WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா
Canadian military detains Tamil asylum seekers
கனேடிய இராணுவம் தமிழ் புகலிடம் கோருவோரை தடுத்துவைத்துள்ளது
By Carl Bronski
16 August 2010
Back
to screen version
கனேடிய பாதுகாப்பு படைகள் கடந்த வியாழக் கிழமை ஆண், பெண் மற்றும் சிறுவர்களுமாக சுமார் 490 இலங்கை தமிழர்களை ஏற்றி வந்த எம்.வி. சன் சீ என்ற கப்பல், பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு தொலைவில் கனேடிய பிராந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தவுடன், அதனுள் ஏறி கப்பலைக் கைப்பற்றினர்.
கனேடிய ஆயுதப் படைகள் (சி.ஏ.எஃப்), ரோயல் கனேடிய காவல் பொலிஸ், கனடா கரையோர சேவை ஏஜன்சி ஆகியவை இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருந்ததோடு சி.ஏ.எஃப் உடைய ஏவுகனை வழிகாட்டி போர்க் கப்பலான எச்.எம்.சி.எஸ். வினிபெக் முன்னணி வகித்தது.
தாய்லாந்து கொடி பறக்கவிடப்பட்டிருந்த எம்.வி. சன் சீ சரக்குக் கப்பல், பின்னர் வன்கூவர் தீவில் உள்ள கனேடிய ஆயுதப் படையின் கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழ் அகதிகள் விசாரிக்கப்பட்டனர். நோய்வாய்பட்டவர்கள் அல்ல என தீர்மாணிக்கப்பட்டவர்கள், பொலிஸ் காவலின் கீழ், வன்கூவர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள இரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
இலங்கையின் வலதுசாரி சிங்களப் பேரினவாத அரசாங்கத்திடம் இருந்து தப்பி வெளியேறிய அகதிகள், கப்பலில் சரக்கு ஏற்றப்படும் பகுதியில் உள்ள இறுக்கமான அறைகளில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இந்திய மற்றும் பசுபிக் பெருங்கடல் ஊடாக பயணித்துள்ளனர். ஏற்கனவே கனடாவில் குடியிருக்கும் அகதிகளின் உறவினர்கள் அளித்த பேட்டிகளை மேற்கோள் காட்டிய ஊடக செய்திகள், இந்த புகலிடம் கோருவோர் கணடாவுக்குச் செல்ல ஒருவருக்கு 45,000 டொலர்கள் வீதத்தில் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கனடாவின் மேற்குக் கரைக்கு இந்த தமிழ் அகதிகளின் வருகையானது, கன்சவேர்டிவ் பிரதமர் ஸ்டெபென் ஹாபரின் அரசாங்கப் பிரதிநிதிகளின் தலைமையிலான, ஒரு சுற்று நச்சுத்தனமான குடியேற்ற விரோத உணர்வைத் தூண்டுவதற்கான நிகழ்வாக இருந்ததோடு அதை கூட்டுத்தாபன ஊடகங்கள் கூவிக்கொண்டிருந்தன.
பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டொவ்ஸ், கப்பலின் உடமையாளர்களை உடனடியாக "மனிதக் கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள்" என வகைப்படுத்தினார். அத்தகைய ஏனைய கப்பல்கள் கனடாவுக்கு வந்துகொண்டிருப்பதாக கூறிய அவர், கனடாவுக்கு வந்துகொண்டிருக்கும் ஏனையவர்களை தடுப்பதற்காக இந்த அகதிகளை உதாரணமாக நடத்த வேண்டும் என்ற உட்பொருளுடன், எம்.வி. சன் சீ ஒரு "பரீட்சார்த்த படகு", என பிரகடனம் செய்தார்.
"மனித கடத்தல்கள், சட்டவிரோத குடியேற்றம் அல்லது கனடாவின் வேறு எந்தவொரு குடியேற்ற முறையையும் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது மற்றும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டாது," என டொவ்ஸ் பிரகடனம் செய்தார். "தற்போதைய நிலைமைக்கு நாம் கனேடிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு சர்வதேச சட்டத்தையும் கனேடிய பெருந்தன்மையையும் இவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாதவாறு துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் பேரில், எமது சட்டத்தையும் பலப்படுத்துவதற்கு உள்ள சகல வழிகளையும் கனேடிய அதிகாரிகள் ஆராய்வார்கள்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கனேடிய பத்திரிகைச் செய்திகளின் படி, கனடாவுக்கு சரக்குக் கப்பல்களில் வரும் புகலிடம் கோருவோரை நடத்துவதற்காக சட்டவிதிகளை அமுல்படுத்துவது பற்றி கனேடிய பழமைவாத அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றது. சர்வதேச மற்றும் கனேடிய சட்டத்தின் கீழ் உள்ள அகதிகளுக்கான சட்டப் பாதுகாப்பை அவர்களுக்கு மறுப்பதற்கே இவ்வாறு அது அக்கறைகாட்டுகின்றது. அகதிகளின் எண்ணிக்கையை கடுமையாகக் குறைப்பதன் பேரில் "பாதுகாப்பான மூன்றாவது நாடு" என சொல்லப்படுவதில் இருந்து கனடாவுக்குள் நுழைபவர்களுக்கு அகதி அந்தஸ்து கோரும் உரிமையை மறுப்பதற்காக ஏற்கனவே முன்னைய லிபரல் அரசாங்கம் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது.
