WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மெய்யியல்
Einstein letter sold for record sum
ஐன்ஸ்ரைனின் கடிதம் சாதனை விலைக்கு விற்கப்பட்டது
By Ann Talbot and Chris Talbot
23 June 2008
Back
to screen version
இது எமது ஆங்கிலப் பக்கத்தில் வெளியான ஆல்பர்ட் ஐன்ஸ்ரைனும் மதத்தைப் பற்றிய அவரின் பார்வையும் என்ற இரண்டு பாக கட்டுரையின் முழுத் தொகுப்பாகும்.
இதற்கு முன்னர் அறியப்படாமல் இருந்த ஐன்ஸ்ரைனின் கடிதம் ஒன்று, சமீபத்தில் ஏலத்தில் விற்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. சிறந்த இயற்பியலாளர் ஒருவரின் மதத்தைப் பற்றிய பாரபட்சமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அதுவொரு குறிப்பிடத்தக்க ஆவணமாக இருக்கிறது.
"கடவுள் என்ற வார்த்தை என்னைப் பொறுத்த வரையில் மனித பலவீனத்தின் விளைபொருள் மற்றும் வெளிப்பாடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. பைபிள் பெருமதிப்பிற்குரிய ஒரு தொகுப்பாக கருதப்படுகிறது, ஆனால் இன்றும் அது புராதன கட்டுக்கதை தான், அவை கூடுதலாக சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறது," என்று ஐன்ஸ்ரைன் எழுதினார்.
இந்த புதிய கடிதத்தில் அவர் வெளிப்படுத்தி இருக்கும் கருத்துக்கள், பொதுவாக மதத்தைப் பற்றிய ஐன்ஸ்ரைனின் கண்ணோட்டங்களை தொகுத்து மேற்கோளிடப்படும் கருத்துக்களுக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. "மதம் இல்லாத விஞ்ஞானம் நொண்டியாக இருக்கிறது, விஞ்ஞானம் இல்லாத மதம் குருடாக இருக்கிறது."
மேற்படி பிரபல வாக்கியமானது, விஞ்ஞானமும், மதமும் ஒன்றுக்குள்ஒன்று பொருந்தியவை என்று ஐன்ஸ்ரைன் கருதினார் என்று எடுத்துக்காட்டுவதாக தெரிகிறது. மேலும் இந்த வாக்கியம், ஐன்ஸ்ரைனை மத குழுவிற்குள் கொண்டு வர விரும்புபவர்களாலேயே பெரும்பாலும் மேற்கோளிட்டுக் காட்டப்படுகிறது.
இந்த கடிதம் சுமார் 16,000 டாலருக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இறுதியில் அது 404,000 டாலருக்கு விலை போனது, பின்னர் இது "வீம்புக்காக" ஏலம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. "இந்த அரிய கடிதம் ஓர் உணர்வுபூர்வமான பிரதிபலிப்பை உருவாக்குவதாக தெரிகிறது, மேலும் இது இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர் ஒருவரின் ஓர் ஆழ்ந்த தனிப்பட்ட உட்பார்வையை அளித்தது," என்று Bloomsbury Auctions -களுக்காக ருப்பேர்ட் பவல் தெரிவித்தார்.
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க விரும்பியதால், இதை ஏலத்தில் எடுத்தவரின் பெயரை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் ஏலத்தில் தோல்வி அடைந்தவர்களில், உயிரியியலாளரும், வெளிப்படையான மத எதிர்ப்பாளருமான ரிச்சார்ட் டாவ்கின்ஸூம் ஒருவராவார்.
இந்த விலையே, இந்த ஆவணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான ஓர் குறிப்பைத் தருகிறது. முக்கியமாக, இது மதத்தைப் பற்றிய ஐன்ஸ்ரைனின் கண்ணோட்டத்தின் மீதும், அவருடைய சிந்தனைகளின் முன்னேற்றத்தின் மீதும் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. இந்த முக்கியமான கடிதம் இப்போது பொதுமக்களின் பார்வையில் இருந்து காணாமல் போய்விடும் போல் இருக்கிறது. எழுதப்பட்ட சிறிது காலத்திலிருந்தே அது தனியார் கைகளில் தான் இருந்து வந்திருக்கிறது என்பதுடன், ஆய்வாளர்களுக்கும் காட்டப்படாமல் இருந்து வந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையின் கீழ், இந்த கடிதத்தின் மீது ஊடகம் ஒரு முனைப்பான ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஐன்ஸ்ரைன் ஒரு பிரபலமான மனிதர். அவருடைய காதல் வாழ்க்கை பற்றிய வெளிப்பாடுகள் ஊடகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன என்பதுடன், அவருடைய முதல் மனைவி மெலிவா மரிக்கால் கண்டுபிடிக்கப்பட்ட சார்பு தத்துவத்திற்கு அவர்களுக்கு கொடுக்கவேண்டியதைவிட கூடிய கவனம் கொடுக்கப்பட்டதாக எடுத்துக்காட்ட, பெண்ணிய வரலாற்றாளர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நூற்றாண்டின் ஐன்ஸ்ரைனின் அற்புத ஆண்டில் (annus mirabilis-1905), அவர் ஐந்து ஆழமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டார், அவை இயற்கையைப் பற்றிய நம்முடைய புரிதலை அடிப்படையிலேயே மாற்றி அமைத்தன, மேலும் அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு தொழில்நுட்ப புரட்சியையும் அவை ஏற்படுத்தின.[1] அது சில ஆர்வங்களைத் தூண்டிவிட்டது, ஆனால் இந்த புதிய கடிதமோ ஏறத்தாழ அறிவிக்கப்படாமலேயே காணாமல் போய்விட்டிருக்கிறது. இந்த கடிதம் குறித்து இரண்டு பத்திரிகைகள் அதிக கவனம் செலுத்தி இருந்தன-நியூயோர்க் டைம்ஸ் மற்றும் கார்டியன்- இந்த சிறந்த மனிதனின் ஆவி நாத்திகர்களையும் மற்றும் ஏலத்தில் தோல்வி அடைந்த ரிச்சர்டு டாவ்கின்ஸையும் நோக்கி சமாதிக்குப் பின்னால் இருந்து விரலை காட்டி கேலி செய்து கொண்டிருப்பதைப் போல எடுத்துக்காட்டி, இந்த இரண்டு பத்திரிகைகளும் நாத்திகர்கள் மீது ஐன்ஸ்ரைனுக்கு இயல்பாகவே வெறுப்புணர்வு இருந்ததைப் போல குறிப்பிட்டு காட்டின.
ஐன்ஸ்ரைனின் கண்ணோட்டங்கள் மதத்தையும், விஞ்ஞானத்தையும் சமரசப்படுத்துவதற்கான ஒரு கோழைத்தனமான முயற்சிக்கு எதிராக இருந்தன. ஆகவே மதத்தைப் பற்றிய ஐன்ஸ்ரைனின் கண்ணோட்டங்களைத் திரித்துவிட அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் புத்திஜீவி பிரிவுகளுக்கு மத்தியில் இருக்கும் வலுவான விருப்பமே இங்கே வெளிப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் பற்றி விமர்சனமாக கருதப்படக்கூடிய கண்ணோட்டங்களுக்கு ஓர் இடமளிக்க விரும்பாததன்மை நிச்சயமாக அங்கே காணப்படுகிறது. மதத்தைப் பற்றிய பழமைவாத கருத்துக்களை நிராகரித்த, பதினேழாம் நூற்றாண்டின் சடவாத மெய்யியலாளர் ஸ்பினோஸாவைப் பாராட்டிய, மற்றும் யூதர்கள் ஒரு "தேர்ந்தெடுக்கப்பட்ட" மக்கள் என்பதன் மீதான நம்பிக்கையை புறக்கணித்த ஐன்ஸ்ரைனின் கடிதத்தின் நிறுவுதல்களை விவாதிக்க கார்டியன் இதழோ அல்லது நியூயோர்க் டைம்ஸ் இதழோ தயாராகவில்லை.
