World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Jungle in 2010

2010ல் ஒரு வனப் பகுதி

Tom Ely and Barry Grey
26 August 2010

Back to screen version

1906ம் ஆண்டு சோசலிச எழுத்தாளர் உப்டன் சின்கிளேர் ஒரு வனப் பகுதி என்னும் நவீனத்தை வெளியிட்டார். அது சிக்காகோவின் கால்நடைப் பண்ணைப் புறங்களில் குடியேறிய தொழிலாளர்கள் எதிர்கொண்ட மிருகத்தன நிலைமைகளை சக்திவாய்ந்த விதத்தில் அம்பலப்படுத்தியது. இப்பகுதியில் இருந்த அமெரிக்க மக்களின் உணவான இறைச்சித் தயாரிப்பின் அவல நிலை வெளிவந்தது. இறைச்சியை பொதியாக தயாரிக்கும் நிறுவனப் பண முதலைகளின் ஊழலும், பேராசையும் அளவிடுவதற்கரியதாக இருந்தன.

இந் நவீனம் உயிர்துடிப்புள்ள பாதிப்பை ஏற்படுத்தியதுடன், விரைவில் பெரும் விற்பனையையும் கண்டது. சின்கிளேரின் சமகாலத்தவரான ஜாக் லண்டன், “ஒரு வனப் பகுதி  நம் நாடு உண்மையில் எப்படி உள்ளது என்பதைச் சித்தரிக்கிறது, அதாவது அடக்குமுறை, அநீதியின் உறைவிடமாக உள்ளதும், ஏழ்மை நிலைமைகள் தீய கனாவாகவும், கொடும் நரகத்தின் இடர்களும் நிறைந்த ஒரு மனிதன் தோற்றுவித்துள்ள நரகமாகவும், கொடிய விலங்குகள் உலவும் ஒரு வனப் பகுதியாக உள்ளது” என்று எழுதினார்.

பொதுமக்கள் இதுபற்றி எழுப்பிய கூக்கூரலின் தன்மையானது ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட் மற்றும் காங்கிரசை விரைவில் 1906ம் ஆண்டு தூய உணவு, மருந்துகள் சட்டம் என்பதை இயற்ற வைத்ததுடன், அது முற்போக்குச் சகாப்த சீர்திருத்தத்தின் ஒரு சிறப்பு அடையாளமும் ஆகும்.

தொழிலாளர் பிரிவு மற்றும் நுகர்வோர் சுகாதார ஒழுங்குபடுத்தல்கள் எப்பொழுதுமே தொழிலாளர்களை தவறாக நடத்துவது, கலப்படப் பொருட்களை விற்பனை செய்வது என்று இருந்த தவறுகளை நீக்கப் போதுமான கடினத்தன்மையை கொண்டிருக்கவில்லை, ஆனால் இன்று 100 ஆண்டுகளுக்குப் பின்னர் உணவுத் தொழிற்துறையில் இலாப உந்துதல் மீது சுமத்தப்பட்ட தடைகள் அனைத்தும் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. இந்த வாரம் மிகப் பெரிய அளவில் முட்டைகள் மற்றும் இறைச்சி உணவு பொருட்கள் திரும்பப் பெறப்பட்டதானது அமெரிக்க உணவு அளிப்புப் பிரிவுகளின் மிருகத்தனமான, சுகாதாரமற்ற அடிமை உழைப்பு தொழிற் கூடங்களின் ஆதாரங்கள் மீது இருந்த திரையை அகற்றியுள்ளன.

அரை பில்லியன் முட்டைகளுக்கும் மேலானவை, சால்மொனெல்லா நச்சுத் திறன் கொண்டதுடன், கொறித்துத் தின்னும் எலிகள் போன்ற பிராணிகளின் மலக் கழிப்பினால் பாதிக்கப்பட்டவை. இப்பொழுது அமெரிக்கா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து திரும்பப் பெறப்படுகின்றன. இந்த முட்டைகள் இரு அயோவா நிறுவனங்களான Wright County Egg மற்றும் Hilandale Farms ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவைகள்.

