World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military court convicts former army commander

இலங்கை இராணுவ நீதி மன்றம் முன்னாள் தளபதிக்கு குற்றத் தீர்ப்பளித்தது

By Sujeewa Amaranath
18 August 2010

Back to screen version

இலங்கை இராணுவ நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை, "கடமையில் இருக்கும் போது அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டதற்காக" குற்றத் தீர்ப்பளித்தது. அவரது இராணுவத் தரம், பதக்கங்கள், பட்டங்கள், ஓய்வூதியம் மற்றும் ஏனைய நன்மைகளும் பறிக்கப்படுவதோடு இராணுவத் துறையில் இருந்து ஓரங்கட்டி அவர் வைக்கப்படுவார்.

அடுத்த நாள், பாதுகாப்பு அமைச்சரும் முப்படைத் தளபதியுமான ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவும் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒப்புதல் அளித்தார். தீர்ப்பை நிராகரித்த பொன்சேகா, மேன் முறையீடு செய்வதாக குறிப்பிட்டார்.

இந்த நீதிமன்றத் தீர்மானம், ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷ இரண்டாவது முறையாக அதிகாரத்தை வென்று ஒரு சில நாட்களுக்குள் பொன்சேகா கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட அரசியல் தீர்மானமாகும். முன்னாள் இராணுவத் தளபதி சதிப் புரட்சி ஒன்றை திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், முன்னாள் இராணுவ அலுவலர்கள் உட்பட பல ஆதரவாளர்களுடன் பொன்சேகா கைது செய்யப்பட்டார். இருட்டடிப்பான அரசாங்கப் பிரச்சாரத்தில், இராஜபக்ஷவை சிறைவைக்கவும் அவரது சகோதரர்களை கொலை செய்யவும் பொன்சேகா சதி செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் ஆதாரங்கள் காட்ட வில்லை.

தனித் தனியாக நடந்த இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இரண்டில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னதாக பொன்சேகா பல வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அரசியலில் ஈடுபட்டதாகவும் மற்றும் இராணுவ தளபாட கொள்வனவில் மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் சிவில் நீதிமன்றத்திலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றார். இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை தன்னுடன் வைத்திருந்தமை, ஆயுத விற்பனையில் இலாபம் பெற்றமை மற்றும் "பொது மக்களை பீதிக்குள்ளாக்கும் கோபமூட்டும் வகையிலான பொய் கருத்துக்களை பரப்பியமை..." போன்றவை இந்தக் குற்றச்சாட்டில் அடங்குகின்றன. கடைசி குற்றச்சாட்டானது ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவுக்கு எதிராக, அவர் யுத்தக் குற்றங்கள் இழைத்ததாக குற்றஞ்சாட்டியமையுடன் சம்பந்தப்பட்டது.

கடந்த வார தீர்ப்பு, விபரங்கள் எதுவும் வெளியிடப்படாமல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம், "குற்றவாளி அரசியலில் ஈடுபட்டமை சம்பந்தமான மூன்று தனித்தனி குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரித்தது." இராணுவச் சட்டத்தின் 124வது பகுதியின் கீழ், "துரோகியாக/விசுவாசமற்றவராக" இருந்தமை மற்றும் 102வது பிரிவின் கீழ் "படைக்கு அல்லது ஏனைய கட்டளைகளுக்கு அடிபணியாமல் அலட்சியம் செய்வது" போன்ற குற்றச்சாட்டுக்கள் அவற்றில் அடங்கும்.

இந்த விசாரணைகள் மூடிய கதவுகளுக்குள் நடந்தன. இந்த வழக்கு நான்கு சாட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்னான்டோ, யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் செனவிரத்ன, முன்னாள் விமானப் போக்குவரத்து சேவைகள் ஆணையாளர் காமினி அபேரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஏ.டபிள்யு.ஜே.சி. டி சில்வா ஆகியோரே சாட்சிகளாவர். அவர்களில் இருவர், அதாவது இப்போது அரசாங்க அமைச்சராக இருக்கும் பெர்னான்டோவும் மற்றும் செனவிரத்னவும், யூ.என்.பி.யில் உறுப்புரிமை பெறுவதற்கு பொன்சேகா தங்களிடம் உதவி கோரியதாக கூறினார். அரசாங்க ஆதரவாளரான அபேரட்ன, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார்.