ஐன்ஸ்ரைன் அந்த கடிதத்தை 1954 ஜனவரி 3ஆம் தேதி எழுதினார். அது யூத மெய்யியலாளர் எரிக் குட்கைண்டிற்கு எழுதப்பட்டிருந்தது. இவர் Choose Life: The Biblical Call to Revolt என்ற தமது புத்தகத்தின் ஒரு நகலை ஐன்ஸ்ரைனுக்கு அனுப்பி இருந்தார். தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கடிதத்தின் ஒரு பகுதி கார்டியன் [2]. இதழில் வெளியாகி இருந்தது. அது முற்றிலுமாக அதிருப்திகரமாக இருந்தது, ஆனால் இந்த பிரத்யேக ஆவணத்தில் இருந்து நமக்கு அந்த பகுதி மட்டுமே கிடைத்திருக்கிறது, அது பின்வருமாறு:
... கடவுள் என்ற வார்த்தை என்னைப் பொறுத்த வரையில் மனித பலவீனத்தின் விளைபொருள் மற்றும் வெளிப்பாடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. பைபிள் நன்னெறிகளின் ஒரு தொகுப்பாக கருதப்படுகிறது, ஆனால் இன்றும் அது புராதனக் கட்டுக்கதை தான், அவை கூடுதலாக சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. எந்த பொருள்விளக்கமோ, எந்தளவிற்கு நுட்பமானதாக இருந்தாலும் மறைநுட்பம் (subtle) எவ்வாறு (எனக்கு) இதை மாற்றிவிட முடியும். இந்த நயமான விளக்கங்கள் அவற்றின் இயல்பைவிட உயர்ந்தளவில் அதிகப்படுத்திக் காட்டப்பட்டிருக்கின்றன, மேலும் உண்மையான செய்தியுடன் ஏறத்தாழ இவற்றிற்கு தொடர்பே கிடையாது. என்னைப் பொறுத்தவரை, ஏனைய பிற மதங்களைப் போலவே யூத மதமும், மிகவும் சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கைகளின் ஓர் உருவகம் தான். யூத மக்களில் ஒருவரான நானும், அவர்களைப் போலவே அதே மனஅமைப்புடன் ஓர் ஆழ்ந்த உறவைக் கொண்டிருக்கிறேன், மற்ற அனைத்து மக்களையும் விட எனக்காக வித்தியாசமான எந்த குணத்தையும் நான் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அதிகாரமின்மையால் மோசமான புற்றுநோய்களால் பாதுகாக்கப்பட்டிருந்த போதினும், என் அனுபவத்திலிருந்து, அவர்களும் ஏனைய மனிதக்குழுக்களை விட சிறந்தவர்கள் இல்லை. வேறுவகையில் கூறுவதானால், அவர்களைப் பற்றி "தேர்ந்தெடுக்கப்பட்ட" எதையும் என்னால் பார்க்க முடியவில்லை.
பொதுவில், ஒரு தனிச்சிறப்பார்ந்த நிலைப்பாட்டை நீங்கள் குறிப்பிடுகிறீர், மேலும் இரண்டு தற்பெருமை சுவர்களைக் கொண்டு, அதாவது ஒரு மனிதன் என்ற ஒரு புறச்சுவர் ஒன்றையும், ஒரு யூதர் என்ற ஓர் உட்சுவர் ஒன்றையும் கொண்டு அதை பாதுகாக்க முயல்கிறீர். ஒரு மனிதர் என்ற மட்டில் நீங்கள் குறிப்பிடுவது, பேச்சு வழக்கில், ஒருகடவுள் கோட்பாடு (monotheism) ஒரு யூதருக்கு தனிச்சலுகையை போல காரணக்காரிய தொடர்பில் இருந்து ஒரு விதிவிலக்கான உரிமைபோல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆனால் ஒரு வரையறைக்குட்பட்ட காரணகாரியத் தொடர்பு என்பது இனியும் எப்படியாயினும் ஒரு காரணகாரிய தொடர்பே அல்ல. நம்முடைய அருமையான ஸ்பினோஸா (டச்சு மெய்யியலாளர்) அனைத்து அறிவுக் கூர்மையுடன் அங்கீகரித்ததைப் போல, ஒருவேளை அவரே முதல் நபராக இதை வெளிப்படுத்தி இருக்கலாம், இயற்கையைப் பற்றிய மதங்களின் ஆன்மவாதச் சார்பான விளக்கங்கள் முதன்மையாக இருக்கின்றன, அவை ஏகபோக உரிமையால் துடைத்தழிக்கப்படவில்லை. இதுபோன்ற சுவர்களைக் கொண்டு நம்மால் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு சுய-மோசடியைத் தான் செய்யமுடியும், ஆனால் நம்முடைய ஒழுக்க முயற்சிகளை அவற்றால் அதிகப்படுத்த முடியாது. இது முரண்பட்டு இருக்கிறது.
இப்போது புத்திஜீவிய கருத்துக்களில் நம்முடைய வேறுபாடுகளை நான் மிக வெளிப்படையாக குறிப்பிட்டிருக்கிறேன். சில முக்கிய விஷயங்களில், அதாவது மனித பழக்கவளங்கங்களைப் பற்றிய நம்முடைய மதிப்பீடுகளில் [மேற்கோளாளர் காட்டி இருக்கும் அதே நிலையில்], நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம் என்பதில் இன்றளவும் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். நம்மை எது வேறுபடுத்துகிறது என்றால், பிரைட்டின் (Freud) மொழிகளில் சொல்வதானால், புத்திஜீவித்தனமான 'ஏற்றுக்கொள்ளல்' மற்றும் "பகுத்தறிவுத்தன்மை" மட்டும் தான் நம்மை வேறுபடுத்துகிறது. ஆகவே முக்கிய விஷயங்களைக் குறித்து நாம் பேசினோமானால், நம்மால் ஒருவரையொருவரை தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்.
