World Socialist Web Site www.wsws.org |
Resolution of the Socialist Equality Party CongressOn the Seventieth Anniversary of the Assassination of Leon Trotskyசோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் தீர்மானம்லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட எழுபதாம் நினைவாண்டில் ...20 August 2010ஆகஸ்ட் 11-15, 2010இல் சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) அதன் வழக்கமான முதல் தேசிய மாநாட்டை மெச்சிகனிலுள்ள அன் ஆர்பரில் நடத்தியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அறிக்கைகளையும் எதிர்வரும் வாரங்களில் உலக சோசலிச வலைத் தளம் வெளியிடும். மாநாட்டின் முதல் நாள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமான, “லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட எழுபதாம் நினைவாண்டில்” என்பதிலிருந்து தொடங்குகிறோம். ஆகஸ்ட் 21, 1940இல், அக்டோபர் புரட்சியின் இணை-தலைவரும் நான்காம் அகிலத்தை நிறுவியவருமான லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்திலிருந்த ஸ்ராலினிச ஆட்சியின் ஓர் உளவாளியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய படுகொலையானது, 1917 அக்டோபர் புரட்சியை தலைமையேற்று நடத்திய மற்றும் உருவாக்கிய முதல் தொழிலாளர் அரசின் அடித்தளங்களை ஸ்தாபித்த சோசலிச தொழிலாளர்களின், புத்திஜீவிகளின் ஓர் ஒட்டுமொத்த தலைமுறைக்கும் எதிராக திருப்பிவிடப்பட்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் படுகொலைத் திட்டத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. ஸ்ராலினுடைய பயங்கரம் இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றங்களின் பட்டியலில் வருகிறது. அவருடைய மரணத்திற்கு எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், பொய்மை மற்றும் அவதூறின் ஒரு சளைக்காத பிரச்சாரத்தின் பொருளாக ட்ரொட்ஸ்கி இருக்கிறார். ட்ரொட்ஸ்கியின் புகழுக்குக் இகழ்ச்சியை உண்டுபண்ண, பிரபல பதிப்பக நிறுவனங்கள் தொகுதி தொகுதியாக புத்தகங்களை வெளியிட்டு வருகின்றன. மிக மோசமான கூலி எழுத்து வேலையை யாரால் உருவாக்க முடியும் என்று பார்க்க புத்திஜீவிகளின் அல்லது நியாயவாதிகளின் எதிர்ப்பு எதுவுமின்றி, கல்விக்கூடங்களின் போலி அறிஞர்கள் ஒருவரோடொருவர் போட்டிபோட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் இந்த அனைத்து பொய்களும், அவதூறுகளும் உலக வரலாற்றில் ட்ரொட்ஸ்கியால் பெறப்பட்டிருக்கும் அசாதாரணமான இடத்தை அழித்துவிட முடியாது. அவர் இன்றும் ஒரு தலைசிறந்த தலைவராகவே விளங்குகிறார். ட்ரொட்ஸ்கி எந்த கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும் தன்னைத்தானே அர்பணித்துக் கொண்டாரோ, இறுதியாக எதற்காக அவர் தன்னுடைய வாழ்வையே தியாகம் செய்தாரோ அந்த கருத்துக்கள் 1940லிருந்து ஒட்டுமொத்த வரலாற்று அபிவிருத்தியில் மெய்பிக்கப்பட்டிருக்கிறது. 