World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

This week in history: August 23-August 29

வரலாற்றில் இந்த வாரம்: ஆகஸ்ட் 23 ஆகஸ்ட் 29

23 August 2010

Back to screen version

வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்: ஆர்ப்பாட்டங்களும் மூலதன வெளியேற்றமும் தென்னாபிரிக்காவை குலுக்கியது

1985ல் இந்த வாரம், தென்னாபிரிக்காவின் இனப்பாகுபாட்டு அரசாங்கத்துக்கு எதிரான பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. ஜூலை 21 அரசாங்கம் அவசரகால நிலைமையை பிரகடனம் செய்ததால் ஏற்பட்ட சீற்றத்தால் நாடு பூராவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஆகஸ்ட் 29, கேப் டவுனின் புறநகர் பகுதியில் கவச வாகனங்களில் பயணித்த பொலிசார் இளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்து, இறப்பர் குண்டுகளால் தாக்கியதோடு கண்ணீர் புகையும் வீசினர். கொல்லப்பட்ட அனைவரும் கருப்பினத்தவர்கள் அல்லது கலப்பினத்தவர்கள். கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த வெள்ளை இனத்தவர்கள் மீதும் கண்ணீர் புகை வீசப்பட்டது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏ.என்.சி.) தலைவர் நெல்சன் மண்டேலாவை சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரி நடத்தப்பட்ட ஊர்வலத்தை பொலிஸ் தடுத்ததோடு, உயர் பள்ளி மாணவர்களின் பெரும் சங்கத்தை போத்தா அரசாங்கம் தடை செய்ய முடிவெடுத்ததையும் அடுத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

ஒரு மாத கால ஆர்ப்பாட்டங்களில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மேலும் ஆயிரக்கணக்கானவர்களில் அநேகமானவர்கள் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள். அவர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைகள், தனியறை தடுப்புக் காவல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இழிபுகழ் பெற்றதாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் உறுதிப்பாடும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலக்கரி மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த அச்சுறுத்தலும், சர்வதேச நிதி வட்டாரங்களுக்கு அதிர்ச்சி அலைகளை அனுப்பின. இதனால் அரசியல் கட்டுப்பாட்டை பேணுவதற்கு பிரிட்டோரியாவுக்கு (ஒரு நிர்வாகத் தலைநகர்) முடியும் என்ற நம்பிக்கையை நிதி வட்டாரங்கள் இழக்கத் தொடங்கின. மூலதன வெளியேற்றத்துக்கு மத்தியிலும் மற்றும் அமெரிக்க டொலருக்கு எதிராக முன்னெப்போதுமில்லாதவாறு அதன் நாணய வீழ்ச்சியுடனும், தென்னாபிரிக்கா ஆகஸ்ட் 27 அன்று சகல நாணய மற்றும் பங்கு வியாபாரத்தை இடைநிறுத்தத் தள்ளப்பட்டது. தென்னாபிரிக்க மத்திய வங்கி தலைவர் கெர்ஹாட் டி கொக், 11.5 பில்லியன் டொலர் குறுகிய கால கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நிபந்தனைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பெடரல் ரிசேர்வ் வங்கியின் தலைவர் போல் வொல்கர் மற்றும் முன்னணி வோல் ஸ் ரீட் வங்கிகளுடன் அவசர கூட்டமொன்றை நடத்த நியூ யோர்க் நகரத்துக்கு பறந்தார்.

ஜனாதிபதி போத்தா, கருப்பின முதலாளித்துவ தட்டுக்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு முயற்சிக்க வேண்டும் என கோரும் நான்கு தேசிய வர்த்தக சமாசங்கள் உட்பட, முன்னணி புள்ளிகள் மற்றும் அமைப்புக்களின் எண்ணிக்கை பெருந்தொகையாக அதிகரித்துக்கொண்டிருந்தன.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: கொங்கோ நெருக்கடி ஆழமடைந்தது

தேசியவாதி பற்றீஸ் லுமும்பாவின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கி கவிழ்ப்பதற்கு அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மற்றும் முன்னால் காலனித்துவ சக்தியான பெல்ஜியமும் முயற்சித்த நிலையில், 1960ல் இந்த வாரம் கொங்கோவில் உள்நாட்டு யுத்தம் ஆழமடைந்தது.

