World Socialist Web Site www.wsws.org |
This week in history: August 16-August 22வரலாற்றில் இந்த வாரம்: ஆகஸ்ட் 16 ஆகஸ்ட் 2216 August 2010வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டு பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர்: இஸ்ரேல் இரு பாலஸ்தீனர்கள் அடித்துக் கொல்லப்பட்டதை மூடி மறைத்தது 1985 ஆகஸ்ட் 8 அன்று, இரு பாலஸ்தீன இளைஞர்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து பிரிகேடியர் ஜெனரல் இட்ஸக் மொர்டெசய், இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டார். 1984 ஏப்பிரல் 12ல், இவர்கள் கடத்திச் சென்ற பஸ் டெல் அவிவ்வின் தெற்கில் நிறுத்தப்பட்டு விட்டுக்கொடுப்பற்ற நிலை மிகவும் பிரசித்திபெற்றதை அடுத்து, இந்த இருவரும் இஸ்ரேல் சிப்பாய்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் சாகும் வரை அடித்து உதைக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கையில் ஏனைய இரு கடத்தல்காரர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த நடவடிக்கை ஒரு இஸ்ரேல் சிப்பாய் மற்றும் பொது மகனும் உயிரிழந்ததன் விளைவாக வெடித்தது. கடத்தல்களுக்கு எதிராக மேலும் முன்னெடுத்த எதிர்த் தாக்குதல்களில், கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் குடும்பம் மற்றும் உறவினர்களின் வீடுகளையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அழித்தனர். உயிருடன் இருந்த கடத்தல்காரர்களை கைது செய்த போது, பாதுகாப்பு அமைச்சர் மொஷே அரேன்ஸ், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி மொஷே லெவி, உள்நாட்டு பாதுகாப்புத் தலைவர் அவரஹம் ஷலோம் ஆகியோரும் இருந்தனர். ஷலோமின் கட்டளையின் பேரிலேயே மோசமாக தாக்கப்பட்ட கைதிகளின் மண்டையை நசுக்கியதாக ஒரு பாதுகாப்பு முகவர் பெருமையாக உறுதிப்படுத்தினார். பின்னர் இந்தப் படுகொலைகளை பிரதமர் இட்ஸக் ஷாமிர் அங்கீகரித்ததாக ஷலோம் சுட்டிக் காட்டினார். ஷாமிரை பிரதமராக்குவதில் வெற்றிகண்ட ஷிமொன் பெரெஸ், ஷலோமை சம்பந்தப்படுத்திக் காட்ட முன்வந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதன் மூலம் இந்தக் கொலைகளை மூடி மறைத்தார். இருவரும் "ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்" என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்த போதே இந்தக் கொடூரக் கொலைகளை மூடி மறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ஆயினும், இந்த இருவரும் கைவிலங்கிடப்பட்டு இழுத்து செல்லப்பட்டும் மற்றும் அச்சமயம் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் புகைப்படங்கள் ஹடாஷொட் என்ற செய்திப் பத்திரிகை வைத்திருந்ததை அடுத்து இது பொய்யென நிரூபிக்கப்பட்டது. இந்தப் புகைப்படங்கள் வெளியாவதை இஸ்ரேல் தணிக்கை செய்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர்: லுமும்பாவை "வெளியேற்றுமாறு" ஈசன்ஹொவர் கட்டளையிட்டார் புதிதாக சுதந்திரம் பெற்ற கொங்கோ குடியரசில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் பற்றீஸ் லுமும்பாவை "வெளியேற்றவேண்டும்", எனவே கொங்கோ "இன்னுமொரு கியூபா" ஆகாது என, ஆகஸ்ட் 18 கூடிய தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ட்வைட் ஈசென்ஹொவர், மத்திய புலனாய்வு முகவரமைப்பின் (சீ.ஐ.ஏ.) தலைவர் அலென் டலஸ்சுக்குத் தெரிவித்தார். இந்த தகவல் 2001 வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. இது அந்தக் கூட்டத்தில் குறிப்பெடுத்த ரொபேர்ட் ஜோன்சனால் அமெரிகக் செனட் கமிட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. 1975ல் கிறிஸ்தவ தேவாலய குழுவொன்றுக்கு கொடுத்த இரகசிய வாக்குமூலத்தில், "அங்கு சுமார் 15 வினாடிகள் திடீர் அமைதி நிலவியதோடு, பின்னர் கூட்டம் தொடர்ந்தும் நடந்தது" என ஜோன்சன் மீண்டும் நினைவு கூர்ந்தார். முதலில் லுமும்பாவுக்கு நஞ்சுவைக்கும் முயற்சியுடன் ஈசென்ஹொவரின் கட்டளையை சி.ஐ.