கூட்டுத்தாபன ஊடகங்களைப் பொறுத்தவரை, அவை ஆக்கிரமிப்பொன்று உடனடியாக நடக்கக் கூடுமா என்ற முறையிலேயே செயற்பட்டன. கடந்த வாரக் கடைசியில், எம்.வி. சன் சீ கனேடிய கடற் பகுதியை நெருங்கிய உடனேயே, ஊடகங்கள் மூச்சுவிடாமல் மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் கப்பலின் நகர்வு பற்றி புதிய செய்திகளை வழங்கிக்கொண்டிருந்தன. குடியேறுபவர்கள் மத்தியில் காசநோய் தொற்றிக்கொண்டிருப்பதாக தவறான முறையில் எந்தவொரு ஆதாரமும் இன்றி தெரிவித்த அவை, குறைந்தபட்சம் மேலும் இரண்டு கப்பல்கள் "விரும்பத்தகாத" சரக்குகளுடன் கனேடிய கடற்பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் எச்சரித்தன.
வியாழன் காலை வெளியீட்டில் வெளியிட்ட ஆசிரியர் தலைப்பு ஒன்றில், புதிய-பழமைவாத நஷனல் போஸ்ட், தமிழீழ விடுதலைப் புலி காரியாளர்கள் கனடாவுக்கு வருவதை தடுக்க, எம்.சி. சன் சீ கனேடிய கடற் பகுதிக்கு வருவதை அரசாங்கம் தடுக்க வேண்டும் எனக் கோரியது. அதே தினம் காலை, கனடாவின் குறிப்புச் செய்தி பத்திரிகையான குளோப் அன்ட் மெயில், "புலிளுக்கு கதவடைப்பு" என்ற தலைப்பில் எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தில், தமிழ் "படகு மக்களின்" நிச்சயமான வருகையானது கனடாவின் அகதி தீர்மான முறையை மேலும் கட்டுப்பாடு நிறைந்ததாக ஆக்க வேண்டியதன் தேவையை வெளிப்படுத்துகின்றது, எனத் தெரிவித்திருந்தது.
ஏங்கித் தவிக்கும் தமிழ் அகதிகளுக்கு எதிராக கனேடிய ஸ்தாபனம் பயங்கரவாத புரளியைக் கிளப்பியது இது முதற் தடவையல்ல. கடந்த அக்டோபரில், ஓசீன் லேடி கப்பலில் 76 இளம் தமிழர்கள் வந்த போது, குறைந்தபட்சம் 26 அகதிகள் தமிழ் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் என அறிவித்தது. ஆனால், பல மாதகால உக்கிரமான விசாரணைகளின் பின்னர், அவர்களில் எவரும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்களாக காணப்படவில்லை. அவர்கள் அனைவரும் நாட்டின் 300,000 பலமான தமிழ் சமுதாயத்துக்குள் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களது புகலிடக் கோரிக்கை விசாரணைகள் இன்னமும் தாமதமாகவே உள்ளன.
இலங்கையின் தமிழ் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் நீண்ட தூர சரக்குக் கப்பல் பயணத்தில் ஆபத்தில் இறங்க விரும்புவார்களானால், மற்றும் அதற்கு பத்தாயிரக்கணக்கான டொலர்களையும் செலுத்துவார்களானால், அது அவர்கள் உள்நாட்டில் கடும் வறுமையையும் அரச பாகுபாட்டையும் எதிர்கொள்வதாலேயே ஆகும்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்கள், தசாப்தகால உள்நாட்டு யுத்தத்திலும் 2005 சுனாமியிலும் அழிக்கப்பட்டார்கள். பின்னர் 2008-2009ல் புலிகளுக்கு எதிராக ஒரு நிர்மூலமாக்கும் யுத்தத்தை இலங்கை இராணுவம் முன்னெடுத்தது. அது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களை நாசமாக்கியது. இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். மோதல்களில் தப்பியவர்களில் அநேகமானவர்கள் மெலிந்து போய், காயமடைந்து அல்லது சுகயீனமுற்று மெனிக் பார்ம் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஏனைய தடுப்பு நிலையங்களை அடைந்தனர். தமது யுத்தக் குற்றங்களை மூடி மறைப்பதற்காக, இலங்கை அதிகாரிகள் சகல பத்திரிகையாளர்களையும் தொண்டு அமைப்புக்களையும் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றியது.