நட்புடன் நன்றிகளும், வாழ்த்துக்களும்
உங்களின் A. ஐன்ஸ்ரைன்
இந்த கடிதத்தில் மெருகேற்றப்படாத வடிவத்தில் இருக்கும் இந்த கருத்துக்களும் கூட தெளிவாக இருக்கிறது. இந்த வார்த்தைகளில் ஆசிரியர், "கடவுள் என்ற வார்த்தை" "மனித பலவீனத்தின் விளைபொருள்" போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார், அத்துடன் யூத மதம் உட்பட அனைத்து மதங்களும் "சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கை" என்பது உட்பட பைபிளை புராதன கட்டுக்கதையாகவும், "நன்னெறிகளின் ஒரு தொகுப்பாகவும்," காரணமின்றி எதுவும் நடக்காது என்பது எவ்வித வரையறையையும் முன்னிறுத்துவதில் ஸ்பினோஸா மறுப்பு காட்டுவதால் அவரைப் புகழ்வதாகவும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. நியதிவாதம் (determinism-Philosophy the doctrine that all events and actions are ultimately determined by causes regarded as external to the will.) மற்றும் மனிதர்களின் மனம்போன போக்கிலான விருப்பத்தின் மீதான ஸ்பினோஸாவின் நிராகரிப்பானது, அவருடைய சமகாலத்தியவர்களுக்கும், மற்றும் அவரைப் பின்தொடர்ந்த விமர்சகர்களுக்கும் அவர் ஒரு நாத்திகர் என்பதற்கான தெளிவான அறிகுறியை அளித்திருக்கும். ஐன்ஸ்ரைனைப் பொறுத்த வரையில் அவர் "நம்முடைய அருமையான ஸ்பினோஸாவாக" இருந்தார். ஐன்ஸ்ரைன் ஒரு நாத்திகர் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, சாதாரண சூழ்நிலையில், இந்த வார்த்தைகள் மட்டுமே போதுமானதாகும்.
ஆனால் கார்டியன் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் இரண்டுமே, இந்த கடிதத்தின் ஆசிரியர் ஒரு நாத்திகர் அல்ல என்ற கருத்தை வெளிப்படுத்த முயல்கின்றன. இவை இரண்டுமே ஐன்ஸ்ரைன் 1941-ல் எழுதியிருந்த ஒரு கடிதத்தை மேற்கோளிட்டு காட்டுகின்றன, இதில் அவர் அதற்கு முந்தைய ஆண்டு அவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்குப் பிரதிபலிப்பாக விவாதித்திருக்கிறார். அந்த கட்டுரை மத அடிப்படைவாதிகளால் விமர்சிக்கப்பட்டு, நாத்திகர்களால் புகழப்பட்டும் இருந்தது. அந்த கடிதம் ஒரு சிக்கலான கண்ணோட்டங்களை வெளிப்படுத்துகிறது, அத்துடன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு நுணுக்கமான சிந்தனைகளையும் அளிக்கிறது.
"அலட்சியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் இருந்து இலாபங்களை அடைந்தவர்களின் நலன்களுக்காக, அவற்றை எல்லாம் பாதுகாத்துக் கொண்டிருப்பதன் மூலமாக, தங்களின் உணவைச் சம்பாதித்துக் கொண்ட பல நாய்கள் என்னைப் பார்த்து குரைத்தன" என்று ஐன்ஸ்ரைன் எழுதினார், "மேலும் வெறிபிடித்த நாத்திகர்களும் அங்கே இருக்கிறார்கள். இவர்களின் சகிப்புத்தன்மையற்ற தன்மையும், அதே வகையான மத வெறியர்களின் சகிப்புத்தன்மையற்ற தன்மையைப் போலவே இருக்கிறது, அவை இரண்டுமே ஒரே மூலங்களில் இருந்து தான் வருகின்றன. இவர்கள் கடினமான போராட்டங்களுக்குப் பின்னர் தங்களின் சங்கிலிகளைத் தூக்கி எறிந்துவிட்டிருந்தாலும், அவற்றின் எடையை இன்றும் உணர்ந்து கொண்டிருக்கும் அடிமைகளைப் போன்றவர்கள். அவர்கள் -பாரம்பரிய 'மக்களுக்கான போதை' என்பதற்கு எதிரான தங்களின் காழ்ப்புணர்ச்சியில்- இயற்கையின் இசையைத் தாங்கிக் கொள்ள முடியாத உயிரினங்களாக இருக்கிறார்கள். ஒருவரால் இயற்கையின் அற்புதத்தை மனித ஒழுக்கநெறிகள் மற்றும் மனித இலட்சியங்களின் தரமுறைகளைக் கொண்டு அளவிட முடியாது என்பதாலேயே, அது சிறியதாகிவிடாது." [3]
ஐன்ஸ்ரைனின் 1941-ம் ஆண்டு கடிதம் பொதுவாக நாத்திகர்களையோ அல்லது நாத்திகத்தையோ கண்டனம் செய்யவில்லை, ஆனால் சகிக்கமுடியாத மற்றும் வறட்டுவாத வடிவத்தை எடுத்த ஒரு குறிப்பிட்ட வகை நாத்திகர்களின் நாத்திகத்தைத் தான் கண்டனம் செய்கிறது. "மக்களுக்கான போதை" என்ற அவரின் குறிப்பு, இயற்கையைப் பற்றிய இயந்திரத்தனமான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த ஸ்ராலினிசவாதிகளேயே அவர் மனதில் கொண்டிருந்தார் என்பதையே அறிவுறுத்துகிறது. மனித அறிவின் எல்லைகளைப், புதிய மற்றும் சிறிதளவே புரிதலில் இருந்த பிரதேசத்திற்குள் முன்னேற்றிய ஒரு மனிதரான ஐன்ஸ்ரைன், இயற்கையின் அற்புதங்கள் குறித்து ஓர் ஆரோக்கியமான மதிப்பை வைத்திருந்தார். அவருடைய மொத்த வாழ்க்கையின் எழுத்துக்களுமே அவற்றிற்கு உரிமை கொண்டாடின. ஆனால் "மனித இலட்சியங்களை மற்றும் ஒழுக்க இலட்சியங்களைக்" கொண்டு அந்த அற்புதங்களை அளவிடுவதற்கான அவரின் மறுப்பு, அவரை உறுதியாக நாத்திக முகாமிற்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. ஐன்ஸ்ரைன் தனிப்பட்ட எந்த தெய்வத்தையும் வைத்திருக்கவில்லை. நீண்ட காலங்களுக்கு முன்னதாகவே அவர் அதுபோன்ற சிறுபிள்ளைத்தனங்களுக்கு தம்முதுகைத் திருப்பி விட்டிருந்தார். மேலும் அந்த கடிதம் எடுத்துக்காட்டுவது போல அவர் தம்முடைய வாழ்வின் இறுதிகாலம் வரைக்கும் அதே கண்ணோட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். 1941-ம் ஆண்டு கடிதமும், 1954-ம் ஆண்டின் புதிய கடிதமும் அந்த உணர்வில் முற்றிலுமாக கொள்கை மாறாமல் இருக்கின்றன.
ஐன்ஸ்ரைனின் வாழ்க்கை வரலாற்றை புரிந்துணர்வோடு டென்னிஸ் ஓவர்பை எழுதியிருந்தார். அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இப்போது கிடைத்திருக்கும் ஆவணங்களிலேயே மிகவும் பெருமதிப்புடையதாக இருக்கிறது.[4] புதிய கடிதம் மீது அவரைப் பற்றிய நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை அதன் முழுமையான முக்கியத்துவத்தில் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாதபடிக்கு மிகவும் சிறியதாக இருக்கிறது, மேலும் நாத்திகர்களை விமர்சிக்கும் தம்முடைய 1941 கடிதத்தில் இருந்து விஷயங்களைப் பிரித்தெடுப்பதைக் கூட ஐன்ஸ்ரைன் தம்முடைய கடமையாக உணர்ந்து இருந்திருக்கிறார்.