நீதிமன்றம் பக்கச் சார்பாக இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே பொன்சேகா குற்றஞ்சாட்டினார். இராணுவ நீதிபதிகளாக அமர்ந்திருந்த மூன்று அலுவலர்களில் இருவர், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது அவரால் கண்டிக்கப்பட்டவர்கள், மற்றும் மூன்றாமவர் தற்போதைய இராணுவத் தளபதியான இராஜபக்ஷவின் விசுவாசியாக கருதப்படும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உறவினராவார். இந்த எதிர்ப்புக்களை இராணுவ நீதிமன்றம் நிராகரித்ததோடு இராணுவ நீதிமன்றத்துக்கு எதிரான பொன்சேகாவின் மேன் முறையீட்டை சிவிலியன் நீதிமன்றமும் நிராகரித்தது.

பிரதிவாதியின் சட்டத்தரணிகள் கடைசி மூன்று நாள் விசாரணைக்கு சமூகமளிக்காமையின் மூலம், இந்த நீதிமன்ற நடவடிக்கையின் ஜனநாயக விரோத பண்பு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிவாதி சட்டத்தரணியான ரியென்ஸி அரசகுலரட்ன அசோசியேட்டட் பிரஸ்ஸுக்குத் தெரிவித்ததாவது: "அவர்கள் நான் இல்லாத நாட்களில் இராணுவ நீதிமன்றத்தை கூட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர். இது முறையான விசாரணையல்ல. இது நியாயத்தை முழுமையாக சிதைப்பதாகும்."

2005 நவம்பரில் இராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2006 நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளியதை அடுத்து பொன்சேகா இராஜபக்ஷவுடன் நெருக்கமாக செயற்பட்டார். புலிகளை அவர்களின் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றி, இராணுவ நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று காயப்படுத்திய கொடூரமான தாக்குதல்களுக்கு இராணுவத் தளபதி என்ற முறையில் பொன்சேகா பொறுப்பாளியாக இருந்தார். யுத்தத்தை முன்னெடுத்த மற்றும் நாட்டை கொண்டு நடத்திய இராஜபக்ஷவின் அரசியல்-இராணுவ சிறு குழுவில் இந்த ஜெனரலும் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தார்.

2009 மே மாதம் புலிகளின் தோல்வியின் பின்னர், விசேடமாக உருவாக்கப்பட்ட, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பெருமளவில் சம்பிரதாயபூர்வமான பதவியை கொடுத்து தன்னை ஜனாதிபதி ஓரங்கட்டி விட்டதாக வெளிப்படையாகவே மனக் கசப்படைந்திருந்த பொன்சேகா இராஜபக்ஷவிடம் இருந்து விலகினார். யுத்தத்தை முடித்ததன் அனைத்து நற்பேறுகளுக்கும் இராஜபக்ஷவே உரிமை கோருகின்றார் என உணர்ந்த, இராணுவ உயர்மட்டத் தட்டினரின் அதிருப்தியையே மிகவும் பரந்தளவில் பொன்சேகாவின் பகைமை பிரதிபலிக்கின்றது. நவம்பர் கடைப்பகுதியில், இராஜினாமா செய்துவிட்டு ஜனவரியில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவுக்கு எதிராகப் போட்டியிடப் போவதாக பொன்சேகா அறிவித்தார்.

யூ.என்.பி. மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய இரு பிரதான எதிர்க் கட்சிகளும் மற்றும் பெரும் வர்த்தகர்களில் கணிசமான பகுதியினரும் ஆதரித்த போதிலும் பொன்சேகா தேர்தலில் தோல்வி கண்டார். தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாத பொன்சேகா, தன்னை வெற்றியாளனாக அறிவிக்குமாறும் ஜனாதிபதியாக நியமிக்குமாறும் சட்டரீதியாக சவால் செய்தார். இராஜபக்ஷ எதிர்க் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஊடக விமர்சகர்கள் மீது பாய்ந்ததன் மூலம் இதற்கு பதிலிறுத்ததோடு, உச்சகட்டமாக தேர்தல் முடிந்து இரு வாரங்களின் பின்னர் பொன்சேகா கைது செய்யப்பட்டார். இராணுவக் கைதில் இருந்த போதும், ஜே.வி.பி. யால் அமைக்கப்பட்ட ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் ஏப்பிரலில் நடந்த பொதுத் தேர்தலில் இந்த முன்னாள் ஜெனரல் பாராளுமன்ற ஆசனம் ஒன்றை வென்றார்.