2009 மே மாதம் புலிகளின் இறுதித் தோல்வியுடன், இலங்கை இராணுவம் 280,000 பேருக்கும் அதிகமானவர்களை இழி நிலையிலான முகாம்களுக்குள் அடைத்து வைத்தது. அந்த முகாம்கள் முற்கம்பிகளாலும் ஆயுதம் ஏந்திய சிப்பாய்களாலும் சூழப்பட்டிருந்தன. அங்கு தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டதோடு தொடர்ந்தும் ஆதாரங்கள் இன்றி "காணாமல் போனதுடன்" பாதுகாப்பு படைகளாலும் அரசாங்கத்தின் பங்காளி ஆயுதப் படைகளாலும் பெண்கள் மோசமாக மானபங்கம் செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டு முற்பகுதியில் உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட நேரடி அறிக்கையில், தடுப்பு முகாங்களில் உணவு மட்டுப்படுத்தப்பட்டிருந்ததை நிருபர்கள் கண்டனர். "ஒரு நபருக்கு ஒரு கிலோ அரிசி, மா மற்றும் சீனி மற்றும் 100 கிராம் தாணியம் அல்லது பருப்பு மட்டுமே வாரத்துக்கு பங்கீடாக வழக்கப்படுகிறது. ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்களிடம் பணம் இல்லை. அவர்களுக்கு மீன், இறைச்சி, முட்டை அல்லது மரக்கறிகள் கிடைப்பதில்லை. இந்தப் பங்கீடுகள் போதாது என்பது தெளிவு. பல சிறுவர்களும் முதியவர்களும் போசாக்கின்றி வாடுகின்றனர். தண்ணீருக்கும் பஞ்சம் உள்ளது. ஒவ்வொரு முகாம் வாசியும் ஒரு வாரத்துக்கு ஐந்து லிட்டர் குடி தண்ணீரே பெறுகின்றார்." அண்மையில் பத்தாயிரக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அநேகமானவர்களை அவர்களது நகரங்களுக்கு சொந்த கிராமங்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்தும் கடுமையான பயண கட்டுப்பாடுகளுக்கு உள்ளாவதோடு பொலிஸில் பதியவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
ஏனைய மேற்கத்தைய சக்திகளைப் போல், இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் துன்பகரமான நிலைமைக்கு கனடாவும் நேரடிப் பொறுப்பாளியாகும். கனேடிய அரசாங்கம் 2006ல் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியதன் மூலம், புலிகளுடனான சமாதான முன்னெடுப்பை கைவிடுவதோடு ஒட்டு மொத்த யுத்தத்தை மீண்டும் தொடங்கவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு ஊக்குவிப்பு வழங்கியது.
சிறுபான்மை ஹாபர் அரசாங்கத்தின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், கனேடிய கடற்கரைக்கு தமிழ் அகதிகள் வந்துள்ள நிகழ்வை, தமது அரசியல் இலாபத்துக்காக சுரண்டிக்கொள்ள வேண்டிய ஒரு சந்தர்ப்பமாக காண்கின்றனர்.
தமது பிற்போக்கு "சட்டம் ஒழுங்கு" மற்றும் "தேசிய பாதுகாப்பு" திட்டங்களை முன்னிலைப்படுத்துவதற்காக, "கடுமையாக உழைக்கும்" கனேடிய பிரஜைகளின் மீது "ஆப்பு அடிக்கும்" பூதங்களையும் "கிரிமினல்களையும்" எழுப்பி அவர்கள் மீது தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு "குறுகிய இடத்தில் நுழையும்" விவகாரமாக இதை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்தப் பிரச்சாரம் எந்தளவுக்கு பண்பற்றதும், சூழ்ச்சியானதும் மற்றும் சிடுமூஞ்சித்தனமானதும் என்றால், சில பத்திரிகை ஆய்வாளர்களும் கூட அதை உணர்ந்து அதை விமர்சிக்கத் தள்ளப்பட்டுள்ளனர். "டோரிக்களுக்குத் தேவையானதை தமிழ் கப்பல்கள் கொண்டு வருகின்றன," என்ற தலைப்பில் எழுதியிருந்த ஒரு பத்தியில், நஷனல் போஸ்ட்டின் டொன் மார்டின், ஹபர் அரசாங்கத்தின் "அருவருப்பான பிரதிபலிப்பை" "ஒரு சிறந்த அரசியல் திசைதிருப்பும் தந்திரம்" என அழைத்தார்.
அதுவே தான். ஆனால் அதன் முழு இலக்குகள் மிகவும் பரந்த மற்றும் மிகவும் கெடுநோக்குள்ளவை. உலகின் முதலாளித்துவ அரசாங்கங்கள், அகதிகள்-விரோத மற்றும் குடியேற்ற-விரோத அரசியலை நோக்கி திரும்புவது மிகவும் பிற்போக்கு முடிவுகளுக்கே சேவை செய்யும். ஒடுக்குமுறையான அரச அதிகாரத்துவத்தை கட்டியெழுப்புவதை நியாயப்படுத்துவதும் தொழில், சமூகநலத் திட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான எதிர்த் தாக்குதலை நடத்த முடியாதவாறு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பணியச் செய்வதும் இதன் இலக்காகும்.
|