கார்டியன் கட்டுரை மிகவும் கபடத்தனத்துடன் இருக்கிறது. கார்டியன் இதழின் விஞ்ஞானப்பிரிவு எழுத்தாளர் ஜேம்ஸ் ரேண்டர்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜோன் புரூக்கை அதிகளவில் சார்ந்திருந்தார். அவர் ஐன்ஸ்ரைனை வெகுவாக தெரிந்திருந்த முன்னணி வல்லுனர் என்று அவரை மேற்கோளிட்டுக் காட்டுகிறார். "தம்முடைய கண்ணோட்டங்கள் எவாங்கெலிஸ்ட்டுக்களால் நாத்திகர்களுக்கு கையாளப்பட்டபோது ஐன்ஸ்ரைன் மிகவும் கோபமடைந்தார்" என்றும், "அவர்களின் நவீனத்துவமற்ற தன்மையை கண்டு அவர் வெறுப்படைந்தார்" என்றும் புரூக் குறிப்பிடுகிறார்.
ஆனால் புரூக் ஆக்ஸ்போர்டில் இறையியல் பிரிவில் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் மதம் என்பதைச் சேர்ந்த பேராசிரியர் என்பதையும், மேலும் அவர் Templeton அமைப்புடன் நீண்டகாலம் தொடர்புபட்டவர் என்பதையும் நம்மிடையே சொல்லாமல் ரேண்டர்சன் மறைக்கிறார். Templeton Foundation பள்ளிகளின் செயல்திட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் மதம் என்பதில் அவர் இணை இயக்குனராவார். பணக்கார Templeton குடும்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, விஞ்ஞானம் மற்றும் மதம் இரண்டையும் ஒன்றுபடுத்தி கொண்டு வருபவர்களுக்கும், அத்துடன் வறுமைக்கு எதிராக கட்டுப்பாடற்ற சந்தை முனைவுகளை உருவாக்குபவர்களுக்கும் நன்கொடைகளை வழங்கி வருகிறது. Templeton அமைப்பின் வார்த்தைகளில், "ஆழமான ஆய்வுகள் மூலமாகவோ, கண்டுபிடிப்புகள் அல்லது நடைமுறை வேலைகள் மூலமாகவோ வாழ்வின் ஆன்மீக பரிமாணத்தை வலியுறுத்த சிறப்பார்ந்த முறையில் பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு, அவர்கள் வாழும் காலத்திலேயே Templeton விருது வழங்கப்படுகிறது." "இது 'ஆன்மாவிற்கான தொழில்முனைவோர்களைக்' கண்டறிவதை... நோக்கமாக கொண்டிருக்கிறது".[5]
இந்த Templeton Foundation அமைப்பு வலதுசாரி காரணங்களுடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது, பல விஞ்ஞான இதழாளர்களும், முன்னணி விஞ்ஞானிகளும் இதை விமர்சனம் செய்திருக்கிறார்கள். ரிச்சர்டு டாவ்க்கின்ஸ் கூறுகையில், "Templeton விருதில் ஒரு மிகப்பெரிய தொகை வழங்கப்படும்... பொதுவாக மதத்தைப் பற்றி ஏதாவது சிறப்பாக கூறும் ஒரு விஞ்ஞானிக்குக் கொடுக்கப்படும்"[6] என்று தெரிவித்தார். மெய்யியல் மற்றும் அரசியல் அடித்தளத்தில், குறிப்பாக "இன்றும் உலகளவில் பெரும்பான்மை தொழிலாள வர்க்கத்திடையே மதப்பற்று நிலவி வரும் நிலையில், மதப்பற்றுடைய மக்களை ஏளனமாக நினைக்கும் அவரின் போக்கிற்காக"[7]. உலக சோசலிச வலைத் தளம் டாவ்கின்ஸை விமர்சனம் செய்திருக்கிறது. ஆனால் Templeton விருது மீதான அவரின் மனோபாவம், வேறொன்றுமில்லை பாராட்டும் வகையில் இருக்கிறது.
ஐன்ஸ்ரைன் ஒரு நாத்திகர் அல்லது சடவாதி என்பதை மறுப்பதில் புரூக் ஒரு தொழில்முறையான ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். ஐன்ஸ்ரைனைப் பற்றி நன்கு அறிந்தவர் என்று அவரை மேற்கோளிட்டுக் காட்டும் கார்டியன் இதழுக்கு அவர் மேற்கொண்டு எந்த கருத்தையும் அளிக்காமல் இருப்பதானது, அதையே ஏற்றுக்கொள்வதாகவும், தவறான கருத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் இருக்கிறது. புதிய கடிதத்தில் நாத்திகம் குறித்து தெளிவான கருத்துக்கள் இருந்த போதினும், இது விஞ்ஞானம் மற்றும் மதத்திற்கு ஐன்ஸ்ரைனைப் பொருத்தமானவராக தொடர்ந்து காட்டுவதற்கான முயற்சியாக இருக்கிறது.
ஆல்பேர்ட் ஐன்ஸ்ரைன் கிறிஸ்துவ மற்றும் யூத மதங்கள் இரண்டையும் நன்கு கற்றறிந்திருந்தார், இருந்தபோதினும் அவர் தன்னுடைய 12 வயதிலேயே ஒரு பற்றுறுதியான நாத்திகரானார். அவர் அப்போதே யூத பார் மிட்ஜ்வாஹ் (Jewish Bar Mitzvah) விழாவில் பங்கேற்க மறுத்தார். 1903ல் நடந்த அவரின் திருமணம் முற்றிலுமாக சட்டமுறைப்படியும், மத-கலப்பற்ற விழாவாகவும் நடந்தது. "எவ்வாறிருந்தாலும், அனைத்து விஞ்ஞான சிந்தனைகளுக்கும் முரணாக இருக்கும் ஏதோவொன்றை என் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படுவதை நான் விரும்பவில்லை" என்று கூறி, அவருடைய குழந்தைகள் தொடக்கப்பள்ளியிலேயே மதக்கல்வியை பெறுவதை அவர் எதிர்த்தார். [8]
புதிதாக வெளியிடப்பட்ட 1954 கடிதம் தெளிவாக எடுத்துக்காட்டுவது போல, யூத மதத்தை ஐன்ஸ்ரைன் "குழந்தைத்தனமான மூடநம்பிக்கையாக" கருதினார், ஆனால் யூத மக்களுக்காக அவர் ஓர் "ஆழ்ந்த இணக்கப்பாட்டு" உணர்வைக் கொண்டிருந்தார். ஜியோனிசத்திற்கான (Zionism) அவரின் ஆரம்பகால ஆதரவு விமர்சனத்திற்கு உரியதாக இருக்கலாம், ஆனால் முதலாம் உலக யுத்தத்திற்கான அவரின் எதிர்ப்பைத் தெரிவிக்கையில், யூத தேசியவாதம் உட்பட தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களையும் தான் எதிர்ப்பதாக அவர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஒரு யூத அரசை ஏற்படுத்துவதற்கும் மற்றும் இஸ்ரேலுக்குள் பெருந்திரளான புலம்பெயர்வை ஏற்படுத்துவதற்கும் அவர் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார்.
