WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Obama to escalate slaughter in Yemen
ஒபாமா படுகொலைகளை யேமனில் விரிவுபடுத்துகிறார்
Bill Van Auken
28 August 2010
Back to
screen version
CIA இன் ட்ரோன் “இலக்கு வைத்துக் கொல்லும்” திட்டத்திற்கு யேமனில் ஒரு புதிய முன்னணி அரங்கை திறந்துள்ள நிலையில், இரகசிய மறைவுப் பிரிவு மற்றும் இரகசிய அமெரிக்க இராணுவச் சிறப்பு நடவடிக்கை படைகள் இரண்டும் உலகக் கொலைகள் நிறுவனங்கள் என்ற பங்கை ஒபாமா நிர்வாகம் உறுதியாக விரிவாக்கிக் கொண்டுவருகிறது.
“யேமனில் அல் கெய்டாவின் கிளைக்கு எதிராக கடும் நிலையை அதிகரிக்கும் முயற்சியாக வெள்ளை மாளிகையானது CIA இன் ஆயுதமேந்திய பிரிடேட்டர் ட்ரோன்களைக் களத்தில் இறக்குகிறது” என்று வியாழனன்று அசோசியேட்டட் பிரஸ், மூத்த வாஷிங்டன் அதிகாரிகளை மேற்கோளிட்டுக் கூறியுள்ளது.
“அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவும் CIA யும் தங்கள் கண்காணிப்புக் கருவிகள், ட்ரோன்கள் மற்றும் துருப்புக்களை யேமன், ட்ஜிபூட்டி, கென்யா, எதியோப்பியா ஆகிய இடங்களில் நடக்கவிருக்கும் கொலை செய்யும் நடவடிக்கைகளுக்கு நிலைநிறுத்தி வைத்துள்ளன” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் புதனன்று தெரிவித்துள்ளது.
CIA இப்பொழுது அரேபியத் தீபகற்பத்தில் உள்ள அல் கெய்டாவை பாகிஸ்தானிலுள்ள கெய்டா அமைப்பை விட “அதிக அவசரமுடைய” அச்சுறுத்தல் என்று கருதுகிறது என்று உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோளிட்டு வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகியவை முன்பு இருந்தது போல், பயங்கரவாதத்தை அகற்றுவதற்கு என்று இல்லாமல்—அதாவது சாதாரணக் குடிமக்களை ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதல்கள் மூலம் கொலை செய்தலானது பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இன்னும் அதிக ஆள் சேர்த்தலை தோற்றுவித்தல் என்று பொருள்—அதன் மூலோபாய நிலைத் தன்மையை ஒட்டி, அதாவது முதல் இடத்தில் எண்ணெய் ஏற்றுமதியில் இருக்கும் சௌதி அரேபியா, நாள் ஒன்றிற்கு மூன்று மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் விநியோகத்தைக் கொண்டுள்ள முக்கியமான பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு அருகே உள்ளது என்பதால் யேமன் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
“அவர்கள் ஒரேவித கொதிப்பு உணர்வைக் காட்டவில்லை—தற்போதைக்கேனும், ஏனெனில் அவர்களுடைய பாகிஸ்தான் பழங்குடிப் பகுதிகளில் உள்ள நண்பர்களைப் போல” என்று புதனன்று ஒரு அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார். “நம் பக்கம் உள்ள அனைவரும் இது மாற்றப்பட வேண்டும் என்று அறிந்துள்ளனர்.”