தேசத்தின் பெரும்பகுதி கனிய வளங்களின் இருப்பிடமான தென் கிழக்கில், பிரிந்து சென்ற கட்டங்கா மாகாணத்துக்கு துருப்புக்களை அனுப்ப லுமும்பா அரசாங்கத்துக்கு விசுவாசமான சிப்பாய்கள் தயாராகினர். லுமும்பா சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு, மொய்சே ஷொம்பே தலைமையில் பிரிந்து சென்ற மாகாணத்துக்கு பெல்ஜியன் மற்றும் ஐ.நா. சிப்பாய்கள் உதவினர். பிரிவினைவாத இயக்கத்தை வீழ்த்தும் முயற்சியில் கசாய் மாகாணத்தின் தலைநகரான லுலாபர்க்குக்கும் படையினரை லுமும்பா அனுப்பி வைத்தார். முன்பு லுமும்பா அணியில் இருந்த அல்பர்ட் கலொன்ஜி, கனிப்பொருள் நிறைந்த கசாய் பிராந்தியத்தை சுதந்திரமானதாக பிரகடனம் செய்தார். அவர் "சுரங்கத் துறை மாநிலம்" என அதற்குப் பெயரிட்டிருந்தார்.

சிப்பாய்களை அனுப்புவதற்கு அதன் விமானங்களை பயன்படுத்த அரசாங்கத்தை அனுமதிப்பதன் மூலம் லுமும்பாவுக்கு உதவுவதற்கு மறுத்த ஐ.நா. விளைபயனுள்ள விதத்தில் பிரிந்து சென்ற பிராந்தியங்களுடன் அது அணிசேர்ந்துகொண்டது. 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 15,000 ஐ.நா. துருப்புக்கள், கிட்டத்தட்ட நாட்டின் ஒரு மில்லியன் சதுர மைல்கள் பூராவும் வந்து பரவி நின்றன. உதவிக்காக சோவியத் ஒன்றியத்தை நாடிய லுமும்பா, ஆகஸ்ட் 26 அன்று லியோபொல்ட்வில்லேயில் சோவியத் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜி ஸுகோவ்வை வரவேற்றார்.

நாட்டை பொருளாதார ரீதியில் நெருக்கும் பெல்ஜியத்தின் முயற்சிகளுக்கு லுமும்பா அரசாங்கத்திடம் பதில் இருக்கவில்லை. மூலதன வெளியேற்றமும் அநேகமான இறக்குமதிகள் மீதான புதிய அரசாங்கத்தின் தடைகளும், தலைநகரும் பெரும் நகரமுமான லியோபொல்ட்வில்லேயில் வெகுஜன வேலையின்மையை உருவாக்கியது. சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்த லியோபொல்ட்வில்லே தொழிலாளர்களை அடித்து சிறை வைப்பதன் மூலம் அரசாங்க பொலிஸ் பதிலிறுத்தது.

ஆகஸ்ட் 24 வாஷிங்டனில் சி.ஐ.ஏ. தலைவர் அலென் டலஸ், லுமும்பாவை படுகொலை செய்வது உட்பட அவரை "அகற்றுவதை" வரை தந்தி நிலைய தலைவர் லாரி டெவ்லினுக்கு அதிகாரமளித்தார்.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: மௌனத் திரைப்பட நடிகர் மெக் ஸ்வைன் உயிரிழந்தார்

மௌனத் திரைப்பட நடிகர் மெக் ஸ்வைன் தனது 59வது வயதில் 25 ஆகஸ்ட் 1935ல் காலமானார். 160க்கும் அதிகமான திரைப்படங்களில் அனுபவம் பெற்ற ஸ்வைன், 1910 மற்றும் 1920களில் சார்லி சப்ளினினுடன் அடிக்கடி சேர்ந்து நடித்தவர்களில் ஒருவர்.

1876ல் சோல்ட் லேக் நகரான உடாஹ்வில் பிறந்த ஸ்வைன், ஹொலிவுட்டின் ஆரம்ப ஆண்டுகளில் தனது திரைப்பட நடிப்பைத் தொடங்குவதற்கு முன்னதாக, பல்சுவை கேளிக்கை வட்டாரத்தில் தனது நடிப்பை தொடங்கினார். அப்போது பல் மொழி தேர்ச்சியுடன் கோமாளி நகைச்சுவை நடிகனாக மெக் செனெட்டின் கீஸ்டோன் ஸ்டூடியோவில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஸ்வைன், மாபெல் நோர்மன்ட் நாடகமான ஏ மட்டி ரொமன்ஸ்ஸில் (A Muddy Romance) 1913ல் தனது அரங்கேற்றத்தைத் தொடங்கினார்.

