WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
: பாகிஸ்தான்
அழிவு மோசமடைகின்ற நிலையில் பாகிஸ்தான் வெள்ளத்தால் 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
By Vilani Peiris
17 August 2010
Use
this version to print | Send
feedback
பாகிஸ்தானில் வெள்ள அழிவு, அண்மைய அரசாங்க மதிப்பீட்டின் படி, 20 மில்லியன் மக்களை அல்லது ஜனத்தொகையில் 12 வீதமானவர்களை பாதித்துள்ள நிலையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. ஞாயிற்றுக் கிழமை நாட்டுக்குள் விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ-மூன், தன் கண்ட அழிவுகளிலேயே மிகவும் மோசமானது என இதனை விவரித்திருந்தார். "கடந்த காலத்தில் உலகம் பூராவும் பல இயற்கை அழிவுகளை நான் கண்டுள்ள போதிலும், இது போன்றதைக் காணவில்லை," என அவர் தெரிவித்தார்.
"ஆயிரக்கணக்கான நகரங்களும் கிராமங்களும் சாதாரணமாக கழுவிச் சென்றுள்ளன. வீதிகள், கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பயிர்களுமாக மில்லியன் கணக்கான ஜீவனோபாயம் இழக்கப்பட்டுள்ளது. மக்களைச் சூழ வெள்ள நீர் நிறைந்துள்ள நிலையில் அவர்கள் சிறிய தீவுகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் அசுத்தமான நீரையே பருகுகின்றனர். அவர்கள் தமது வீடுகளின் இடிபாடுகள் மற்றும் சேற்றில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பலர் குடும்பங்களையும் நண்பர்களையும் இழந்துள்ளனர். இந்த நிலைமையில் தமது பிள்ளைகளும் உறவினர்களும் உயிருடன் இருக்கமாட்டார்கள் என அநேகமானவர்கள் பீதியடைந்துள்ளனர்," என பான் கூறினார்.
துன்பமான முறையில் பாகிஸ்தானை சென்றடைந்துள்ள சர்வதேச உதவிகளின் எண்ணிக்கை மிகவும் போதாததாக உள்ளது. ஐ.நா விடுத்த 460 மில்லியன் அமெரிக்க டொலருக்கான அவசர நிதி வேண்டுகோளில் சுமார் கால் பகுதியையே அது பெற்றுள்ளது. பிரிட்டிஷ் பிரதி பிரதமர் நிக் கிளெக் இந்த பிரதிபலிப்பை "முற்றிலும் அற்பமானது" என வகைப்படுத்திய போதிலும், அவரது அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட நிதியைக் கொடுத்ததையும் நியாயப்படுத்தினார். கடந்த வாரக் கடைசியில், அமெரிக்காவும் பிரிட்டனும் முறையே 22 மில்லியன் டொலர்கள் மற்றும் 27 மில்லியன் டொலர்கள் அவசர நிதி உதவியை அறிவித்தன. ஏனைய ஜி 20 நாடுகள் அதற்கு மிகவும் கீழேயே நின்றுகொண்டன. ஆஸ்திரேலேயா 9 மில்லயின் டொலர்; கனடா 2 மில்லியன் டொலர்; சீனா 1.5 மில்லியன் டொலர்; பிரான்ஸ் 1.4 மில்லியன் டொலர்; ஜேர்மனி 2.4 மில்லியன் டொலர்; இத்தாலி 1.8 மில்லியன் டொலர்; மற்றும் ஜப்பான் 230,000 டொலர்களையே வழங்கின.
"இந்த அழிவு இப்போதைக்கு நிற்கப் போவதில்லை. இன்னமும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. இன்னும் பல வாரங்களுக்கு தொடரக் கூடும்" என பான் நிருபர்களுக்குத் தெரிவித்தார்: சிந்து மாகாணத்தில் சிந்து நிதியின் இரு நீர் மறிப்புக்களின் நீர் மட்டம் "இயல்புக்கு மாறாக உயர்வாக" இருந்ததாக கடந்த வாரக் கடைசியில் அரசாங்கத்தின் வெள்ள அறிவிப்புப பிரிவு தெரிவித்தது. ஜகோபதாத், சுக்குர், லர்கனா மற்றும் ஹைதராபாத் போன்ற தாழ் நிலப் பகுதிக்கு வெள்ள நீர் வழிந்தோடுவதாகத் தெரிகின்றது.
300,000 ஜகோபாபாத் ஜனத்தொகையில் முக்கால் பகுதியினர் ஏற்கனவே உலர் நிலப் பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டனர். சிம் கால்வாய் பெருக்கெடுத்ததை அடுத்து அயலில் உள்ள பலுஜிஸ்தானின் ஜஃப்ராபாத் மாவட்டம் ஏற்கனவே நீரில் மூழ்கியுள்ளது. "ஐந்து அடி ஆழத்துக்கு வெள்ள நீர் முழு மாவட்டத்தையும் மூடியுள்ள நிலையில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுமாக இலட்சக்கணக்கானவர்கள் தமது வீடுகளின் கூரைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்" என பாகிஸ்தானை தளமாகக் கொண்ட நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தால் சுமார் 1,600 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், இன்னமும் நாட்டின் பல பிரதேசங்களை சென்றடைய முடியாத நிலையில் உண்மையான எண்ணிக்கை அறிய முடியாது. நோய் மற்றும் பட்டினியால் பெருந்தொகையான உயிரிழப்புக்கள் நிகழக் கூடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
"3.5. மில்லியன் வரையான சிறுவர்கள், வயிற்றோட்டம் மற்றும் வயிற்று உளைச்சல் போன்ற தண்ணீரால் தோன்றும் கொடூரமான நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ஐ.நா. பேச்சாளர் மௌரிஸியோ கியுலியானோ நிருபர்களுக்குத் தெரிவித்தார். ஏற்கனவே 36,000 பேர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 6 மில்லியன் மக்கள் ஆபத்தில் இருப்பதாக மதிப்பிட்டார். "அவசரமாக துப்புரவான குடி தண்ணீருக்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் இரண்டாவது முறையாக அலை அலையாக சாவை எதிர்நோக்க வேண்டி வரும்" என கியுலியானோ எச்சரித்தார்.
மருத்துவ ஊழியர்கள், காலரா நோய் பரவும் ஆபத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளனர். அது நீர் வயிற்றுப் போக்கிற்கு சமமான அறிகுறியைக் கொண்டிருந்தாலும் வேகமாக தொற்றும் தன்மையுள்ளது. சரியாக சிகிச்சை அளிக்காவிட்டால் காலரா கடுமையான ஈரப்போக்குக்கும் உயிரிழப்புக்கும் வழிவகுக்கும். வடக்கு ஸ்வாட் பள்ளத்தாக்கின் பிரதான நகரமான மிங்கோராவில் ஏற்கனவே காலரா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தொண்டு ஊழியர்கள் நீர் வயிற்றுப் போக்குக்கு சிகிச்சை அளிக்கின்றனர், அது காலராவானால் சாவு விளைவிக்கும் தொற்று நோயை கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள் என கியுலியானோ தெரிவித்தார்.
இராணுவம் உட்பட பாகிஸ்தானின் அவசர சேவைகள், வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் ஏற்கனவே வரம்பை எட்டிவிட்டன. உணவு ஹெலிகொப்டர் மற்றும் விமானங்களின் மூலம் போடப்படுவதோடு அது போதுமானதாக அல்லது தேவையான அனைவரையும் சென்றடைந்ததா என்பதை உறுதிப்படுத்த திட்டங்கள் இல்லாத நிலையில், இந்த விநியோகங்கள் ஒழுங்கற்று நடக்கின்றன. வடக்கு கைபர் பக்டுன்குவா மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொஹிஸ்தான் மாவட்டத்தில் பட்டினியால் ஐந்து சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட டெயிலி நியூஸ் நேற்று அறிவித்துள்ளது.
வெள்ளம் விவசாயத்தில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக் கிழமை செய்தியாளர்களுடன் பேசிய உலக வங்கி தலைவர் ரொபட் ஸியோலிக், 1 பில்லியன் டொலர் பொறுமதியான பயிர்கள் அழிந்துள்ளதாக மதிப்பிட்டிருந்தார். பிரதானமாக அரிசி, சோளம், பருத்தி மற்றும் கரும்பு போன்ற சுமார் 700,000 ஹெட்டயர் பயிர்கள் நாசமாகியுள்ளதாக ஐ.நா. உணவு முகவரமைப்பு தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களில், 80 வீதமான பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளன. உணவு பற்றாக்குறை மற்றும் விலையேற்றத்தை போலவே, வெள்ள அழிவுகள் நாட்டின் திட்டமிடப்ப்ட்ட 4.5 வீத வளர்ச்சியை அரைவாசியாக குறைக்க கூடும் என பாகிஸ்தான் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க உதவி மற்றும் சர்வதேச உதவிகளின் பற்றாக்குறை, ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஆத்திரத்தை தூண்டிவிட்டுள்ளது. உதவிகள் மெதுவாக விநியோகிக்கப்படுவதற்கு எதிராக சுகுர் பிரதேசத்தில் நேற்று கற்களையும் குப்பைகளையும் போட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பிரதான அதிவேகப் பாதையை மூடினர். ஊடகங்கள் வந்த போதுதான் நிவாரணங்களை விநியோகிக்க அரசாங்க அலுவலர்கள் வந்தார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கலு மங்கியானி அசோசியேட்டட் பிரஸ்சுக்குத் தெரிவித்தார். "எங்களை நாய்களாக நினைத்துக் கொண்டு அவர்கள் உணவுப் பொட்டலங்களை வீசினார்கள்" என அவர் கூறினார்.
மொஹமட் லைக் என்ற இன்னொரு ஆர்ப்பாட்டக்காரர் பி.பி.சி. க்குத் தெரிவித்ததாவது: "வெள்ளம் வந்ததில் இருந்து இங்கு அரசாங்கத்தை காணவில்லை. நாம் எமது பிள்ளைகளை இழந்துவிட்டோம், எமது கால்நடைகளை இழந்துவிட்டோம். எங்களையே சிரம்மபட்டுத்தான காப்பாற்றிக்கொண்டோம். நாங்கள் இங்கு வந்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. அரசாங்கம் எங்கே? நாங்கள் என்ன செய்வது? எங்கே போவது?"
பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்கள் தொடர்பான பாகிஸ்தான் அரசாங்கத்தின் அலட்சியம், ஜனாதிபதி அஸிப் அலி ஸர்தாரி இந்த மாத முற்பகுதியில் ஐரோப்பாவிற்கான தனது பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்ததில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர் திரும்பிய பின்னர் ஆகஸ்ட் 12 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கலாம் என்ற பீதியினால், சுகுரி பிரதேசத்துக்கான அவரது பயணம், இறுக்கமான பாதுகாப்பின் கீழ் இடம்பெற்றது. அரசுக்குச் சொந்தமான ஊடகம் மட்டுமே செய்தி வெளியிட அனுமதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வாஷங்டனின் சார்பில் தனது அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தின் விளைவாக ஸர்தாரி ஏற்கனவே எதிர்ப்புக்கு முகங்கொடுக்கின்றார். கடந்த ஆண்டு ஏப்பிரலில் ஸ்வாட் பள்ளத்தாக்கு, தெற்கு வஸிரிஸ்தான் மற்றும் ஏனைய பிரதேசங்களில் கனமாக ஆயுதம் தரித்த துருப்புக்கள் முன்னெடுத்த தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயரத் தள்ளப்பட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளும் பரந்த சீற்றத்தை தூண்டிவிட்டுள்ளது.
பல ஆய்வாளர்கள், அரசாங்கத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலை வெளியிட்டுள்ளனர். பிரிட்டனின் சதம் ஹவுஸின் ஆய்வாளரான மாரி லால் கார்டியனுக்குத் தெரிவித்ததாவது: "உணவுக்கான வன்முறை உடனடி ஆபத்தாக உள்ளது. அரசாங்கத்தின் தாக்குதலின் போது மக்களை அப்புறப்படுத்த நேர்ந்த ஸ்வாட் மற்றும் கைபர் பக்டுன்குவா மாகாணங்களில் ஏற்கனவே பெரும் எதிர்ப்பு காணப்படுகின்றது. அரசாங்கத்தில் பொறிவு எற்படும் சமயத்தில் பல்வேறு கன்னைகள், குடும்பங்கள் மற்றும் இனக் குழுக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலையில் சமூக அமைதியின்மைக்கான அச்சுறுத்தல் உள்ளது."
மெக்கலச்சி செய்திப் பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்களில், பிரைடே டைம்ஸ் ஆசிரியர் நஜம் செத்தி தெரிவித்ததாவது: "தற்போதுள்ள அதிகாரங்களான, அதாவது இராணுவமும் அதிகாரத்துவ ஸ்தாபனமும், [ஸர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி] பி.பி.பி. உடன் அல்லது அது இல்லாமலேனும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது பற்றி யோசிக்கின்றன... இது நிச்சயமாக கலந்துரையாடப்படுகின்றது என்பது எனக்குத் தெரியும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு நல்ல அரசாங்கம் தேவை மற்றும் இங்கு நல்ல அரசாங்கம் இல்லை என்ற உணர்வு இராணுவத்துக்குள் இருக்கின்றது."
நேஷன் தெரிவித்ததாவது: "சாத்தியமான விதத்தில் இராணுவத்தின் தலையீட்டுடன் ஜனாதிபதி அஸிஃப் அலி ஸர்தாரி தூக்கிவீசப்படலாம் என்ற பீதி உள்ளது. இந்த பீதி, நீண்ட கால துன்பங்களுக்கு ஏதுவான நெருக்கடிகளை போதுமானளவு கையாள அரசாங்கம் தவறிமையினால் வளர்ச்சி கண்டதாகும்."
ஸர்தாரி அரசாங்கம் பற்றிய கவலை, வெள்ள அழிவுக்கு அமெரிக்காவின் பிரதிபலிப்புக்கு பின்னால் உள்ள ஒரு பிரதான காரணி என்பதில் சந்தேகம் இல்லை. 76 மில்லியன் டொலர் தருவதாக வாக்குறுதியளித்தது போலவே, 2,000 கடற்படையினரையும் டில்ட்-ரொட்டர் விமானம், போக்குவரத்து ஹெலிகொப்டர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல் படையணி பாகிஸ்தானை நோக்கி வந்துகொண்டிருப்பதாக வெள்ளிக் கிழமை பெண்டகன் அறிவித்தது. அமெரிக்க துருப்புக்களும் ஹெலிகொப்டர்களும், நுன்ணுணர்வான ஸ்வான் வெளி உட்பட்ட பிரதேசங்களில், ஏற்கனவே நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
எதிர்ப்புக்கள் வெடிக்கக் கூடும் என்ற பீதியில் அரசாங்கமும் இராணுவமும் முன்னர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அமெரிக்க இராணுவ இருப்பானது, பாகிஸ்தானுக்குள் நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பை பாகிஸ்தானில் அதிகளவிலானவர்கள் எதிர்ப்பதோடு பாகிஸ்தானுக்குள்ளேயே தம்சார்பான யுத்தத்தை விரிவுபடுத்துமாறு அமெரிக்கா கோருகின்றது. அமெரிக்க நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட, பாகிஸ்தான் பிராந்தியத்துக்குள் அமெரிக்க ஏவுகனைத் தாக்குதல்களுக்கு குறைவில்லை. ஞாயிற்றுக் கிழமை ஆளில்லா விமானம் ஒன்று தெற்கு வஸிரிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.
|