இவ்வித “கொதிப்பை” ஏற்படுத்துதல் பாகிஸ்தானின் கூட்டாட்சி நிர்வாகத்திற்குட்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படுவது நன்கு தெரிந்ததுதான். நாட்டின் செய்தி ஊடகம் மேற்கோளிட்டுள்ள பாகிஸ்தானிய அதிகாரிகள் கருத்துப்படி குறைந்தது 700 குடிமக்கள் 2009ல் ட்ரோன் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஒபாமா நிர்வாகத்திற்குப் பரிவு காட்டும் ஒரு வாஷிங்டன் சிந்தனைக்குழு மதிப்பீட்டின்படி, ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினராவது சாதாரண குடிமக்கள் ஆவர். இந்த ஆண்டு ட்ரோன் தாக்குதல்கள் பத்து மடங்கு அதிகரித்தவிட்டன, ஏவுகணை தாக்குதல்கள் வாரத்திற்கு ஒருமுறை என்பதில் இருந்து குறைந்தபட்சம் நாளொன்றிற்கு ஒன்று என ஆகிவிட்டன
பாகிஸ்தானின் பேரழிவு கொடுத்த வெள்ளப் பெருக்குக் கூட இத்தகைய இயந்திரகதியான படுகொலைகளுக்கு முடிவைக் கொண்டுவரவில்லை. சமீபத்திய தாக்குதல், திங்களன்று வடக்கு வஜீரிஸ்தானில் நடைபெற்றதில் 20 பேர் கொல்லப்பட்டனர், அதில் 4 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்கும் என்று தெரிவிக்கிறது.
இப்பொழுது பயங்கரவாதத்துடனான போர் என்னும் பெயரில், வாஷிங்டன் இதேவித அரச பயங்கரவாதத்தை ஏற்கனவே பிராந்திய, மத, இனவழி, பழங்குடி மோதல்களால் பிளவுற்றிருக்கும் ஒரு மிக வறிய நாட்டின் மீது சுமத்தத் திட்டமிட்டுள்ளது. வடக்குடன் 1990ல் இணைக்கப்பட்டுள்ள யேமனின் தெற்குப் பகுதியில் ஒரு பிரிவினைவாத இயக்கம் கடந்த16 ஆண்டுகளாக கொதிப்பில்தான் உள்ளது.
கருத்து வேறுபாட்டால் படுகொலை செய்யப்பட்ட மதகுரு ஷியா பிரிவைச் சேர்ந்த ஹுசைன் பட்ர் அல்-டின் அல்-ஹுத்தியின் ஆதரவாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக வடக்கே உள்ள சாடா மற்றும் அம்ரான் என்னும் பெரும்பாலும் சுன்னி அரசாங்கங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
முழு மக்கள் சனத்தொகையும் பெரும் வறுமையிலும், இழப்பிலும் ஆழ்ந்துள்ளது. 24 மில்லியன் யேமனியர்களில் கால் பகுதியினர் எப்பொழுதும் பட்டினியால் வாடும்போது, பாதிக்கும் மேலானவர்கள் நாள் ஒன்றிற்கு $2 க்கும் குறைவான பணத்தில் வாழுகிறார்கள். 2008 உலக வங்கி அறிக்கைப்படி, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 43 சதவிகிதம் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் உள்ளன.
இந்த ஏற்கனவே பெரும் திகைப்புக் கொடுக்கும் நிலையில் ஒபாமா நிர்வாகம் ஆகாய மார்க்கமாக படுகொலைகளை அதிகரிக்கும் வகையில் ஹெல்பைர் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதுடன் தரையில் சிறப்புப் படைப் பிரிவின் கொலைக்காரக் குழுக்களையும் படுகொலை செய்ய ஊக்குவிக்கிறது.
ஜனாதிபதி அலி அப்துல்லா சலேயின் ஆட்சி, வாஷிங்டனுடன் செயல்படும் நிலையில், அமெரிக்காவின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதை தன் எதிரிகள் அனைவரையும் மிருகத்தனமாக அழிக்கும் செயலை நியாயப்படுத்த உபயோகிக்கிறது.