1923இல், இடது எதிர்ப்பின் (Left Opposition) ஸ்தாபகத்துடன், வளர்ந்து வந்த சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிராகவும், அரசியல் அதிகாரத்தை அது விரோதமாக கைப்பற்றுதலுக்கு எதிராகவும் ட்ரொட்ஸ்கி போராட்டத்தை தொடங்கினார். தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச வேலைத்திட்டத்திற்கு எதிராக மார்க்சிச சர்வதேசியவாதத்தின் கொள்கைகளையும், மூலோபாயத்தையும் ஆதரித்து அவர் போராடினார். சோவியத்திற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் - இரண்டுக்குமே ஸ்ராலினிச கொள்கைகள் பேரழிவுமிக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ட்ரொட்ஸ்கி முன்கூட்டியே கணித்தார். 1917 அக்டோபர் புரட்சிக்கு அடித்தளமாக இருந்த உண்மையான போல்ஷிவிக் வேலைத்திட்டத்திற்கு மூன்றாம் அகிலத்தையும், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியையும் 1923 மற்றும் 1933க்கு இடையில், இடது எதிர்ப்பு (Left Opposition) திருப்ப விரும்பியது. ஆனால் ஸ்ராலினிசத்தின் பேரழிவுமிக்க கொள்கைகளால் உதவிபெற்றிருந்த பாசிசம் ஜேர்மனியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்க அழைப்புவிடுத்தார். ஓர் அரசியல் புரட்சியின் மூலமாக தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிச ஆட்சியை முற்றிலுமாக தூக்கி எறிந்தால் மட்டுமே, சோவியத் யூனியனை பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்று எச்சரித்தார். சோவியத் அதிகாரத்துவம் மீண்டும் முதலாளித்துவத்தை புனரமைப்பதற்கு தான் இட்டுச் செல்லும் என்றும் வலியுறுத்தினார். அவர் மிகச் சரியாகவே கணித்தார் என்பது நிரூபிக்கப்பட்டது. ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி முன்னிருத்திய போராட்டமானது, உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இந்த மூலோபாயத்தின் வரலாற்றுரீதியான மிக முக்கியத்துவமிக்க வெளிப்பாடாக, செப்டம்பர் 1938இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்தாபக மாநாட்டிற்காக அவர் எழுதிய திட்ட அறிக்கையில், நான்காம் அகிலத்திற்கு வெளியே “இந்த பெயருக்கு உண்மையாகவே புகழ் சேர்க்கும் எந்தவொரு புரட்சிகர அமைப்பும் இவ்வுலகில் இல்லை” என்று அறிவித்தார். பரந்த மக்களிடையே ஏதோவொரு வகையில் ஊசலாட்டத்துடனிருந்த அரசியல் அமைப்புகள், இயக்கங்கள் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர திட்டங்களை ஏற்காத ஓர் அறிக்கையாகவே அறிக்கையைக் கண்டன. அவற்றின் எண்ணிலடங்கா மத்தியவாத மற்றும் சந்தர்ப்பவாத போக்குகளை ட்ரொட்ஸ்கியின் அறிக்கை முற்றிலுமாக நிராகரித்தது. ஆனால், மீண்டும், ட்ரொட்ஸ்கி மெய்பித்துக் காட்டப்பட்டிருக்கிறார். சந்தர்ப்பவாதிகள் மிக அதிகமாக ஏற்று கொள்ளும் அளவிற்கு, அந்த போக்குகளிலும் இயக்கங்களிலும் என்ன இருந்தது? 1953இல் ஸ்ராலினின் மரணத்திற்குப் பின்னர், பப்லோவும், மண்டேலும் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களும் கிரெம்ளினின் சுவருக்குள் மார்க்சிசத்தை புத்துப்பிக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக கண்டார்கள். ஸ்ராலினைத் தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரு புதிய சோசலிச புரட்சி அலைக்கான எழுச்சியை அளிப்பார்கள் என்ற கருத்துருவைச் சுற்றி, ஓர் ஒட்டுமொத்த தத்துவத்தை அவர்கள் உருவாக்கினார்கள். கிரெம்ளினிலிருந்து ஓர் அரசியல் தூதர் வருவார் என்று பப்லோவாதிகள், சோவியத் யூனியன் முடிவுக்கு வரும் வரை, காத்திருந்தார்கள். இறுதியாக, அவர்கள் (ஏர்னெஸ்ட் மண்டேல்) கோர்பசேவிடமும், (தாரிக் அலி) போரிஸ் எல்ட்சினிடமும் அவரைக் கண்டார்கள். ஆனால் இந்த “தூதர்கள்” சோசலிசத்தைக் கொண்டு வரவில்லை, மாறாக முதலாளித்துவ புனருத்தாரணமெனும் பேரழிவைத் தான் கொண்டு வந்தார்கள். பப்லோவாதிகளும், ஏனைய இடது புத்திஜீவிகளும்—அந்தந்த காலக்கட்டத்தில் குறைவாகவோ அல்லது அதிகளவிலோ—உலக அரங்கில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்த மாவோ, டிட்டோ, நாசர், பென் பெல்லா, காஸ்ட்ரோ, சான்டினிஸ்டா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் தலைமையிலான இயக்கங்களையும், இன்னும் எண்ணிலடங்கா தேசியவாத அமைப்புகளையும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான பிற மாற்றீடுகளாக கண்டார்கள். அவை அனைத்துமே அரசியல் இடுகாட்டிற்குள் அடக்கமாகிவிட்டன. அவைகள் எடுத்துக்காட்டிய ஒவ்வொரு விஷயத்திலும் வெறுமனே போதியளவிற்கு இல்லை என்பதோடு மட்டுமல்ல, அவை பெருந்திரளான மக்களின் புரட்சிகர போராட்டங்களை ஒடுக்குவதில் உலக முதலாளித்துவத்தின் உண்மையான கூட்டாளிகளாகவும் இருந்தன. 1970கள் மற்றும் 1980களில், நான்காம் அகில பாதுகாப்பு குறித்த விசாரணையிலும், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலைக்குக் காரணமான ஸ்ராலினிச சதியின் கொடூரத்தையும், நீண்டகாலம் மூடிமறைக்கப்பட்ட விஷயங்களையும் வெளிக்கொண்டு வருவதிலும் அது ஆற்றிய பங்களிப்பிற்காக சோசலிச சமத்துவ கட்சி பெருமைப்படுகிறது. ட்ரொட்ஸ்கியின் வாழ்வுக்கு எதிரான இந்த சதியில், அமெரிக்காவிலிருந்த சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (Socialist Workers Party) இருந்த ஸ்ராலினிச உளவாளிகளின் பங்களிப்பை அது எடுத்துக்காட்டியது குறிப்பிட்ட முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்த விசாரணையானது, அரசியல்ரீதியாக ஸ்ராலினிச அமைப்புகளுடன் சேர்ந்திருந்த பப்லோவாத அமைப்புகளிடமிருந்து வந்த கொந்தளிப்பான எதிர்ப்புகளுக்கிடையே நடாத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும், நான்காம் அகில பாதுகாப்பு விசாரணையின் போது தோற்றுவிக்கப்பட்ட ஆவணங்களும், மற்றும் அதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சியின் சிதைவும், அனைத்துலக குழுவின் பணிகளை மெய்பித்துக் காட்டியுள்ளன. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் நமது தோழர்களின் ஒத்துழைப்போடு, ட்ரொட்ஸ்கி எதற்காக போராடினாரோ அந்த தத்துவார்த்த கருத்துருக்கள் மற்றும் வேலைத்திட்ட கொள்கைகளை நீண்டகாலமாக பாதுகாத்து வருவதற்காக சோசலிச சமத்துவ கட்சியும் பெருமை கொள்கிறது. வரலாற்றைப் பொய்மைப்படுத்தும் பொய்களை மறுத்தும், அவற்றை வெளிப்படுத்தியும் அளிக்கப்பட்ட தோழர் டேவிட் நோர்த்தின் உரைகளையும், கட்டுரைகளையும் தொகுத்து, இந்த எழுபதாவது நினைவாண்டில், In Defense of Leon Trotsky என்ற தலைப்பில் எமது கட்சி பிரசுரிப்பதை நாங்கள் மிகவும் பொருத்தமானதாகக் கருதுகிறோம். முதலாளித்துவத்தால் ஆழ்ந்துவரும் நெருக்கடியானது, வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய எழுச்சிக்கு இட்டு செல்லும் நிலையில், உலக சோசலிசப் புரட்சியின் உயர்ந்த மூலோபாயவாதியான எல்.டி. ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களை தொழிலாளர்களின் மத்தியிலும், இளைஞர்களின் மத்தியிலும் அறிமுகப்படுத்த அதன் முயற்சிகளைத் தீவிரபடுத்த சோசலிச சமத்துவ கட்சி உறுதி ஏற்கிறது. |
|