WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lankan government to evict 66,000 families in Colombo
இலங்கை அரசாங்கம் கொழும்பில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்றவுள்ளது
By W.A. Sunil
20 August 2010
Back to
screen version
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அமைச்சரவை, பெரும் வர்த்தகர்களுக்காக நிலங்களை விடுவிப்பதன் பேரில் கொழும்பு நகரிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் உள்ள குடிசைகளில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்றும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்தை கடந்த வாரம் அங்கீகரித்தது. கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள், நிச்சயமற்ற மாற்று இருப்பிடங்களுக்கு நகரத் தள்ளப்படுவதால், தமது வீடுகள் மற்றும் அநேக விடயங்களில் தமது ஜீவனோபாயத்தையும் இழப்பர்.
ஆகஸ்ட் 12 முடிவை அறிவித்த மேலதிக ஊடக அமைச்சர் அனுர பிரதியதர்ஷன யாப்பா, இந்தக் குடும்பங்கள் "கொழும்பு மாநகரில் மிகவும் பெறுமதியான நிலத்தை நினைத்த விதத்தில்" ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர், என அறிவித்தார். ஆரம்பத்தில், வர்த்தக அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிலங்களை அபிவிருத்தி செய்ய பணம் திரட்டுவதன் பேரில், ஒரு பரப்பு நிலத்தை இரண்டு மில்லியன் ரூபா (ஒரு 25 சதுர மீட்டர் பகுதி சுமார் 18,000 அமெரிக்க டொலர்களுக்கு) என்ற விலையில் 31.5 ஹெக்டயர் நிலங்களை குத்தகைக்கு விட அரசாங்கம் திட்டமிடுகின்றது.
யாப்பா குறிப்பிட்டவாறு, சேகரிக்கப்படும் நிதியில் ஒரு பகுதி, வெளியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வீடுகளை கட்டப் பயன்படுத்தப்படும். கடந்த காலத்தில் மீண்டும் மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில், அத்தகைய வாக்குறுதிகள் பயனற்றவை. உதாரணமாக, எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவின் படி, 2004 சுனாமி அழிவில் தமது வீடுகளை இழந்த 11,000 குடும்பங்கள் இன்னமும் அகதிகளாக வாழ்கின்றன. எல்லாமாக, தீவு பூராவும் ஒரு மில்லியன் வீடற்ற குடும்பங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
"வறியவர்களை முன்னேற்றுவதுடன்" இந்தத் திட்டத்துக்கு தொடர்பே இல்லை. கொழும்பை தெற்காசியாவுக்கான ஒரு வர்த்தக மையமாக மாற்றும் அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்காக, தலைநகரின் மையத்தில் உள்ள நிலங்களை துப்புறவு செய்வதே இதன் இலக்காகும். இந்தத் திட்டம் 1990 இல் முதன் முதலாக அறிவிக்கப்பட்ட போதிலும் வெகுஜன எதிர்ப்பின் காரணமாக ஒத்தி வைக்க நேர்ந்தது.
அரசாங்கத்தின் திட்டங்கள் எதிர்ப்பைத் தூண்டும் என சரியாக பீதிகொண்டுள்ளதால், அது இராணுவத்தை ஈடுபடுத்துகின்றது. கடந்த மே மாதம், ஒரு அசாதாரணமான நடவடிக்கையை எடுத்த ஜனாதிபதி இராஜபக்ஷ, பொது மக்களுக்கான நடவடிக்கையில் ஈடுபடும் இரு நிறுவனங்களான நகர அபிவிருத்தி அதிகார சபையையும் காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையையும், தனது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார்.
பாதுகாப்பு அமைச்சு அதன் புதிய அதிகாரங்களை வேகமாக சுரண்டிக்கொண்டது. தெளிவாக பரந்த திட்டங்களுக்கான ஒரு பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், மே மாதம் மத்திய கொழும்பில் கொம்பனித்தெருவில் 45 குடும்பங்களை குடிசைகளில் இருந்து வெளியேற்றுவதற்கு ஆயுதம் தரித்த 2,000 பொலிஸ் மற்றும் இராணுவச் சிப்பாய்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்லுகளால் அடித்த பொலிசாரும் படையினரும் அவர்களை பிரதேசத்தை விட்டே விரட்டினர். இலங்கையில் பொலிசையும் பாதுகாப்பு அமைச்சே நிர்வகிக்கின்றது.
