஒன்று என தவறாமல் குறிப்பிடப்படுகிறது. உண்மையில் ஒரேயொரு வரலாற்று
முன்நிகழ்வு இருக்கிறது. 1917 அக்டோபரில் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக்
கைப்பற்றியதுடன் அது கைகோர்த்து வந்தது.
புதிய
தொழிலாளர்’
அரசாங்கத்தின் முதல்
நடவடிக்கைகளில் ஒன்றாய் அது தன் கரங்களில் இருந்த இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும்
இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டது. இந்த ஒப்பந்தங்கள் முதல் உலகப் போரில் பிரிட்டன்,
பிரான்ஸ் மற்றும்
ஜாரிச ரஷ்யா கொண்டிருந்த போர் வேட்கைகளை உரித்துக் காட்டின. தேசிய எல்லைகளை
மறுவரைவுக்கு உட்படுத்துவது மற்றும் காலனித்துவ உலகை மறுபங்கீடு செய்வது ஆகியவை
இந்த சக்திகளின் நோக்கங்களில் இடம்பெற்றிருந்தது. அவைகளை அம்பலப்படுத்தியதில்,
ரஷ்யாவின் புதிய
புரட்சிகர தொழிலாளர்’
அரசாங்கமானது படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவர தனது உடனடிப்
போர்நிறுத்த வேலைத்திட்டத்தை முன்வைக்க தலைப்பட்டது.
அப்போது
அயலுறவு விவகாரங்களுக்கான மக்கள் ஆணையராய் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி இந்த அரசு
இரகசியங்களை அம்பலப்படுத்துவதன் கீழமைந்த கோட்பாடுகளை விளக்கினார். அவர் எழுதினார்:
“இரகசிய
இராஜதந்திரம் என்பது சொத்துடைமை கொண்ட சிறுபான்மையினருக்கு அவசியமான ஒரு கருவி
ஆகும். இச்சிறுபான்மை பெரும்பான்மையை தனது நலன்களுக்கு ஆட்படுத்தும் பொருட்டு
ஏமாற்றுவதற்கு தள்ளப்படுகிறது. ஏகாதிபத்தியம்,
மேலாதிக்கம்
பெறுவதற்கான தனது இருண்ட திட்டங்கள் மற்றும் தனது கொள்ளைக் கூட்டணிகள் மற்றும்
ஒப்பந்தங்களை மனதில் கொண்டு,
இரகசிய
இராஜதந்திரத்தை அதன் உச்ச மட்டத்திற்கு அபிவிருத்தி செய்துள்ளது. ஐரோப்பாவின்
மக்களை களைக்கச் செய்து அழித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
போராட்டம் என்பது அதே சமயத்தில் முதலாளித்துவ இராஜதந்திரத்திற்கு (இது பகல்
வெளிச்சத்தைக் கண்டு அஞ்சுவதற்கு போதுமான காரணம் கொண்டிருக்கிறது) எதிரான
போராட்டமாகவும் உள்ளது.”
தொன்னூற்று
மூன்று வருடங்களுக்குப் பின்னர்,
இந்த வார்த்தைகள்
காலத்தின் சோதனைக்கு தாக்குப் பிடித்து நின்றிருக்கின்றன. விக்கிலீக்ஸ்’
கசிவுகள்
அமெரிக்காவின் “தேசிய
பாதுகாப்பை”
பலவீனப்படுத்தியிருப்பதாக ஒபாமா நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சியினரிடம்
இருந்து வந்திருக்கக் கூடிய ஆவேசமான கண்டனங்களின் பின்னாலிருப்பது,
அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கிற உழைக்கும் மக்களின்
தேவைகளுக்கும் இலட்சியங்களுக்கும் எதிரான வேட்டையாடும் பிற்போக்குவாத நலன்களை
சொந்தமாய்க் கொண்ட ஆளும் நிதிய பிரபுத்துவத்தின் கோபமே ஆகும். |