1939ல் அவர் எழுதுகையில், "நமக்கும், அரேபிய மக்களுக்கும் இடையில் ஒரு நிரந்தரமான முரண்பாட்டைத் தவிர வேறெந்த பெரிய பேரிடர்களும் இருக்கமுடியாது. நம்மால் பெரிய தவறு செய்யப்பட்டிருக்கிறது என்ற போதினும், நாம் அரேபிய மக்களுடன் ஓர் எளிய மற்றும் நீண்ட சமரசத்திற்காக முயற்சி செய்ய வேண்டும்... இந்த அரேபியர்களின் மூதாதையர்களைத் தவிர, வேறெவரும் நம்முடன் ஆழ்ந்த நட்புறவைக் கொண்டிராமல் இருந்த அந்த முந்தைய காலங்களை நாம் நினைவு கூர்ந்து பார்க்கவேண்டும்." [9]
மெனாச்செம் பெகினின் (Menachem Begin - இஸ்ரேலின் ஆறாவது பிரதம மந்திரி) பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் டெர் யாசின் (Deir Yassin) என்ற அரேபிய கிராமத்தில் நடத்தப்பட்ட படுகொலை ஆகியவற்றிற்கு கண்டனம் தெரிவித்து, 1948ல் நியூயோர்க் டைம்ஸிற்கு எழுதப்பட்ட ஒரு பகிரங்க கடிதத்தில் (Open Letter) கையெழுத்திட்டவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். [10]
யூதக் கேள்விகள் மீதான ஐன்ஸ்ரைனின் பார்வைகள் இன்று ஒரு மிக நேரடியான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் நியூயோர்க் டைம்ஸ் இதழோ, கார்டியன் இதழோ இரண்டுமே அவர் அந்த விஷயத்தில் என்ன சொல்லி இருந்தார் என்பதைக் குறித்து வெளிப்படுத்திக் காட்ட விரும்பவில்லை.
சடவாதம்
ஓர் இளைஞராக இருந்த ஐன்ஸ்ரைனுடைய மெய்யியல் அபிவிருத்திகள், ஏர்ன்ஸ்ட் மாஹ் சிந்தனைகளின் பாதிப்பை வெகுவாக கொண்டிருந்தது. மாஹ் விஞ்ஞானத்தில் சில முக்கிய பங்களிப்புகளை அளித்திருந்தார், ஆனால் மெய்யியலில் அவர் ஒரு முழுமையான அனுபவவாதத்தை மட்டுமே முன்வைத்தார், அது புலனுணர்ச்சிகளும், புலனுணர்ச்சி தொகுதிகளும் மட்டுமே விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஏற்கத்தக்க புறநிலைகள் என்பதைக் கொண்டிருந்தது. ஒரு நிஜமான உலகைப் பற்றி எவ்வித அனுமானமும் உருவாக்கப்படக்கூடாது, அல்லது கான்ட்டின் வார்த்தைகளில் கூறுவதானால், "தனக்குள்ளாகவே இருக்கும் ஒரு விஷயம்", புலனுணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் மாஹ் வெகுவாக செல்வாக்கு பெற்றிருந்தார். அவரின் சிந்தனைகளை மறுக்க, லெனின் சடவாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகத்தை எழுத வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மார்க்சிச இயக்கத்திற்குள் அவரின் செல்வாக்கு விரிவடைந்திருந்தது. மாஹின் சிந்தனைகள் பிற்போக்குத்தனமான மற்றும் மதவாத கருத்துக்களை வலியுறுத்த இட்டுச் செல்வதைக் கண்ட லெனின், சோசலிச இயக்கத்திற்குள் இருந்து மாஹைப் பின்பற்றியவர்களை கேலியாக "கடவுளை உருவாக்குபவர்கள்" என்று அழைத்தார்.
மாஹின் செல்வாக்கு ஐன்ஸ்ரைனுடன் எந்தளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது? மாஹின் பார்வைகள் மீது ஐன்ஸ்ரைனுக்கு இருந்த அவரின் ஆரம்பகால அனுதாபத்தில் இருந்து அவருடைய பிந்தைய சடவாதத்திற்கு ஐன்ஸ்ரைனின் மாற்றங்களை ஜெரால்டு ஹோல்டன் (ஒரு விஞ்ஞான வரலாற்றாளர்) எடுத்துக்காட்டி இருந்தார். ஐன்ஸ்ரைன் அவருடைய பிந்தைய காலப்பகுதியில், "புறத்தேயுள்ள, புறநிலை, பௌதிக யதார்த்தம் ஒன்று இருக்கிறது, இதை நேரடியாகவோ, அனுபவபூர்வமாகவோ, அல்லது தர்க்கரீதியாகவோ, அல்லது முழுமையான நம்பகத்தன்மையாலோ நம்மால் புரிந்து கொள்ள முடியாது, மாறாக குறைந்தபட்சம் ஓர் உள்ளுணர்வான பாய்ச்சலினால் முடியும், உணரக்கூடிய 'உண்மைகளின்' பூரணத்துவத்தின் அனுபவத்தால் மட்டுமே அது வழிநடத்தப்படுகிறது" என்ற கருத்தைக் கொண்டிருந்ததாக ஹோல்டன் வாதிடுகிறார். [11]
ஐன்ஸ்ரைன், மாஹினால் ஈர்க்கப்பட்டிருந்த போதினும்,1905ல் தம்முடைய சிறப்பு சார்பியல் கோட்பாட்டை அபிவிருத்தி செய்தார். 1913ல் தம்முடைய பொது கோட்பாட்டின் கணித உருவாக்கம், மாஹின் தீவிரமான அனுபவவாதத்திற்கு முரண்பாடாக இருந்ததை ஐன்ஸ்ரைன் கண்டதாகவும், ஆகவே அவரால் "பகுத்தறிவாத யதார்த்தவாதம்" என்று அழைக்கப்பட்டதை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் ஹோல்டன் எடுத்துக்காட்டுகிறார். பின்னர் இந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து, அவர் எழுதுகையில், தாம் ஒரு "நம்பும் பகுத்தறிவுவாதியாக ஆகிவிட்டதாகவும், அதாவது, கணித எளிமைப்பாட்டின் மூலம் நிஜத்தின் நம்பிக்கைக்குரிய ஆதாரத்தை மட்டும் எடுத்துக்கொள்ளும் ஒருவராக மாறிவிட்டதாக" குறிப்பிடுகிறார் என்பதையும் ஹோல்டன் எடுத்துக்காட்டுகிறார். [12]
1918ல் அளிக்கப்பட்ட ஓர் உரையில் ஐன்ஸ்ரைன் எழுதியதாவது: "தத்துவார்த்த இயற்பியலின் கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கும் பொதுவான விதிகளானது, ஒவ்வொரு இயற்கை தோற்றப்பாட்டிற்கும் பொருந்துவதாக இருக்கிறது", மேலும் "இதன் மூலம் ஒரு விளக்கத்தை எட்ட சாத்தியப்படுகிறது, அதைக் கூற வேண்டுமானால், வாழ்க்கை உட்பட, ஒவ்வொரு இயற்கை நிகழ்வுபோக்கிற்குமான இந்த தத்துவம், முற்றிலும் அனுமானத்தின் மூலம் கிடைக்கிறது. இந்த அனுமானிக்கும் நிகழ்ச்சிப்போக்கானது மனித அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டு இல்லை" என்று குறிப்பிட்டார். [13]
இந்த மேற்கோள், ஒரு வெளிப்படையான சடவாதியாக இருந்த பிரபல ஜேர்மன் இயற்பியல்வாதியான மக்ஸ் பிளங்கின் 60வது பிறந்தநாளில், 1918ல் அளிக்கப்பட்ட உரையில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இயற்பியலின் அபிவிருத்தியில் ஒரு தத்துவார்த்த அமைப்புமுறை "எப்போதும் அது தன்னைத்தானே உறுதியாக ஏனைய அனைத்தையும் விட உயர்ந்ததாக காட்டி கொண்டிருக்கிறது", மேலும் "நடைமுறையில் உலக தோற்றப்பாடு தனிச்சிறப்பான தத்துவார்த்த அமைப்புமுறையை வரையறுக்கிறது" என்று கூறியதன் மூலம், ஐன்ஸ்ரைன் மிக தெளிவாக மாஹின் கருத்துக்களுக்கு எதிராக பிளங்க்கின் சடவாத கண்ணோட்டங்களின் பக்கம் இருந்தார்.