சால்மொனெல்லா நச்சுப் பாதிப்பினால் கிட்டத்தட்ட 1,300 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் —இது குமட்டல், வாந்தியெடுப்பு, வயிற்புப் போக்கு, சில தீவிர நிலைமையில் இறப்பிற்குக் கூட வழிவகுக்கும். உண்மையில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் கூடுதலாக இருக்கலாம், ஏனெனில் வந்துள்ள தகவல்கள் குறைவானவைதான்.

இதன்பின் செவ்வாயன்று 380,00 பவுண்டு எடையுள்ள களஞ்சிய இறைச்சிகள், உலகின் மிகப் பெரிய இறைச்சி உற்பத்தி நிறுவனம் Tyson Foods தயாரித்தவை, நாடெங்கிலும் இருக்கும் வால் மார்ட் கடைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இக்குளிர் பதன இறைச்சிப் பொருட்கள் லிஸ்டிரியா என்னும் உயிரணுப் பாதிப்பினால் நச்சுப்படுத்தப்பட்டிருக்கலாம்; இதையொட்டி குமட்டல், தலை மற்றும் கழுத்து வலிகள் மற்றும் ஆபத்து நிறைந்த லிஸ்டிரியோசிஸ் என்னும் நோய் வரும் திறன் ஆகியவைகள் ஏற்படக்கூடும்.

இந்த வாரம் இவ் நோயின் தீடீர் வரவுகள் வெறும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்க உணவுத் தொழிற்துறை மீது படிப்படியாக கட்டுப்பாடு தளர்த்தல் ஏற்பட்டுள்ளதன் விளைவுகள் தாம் இவை. அரசாங்க சிவப்பு நாடா முதலாளித்துவ “தடையற்ற சந்தை” முறையின் “மறைந்துள்ள கைகளில்” தலையிடுகிறது என்று கூறி ஜிம்மி கார்ட்டர் காலத்தில் இருந்து ஒவ்வொரு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகமும் அடிப்படைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிதியக் கட்டுப்பாடு ஆகியவற்றின் தரங்கள், கட்டுப்பாட்டு முறைகளை இன்னும் அகற்றிவிட்டன.

இதன் விளைவு ஒரு சமூகப் பேரழிவு ஆகும். 2008ல் பெரும் வங்கிகளின் தடையற்ற மோசடித்தனத்தால் விளைந்த நிதிய நெருக்கடி, BP வளைகுடா எண்ணெய்ப் பேரழிவிற்கு வழிவகுத்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகள் மிதித்து அகற்றப்பட்டமை, அத்தோடு உணவுத்துறை அளிப்பில் நச்சுக்கள் என்பது வரை அமெரிக்க மக்கள் மிகப் பெரும் பேராசை நிறைந்த பெருநிறுவன நலன்களின் தயவில் தாழ்ந்து இருக்கின்றனர். மேற்கு வர்ஜீனியாவில் AT Massey சுரங்கத்தில் நான்கு தசாப்தங்கள் காணப்படாத பெரும் கொடூர சுரங்கப் பேரழிவும் இந்த ஆண்டு ஏற்பட்டதுடன், இங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகள் மீறப்பட்டது பல நேரமும் வெளிவந்திருந்தன.

இந்த நிகழ்வுகள் அனைத்திலும் பெருநிறுவனக் குற்றத்தன்மை பெரும் பங்கைக் கொண்டுள்ளது. சமூக விரோதிகள் தொழிலாளர்களை மிருகத்தனமாக சுரண்டுவதுடன், தெரிந்தே சந்தையில் குறைபாடுகள் உடைய, ஆபத்து நிறைந்த பொருட்களை வெள்ளமெனக் குவித்துள்ளனர். எந்தப் பாதிப்பும் தங்களை அணுகாது என்ற தைரியத்தில் அவர்கள் இதைச் செய்கின்றனர். ஏனெனில் இவற்றைப் பெயரளவிற்கேனும் கட்டுப்படுத்தும் அரசாங்கப் பிரிவுகளின் ஒத்துழைப்பை அவர்கள் பெறுகின்றனர்.

ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு Sright County Egg ன் உரிமையாளர், ஆஸ்தின் “ஜாக்” டிகாஸ்டர், தொழிலாளர்துறை, சுகாதரப் பிரிவு மற்றும் சுற்றுச்சூழல் மீறல்கள் தொடர்பாக நீண்ட பதிவுகளைக் கொண்டுள்ளார். 1996ல் டிகாஸ்டர் $2 மில்லியன் அபராதத்தை, அப்பொழுது தொழிலாளர் பிரிவு மந்திரியாக இருந்த ரோபர்ட் ரீச் குறிப்பிட்ட “நான் பார்த்தவற்றிலேயே மிக இழிந்த பணியிட மீறல்கள் சில இங்கு உள்ளன” என்று கூறியதை அடுத்து, செலுத்த நேர்ந்தது. அயோவா “விவசாய அடிமை உழைப்பு உற்பத்திக் கூடத்தில்” இந்தவித மீறல்களில் தொழிலாளர்கள் “தொடர் வண்டிகளில் எலிகளும், உரங்களுடனும், இறந்த கோழிக் குஞ்சுகளையும் தங்கள் வெற்றுக் கரங்களுடன் கையாள வேண்டிய நிலை இருந்ததும் அடங்கும்” என்று ரீச் குறிப்பிட்டார்.

2001ம் ஆண்டு டிகாஸ்டர் சமவேலை வாய்ப்புக் குழு கொடுத்த புகாரான அவருடைய நிறுவனம் 11 ஆவணமற்ற மெக்சிகோ பெண் தொழிலாளர்களை “பெண்கள் விரோத பணிச் சூழலில்” ஈடுபடுத்தினார்”, இதன்போது பாலியல் வல்லுறவு மற்றும் அவர்களுடைய மேற்பார்வையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததும் அடங்கும், இதைத் தீர்ப்பதற்கு $1.5 மில்லியன் கொடுத்தார். மிக வறிய ஊதியங்கள் கொடுத்தல், இரக்கமற்ற முறையில் ஆவணமற்ற குடியேறிய தொழிலாளர்களை சுரண்டுதல் ஆகியவற்றிற்கு இழிந்த பெயரை டிகாஸ்டர் கொண்டவர் ஆவார். டிகாஸ்டர் உரிமையில் இருக்கும் முட்டைப் பண்ணைகள், இன்னும் அதே போன்ற இணைப்புச் நடவடிக்கை ஆலைகள் பிறருடையவற்றைப் பற்றிய You Tube ல் வந்துள்ள வீடியோ காட்சிகள் கோழிகள் அழுகிய இறந்திருந்த பறவைகளின் சவங்களுடன் கூண்டுகளில் திணித்து வைக்கப்பட்டதைக் காட்டியுள்ளன.

டிகாஸ்டர் உரிமையில் இருக்கும் முட்டைப் பண்ணைகள், இன்னும் அதே போன்ற இணைப்புச் நடவடிக்கை ஆலைகள் பிறருடையவற்றைப் பற்றிய You Tube ல் வந்துள்ள வீடியோ காட்சிகள் கோழிகள் அழுகிய இறந்திருந்த பறவைகளின் சவங்களுடன் கூண்டுகளில் திணித்து வைக்கப்பட்டதைக் காட்டியுள்ளன.

இத்தகைய நிலைமைகள் விதிவிலக்காக இல்லாமல் நடைமுறைச் சட்டமாகவே உள்ளன. “கிட்டத்தட்ட எவ்வித கால்நடைப் பண்ணையிலும் சோதனை ஆய்விற்கான விதிமுறைகள் இல்லை. வான்கோழிகள், கோழிக்குஞ்சுகள், பன்றிகள் அல்லது மாடுகளை சோதனை ஆய்வு செய்வதற்கான ஒழுங்கு முறைகள் இல்லை” என்று கோழிகளுக்கான மிருக வைத்தியரும், அயோவா மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி வல்லுனருமான டரெல் டிராம்பெல் Fiid Safety News இடம் கூறினார். “இந்த நாட்டில் எவ்விதக் கட்டுப்பாட்டு விதிகளும் இல்லை.”