2008 ஜூலையில், கிளென்னீ பெசேஜ் என்றழைக்கப்படும் கொம்பனித்தெருவின் ஒரு பகுதியில் இருந்து 400 குடும்பங்களை அகற்றுவதற்கு கலகம் அடக்கும் பொலிஸ் படை பயன்படுத்தப்பட்டது. சில குடும்பங்களுக்கு தெமட்டகொடையில் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ள அதே வேளை, 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வட கொழும்பில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி சிறிய பலகை கூடாரங்களில் வாழ்கின்றன. கொழும்பு மாநகர எல்லைக்குள் தங்க விரும்பும் எந்தவொரு குடும்பமும் வாடகை கட்ட நெருக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் (யூ.டி.ஏ.) தலைவர் ஜானக குருகுலசூரிய அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடந்த இன்னுமொரு ஆயுதப்படை காட்சியில், ஒரு உள்ளூர் இளைஞனை கைது செய்து அடித்தது சம்பந்தமாக உள்ளூர் பொலிஸ் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து, ஆயிரக்கணக்கான பொலிசாரும் சிப்பாய்கள் அணிதிரட்டப்பட்டனர். வட கொழும்பில் பெருந்தொகையான வீடுகள் நாசமாக்கப்பட்டதோடு குடியிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். அடுத்த நாள் அப்பிரதேசத்தில் இருந்த சகல இளைஞர்கள் உட்பட பிரதேசவாசிகளையும், கிட்டத்தட்ட 8,000 பேரை சுற்றி வளைத்த ஆயுதப் படைகள், அவர்களை ஒரு வெளியரங்கில் அடைத்தது. அங்கு முகமூடி அணிந்த ஒற்றர்கள் ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் தனிநபர்களை பொறுக்கி எடுத்து கைது செய்தனர். பல குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே வெளியேற்றப்பட உள்ளதாக குறிப்பிடும் யூ.டி.ஏ. டோக்கன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வெளியேற்ற அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளன: கொழும்பு வடக்கில் உள்ள அப்பல் வத்த மற்றும் ஸ்டேடியம் கிராமத்தில் 120 குடும்பங்கள், களனிவெலி ரயில் பாதை அருகில் வசிக்கும் 500 குடும்பங்கள் மற்றும் ரத்மலானை புறநகர் பகுதியில் நீர்வழங்கல் சபை விடுதிகளுக்கு அருகில் வாழும் 60 குடும்பங்களும் இதில் அடங்கும். அவர்களை மீளக் குடியமர்த்த வீடுகள் இல்லை.
நகர்ப்புற வறியவர்களை, சமூக விரோத மற்றும் குற்றவியல் செயல்களில் ஈடுபடும் "ஆக்கிரமிப்பாளர்கள்" என வகைப்படுத்தி அரசாங்கமும் மற்றும் ஊடகங்களிலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்துடன் இணைந்தே இந்த வெளியேற்றும் திட்டம் வந்துள்ளது. வெள்ளம் மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களுக்கும் இந்த "அதிகாரமற்ற" கட்டுமானங்களே பொறுப்பு எனக் கூறப்படுகின்றது.
உண்மையில், அநேகமான குடும்பங்கள் தமது கூடாரங்களில் பல ஆண்டுகளாக, சிலர் பல பரம்பரைகளாக வாழ்கின்றன. சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி உட்பட அடிப்படை சேவைகளை வழங்கத் தவறிய ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் அலட்சியத்தின் விளைவே அவர்களது இழிவான வாழ்க்கை நிலைமையாகும்.
இந்த ஆண்டு ஜனவரியிலும் ஏப்பிரலிலும் நடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது, சிறந்த வீடுகளை தருவதாகவும் இத்தகைய குடிசைப் பகுதிகளுக்கு சேவைகளை முன்னேற்றுவதாகவும் அரசாங்க மற்றும் எதிர்க் கட்சிகளும் வாக்குறுதியளித்தன. பெருமளவில் மக்களை வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள அண்மைய முடிவு சம்பந்தமாக குடியிருப்பாளர்கள் தமது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அப்பல் வத்தையைச் சேர்ந்த ஒரு பெண் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: "எங்களுக்கு நல்ல இடத்தில் நல்ல வீடு இருந்தால், இந்த நரகத்தில் வாழ வேண்டியதில்லை. ஆனால், எங்களது வருமானத்துக்கான வழி மற்றும் எமது பிள்ளைகளுக்கான பாடசாலை அனைத்தும் இங்கு வாழ்வதுடனேயே சம்பந்தப்பட்டுள்ளன.