இருந்தபோதினும், உலகைப் புரிந்து கொள்வதற்காக போராடும், ஓவியரைப் பற்றி, கவிஞரைப் பற்றி மற்றும் அனுமான மெய்யியலாளரைப் பற்றியும் கூறியதைப் போலவே ஐன்ஸ்ரைன் விஞ்ஞானியைப் பற்றியும் பேசினார். "இந்த வழியில் சமாதானத்தையும், பாதுகாப்பையும் கொண்டு வருவதற்காக உலகைப் புரிந்து கொள்ள போராடி வருகிறார்கள், இவற்றை அவர்கள் தங்களின் தனிப்பட்ட அனுபவத்தின் குறுகலான பெரும்நீர்சுழியில் கண்டறிய முடியவில்லை. ஒரு விஞ்ஞான தத்துவத்தின் அடிப்படை விதிகளைக் கண்டறிவதில், "இந்த விதிகளுக்கு எவ்வித தர்க்கரீதியான பாதையும் இல்லை; உள்ளுணர்வு மட்டுமே வழி, அனுபவத்தின் ஒத்துணர்ந்த புரிதலிலேயே இது தங்கி இருக்கிறது..." என்று வாதிட்டார்.
"இந்த வகையான பணியைச் செய்ய ஒரு மனிதன் இந்த வகையில் வேலை செய்ய உதவும் மனதின் நிலை, மத வழிபாடு அல்லது காதலுடன் ஒத்த தொடர்பு கொண்டிருக்கிறது..." என்று ஐன்ஸ்ரைன் குறிப்பிடும் போது, ஹோல்டன் குறிப்பிடுவது போல, விஞ்ஞானத்தைப் பற்றிய ஐன்ஸ்ரைனின் மனோபோக்கில் சில குறிப்பிட்ட "இறையியல் சார்ந்த அடிக்குரல்" இருக்கிறது.
1918ல் ஒரு நிலையற்ற கருத்து, பின்னர் மதத்தைப் பற்றிய ஐன்ஸ்ரைனின் பிந்தைய கருத்துக்களில் மேலும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டதாக தோன்றுகிறது. மக்ஸ் ஜாம்மரின் (ஐன்ஸ்ரைனும், மதமும் என்பதன் ஆசிரியர்) கருத்துப்படி, இந்த விடயம் பற்றிய அவருடைய முக்கிய எழுத்துக்கள், 1930 முதல் 1941 வரையில் இருந்தன. இந்த பிந்தைய அனைத்து எழுத்துக்களும், 1954 கடிதத்தில் ஐன்ஸ்ரைன் வெளிப்படுத்தியது போல அரசுமயப்படுத்தப்பட்ட மதத்தைப் பற்றிய அதே அடிப்படை மனோபாவத்தைக் கொண்டிருக்கிறது. இந்த அனைத்து எழுத்துக்களிலும் அதன் தனிப்பட்ட கருத்துக்களுடன் (தனிப்பட்ட கடவுள் உடன்- personal God-existing as a self-aware entity, not as an abstraction or an impersonal force.) பண்டைய மதத்தை அவர் நிராகரித்தார், ஆனால் 1930களில் இருந்து, ஒரு "பிரபஞ்ச" மதத்தைப் பற்றிய கருத்தை, அதாவது ஒரு தனிப்பட்டிராத (not existing as a person) பிரபஞ்ச கடவுளை வழிபடும் ஒரு முறையை பற்றிய கருத்தை உருவாக்கினார்.
1930ல் நியூயோர்க் டைம்ஸ் இதழுக்காக அவர் எழுதிய, "மதமும், விஞ்ஞானமும்" என்ற அவருடைய கட்டுரையில் [14], அந்த காலத்தில் புத்திஜீவிகள் மட்டத்தில், குறிப்பாக ஐரோப்பாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மதத்தின் வளர்ச்சி பற்றிய ஒரு வரலாற்று கருத்தை ஐன்ஸ்ரைன் அளித்தார். தத்துவார்த்தவியலில், இதே போன்ற நவீன கண்ணோட்டங்களை வெளிப்படுத்தி இருந்த பல ஜேர்மன் இறையியல் ஆசிரியர்களை ஜாம்மர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
பசி, காட்டு மிருகங்கள், நோய் மற்றும் மரணம் ஆகியவற்றின் மீதான பயத்தின் காரணமாக பண்டைக்கால மனிதர்கள் மதக்கருத்துக்களை உருவாக்கி இருக்கக்கூடும். நிகழ்வுகளுக்கு இடையலான தொடர்புகள் மீதான விளக்கமற்ற புரிதல்களுடன், மனித சிந்தனையானது கற்பனையான உயிருள்ள வடிவங்களை---வணங்கப்பட, அமைதிப்படுத்த, இதைப்போல வேறு பல காரணங்களுக்காக ---உருவாக்கியிருக்கக்கூடும், அது தனிநபர்களின் அல்லது சமுதாயத்தின் விதியைக் கட்டுப்படுத்தியது. மதத்தின் இரண்டாவது முன்னேற்றமடைந்த நிலை, "கடவுளைப் பற்றிய சமூக மற்றும் அகநெறிக் கருத்துக்களாக இருந்தன", இது அதைப் பின்பற்றுகிறவர்களை "பாதுகாத்தது, ஒழுங்கமைத்தது, பிரதியுபகாரம் செய்தது மற்றும் தண்டித்தது". ஐன்ஸ்ரைன் இதை ஒருபடி முன்னோக்கி பார்த்து, ஜூடாயிசம் (Judaism) மற்றும் கிறிஸ்துவம் உட்பட இவற்றை "நாகரீகமடைந்த மக்களின் மதங்கள்" என்று குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற மதங்கள் அனைத்துமே, அது பண்டைக்கால நிலையில் இருந்தாலும் சரி அல்லது மிகவும் அபிவிருத்தி அடைந்த விதத்தில் இருந்தாலும் சரி, ஒரு "கடவுளுக்கு மனிதப் பண்பு கற்பிக்கின்ற" குணாம்சத்தை கொண்டிருந்தன. ஐன்ஸ்ரைன் விளக்குகிறார், இவற்றுக்கும் அப்பாற்பட்டு ஒரு மூன்றாவது வகையான கடவுளைப் பற்றிய கருத்து இருக்கிறது, அது ஒரு தனிப்பட்ட குணாம்சமாக இல்லாமல், ஒரு "பிரபஞ்ச மத அனுபவத்தைப்" பற்றியது. மனித ஆசைகளின் மற்றும் நோக்கங்களின் பயனற்ற தன்மையையும், மேன்மையையும் மற்றும் அற்புதமான ஒழுங்கமைப்பையும் உணர்வதன் மூலமாக மட்டுமே இதுபோன்ற ஒரு கடவுளை உணர்வுபூர்வமாக உணரமுடியும், இது இயற்கையிலும், மற்றும் உலக சிந்தனையிலும் அவற்றை வெளிப்படுத்துகிறது."