பெயரளவிற்கு நடைமுறையில் இருக்கும் சோதனை ஆய்வுகளில்கூட, உண்மையான மேற்பார்வை அல்லது செயல்படுத்தும் தன்மை இல்லை என்றே கூறலாம். FDA எனப்படும் உணவு, மருந்துகள் நிர்வாகப்பிரிவு கடந்த தசாப்தத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட செலவுகளை பாதியாக ஆகிவிட்டுள்ளது. இப்பொழுது ஒவ்வொரு 350 உணவு உற்பத்தி நிலையங்களுக்கு ஒரு ஆய்வாளர் தான் என்ற திறனைக் கொண்டுள்ளது.

DHS எனப்படும் சுகாதார, மனித சேவைகள் துறையின் தலைமை ஆய்வாளர் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்று, அமெரிக்க உணவுத் தயாரிப்பு நிலையங்களில் பாதிக்கும் மேலானவற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட FDA ஆய்வு நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த கூட்டாட்சி அமைப்பு ஒரு வனப்பகுதி வெளியிடப்பட்டபின் அமைக்கப்பட்டது. FDA ஆனது மீறல்களைக் கண்டுபிடித்த இடங்களிலும், அபூர்வமாகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல மீறல்கள் என்ற சான்றுகளைக் கொண்ட நிறுவனங்களும் இவற்றில் அடங்கும்.

FDA க்கு உணவு பாதிப்படையப்பட்டுவிட்டால் அதைத் திரும்பப் பெற வலியுறுத்தும் அதிகாரம் கூடக் கிடையாது. “சுய ஒழுங்குமுறை” என்னும் நெறிக்கு ஏற்ப, தவறிழைக்கும் நிறுவனத்தை அதுவே பொருட்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற வேண்டுகோளை மட்டுமே இது விடுக்க முடியும்.

இதன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 81 மில்லியன் அமெரிக்கர்கள் நோய்வாய்ப்படுகின்றனர், 300,000 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர், 9,000 பேர் நச்சுப்பட்ட பொருட்களை உண்பதால் இறக்கின்றனர் என்று Centers for Disease Control and Prevention கூறியுள்ளது.

பல மில்லியன் நுகர்வோர்கள் நச்சுப் பொருளைப் பெறுதல் என்பது உணவு உற்பத்தி ஆலைகளில் உள்ள மிருகத்தனமான தொழிலாளர் நிலைமையுடன் நேரடியாகத் தொடர்புடையது. ஒரு வனப் பகுதியின் கதாநாயகனான லிதுவேனியாவில் இருந்து குடியேறிய ஜுர்கிஸ் ருட்கஸுக்கும் பதிலாக இன்றைய உணவுத் தயாரிப்பு ஆலைகளில் நூறாயிரக்கணக்கான மெக்சிக்கன், மத்திய அமெரிக்க குடியேறிய தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

எண்ணுக்கணக்கற்றோர் காயப்படுகின்றனர், பணியிடத்தில் ஊனமுறுகின்றனர், பல நேரமும் இது கூர்மையான கத்திகளின் பன்முறை வெட்டுக்களால் ஏற்படுகிறது. இக்காயங்கள் நிறுவன மருத்துவர்களால் வாடிக்கையாக மறைக்கப்பட்டு விடுகின்றன. 2005ல் அரசாங்கப் பொறுப்பைக் காக்கும் அலுவலகம் மற்றும் பணியிடப் பாதுகாப்பு, சுகாதர நிர்வாகம் (OSHA) “அதன் பாதுகாப்பு ஆபத்துக்களுக்கு முதலாளிகளை OSHA பெயரிடும் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கவில்லை”, “எந்த வேகத்தில் கசாப்பு வழிவகைகள் செயல்பட வேண்டும் என்று மதிப்பிடவும்” வழிவகைகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறிப்பிட்டுள்ளது.