ஏ. பின்பற்றியது. பழைய காலனித்துவ ஆசானான பெல்ஜியத்தின் தலைநகரிலும் படுகொலைத் திட்டங்கள் தீட்டப்பட்டன. 1960 ஜூன் கடைப்பகுதியில் நடந்த தேர்தலில் தேசியவாதி லுமும்பா வென்றதை அடுத்து, வாஷிங்டனும் பிரஸல்சும் உடனடியாக அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்து கவிழ்க்க முயற்சித்தன. உடனடியாக இராணுவம் கலகம் செய்ததோடு, கணிப்பொருள் நிறைந்த கட்டன்கா மாகாணம் பிரிந்து சென்றது. லுமும்பா சோவியத் யூனியனின் உதவிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் இதற்கு பிரதிபலித்தார். (பார்க்க: "பற்றீஸ் லுமும்பாவின் அமைதிகுலைந்த மரணம்") 75 ஆண்டுகளுக்கு முன்னர்: கோமின்டனின் தலைவராக திமித்ரோவ் தேர்வுசெய்யப்பட்டார் 1935 ஆகஸ்ட் 21 அன்று, ஸ்டாலினிச கட்டுப்பாட்டிலான அமைப்பான கோமின்டனின் ஏழாவது காங்கிரஸில் பொதுச் செயலாளராக ஜோர்ஜி திமித்ரோவ் (1882-1949) தேர்வு செய்யப்பட்டார். பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான திமித்ரோவ், 1921ல் இருந்து கோமின்டனின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராவார். ரிச்ஸ்டக்குக்கு தீமூட்டியதாக பல கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீது நாஸிகள் குற்றஞ்சாட்டி சோடிக்கப்பட்ட இழிபுகழ்பெற்ற லீப்ஸிக் வழக்கில் திமித்ரோவ் 1933ல் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றார். இந்த விசாரணை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததோடு இறுதியாக திமித்ரோவ் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார். திமித்ரோவ் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பிரதிநிதிகள் முன்னிலையில் ஆற்றிய உரையில் மக்கள் முன்னணி என்ற ஸ்டாலினிச கொள்கையை வரைந்தார். பாசிசத்துக்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயகத்தை காக்க என்று கூறிக்கொண்டு, முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டுக்களை அமைத்துக்கொள்ளுமாறு ஐரோப்பாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்தக் கொள்கை அழைப்பு விடுத்தது. ஆனால் உண்மையிலேயே முதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன புரட்சிகர போராட்டத்தையும் நசுக்குவதற்கே இது அழைப்புவிடுத்தது. ஸ்டாலினிச அலுவலர்களின் உள்வட்டாரத்தின் ஒரு பாகமாக இருந்த திமித்ரோவ், மார்க்ஸியத்துக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக கோமின்டன் பெரும் காட்டிக்கொடுப்புக்களை செய்த காலத்திலும் அதன் தலைவராக இருந்தார். 1936-38ல் மாபெரும் வெளியேற்றம் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான இடையறாத தாக்குதல்களும் இந்தக் காட்டிக்கொடுப்புக்களில் அடங்கும். "புகழ் பெற்ற திமித்ரோவ், ஒரு குவலை பியருக்கு கடைக்குச் செல்பவர் என்ற வகையில் அறியாத மற்றும் சாதாரண மனிதனாக இருக்கின்றார்" என ட்ரொட்ஸ்கி 1937ல் அவரைப்பற்றி எழுதினார். 100 ஆண்டுகளுக்கு முன்னர்: கொரியாவை இணைத்துக்கொள்வதை ஜப்பான் நிறைவு செய்தது 1910 ஆகஸ்ட் 22 அன்று, கொரியா முழுவதையும் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொண்டு கொரியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அனைத்தினதும் கட்டுப்பாட்டை கைப்பற்றிய ஜப்பான், குடாநாட்டின் ஏக உரிமை கொண்டாடுபவராக ஜப்பான் இராஜ்ஜியம் பிரகடனம் செய்தது. ஜப்பானில் மெய்ஜி புதுப்பித்தலுடன் தொடங்கிய கொரியாவுக்கு எதிரான டோக்கியோவின் நான்கு தசாப்தகால சூழ்ச்சித் திட்டங்களின் உச்சகட்டமாக இது இருந்தது. 19ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில், கொரியா மீதான சீன நிலவுரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்த ஜப்பான், இறுதியாக 1894ல் முதல் சினோ-ஜப்பான் யுத்தத்தின் வெற்றியுடன் அதை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து 1904-1905 ரஷ்ய-ஜப்பான் யுத்தத்தில் ரஷ்யாவை ஜப்பான் வெற்றிகண்டது. இதன் விளைவாக கொரியாவின் பாதுகாவலனாக ஜப்பான் பிரகடனம் செய்யப்பட்டது. "கொரியாவில் சமாதானத்தையும் ஸ்திரநிலையையும் பேணுவதன் பேரில்" மற்றும் "வெளிநாட்டு குடிகளின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்த... மாட்சிமை மிக்க கொரிய பேரரசர், முழு கொரியாவினதும் சகல இறைமை உரிமைகளையும் மாட்சிமை மிக்க ஜப்பான் பேரரசுக்கு முழுமையாக மற்றும் நிரந்தரமாக விட்டுக்கொடுக்கின்றார்," என கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான "உடன்படிக்கை" கூறுகின்றது. கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் வளர்ச்சிகண்டு வந்ததன் முனைப்பு, அதை ஒரு பிராந்திய சக்தியாக ஸ்தாபித்ததோடு ஐக்கிய இராஜ்ஜியம், ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் பசுபிக்கில் இன்னொரு புதிய சக்தியான அமெரிக்கா உட்பட சீனாவில் செல்வாக்குக்குப் போராடிய பெரும் வல்லரசுகளுடன் ஜப்பானை மோதிக்கொள்ள வைத்தது. கொரிய இணைப்பு சில வாரங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட டஃவ்ட்-கட்ஸுரா உடன்படிக்கையில், பிலிப்பைன்ஸ் மீதான அமெரிக்க கட்டுப்பாட்டை டோக்கியோ அங்கீகரித்ததற்கு பிரதியுபகாரமாக கொரியா மீதான ஜப்பானிய ஆதிக்கத்தை அங்கீகரிக்க அமெரிக்கா உடன்பட்டது. |
|