இது போன்ற ஒரு கடவுளை முன்வைப்பதன் மூலம், ஐன்ஸ்ரைன் அவருடைய இளமைப் பருவத்தில் அவர் படித்த முதல் மெய்யியலாளரான ஸ்பினோசாவின் எழுத்துக்களால் பெருமளவில் ஈர்க்கப்பட்டிருப்பதையே எடுத்துக்காட்டுகிறார். 1920களில் இருந்தும், புதிய 1954 கடிதம் உட்பட பெருமளவிலான கடிதங்களில் இவரை ஐன்ஸ்ரைன் குறிப்பிட்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக, 1932ல் ஐன்ஸ்ரைன் எழுதினார், "மனித சிந்தனை, உணர்வு மற்றும் செயலிற்கான அனைத்திலும் ஊடுருவும் நியதிவாதத்தின் (அனைத்தும் புறப்பொருள் தூண்டுதலாலேயே துணியப்படுகின்றன என்ற கோட்பாடு) சிந்தனையை உறுதியான உடன்பாட்டோடு ஸ்பினோசா தான் முதன்முதலாக முன்வைத்தார்."[15]
அவருடைய நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையில் எழுகையில், வரலாற்று ரீதியாக ஒருவர் விஞ்ஞானத்தை, மதத்தைதோடு ஒத்துவராத எதிராளிகளாக பார்க்கும் அளவிற்கு இறங்கி வந்துவிட்டார்", ஏனென்றால் "காரண காரிய விதியின் அடிப்படையிலேயே பிரபஞ்ச செயல்பாடு நடக்கிறது என்று ஏற்றுகொண்ட ஒரு மனிதர், நிகழ்வுகளுக்குள் குறுக்கிடும் ஓர் உயிரின் சிந்தனையை ஒரு கணம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது... பயத்தை அடிப்படையாக கொண்ட மதமோ, அதே அளவிற்கு சமமாக சிறிதளவு சமூக அல்லது நீதி ஒழுக்கத்தைக் கொண்டிருக்கும் மதமோ அத்தகையவருக்கு எவ்விதத்திலும் உபயோகப்படாது" என்று எழுதினார்.
ஆகவே, விஞ்ஞானமும், மதமும் ஏதோவொரு வகையில் ஒத்துப்போக கூடியவையே என்று ஐன்ஸ்ரைன் கூறுவதாக தோன்றுகிறது. அவர் கடவுள் மற்றும் மதத்தைப் பற்றிய இந்த "பிரபஞ்ச" கருத்தைக் குறிப்பிடுகிறார் என்பதை தெளிவுபடுத்தி ஆக வேண்டும். அதாவது அவர் குறிப்பிடும் மதம், தனிப்பட்ட கடவுளை நம்புபவர்களுக்கும் அல்லது உலகெங்கிலும் கிறிஸ்தவாலயங்களிலும், கோயில்களிலும் மற்றும் மசூதிகளிலும் போதிக்கப்படும் எவ்வித மதங்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.
ஒரு தனிப்பட்ட கடவுளை மறுத்ததற்காக ஐன்ஸ்ரைன் குறிப்பிடத்தக்க தாக்குதலுக்கு உள்ளானார். சினமடைந்த மதகுருமார்களும், மதம் சார்ந்த மக்களும் மதத்தைப் பற்றிய அவருடைய பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் ஆத்திரமடைந்தார்கள். சமூக ஜனநாயகத்திற்கு ஆதரவு காட்டியதற்காக ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு வெளியேற்றப்பட்ட பிரபல இறையியலாளரான போல் தில்லிச்சும் கூட, ஒரு தனிப்பட்ட கடவுள் பற்றிய கருத்தை ஆதரித்து ஐன்ஸ்ரைனுக்கு எதிராக ஒரு விரிவான வாதத்தை எழுதினார்.
அமெரிக்க பொதுமக்களின் கருத்தை பகைத்துக் கொள்ளுவதை ஐன்ஸ்ரைன் தவிர்க்க விரும்பி இருக்க வேண்டும். ஒரு புகழ்பெற்ற சிறப்புமிக்கவராக இருந்தாலும் கூட, ஒரு நாடு கடத்தப்பட்டவராக, அவர் காயப்பட்ட நிலைமையில் இருந்தார். அவர், "நான் ஒரு நாத்திகவாதி இல்லை" என்று குறிப்பிட்டார் [16]. ஆனால் ஸ்பினோசாவை அவர் பாராட்டி இருந்ததுடன் பார்க்கையில், இது சிறிதளவும் சமரசப்படுவதாக இல்லை. ஸ்பினோசாவின் பிரபல வாழ்க்கை வரலாற்றில், ஸ்டீவன் நேட்லர் எழுதுகையில், "ஸ்பினேசாவிடம் இறையியல் மொழி இருந்த போதினும், அது மத சார்பான உணர்விற்கு சலுகை செய்வதுபோல் தோன்றினாலும், அவருடைய கருத்துக்களில் எவ்வித தவறும் இருக்கவில்லை. அவருடைய நோக்கம், மதம் மற்றும் அதன் கருத்துகளின் புனிதத்தன்மையை முற்றிலுமாக உடைப்பது மற்றும் நடுநிலைப்படுத்துவது ஆகியவற்றிற்கு குறைவில்லாமல் இருந்தது..." என்று குறிப்பிட்டார். [17]
ஐன்ஸ்ரைனின் Out of My Later Years என்ற புத்தகத்தை 1950களின் தொடக்கத்தில் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்திருந்த, ஐன்ஸ்ரைனின் நீண்டகால நண்பரும், பிரெஞ்சு இயற்பியல்வாதியுமான மொறிஸ் சோலோவன், மதத்தின் "பிரபஞ்ச" கருத்தைக் குறிப்பிடாமல் இருக்க அவரை இணங்கச் செய்ய முயற்சித்தார், மேலும் மதம் என்ற வார்த்தையை ஐன்ஸ்ரைன் பயன்படுத்துவது, பொதுவாக அது பயன்படுத்தப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று நியாயப்படுத்தி வாதிட்டார். ஐன்ஸ்ரைனின் "மதம்" பற்றிய சிந்தனை முன்அனுமானிக்கப்பட்ட உயர்ந்த கருத்துக்களை ஊக்குவித்தது, அது இந்த பணியை முன்னெடுத்துச் செல்லும் மக்களின் மற்றும் அமைப்புகளின் இருப்பை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்," இது அமைப்புரீதியான மதத்தை ஐன்ஸ்ரைன் நிராகரித்தார் என்பதோடு தெளிவாக முரண்பட்டிருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.
