சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Two Sri Lankan opposition MPs cross over to government

இலங்கை எதிர்கட்சி பராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டனர்

By M. Vasanthan and W.A. Sunil
16 August 2010

Use this version to print | Send feedback

ஆகஸ்ட் 5 அன்று, எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆளும் கூட்டணியில் சேர்ந்ததை அடுத்து, இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பாண்மையையும் அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் இயலுமையையும் பெறும் தனது இலக்கில் ஒரு படி முன்னேறியுள்ளார். தயாரிக்கப்பட்டுவரும் அரசியல் அமைப்புத் திருத்தம், இராஜபக்ஷவின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதுடன் அவரது ஜனநாயக விரோத முறையிலான ஆட்சியை சட்டரீதியானதாக்குவதற்கும் வரையப்பட்டதாகும்.

பி. திகாம்பரம், பிரபா கணேசன் ஆகிய இரு "கட்சி மாறிகளும்", தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் அரசியல் கட்சியாகவும், தொழிற்சங்கங்களாகவும் தொழிற்படும் அமைப்புக்களின் அங்கத்தவர்களாவர். திகாம்பரம் தேசிய தொழிலாளர் சங்கத்தின் (NUW) தலைவராவார். கணேசன், அவரது சகோதரர் மனோகணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியை (ஜ.ம.மு) சேர்த்தவராவார். அவர் தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாக கொண்ட தொழிற்சங்கமான ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் (DWC) நிதிச்செயலாளராகவும் கடத்த வாரம்வரை பணியாற்றினார்.

கொழும்பு வர்த்தகர்களான இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி) தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐ.தே.மு.) சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களாவர். இவர்களுடைய அரசியல் குத்துக்கரணம், தோட்டத்துறையை மையமாகக் கொண்ட சகல கட்சிகளதும் தொழிற் சங்கங்களதும் கைக்கூலித்தனதுக்கும் வஞ்சகத்தன்மைக்கும் மற்றுமொரு உதாரணமாகும்.

கடந்த செப்டெம்பரில் வறிய மட்ட சம்பளத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரும் சம்பள உடன்படிக்கை ஒன்றைத் திணித்த அரசாங்கம் மற்றும் அதன் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) மீது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பரந்தளவிலான எதிர்ப்பின் விளைவாக, NUW மற்றும் DWC கடந்த ஏப்பிரல் தேர்தலில் ஆதரவை திரட்டுவதில் வெற்றிகண்டன. ஆரம்பத்தில் உடன்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக NUW மற்றும் DWC அதை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, திகாம்பரமும் கணேசனும் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தவறிவிட்டது என்றும், இ.தொ.கா. தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினர். திகாம்பரம் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரேலியா மாவட்டத்தில் இரண்டாவதாக அதிகூடிய வாக்குகளை பெற்றார். கணேசன் கொழும்பில் தெரிவு செய்யப்பட்டார்.

கட்சி மாற்றம் தோட்டத் தொழிலாளர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் என உணர்ந்து கொண்ட DWC மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியும் (ஜ.ம.மு.), பிரபா கணேசனை அதன் அங்கத்துவத்திலிருத்து வெளியேற்றியன. இதற்கு பதிலளிக்கும் முகமாக அரசாங்கத்திற்கும் ஜ.ம.மு. க்கும் இடையாலான இரகசிய தொடர்பை அம்பலப்படுத்துவதாக கணேசன் அச்சுறுத்திய போதிலும், அதை அவர் தெளிவு படுத்தவில்லை. கணேசன் "கட்சியை காட்டிக்கொடுத்து" தனது சொந்த உடன்பாட்டிற்கு செல்வதற்கு முன்பு, ஒட்டு மொத்த ஜ.ம.மு. யும் இராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது என்பது எப்போதும் புதுமையானதல்ல.

2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான அரசாங்கத்தின் கொடூர யுத்தத்தின் முடிவின் பின்னர், "சர்வதேச சமூகம்" நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு உதவுவதற்கு தவறிவிட்டது எனக் குற்றம் சாட்டுவதன் மூலம், திகாம்பரம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தார். இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளதும் அலட்சியப் போக்கை பயன்படுத்திக்கொண்ட அவர், பத்தாயிரக் கணக்கான தமிழ் பொது மக்களை கொலை செய்து மற்றும் ஆயிரக்கணக்கானவர்களை யுத்தக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளமைக்குப் பொறுப்பான அதே அரசாங்கத்துடன் சேருவதை நியாயப்படுத்துகின்றார்.

அரசாங்கத்துடன் இணைவதன் மூலம்தான் "எமது மக்களுக்கு" சேவை செய்ய முடியும் என திகாம்பரமும் பிரபா கணேசனும் முட்டாள்தனமாக கூறிக்கொள்கின்றனர். இந்த சாக்குப் போக்கையே இ.தொ.கா. மற்றும் மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) இராஜபக்ஷ அரசாங்கத்துடனான தமது கூட்டை நியாயப்படுத்த இம்மியும் பிசகாமல் பயன்படுத்துகின்றன. இ.தொ.கா தேசிய செயலாளர் என். ஜெகதீஸ்வரன், "அரசாங்கத்துடன் சேருவதன் மூலமே எமது சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்பதை நாம் எப்பொழுதும் கூறி வந்துள்ளோம்" என பிரகடனம் செய்ய சந்தர்ப்பத்தை தவறவிடவில்லை.