“அமெரிக்கா, மற்ற நாடுகளிடம் இருந்து அல் கெய்டாவிற்கு எதிராகப் போரிட வேண்டும் மற்றும் சௌதி அரேபியாவிடம் இருந்து ஹுத்திகளைத் தாக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ள யேமன் அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு என்பதைப் போலிக் காரணமாகக் காட்டி எல்லா குறைகூறல்களையும் நெரிக்கும் கவலை தரும் போக்குத்தான் வளர்ச்சி அடைந்துள்ளது” என்று Amnesty International ன் மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்க திட்டத்தின் இயக்குனரான மால்கம் ஸ்மார்ட் இந்த வாரம் யேமனில் நடக்கும் தவறுகளை ஆவணப்படுத்திய மனித உரிமைகள் குழுவின் புதிய அறிக்கையை வெளியிடும்போது கூறியுள்ளார்.
மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை குடியிருப்புப் பகுதிகளில் குண்டுகள் போடுவது முழுமையாக உள்ளது, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுத் தள்ளுவது, வக்கீல்கள், செய்தியாளர்கள், மனித உரிமைகளுக்கு வாதிடுபவர்கள் உட்பட அரசாங்கத்தின் அரசியல் விரோதிகளை சிறையில் அடைத்தல், சித்திரவதை செய்தல், காணாமற் செய்துவிடுவது போன்றவை பற்றி கொடூர விவரங்களை அளிக்கிறது.
யேமன் அரசாங்கம் வாஷிங்டனில் இருந்து வந்துள்ள வாராந்திர மதிப்பீட்டை பகிரங்கமாக நிராகரித்தது. அதில் அரசாங்கமும் மேலைச் செய்தி ஊடகமும் “அல் கெய்டாவின் எண்ணிக்கையின் அளவையும், அது யேமனின் உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு கொடுக்கும் ஆபத்து மிகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. மேலும் “யேமனில் நடக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் யேமனிய பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பில் தான் உள்ளது” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை முகவர்கள் ஏற்கனவே யேமனில் நிலை கொண்டுள்ளார்கள். ஜனாதிபதி அலி அப்துல்லா சலேயின் ஆட்சி ஆகியவை பல முறையும் யேமன் மண்ணில் அமெரிக்கத் தாக்குதல்கள் நடத்த பச்சை விளக்கை காட்டியுள்ளன. எவ்வித அமெரிக்க போர் விரிவாக்கமும் இல்லை என்ற அறிக்கை உள்நாட்டு மக்களை திருப்தி செய்வதற்கு வெளியிடப்பட்டதுதான். அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் பரந்த அளவு சீற்றத்தை அதிகரித்துள்ளன, அதேநேரத்தில் யேமன் அரசாங்கத்திற்கு எதிர்ப்பையும் தீவிரப்படுத்தியுள்ளன.
CIA ட்ரோன் போர் ஒன்று ஏற்கனவே அமெரிக்க இராணுவம் யேமனில் ஒபாமாவின் கட்டளையின் பேரில் நடத்தியுள்ள போர்க் குற்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். இவற்றுள் மிக மோசமானது டிசம்பர் 17 அன்று 41 பேர் படுகொலையுண்டதுதான், அவற்றுள் 21 குழந்தைளும் 14 பெண்களும் இருந்தனர். சர்வதேச ஒப்பந்தங்களில் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதமான கொத்துக் குண்டுகளால் அமெரிக்க க்ரூஸ் ஏவுகணைகள் அப்யான் என்னும் தெற்கு மாவட்டத்தில் அவர்களுடைய வீடுகள் தாக்கப்பட்டபோது இக்கொலைகள் நிகழ்ந்தன.