"அரசாங்கம் எங்களை எங்கே கொண்டு குடியேற்றப் போகின்றது என்பது தெரியவில்லை. அவர்கள் ஏன் இந்தப் பிரதேசத்தை எங்களுக்காக அபிவிருத்தி செய்யக் கூடாது? எங்களை குற்றஞ்சாட்டுவதற்கு மாறாக, அவர்கள் இந்த வாய்க்கால்களை துப்புரவு செய்வதோடு வெள்ளம் ஏற்படாதவாறு கரைகளை கொங்கிரீட் போட்டு உறுதியாக கட்டலாம்." கொம்பனித்தெருவில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரது சில உறவினர்களுக்கு தங்குமிடங்கள் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தானும் மேலும் பல குடும்பங்களும் 2008ல் கொம்பனித்தெருவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெமட்டகொடை வீட்டுத் திட்டத்தில் இருக்கும் ஒரு பெண் விளக்கினார். அவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரியிலேயே வீடொன்று கிடைத்ததுடன் அதற்கு உரிமைப் பத்திரம் கிடையாது. முன் வீடு ஒன்றைப் பெற அவர்கள் 25,000 கட்டவேண்டியிருந்ததோடு மின்சாரம் பெற மேலும் 6,000 செலுத்தியிருந்தனர். அதற்கு மாத வாடகை 1,000 ரூபா.
"இந்த பிரிவில் 320 வீடுகள் உள்ளன. சில வீடுகளில் இரண்டு குடும்பங்கள் உள்ளன. ஒரு வீட்டின் அளவு கிட்டத்தட்ட 400 சதுர அடி. இந்த வீட்டுத் திட்டம் நான்கு பகுதிகளாக முடிக்கப்பட இருந்தாலும் இதுவரை முதல் பகுதி மட்டுமே முடிவடைந்துள்ளது. அப்படியானால், புதிதாக வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு என்ன நடக்கும்?" என அவர் கேட்டார்.
எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிக் கட்சி (யூ.என்.பி.) குடிசைவாசிகளை காப்பதாக பாசாங்கு செய்கின்றது. ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் இருந்து 3,100 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு எதிரான நீதிமன்ற வழக்குக்கு கட்சி ஆதரவளிப்பதாக யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணானாயக்க ஊடங்களுக்குத் தெரிவித்தார். ஆயினும், அரசாங்கத்தின் சந்தை-சார்பு பொருளாதார செயற்திட்டத்துடன் எந்தவொரு அடிப்படை முரண்பாடும் யூ.என்.பி. க்கு இல்லை. முன்னைய யூ.என்.பி. அரசாங்கங்களும் மத்திய கொழும்பில் குடிசைகளை அகற்றும் தனது சொந்த திட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தன.
நகர அபிவிருத்தியில் இராணுவத்தின் தலையீடானது, இராஜபக்ஷ அரசாங்கம் தனது கொள்கைகளை திணிக்க முற்படும் போது பயன்படுத்தவுள்ள வழிமுறைகள் பற்றி ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்கும் விடுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். கடந்த ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தின் போது செய்த பிரமாண்டமான இராணுவச் செலவின் விளைவாக, இலங்கை பொருளாதாரம் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றது.
சகல பிரதான ஏற்றுமதிகளும் பாதிக்கப்பட்டதுடன், 2008ல் வெடித்த பூகோள நிதி நெருக்கடியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்நிய செலாவனி நெருக்கடி ஏற்படுவதை தடுக்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலரை கடனாகப் பெற இராஜபக்ஷ அரசாங்கம் தள்ளப்பட்டது. இப்போது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2012ல் மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக அதாவது அரைவாசியாகக் குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகின்றது.
யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகள், உழைக்கும் மக்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதியினர் மீது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பும் பகைமையும் வளர்ச்சி காணும் நிலையில் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக மிகப் பரந்தளவில் இதே வழிமுறைகள் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்படும்.
|