உண்மையில் இலங்கையின் தொழிலாள வர்கத்தின் மத்தியில் மிகவும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் தோட்டத் தொழிலாளர்களே ஆவர். இந்த நிலைமை பணவீக்கத்துடன் ஈடுகொடுக்கத் தவறும் சம்பள உடன்படிக்கைகள் திணிக்கப்பட்டமையால் மேலும் மோசமடைந்துள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான சம்பள அளவு 2004ல் 92 வீதத்திலிருந்து 2009ல் 83 வீதத்துக்கு 10 வீதமாக குறைவடைந்துள்ளது. தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகள் என்று சொல்லப்படும் இழிநிலையிலான இருப்பிடங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் மலசலகூட வசதிகள் இன்றி வாழ்கின்றனர்.

முன்னாள் இடதுசாரி இயக்கங்களான நவ சமசமாசக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் (யூ.எஸ்.பி.), ஜ.ம.மு. யை ஏனய தோட்டப்புற கட்சிகளைவிட முற்போக்கான பதிலீடாக தூக்கிப்பிடிப்பதை குறிப்பிட்டாக வேண்டும். இராஜபக்ஷவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) உட்பட, சிறிய மற்றும் பெரிய முதலாளித்துவ கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டுச் சேரும் நீண்டகால அருவருக்கத்தக்க வரலாறு ந.ச.ச.க. மற்றும் யூ.எஸ்.பி. க்கு உண்டு. ந.ச.ச.க. மற்றும் யூ.எஸ்.பி. 2006 தொடக்கம் வெளி வேடமாய் இராஜபக்ஷவின் யுத்தத்திற்கு எதிராகவும் அவரது ஜனநாயக விரோத வழிமுறைகளுக்கு எதிராகவும் ஜ.ம.மு. யுடன் பலவகையான முன்னணிகளை அமைப்பதில் ஈடுபட்டன. இபபொழுது ஜ.ம.மு. யின் ஒரே ஒரு பாராளுபன்ற உறுப்பினர் அதே அரசாங்கத்தில் இணைந்துள்ளார்.

ஏப்பிரல் தேர்தல் பிரச்சார காலத்தில், அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு போதுமான ஆசனங்களை இராஜபக்ஷ பெறாமல் தடுக்க வேண்டும் என மக்ககளுக்கு வேண்டுகோள் விடுத்த ஏனைய எதிர்க் கட்சிகளை NUW தலைவர் திகாம்பரமும் பின்பிற்றினார். "ஆளும் கட்சி எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்றால் ஏற்படும் அரசியல் விளைவுகளை கருத்தில் கொண்டு சிறுபான்மை மக்கள் [தமிழர்கள்] இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மாணிக்க வேண்டும்". என அவர் எச்சரித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பாராளுமன்றத்தின் 225 ஆசனங்களில் 143 ஆசனங்களை வென்றது. பிரதானமாக எதிர்க்கட்சிகளான யூ.என்.பி. மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) அடிப்படையில் அரசாங்கம் கொண்டிருந்த அதே கொள்கையை கொண்டிருந்தமையினாலேயே இந்த வெற்றி கிட்டியது. சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் ஏழு ஆசனங்களே குறைவாக உள்ளன. இப்போது திகாம்பரமும் கனேசனும் இரண்டு ஆசனங்களை கொடுத்ததன் மூலம் இராஜபக்ஷவை அவரது இலக்கை நோக்கி நெருக்கமாக கொண்டு வந்துள்ளனர்.

இராஜபக்ஷ, யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி மாற ஊக்குவிப்பதற்காக பின்னறை பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்படிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஒருவர் ஏற்கனவே அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்துள்ளதோடு மேலும் இருவர் அவரை பின்தொடர்பவர்களாக கருதப்படுகின்றனர். கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஊழல் நிறைந்த மற்றும் கூலிக்காக சேவைசெய்யும் தன்மையை பொறுத்தளவில், பல வகையான லஞ்ச மற்றும் அதிகார ஊக்குவிப்புகள் மூலம் மேலும் பலரை இணைத்துக் கொள்ள முடியும் என்பதில் பெரிய சந்தேகம் கிடையாது.

தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, அமைச்சர்களை மற்றும் ஒட்டு மொத்த அரசாங்கத்தையே பதவிவிலக்குவது உட்பட, ஏற்கனவே பரந்த அதிகாரங்களை கொண்டிருக்கிறார். இராஜபக்ஷ விளைபயனுள்ள வகையில் பாராளுமன்றத்தில் இருந்து ஒதுங்கி அமைச்சர்கள், ஜெனரல்கள் மற்றும் அரச அதிகாரிகளின் குழு ஒன்றின் ஊடாக ஆட்சி செய்வதற்கு தனது அதிகாரத்தை முழுமையாக சுரண்டிக்கொண்டார். தற்போது முக்கிய அமைச்சுக்களான பாதுகாப்பு, நிதி, ஊடகம் ஆகியவற்றை இராஜபக்ஷ தானே வைத்துக்கொண்டுள்ளார். உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற போதும் அரசாங்கம் தொடர்ந்து அமுலில் வைத்திருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அவர் கொடூரமான அதிகாரங்களையும் வைத்திருக்கிறார்.

இராஜபக்ஷ அரசியல் அமைப்பில் கணிசமான மாற்றங்கள் பற்றி முன்னறிவித்துள்ளார். முக்கியமான அரச அதிகாரிகளை நியமிப்பதையும் தேர்தல், நீதித்துறை, பொலிஸ், அரசாங்க ஊழல்கள் ஆகியவற்றுக்கு ஆணைக்குழுக்களை அமைப்பதையும் மேற்பார்வை செய்ய, எதிர்கட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்பு சபையை ஸ்தாபிக்கக் கோரும் அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யவும் அவர் திட்டமிடுகின்றார்.

இராஜபக்ஷ தனக்கு விசுவாசமானவர்களையும், அடிவருடிகளையும் அதிகார ஸ்தானங்களில் நியமிப்பதற்கு நேரடி தடையாக இருக்கும் அரசியல் அமைப்பு சபையை அமைப்பதை நிராகரித்ததுடன் 17ஆவது திருத்தத்தையும் சாதாரணமாக அலட்சியம் செய்தார். அரசியலமைப்பின் படி தான் கட்டுப்பட வேண்டிய உயர் நீதிமன்ற தீர்ப்புக்களையும் அவர் அலட்சியம் செய்தார்.

இரண்டு தடவைகள் மாத்திரம் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற அரசியலமைப்பு விதியையும் மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது. ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் ஆறு வருடம். 2005 நவம்பரில் ஜனாதிபதியாக வெற்றியீட்டிய இராஜபக்ஷ, இரண்டு வருடங்கள் முன்னதாக, ஜனவரியிலேயே தேர்தலை நடத்தினார். எவ்வாறெனினும் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அவர் அவரது முதல் தவணையில் இருந்து மேலும் ஒரு வருடத்தை இரண்டாவது தவணைக்கு சேர்த்துக்கொண்டார். அவர் அரசியலமைப்பை திருத்துவதில் வெற்றி கண்டால், மேலும் நீண்ட காலம் பதவியில் இருப்பார்-காலவரையறையின்றி இருப்பதும் சாத்தியப்படலாம்.

அரசாங்கம் யூலையில் திருத்தத்தை விவாதித்தமை, உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அரசியல் அமைப்பு திருத்தத்தை ஒத்தி வைத்ததன் மூலமும் திட்டமிடப்பட்ட திருத்தங்கள் பற்றி யூ.என்.பி. உடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமும் இராஜபக்ஷ விமர்சனங்களை திசைதிருப்பினார். எவ்வாறாயினும், யூ.என்.பி. உடனான பேச்சுவார்த்தை, ஜனாதிபதி குறிப்பாக யூ.என்.பி. யில் இருந்து உறுப்பினர்களை கட்சி தாவச் செய்யும் முயற்சிகளை உக்கிரமாக்கியுள்ள நிலையில், கால அவகாசம் பெறுவதையே அர்த்தப்படுத்துகிறது.

பெரும் வர்க்கப் போராட்டத்திற்கு முகம் கொடுப்பதற்காக இராஜபக்ஷ தனது ஆட்சியை பலப்படுத்த முயற்சிக்கின்றார். நாடு இராஜபக்ஷவின் இராணுவ செலவீனத்தால் பாரிய கடனில் மூழ்கியுள்ளது. அவரது நான்கு வருட ஆட்சிக்காலத்தில் பொதுக் கடன் 160 வீதம் உயர்ந்துள்ளதுடன் வரவு செலவு திட்ட பற்றாக்குறை உள்நாட்டு உற்பத்தியின் 10 வீதத்தை எட்டியுள்ளது. அரசாங்கம் இப்போது பொதுச் செலவை வெட்டக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு நிறுத்தம் மற்றும் அடிப்படை பொருட்கள் மீதான உயர்ந்த வரிகளுடன் இந்த பொதுச் செலவு வெட்டுக்கள் ஜூலை வரவு செலவுத் திட்டத்திலேயே தொடங்கிவிட்டன.

வாழ்க்கைத் தரம் மேலும் சீரழிக்கப்படுவதற்கு எதிராக உழைக்கும் மக்கள் மத்தியில் எழும் எந்தவொரு எதிர்ப்பின் மீதும் தாக்குதல் தொடுக்க, கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தக் காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட பொலிஸ் அரச இயந்திரங்கள் மற்றும் வழிமுறைகளை பயன்படுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது