WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lanka: Mattakkuliya slum dwellers denounce police-military repression
இலங்கை: மட்டக்குளி குடிசைவாசிகள் பொலிஸ்-இராணுவ அடக்குமுறையை கண்டனம் செய்கின்றனர்
By our correspondents
19 July 2010
Back to
screen version
இலங்கை பொலிஸ், ஜூலை 4 அன்று கொழும்புக்கு வடக்கே ஒரு புறநகர் பகுதியான மட்டக்குளியில் பொலிசும் இராணுவமும் சேர்ந்து ஆயிரக்கணக்கான குடிசைவாசிகளை சுற்றிவளைத்தை அடுத்து 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்படவுள்ளவர்களில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேரும் அடங்குவர்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை சார்ந்த சட்டத்தரணிகளின் படி, இந்தக் குற்றச்சாட்டுக்களில் மூன்று பொலிஸ் கைத்துப்பாக்கிகளை திருடியது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது மற்றும் "சட்டவிரோத கூட்டமொன்றில்" பங்கெடுத்துக்கொண்டதும் அடங்கும். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படுபவர் 20 ஆண்டு சிறைத் தண்டனையையும் "சட்டவிரோத கூட்டம்" நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டிவரும்.
ஜூலை 3, எம். நிஷாந்த என்ற உள்ளூர் இளைஞனை பொலிசார் கொடூரமாக தாக்கி தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்தே மட்டக்குளியில் சமிட்புற குடியிருப்பாளர்களுக்கு எதிரான பொலிஸ்-இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டக்குளி பொலிஸ் நிலையத்துக்கு வெளியில் கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தபோது, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பிரதேசத்துக்குள் நூற்றுக்கணக்கான பொலிசையும் துருப்புக்களையும் அனுப்ப அந்த ஆர்ப்பாட்டத்தை பற்றிக்கொண்டனர்.
பெருந்தொகையான வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, வீடுகளில் இருந்தவர்கள் தாக்கப்பட்டதோடு அடுத்தநாள் சுமார் 8,000 மக்கள் துருப்புக்களால் சூழப்பட்டிருந்த ஒரு திறந்த மைதானத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டனர். முகமூடியணிந்திருந்த சிலர் 200க்கும் அதிகமானவர்களை காட்டிக்கொடுத்தனர். பின்னர் அவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
மட்டக்குளி சுற்றிவளைப்பானது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் புதிய கட்டத்தை குறிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தம் மற்றும் தீவில் பிரதானமாக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து, பொலிஸ்-அரச ஆட்சி தலைநீட்டுவதன் ஒரு வெளிப்பாடே இதுவாகும்.
இந்த மக்கள் கைதுகளும் குற்றச்சாட்டுக்களும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் முன்னெடுக்கப்படும் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அச்சுறுத்தி அடக்குவதை இலக்காகக் கொண்டதாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகள் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் வறியவர்களின் சகல பகுதியினர் மீதான கடுமையான சமூகத் தாக்குதல்களை அர்த்தப்படுத்துகிறது. சமிட்புற கொழும்பில் உள்ள மிக வறிய பிரதேசங்களில் ஒன்றும், சொத்து உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு இலாபகரமான நிலங்களை துப்புறவு செய்து கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் பாகமாகவும் உள்ளது. அரை மில்லியனுக்கும் மேற்பட்ட, அல்லது கொழும்பு ஜனத்தொகையில் அரைவாசிப்பேர், சமிட்புற போன்ற குடிசை பிதேசங்களிலேயே வாழ்கின்றனர்.
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் வெள்ளிக்கிழமை எம். நிஷாந்தவின் தாயார் ஏ. சிரியாவதி உடன் உரையாடினர். கொழும்பு வெலிக்கடை மகஸின் சிறையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரது மகனை 13ம் திகதி வரை பார்வையிட அனுமதிக்கவில்லை. பின்னர் 10 நிமிடத்துக்கும் குறைவான நேரமே அவரை பேசவிட்டனர்.
அவரது உடலில் தான் கண்ட அடையாளங்கள் அவரை மோசமாக அடித்துள்ளனர் என்பதை காட்டுகின்றன என சிரியாவதி எமது நிருபர்களுக்குத் தெரிவித்தார். "அவரால் உதவியின்றி நடக்க முடியவில்லை, அவரது ஒரு கை விரல்களில் தனித்தனியாக பென்டேஜ் சுற்றப்பட்டுள்ளன" என அவர் கூறினார். "அவரது முகம் வீங்கி கறுத்துள்ளது. நான் மேலும் கவலையடைவேன் என்பதால் நான் அவரைப் பார்க்க வருவதை அவர் விரும்பவில்லை." கடந்த ஆண்டு "ஒரு பக்கட் போதைப் பொருளுடன் அவரை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் போதைப் பொருள் இருந்திருக்கவில்லை". சோடிக்கப்பட்ட போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் அவர் ஆறுமாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என அவர் விளக்கினார்.
WSWS நிருபர்களுடன் பேசிய ஏனைய உள்ளூர்வாசிகள், நிஷாந்தவுக்கு எதிரான பொலிஸ் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததோடு பொலிசுக்கும் போதைப் பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் இரகசிய தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இந்த சமூக விரோத நடவடிக்கைகள் பற்றி முறைப்பாடு செய்யும் உள்ளூர்வாசிகளை பொலிசார் அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போதைப் பொருள் வைத்திருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குமாறு பொலிசார் அவரை பலவந்தப்படுத்த முயற்சித்ததாக நிஷாந்த கைதுசெய்யப்பட்டதை நேரடியாகப் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர் மறுத்த போது, அவரை அடித்து பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்.
பிரதான ஊடகங்கள், குறிப்பாக இரிதா திவயின என்ற சிங்கள வாரப் பத்திரிகை பக்கச் சார்பாக செய்தி வெளியிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டினர். "ஊடகங்கள் நாங்கள் சொன்னதை வெளியிடவில்லை. அவர்கள் பொலிஸ் சொன்னதை அல்லது அவர்களால் திரிபுபடுத்தப்பட்டதை வெளியிட்டனர்," என ஒரு பெண் WSWS க்குத் தெரிவித்தார். "நாங்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்த போது, நாங்கள் சொன்னதை வெளியிடாததற்காக டி.வி.யை தூக்கில் நிலத்தில் அடிக்குமளவுக்கு எனக்கு ஆத்திரம் வந்தது."
பொலிஸ் ஆத்திரமூட்டலை அம்பலப்படுத்திய WSWS மற்றும் ஏனைய சில ஊடகங்களை பாராட்டுவதாக உள்ளூர்வாசிகளும் நிஷாந்தவின் தாயாரும் தெரிவித்தனர். "நீங்கள் அம்பலப்படுத்தியதனால் தான் என்னால் எனது மகனை பார்க்க முடிந்தது என நான் நினைக்கின்றேன்," என சிரியாவதி தெரிவித்தார்.
14 வீடுகள் பொலிசாரால் சேதப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, சட்டத்தரணிகளின் படி குடியிருப்பாளர்களின் குற்றச்சாட்டை பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளை பதிவு செய்ய அனுமதிக்குமாறு கடந்த வராம் ஒரு நீதவான் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கட்டளையிட்ட போதிலும், பொலிசாரால் தண்டிக்கப்படுவோம் என்ற பீதியின் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் தயங்குகின்றனர்.
ஜூலை 4 கைது செய்யப்பட்ட 200க்கும் அதிகமானவர்களில் 176 பேரை பிணையில் விடுவிக்குமாறு ஜூலை 5ம் திகதியே நீதிமன்றம் உத்தரவிட்டது. பல அடையாள அணிவகுப்பின் பின்னர் ஜூலை 14 அன்று மேலும் 13 பேர் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்களும் 100,000 ரூபா (887 அமெரிக்க டொலர்) சரீரப் பிணையிலேயே விடுவிக்கப்பட்டனர். பொலிசாரின் படி, எஞ்சியுள்ள 22 பேர் குறைந்தபட்சம் ஜூலை 28 வரையாவது தடுத்து வைக்கப்படுவார்கள்.
பொலிசாரே வழக்கின் முறைப்பாட்டாளர்களாகவும் விசாரணையாளர்களாகவும் இருப்பதோடு அடையாள அணிவகுப்புக்காக சகல சந்தேக நபர்களும் பொலிசாராலேயே அடையாளங் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால், இந்த முழு நடவடிக்கைகளிலும் அடிப்படை சட்ட கொள்கைகள் மீறப்பட்டுள்ளன என சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பலரது உறவினர்களுடன் WSWS நிருபர்கள் பேசினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொஹமட் நாஸர், 22, சுரேஷ் குமார், 30, மற்றும் சாமிந்த குமாரும் பொலிஸ் தடுப்பில் உள்ளனர். குடிசைப் பகுதியில் வாழ்பவர்களுக்கு இந்தக் குடும்பம் ஒரு எடுத்துக் காட்டாகும். அன்றாட கூலிக்காக தேயிலை களஞ்சியம் ஒன்றில் வேலை செய்யும் நாஸர் ஏனைய நாட்களில் மீன் விற்பனை செய்கின்றார். சுரேஷ் கொழும்பு மீன் சந்தையில் ஒரு தொழிலாளியாவார். "எனது மகன்மார் மற்றும் மகளின் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. மகள் மத்திய கிழக்கில் வேலை செய்வதோடு நாஸரும் சுரேஷும் எங்களை பராமரிக்க வேலை செய்கின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் நாம் பெரும் சிரமத்தில் விழுந்துள்ளோம். அவர்கள் அப்பாவிகள்," என அவர்களது தாயார் தெரிவித்தார்.
ஜூலை 3 இரவு பொலிஸ் தனது வீட்டை சோதனையிட்ட போது தான் அதிர்ச்சியுற்றதாக சுரேஷின் சகோதரி கூறினார். கதவை உடைத்த பொலிசார் சுரேஷையும் நாஸரையும் இழுத்துச் சென்றதாக அவர் கூறினார். "அதை எதிர்த்த போது பொலிசார் எங்களை தூற்றினர். ஒரு அதிகாரி என் தலைக்கு நேரே கைத்துப்பாக்கியை காட்டி சுட்டுக்கொல்வதாக அச்சுறுத்தினார்."
"நான்கு நாட்களின் பின்னரே அவர்கள் [பொலிஸ்] எனது மகனை பார்க்க அனுமதித்தனர். நாங்கள் அவர்களைப் பார்க்கும் போது அவர்களால் நடக்க முடியவில்லை. சுரேஷின் உதடுகள் வீங்கியிருந்ததோடு நாஸரின் முகம் கறுத்திருந்தது," என சுரேஷின் தாய் கூறினார்.
நாஸர் மற்றும் சுரேஷின் பெற்றோர் முதலில் மத்திய கொழும்பில் பேர வாய்க்காலின் அருகில் வாழ்ந்த போதும், 1976ல் அணிசேரா நாடுகளின் மாநாடு நடந்த போது நகரை "சுத்தமாக்கிய" வேளை, அவர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு சமிட்புறவுக்கு அனுப்பப்பட்டனர். "நாங்கள் எங்கள் உறவினர் வீட்டில் வாழ்ந்தோம், அவர்களது வீடு பலகை மற்றும் தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட ஒரு குடிசை. அரசாங்கம் எங்களுக்கு ஒரு சிறிய சேற்று நிலத்தை தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை. எனது கணவர் ஒரு மெக்கானிக். நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டோம். ஆனால் அவர் இறந்த பின்னர் நிலைமை மோசமடைந்தது. பிள்ளைகள் பெரியவர்களான பின்னர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க நேர்ந்தது. இந்த வீட்டுக்கு 3,000 ரூபா வாடகை செலுத்த வேண்டும்.''
சுரேஷின் மருமகன் சமிந்தவும் ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்டார். "திருமண படத்தை நொருக்கிய பொலிசார் படங்களையும் எடுத்துச் சென்றனர். நான் அவரை பார்க்கும் போது அவரால் நடக்க முடியவில்லை" என அவரது தாயார் புஷ்பா ராணி WSWS க்குத் தெரிவித்தார். மறுநாள் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பொலிசார் ராணியின் 14 வயது மகன் கலும் குமாரவையும் அவரது மருமகனும் பெற்றோரை இழந்த ஆஸ்துமா நோயாளியுமான 18 வயது கசுனையும் கைது செய்தனர். ஜூலை 4 நடந்த சுற்றி வளைப்பின் போது முகமூடி அணிந்தவர்கள் அவர்களை காட்டிக்கொடுத்த பின்னரே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், பொலிசார் அவர்களது தலைகளை பலாத்காரமாக மொட்டை அடித்திருந்தனர். மேலும் பல இளைஞர்களதும் சிறுவர்களதும் தலைகள் மொட்டையடிக்கப்பட்டுள்ளன.
நிரந்தர வேலையற்ற தொழிலாளியான பிரதீப் ருவண் பெரேரா, 22, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது மகன் நண்பர்கள் வீட்டில் இருந்த போது ஜூலை 3 அன்று இரவு கைது செய்யப்பட்டதாக WSWS நிருபர்களிடம் அவரது தாய் விஜேஸ்வரி கூறினார். "அவர் சம்பவத்தில் தலையிட்டிருக்கவில்லை. பொலிசார் மக்களை தாக்கிய போது பயத்தில் ஓடிய அவர், தனது நண்பர் ஒருவரின் வீட்டில் ஒழிந்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டபோது கடுமையாகத் தாக்கப்பட்டார்."
தேயிலை தூள் களஞ்சியமொன்றில் கூலித் தொழிலாளியாக இருக்கும் விஜேஸ்வரி, 40, ஒரு விதவையாவார். சுவாசிப்பதில் பிரச்சினையை எதிர்நோக்கும் அவரால் கிழமைக்கு நான்கு நாட்களே வேலை செய்ய முடியும். 1,000 பொதிகளை பொதி செய்து 100 ரூபா பெறும் அவர், சுவாசிக்க கடினமாக இருப்பதால் அதிகம் பொதி செய்ய முடியவில்லை என தெரிவித்தார். "தேயிலை தூசியினாலேயே இந்த நிலை என தெரிவித்த வைத்தியர்கள் என்னை வேலைக்குச் செல்ல வேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் என்னால் முடியாது. எனக்கு வாழ வேறு வழியில்லை," என அவர் தெரிவித்தார்.
டி.ஏ. ரொமேஷ் சம்பத்தும் விளக்க மறியலில் உள்ளார். அவரது மனைவி இந்திகா WSWS க்குத் தெரிவித்ததாவது: "எமது முச்சக்கர வண்டியை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டு பார்த்த போதே [ஜூலை 3] சம்பத் கைது செய்யப்பட்டார். வாகனத்தை யார் உடைப்பது என அவர் கேட்டபோது, அவரை ஜீப் வண்டிக்குள் இழுத்துப் போட்டனர். அவருக்கு பிணை வழங்குவதையும் பொலிசார் எதிர்த்தனர்." அடுத்த நாள் மைதானத்தில் வைத்து இந்திகாவையும் கைது செய்ததோடு இரண்டு நாட்கள் சிறையில் அடைத்தனர்.
சமிட்புற குடியிருப்பாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடையாது. அவர்கள் இன்னமும் சிறிய பலகை வீடுகளிலேயே வாழ்கின்றனர். அங்கு ஒரு சிறிய மருந்தகம் இருந்தாலும், நோயாளர்கள் எந்தவொரு மருத்துவ சிகிச்சைக்கும் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கே பயணிக்க வேண்டும். அங்கு நூலகமோ, தொழிற்பயிற்சி நிலையங்களோ அல்லது இளைஞர்களுக்கு கலாச்சார நிகழ்வுகளோ கிடையாது. அநேகமானவர்கள் வேலையற்றவர்கள்.
அந்தப் பிரதேசத்தில் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபையும் கொழும்பு மாநகர சபையும் எதுவும் செய்திருக்கவில்லை. மாறாக, சொத்து உற்பத்தி செய்யும் முதலீட்டாளர்களுக்காக நிலங்களை விடுவிப்பதன் பேரில் ஏனைய கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பத்தாயிரக் கணக்கான குடும்பங்களோடு இவர்களும் அப்புறப்படுத்தப்படுவார்கள். இந்த அபிவிருத்தி திட்டங்கள் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெறுகின்றன.
உள்ளூர் மக்கள் அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை சீற்றத்துடன் கண்டனம் செய்தனர். "வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களை இராணுவத்தினரும் பொலிசாரும் எவ்வாறு நடத்தியிருப்பர் என்பதை இப்போது எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர்கள் [தமிழர்கள்] ஆயுதங்களை எடுத்தது ஏன் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாததாலேயே ஆகும்," என ஒரு பெண் கூறினார்.
இராஜபக்ஷ அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ்-அரச வழிமுறைகளை எதிர்க்குமாறும் சமிட்புற குடியிருப்பாளர்களை பாதுகாக்க உடனடியாக முன்வருமாறும் சகல தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வேண்டுகோள் விடுக்கின்றது. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் குடியிருப்பாளர்கள், வீடுகள் மற்றும் ஜீவனோபாயங்களுக்கு இழைக்கப்பட்ட சகல சேதங்களுக்கும் முழு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் சோ.ச.க. கோருகின்றது. இது அரசாங்கத்துக்கு எதிராகவும் மற்றும் இன பாகுபாடுகளுக்கு அப்பால் உழைக்கும் மக்கள் மத்தியில் வர்க்க ஐக்கியத்தை ஏற்படுத்தும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில், ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்கவும் ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் தேவையை வலியுறுத்துகிறது.
|