உயரமான உடற்கட்டுள்ள ஸ்வைன், செனெட்டின் நடிகர்கள் குழுவில் ஒரு பிரதான நடிகராக ஆனதோடு அடிக்கடி கோபம் கொண்ட எஜமானாக, கணவராக அல்லது தந்தையாக நடித்தார். நகைச்சுவை இரட்டையர்களின் பாகமாக நடிகர் செஸ்டர் கொக்லின் உடன் பல படங்களில் ஸ்வைன் நடித்துள்ளார். அவற்றில் அவர்கள் அம்ப்ரோஸ் மற்றும் வல்ரஸ் என்ற பாத்திரங்களில் தோன்றினர். அவர்களது அநேகமான குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் காதல், வேகம் மற்றும் திகைப்பும் இருந்தது. (1915)

கீன்ஸ்டன் ஸ்டூடியோவில் தனது காலத்தின் போது முதலில் சார்லி சப்ளினை சந்தித்து அவருடன் வேலை செய்த ஸ்வைன் 1920களில் சப்ளினின் பல படங்களில் தோன்றியுள்ளார். சப்ளினின் சிறந்த படைப்பான த கோல் ரஷ் (1925) திரைப்படத்தில் (The Gold Rush) பொன் மற்றும் கனிப்பொருட்கள் இடத்தை அறியும் ஆய்வாளர் பிக் ஜிம் மெக்கே என்ற பாத்திரத்தில் ஸ்வைன் நடிக்கின்றார். அதில் உறைபனியின் போது சப்ளினின் (Little Tramp) உடன் சிறு குடிசையில் அநாதரவற்றவராக தன்னை அவர் காண்கின்றார். குடிலில் உணவு இல்லாத நிலையில், பட்டினி கிடக்கும் இரு ஆய்வாளர்களும் லிடில் றம்பின் சப்பாத்துக்களில் ஒன்றை சாப்பிடுகின்றனர். திரைப்பட வரலாற்றில் மிக மிக புகழ்பெற்ற காட்சிகளில் ஒன்றாக அந்தக் காட்சி ஆனது. சம்பள நாள் (Pay Day -1922), சோம்பல் வர்க்கம் (The Idle Class -1921), யாத்திரை (The Pilgrim- 1923) போன்ற குறிப்பிடத்தக்க சப்ளினின் குறும் படங்களிலும் ஸ்வைன் தோன்றியிருக்கின்றார். 1935ல் மரணமடையும் வரை ஸ்வைன் நடிப்பைத் தொடர்ந்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்க விசுவாசி நிகரகுவாவில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்

ஜோசே சன்டோஸ் ஸிலாயாவின் நிகரகுவா அரசாங்கத்துக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஜௌன் ஜோசே எஸ்றடா 1910 ஆகஸ்ட் 29 அன்று மனாகுவாவில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஸிலாயாவின் (ஜனாதிபதி 1893-1909) தேசியவாத சீர்திருத்தங்கள் மற்றும் சுயாதீன இராஜதந்திர முயற்சிகளின் காரணமாக அவரை அகற்ற வாஷிங்டன் இலக்கு வைத்தது. மொஸ்கிடோ கோஸ்ட்டில் இருந்து பிரிட்டிஷ்ஸை வெளியேற நெருக்கிய ஸிலாயா, ஹொன்டுரான்சில் அமெரிக்க-சார்பு அரசாங்கத்துக்கு எதிராக இராணுவ ரீதியில் தலையிட்டார். மத்திய அமெரிக்க ஐக்கிய அரசுகளை மீண்டும் ஸ்தாபிப்பதையும் தடுத்த அவர், அமெரிக்க கட்டுப்பாட்டிலான பனாமா கால்வாய்க்கு எதிராக, லேக் மனகுவா ஊடாக பசுபிக் பெருங்கடலுக்கு கரிபியன் கடலை இணைக்கும் ஒரு வாய்க்காலைக் கட்டுவது பற்றி ஜேர்மனி மற்றும் ஜப்பானுடன் கலந்துரையாடினார்.

1909 டிசம்பரில் நிகரகுவா, புளூபீல்ட்ஸில் கடற்படையினர் வந்திறங்கியதோடு, யுனைடட் புருட் கம்பனி உட்பட அமெரிக்க கூட்டுத்தாபன நலன்களும், எஸ்றடாவின் நடவடிக்கைக்கு நிதியளிக்க உதவின. ஸிலாயா சில நாட்களின் பின்னர் ஸ்பெயினுக்கு பறந்ததோடு, ஆகஸ்ட்டில் தேசியவாத அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. ஏறத்தாள 1932 வரை தொடர்ச்சியாக நிகரகுவாவில் தங்கியிருந்த அமெரிக்க கடற்படையினர், பின்னர் அனஸ்டாசியோ சொமோஸா சர்வாதிகாரத்தின் பிடியில் நாட்டை விட்டுச் சென்றன.