ஆனால் சின்களேர் காலத்தில் இல்லாத தன்மையில், இன்றைய உணவுப் பதனிடும் தொழில்துறை செய்தி ஊடகத்தில் சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்துவதில்லை, அரசியல் ஸ்தாபனத்தின் எப்பிரிவிலும் சலசப்பு இல்லை. சமீபத்திய வெகுஜன நச்சுக் கலப்புக்களும் உணவுத் துறையைக் கட்டுப்படுத்த புதிய சீர்திருத்தங்கள் தேவை என்ற கருத்தையும் தெரிவித்து வரவில்லை. முட்டை உற்பத்தியில் ஒபாமா நிர்வாகம் சமீபத்தில் கொண்டுவந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நிலைமையை சீராக்க எதையும் செய்யாது. புதிய விதிகள் கோழிக்குஞ்சுகள் சல்மொனெல்லாவிற்கு எதிரான தடுப்பு ஊசி கொடுக்கப்பட வேண்டும் என்ற தேவையை ஒதுக்கிவிட்டன. அந்த நடவடிக்கை பிரிட்டனில் செயல்படுத்தப்பட்டு மனித சல்மோனெல்லா நிகழ்வுகள் 95 சதவிகிதம் குறைந்துவிட்டது.

பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் வலிமையானது இப்பொழுது செயல்படுத்தப்படுவது போல் திமிர்த்தனமாகவும், கட்டுப்பாடு இல்லாமலும் ஒரு பொழுதும் நடத்தப்பட்டதில்லை. முந்தைய நூற்றாண்டுகளின் ஆரம்ப சகாப்தங்களில் இருந்த ஒரு சீர்திருத்த மனப்பாங்குடைய தாராளவாத அறிவுஜீவிகள் தொகுப்பு மறைந்துவிட்டது, பெரும் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி, பொருளாதார ஏணியின் உச்சியில் பெரும் செல்வக்குவிப்பு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இத்துடன் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையில் நீடித்த, விரைவான சரிவும் பிணைந்து நிற்கிறது.

இந்த வழிவகையில் தொழிற்சங்க அதிகாரத்துவமும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. ஏராளமான உணவுத்துறைத் தொழிலாளர்களின் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்துள்ளன. தொழிற்சங்கங்க உடைப்புக்கு அடிபணிவு, ஊதியக் குறைப்பு, விரைவில் இழிநிலைக்கு கொண்டுவருவதற்கு இவை காட்டும் நிபந்தனையற்ற சரணடைவு ஒரு நூற்றாண்டிற்கு முன் சின்கிளேர் அம்பலப்படுத்திய அடிமை உற்பத்திக் கூடங்கள் நிலைமைகள் மீண்டும் தலைதூக்க வழிவகுத்துள்ளன.

இச்சமூகக் கொடூரங்கள் முதலாளித்துவ அமைப்பு முறையிலேயே வேரூன்றியவை ஆகும். தற்கால பரந்த சமூகம், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களை சிக்கல் நிறைந்த உற்பத்தி, பகிர்வு, நுகர்வு என்னும் இழையில் பிணைப்பது, பொருளாதார வாழ்வின் முக்கிய நெம்புகோல்கள் தனியார் உடைமையில் இருப்பது, நிதிய, பெருநிறுவனப் பிரபுத்துவம் மகத்தான செல்வக் குவிப்பை நடத்துவதற்கு தாழ்த்து வைக்கப்பட்டிருக்கும் நிலையுடன் பொருந்தாது.

தனியார் நிறுவனங்களின் சமூக அழிவைக் கொடுக்கும் செயற்பாடுகள் தொழிலாளர்கள் நிகழ்வுகளைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளும் வரை நிறுத்தப்பட முடியாதவை ஆகும். நிதிய உயரடுக்கின் சொத்துக்கள், சலுகைகள் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை தொழிலாள வர்க்கம் நேரடிச் சவாலுக்கு உட்படுத்தி, சமூகத்தின் மீது அது கொண்டுள்ள இடுக்கிப்படியை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும். தன்னை ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக அது ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட வேண்டும். அதில் உணவு, விவசாய வணிகப் பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் அடங்கியிருக்க வேண்டும்.