நிதானமாய்க் கூறினால், பொன்சேகா "கடமை உடையில் இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டார்" என்ற குற்றச்சாட்டு வஞ்சகம் மிக்கதாகும். கால் நூற்றாண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், ஒட்டு மொத்த இலங்கை இராணுவ உயர்மட்டத்தினரும் ஆழமாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளனர். பொன்சேகாவைப் பொறுத்தளவில், யூ.என்.பி. யில் இணைவதற்கான சாத்தியத்தை அவர் தனிப்பட்ட முறையில் முயற்சித்ததும் ஜனாதிபதி வேட்பாளராக ஆனதும் வழமைக்கு மாறான ஒன்று எனக் கூறுவது கடினம்.

யுத்தகாலம் பூராவும், பொன்சேகா பகிரங்க அரசியல் கருத்துக்களை மீண்டும் மீண்டும் பேசினார். 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை வெளிப்படையாக எதிர்த்த அவர், எதிர்க் கட்சி அரசியல்வாதிகளைத் தாக்கியதோடு, யுத்தத்தை நிறுத்துவதற்காக இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்த தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் அரசியல்வாதிகளை "அரசியல் கோமாளிகள்" என்று கூட வகைப்படுத்தியுள்ளார். இந்த கருத்துக்களை அரசாங்கம் ஆதரித்த காரணத்தால், பொன்சேகா "அரசியலில் ஈடுபட்டதற்காக" கண்டிக்கப்படுவார் என்ற கருத்துக்கே இடமிருக்கவில்லை. புலிகளின் தோல்வியை அடுத்து, "ஒரு உயர்ந்த யுத்த வீரன்" என ஜெனரலை ஜனாதிபதி இராஜபக்ஷ பாராட்டினார்.

இராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் அடுத்து வந்த கசப்பான பகைமை பரந்த விவகாரங்களுடன் பிணைந்துள்ளது. புலிகள் தோல்வியை நெருங்கிய நிலையில், கணிசமான சீன இராணுவ மற்றும் நிதி உதவியின் விளைவாக கொழும்பில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவது பற்றி அமெரிக்கா மேலும் மேலும் கவலைகொண்டது. ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டமை சம்பந்தப்பட்ட இராணுவ அட்டூழியங்கள் பற்றி ஆதாரங்கள் குவந்துவந்த நிலையில், இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா, அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக யுத்தக் குற்ற விசாரணைகள் குறித்த அச்சுறுத்தலை சிடுமூஞ்சித்தனமாக பயன்படுத்திக்கொண்டது.

இராணுவம் எந்தவொரு பொதுமகனையும் கொல்லவில்லை என முழுமையாக நிராகரித்த இராஜபக்ஷ, யுத்தத்தின் கடைசி மாதங்கள் பற்றிய எந்தவொரு சர்வதேச விசாரணையையும் கடுமையாக எதிர்த்தார். கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாத முற்பகுதிக்கிடையில் குறைந்தபட்சம் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000 மற்றும் 75,000 க்கும் இடைப்பட்டது என மிக உயர்ந்த எண்ணிக்கையை காட்டிய ஒரு சர்வதேச நெருக்கடி குழுவின் அறிக்கை, புலிகளின் பிராந்தியத்துக்குள் இருந்த ஆஸ்பத்திரிகள் மற்றும் நிவாரண நிலையங்களை இராணுவம் வேண்டுமென்றே இலக்குவைத்ததாக குற்றஞ்சாட்டியது.

இத்தகைய குற்றங்களில் அந்தரங்கமாக சம்பந்தப்பட்டுள்ள பொன்சேகா, சர்வதேச யுத்தக் குற்ற விசாரணையொன்றுக்கு சாட்சியாக இருக்க விரும்புவதாக பகிரங்கமாக அறிவித்ததன் மூலம் வாஷங்டனுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். குற்றத்தை அரசாங்கத்தின் மீது சுமத்த பொன்சேகா சமிக்ஞை செய்தமை இராஜபக்ஷவுக்கு மிகவும் எச்சரிக்கையானதாக இருந்தது. இராணுவம் யுத்தக் குற்றங்களை இழைக்கவில்லை, ஆனால், வெளியில் இருந்து வந்த சட்ட விரோத கட்டளைகள் அத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பானவையாக இருக்காலாம் என அவர் தெரிவித்தார்.

எஸ். புலித்தேவன் மற்றும் பா. நடேசன் போன்ற புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் சரணடைய வரும்போது, அவர்கள் வெள்ளைக் கொடியை கையில் ஏடுத்து வந்த போதும் கூட, பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ அவர்களை சுடுவதற்கு கட்டளையிட்டதற்கான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் அறிவித்தார். இந்த சம்பவத்தை 2009 மேயில் பிரிட்டிஷ் செய்திப் பத்திரிகைகள் ஏற்கனவே வெளியிட்டிருந்தன. கோபாவேசமான கண்டனங்களுடன் பொன்சேகாவின் அறிக்கைகளுக்கு எதிர்ச்செயலாற்றிய இராஜபக்ஷ சகோதரர்கள், அரச இரகசியங்களைக் காட்டிக்கொடுப்பதாக அவர் மீது குற்றஞ்சாட்டினார்கள். தன்னை தவறாக மேற்கோள் காட்டிவிட்டதாக பொன்சேகா அறிவித்த போதிலும், அரசாங்கம் வெள்ளைக் கொடி சம்பவம் என சொல்லப்படுவதை தொடர்ந்தும் பயன்படுத்தியது.

பொன்சேகாவை மௌனிக்கச் செய்யும் ஜனாதிபதி இராஜபக்ஷவின் உறுதிப்பாடு, யுத்தக் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதை இலக்காக கொண்டிருப்பது நிச்சயம். எவ்வாறெனினும், பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கப்பட்டமை, அரசியல் எதிர்ப்புக்கள் மற்றும் விமர்சனங்களின் மட்டுப்பாடுகளை கணக்கில் எடுக்காமல் அவற்றை அடக்குவதற்கான அரசாங்கத்தின் பரந்த முயற்சிகளின் பாகமாகும். இராஜபக்ஷவும் அவரது கூட்டணியும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் இலகுவாக வென்றிருந்த போதிலும், சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவருகின்றது.

பொன்சேகாவுக்கு தீர்ப்பளித்ததை யூ.என்.பி. யும் ஜே.வி.பி. யும் கண்டனம் செய்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியும் காலியில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸ் வன்முறையால் தகர்த்தது. 2,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை மற்றும் பொல்லுகளைப் பிரயோகித்தனர். தாக்குதல் பற்றி முறைப்பாடு செய்ய முயற்சித்த போது விஜித ஹேரத், அஜித் குமார ஆகிய ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களை பொலிசார் கைது செய்தனர். ஹேரத்தும் குமாரவும் திங்களன்று விடுவிக்கப்பட்ட போதிலும், ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஏனைய 16 பேர் ஆகஸ்ட் 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தைப் போல் எதிர்க் கட்சியும், சிங்கள இனவாதத்தில் மூழ்கியுள்ளது. பொன்சேகா ஒரு "யுத்த வீரர்" என்ற அடிப்படையிலேயே அவர்கள் அவரைப் பாதுகாக்கின்றனர். இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல், இனவாத யுத்தத்தை முன்னெடுத்தமைக்கும் இராணுவத்தின் குற்றங்களுக்கும் பொன்சேகா நேரடிப் பொறுப்பாளி ஆவார். எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தலின் போது, நாட்டின் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிப்பர் என்பதை பொன்சேகாவும் எதிர்க் கட்சிகளும் தெளிவுபடுத்திவிட்டன.

பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை எவ்வாறாயினும், அது தொழிலாள வர்க்கத்துக்கு கடுமையான எச்சரிக்கையாகும். நாட்டின் முன்னாள் உயர்மட்ட ஜெனரலை கைது செய்து, சிறைவைத்து சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்க முடியும் என்றால், அரசாங்கம் தனது சந்தை சார்பு பொருளாதார கொள்கைகளுக்கு உழைக்கும் மக்கள் மத்தியில் இருந்து எழும் எதிர்ப்பை நசுக்க மேலும் கொடூரமான, ஜனநாயக விரோத வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்காது.