கடந்த ஜூன் மாதம் ஐ.நாவின் நீதித்துறைக்குட்படாத கொலைகள் பற்றிய சிறப்பு உறுப்பினரான பிலிப் அல்ஸ்டன் அமெரிக்க அரசாங்கம் திமிர்த்தனமாக தனக்கே “உலகெங்கிலும் உள்ள தனிநபர்களை இலக்கு வைத்துக் கொல்லும் உரிமையைப் பெருகிய முறையில் பயன்படுத்துகிறது”, “எந்தப் பொறுப்பும் இல்லாமல் கொல்வதற்கு தவறான வரையறைகள் கொண்ட உரிமையை வலுவாகக் கூறுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“கொல்வதற்கு உரிமை” என்னும் இச்செயல் அமெரிக்கக் குடிமக்களை பொறுத்தவரையிலும் பயன்படுத்தப்படுகிறது. யேமனில் இலக்கு வைக்கப்பட்டவர்களுள் அமெரிக்க இஸ்லாமிய மதகுருவான அன்வர் அல் அவ்லகியும் உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிகாரிகள் ஒபாமா நிர்வாகம் அல்-அவ்லகியை “இலக்கு வைத்துக் கொல்லுவதற்கு” ஒப்புதல் கொடுத்தது; அவருடைய குடும்பம் யேமனிக் குடும்பம் ஆகும். தன் குடிமக்களிலேயே ஒருவரைப் படுகொலைக்கு உட்படுத்தியதாக அமெரிக்க அரசாங்கம் முதல் தடவையாக ஒப்புக் கொண்டதை இது குறிக்கிறது.
அல்-அவ்லகியின் குடும்பம் மற்றும் குடியுரிமை வக்கீல்கள் இந்த நீதிக்குப் புறம்பான கொலை மற்றும் அதிகாரம் பெரிதும் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு தடுப்பாணை பெற முயன்றனர். நியூ மெக்சிகோவில் பிறந்தவர் ஏதேனும் குற்றம் இழைத்தவர் என்றால் அவர் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் எவ்வித சட்டபூர்வ வழக்கையும் நெரித்து விடும் முயற்சியில் ஒபாமா நிர்வாகம் அல் அவ்லகியை ஒரு பயங்கரவாதி எனக் கருதியதால், CIA அல்லது அமெரிக்க இராணுவம் அவரைக் கொலை செய்யாமல் தடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவை நாடுவது ஒரு குற்றம் ஆகும் என்று கூறிவிட்டது. இம்மாதம் முன்னதாக, அமெரிக்க குடிமை உரிமைகள் ஒன்றியமும் அரசியலமைப்பு உரிமைகள் மையமும் அமெரிக்க நிதித்துறையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்றபின்தான் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டன.
வெளிநாடுகளில் ஒபாமா நிர்வாகம் குற்றம் சார்ந்த போர்களைப் பெருக்கி, விரிவாக்கிக் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் உள்நாட்டில் ஒரு பொலிஸ்-அரச சர்வாதிகாரத்திற்கான சாரத்தைக் கட்டமைக்க புஷ் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தொடர்கிறது. அரசியல் ஸ்தாபனத்தின் எந்த முக்கிய பிரிவு அல்லது செய்தி ஊடகமோ தீவிரமாக இந்த நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. ஏனெனில் அவை இரு முக்கிய கட்சிகள் மற்றும் அரசாங்கம் பிரதிபலிக்கும் நிதிய பிரபுத்துவத்தின் நலன்களால்தான் உந்தப் பெறுகின்றன.
யேமனில் புதிய போருக்கான தயாரிப்புக்கள் அமெரிக்க உழைக்கும் மக்களால் ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அமெரிக் ஏகாதிபத்தியத்தின் தடையற்ற வளர்ச்சி, வேலைகள், ஊதியங்கள், சமூக நிலைமைகள் மீது பெருகிவரும் தாக்குதல்கள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் தூக்கி எறியப்படலுடன் இணைந்து ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகின்றன. தற்பொழுதைய முதலாளித்துவ முறையின் வடிவமைப்பிற்குள் இதற்கு எந்த விடையையும் காண்பதற்கில்லை. சோசலிசத்திற்காகப் போராடும் சுயாதீன மற்றும் அரசியல் நனவுடைய ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் இயக்கத்தின் வளர்ச்சி தான் ஒரு மாற்றீட்டை அளிக்க வல்லது. |