இதற்கு பதிலளிக்கையில், "மனித காரணங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் இருப்பதால், நிஜத்தின் பகுத்தறிவார்ந்த இயற்கையில், தமக்கு இருந்த நம்பிக்கை" உணர்விற்காக "மதம்" என்ற வார்த்தையை விட வேறெதையும் தம்மால் காண முடியவில்லை என்று ஐன்ஸ்ரைன் குறிப்பிட்டார். இல்லையென்றால், "விஞ்ஞானம் வரண்ட அனுபவவாதத்திற்குள் சீர்கெட்டுப் போகிறது." [18] ஒரு மத அனுபவத்திற்கான காரணம் என்ன என்ற ஐன்ஸ்ரைனின் பார்வை, பெரும்பான்மை நம்பிக்கையாளர்களால் சிறிதளவே நம்பப்படக்கூடும் என்று தான் கூற வேண்டும், இவர்கள் அரூப கடவுளைக் கோருபவர்கள். ஆனால் உலகின் சரியான சடவாத பார்வையைப் பற்றிய ஐன்ஸ்ரைனின் உணர்வு மதத்தை சார்ந்த ஒன்றாக இருந்ததாக முரண்பாடாக கூறப்படுவதாக தெரிகிறது.
ஐன்ஸ்ரைனின் கண்ணோட்டங்களுக்குள் ஓர் ஆழமான பார்வையை செலுத்த வேண்டுமானால், அவர் வாழ்ந்த அந்த கொந்தளிப்பான காலத்தையும், ஒரு சோசலிஸ்ட் இயக்கத்துடனான அவரின் தொடர்புகளையும் ஒருவர் கட்டாயம் பார்க்க வேண்டும். ஓர் இயற்பியலாளரும், சோசலிசவாதியுமான ஃப்ரீடறிஜ்(ஃப்ரிட்ஜ்) அட்லர் என்பவருடன் ஐன்ஸ்ரைன் தனிப்பட்ட நட்புறவு கொண்டிருந்தார். ஜூரிச்சில், முதலாம் உலகப் போருக்கு முன்னதாக, விஞ்ஞானம், மெய்யியல் மற்றும் அரசியல் குறித்து அட்லருடன் ஐன்ஸ்ரைன் பல விவாதங்களைச் செய்திருக்கிறார். அட்லர் அவருடைய இயற்பியல் தொழில்வாழ்வை அரசியலுக்கு கொடுத்து விடாமல் இருக்க அவரைத் திசைதிருப்ப முயற்சித்தார். அவர் தந்தை, விக்டர் அட்லர், ஆஸ்திரிய சமூக ஜனநாயக இயக்கத்தின் ஒரு தலைவராக இருந்தார். 1916ல், யுத்தம் குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்ட மறுத்த ஆஸ்திரிய பிரதம மந்திரியை ஃப்ரிட்ஜ் அட்லர் படுகொலை செய்தார். ஐன்ஸ்ரைன் அட்லரின் நடவடிக்கைக்கு உடன்படவில்லை என்ற போதினும், இந்த வழக்கில் அவரின் சிறந்த குணநலன்கள் பற்றி நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாக இருந்தார் [19].
முதலாம் உலக போருக்கு ஐன்ஸ்ரைனின் அமைதிவாத எதிர்ப்பு நன்கு அறியப்பட்டதே, மேலும் மார்க்சிசத்துடன் அவர் ஒருபோதும் உடன்படவில்லை என்றாலும் கூட, அவர் தன்னைத்தானே எப்போதும் சோசலிஸ்ட் என்றே கூறிக்கொண்டார். அவர் ஜேர்மனியில் 1918 நவம்பர் புரட்சியின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். ரோசா லூக்சம்பேர்க்கின் ஸ்பார்டகஸ் (Spartacus) குழுவின் ஓர் உறுப்பினரான பான்ஜா லீஜெர்ஸ்கா, ஐன்ஸ்ரைனின் இரண்டாவது மனைவி எல்சாவின் மகள் இல்ஸவின் தோழியாக இருந்தார். சமூக ஜனநாயக கட்சியின் தலைவர்களின் ஆதரவுடன், வலதுசாரி படையின் ஆட்களால், லூக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் கொல்லப்பட்ட பின்னர், 1918ல் அவர் ஐன்ஸ்ரைனின் வீட்டில் தான் தஞ்சம் புகுந்தார் [20].
இந்த காலக்கட்டத்தில் ஐன்ஸ்ரைன் அவருடைய நண்பர்களின் நம்பிக்கைகளால் சிறிதும் பாதிக்கப்படவில்லை. சமூக ஜனநாயகத்தின் சீரழிவு அல்டரில் செயலில் வெளிப்படுத்திக்காட்டப்பட்டது. 1918ல் தொழிலாளர் கழகங்களின் ஒரு தலைவராக அவர் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், புரட்சியின் தோல்விக்குப் பின்னர் ஆஸ்திரியாவில் ஒரு முதலாளித்துவ பாராளுமன்ற தலைவரானார்.
உண்மை என்னவென்றால் ஜேர்மனியில் சோசலிச அரசியல் வெற்றி பெறாததற்கான காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் மற்றும் பின்னர் வந்த ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்புகள் ஹிட்லர் ஆட்சிக்கு வர உதவியது. இது ஐன்ஸ்ரைனின் கண்ணோட்டத்திலும் ஒரு விளைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு "பிரபஞ்ச" மதத்தில் ஆறுதலடைவதற்கான அவரின் விருப்பத்தின் மூலத்தை நிச்சயமாக இங்கே நாம் பார்க்கலாம். பரந்த சோசலிச இயக்கத்தின் மீதான அவரின் நம்பிக்கை உடைந்தவுடனே, மதத்தின் கடவுளுக்கு மனித பண்பு கற்பிக்கின்ற கருத்துக்களை தாண்டி ஒருபோதேனும் வெகுஜன மக்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஐன்ஸ்டின் சோர்வடைந்துவிட்டார். "விதிவிலக்கான சிறப்புகளைப் பெற்ற தனிநபர்களாலும், விதிவிலக்கான உயர்ந்த சிந்தனை அமைப்பைக் கொண்ட சமூகங்களாலும்" [21] மேற்கொண்டு உயர்ந்து, "பிரபஞ்ச" மதத்தின் உயர் மட்டத்தை எட்ட முடியும் என்ற அவரின் மதிப்பீட்டை, அவர் ஜேர்மன் புரட்சியின் தோல்விக்குப் பின்னர் தான் அறிவுறுத்த தொடங்கினார்.
நிச்சயமாக, அதன் வரலாற்றுரீதியான உள்ளடக்கத்தில், நாத்திகவாதிகள் மீதான ஐன்ஸ்ரைனின் தாக்குதலைப் நாம் மதிப்பிட வேண்டியதாக இருக்கிறது. "மக்களுக்கான அபின்" என்ற மேற்கோளானது, சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச ஆதரவாளர்களிடம் இருந்து ஒரு கொடூரமான பிரச்சார வகையின் ஆதரவிற்கான மனுக்களை ஐன்ஸ்ரைன் பெற்றிருந்தார் என்பதையே அறிவுறுத்துகிறது. 1939 ஆகஸ்டில் நாஜி-சோவியத் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பின்னர் இடது-தாராளவாத பொதுக்கருத்தின் பக்கம் சென்ற கிரெம்ளின் அரசியலை நோக்கி திடீர் நிலைமாற்ற அலையை அவர் உணர்ந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சோசலிசத்தின் அவசியத்தை ஐன்ஸ்ரைன் ஒருபோதும் சந்தேகித்ததில்லை. 1949ல் எழுதும் போது கூட, பனிப்போர் தொடங்கிய பின்னரும், இது தொடர்பாக ஆபத்தான நிலை இருந்தபோதும், ஐன்ஸ்ரைன் சோசலிசத்திற்கான அவருடைய தொடர்ச்சியான ஆதரவை உறுதியாக கூறி வந்தார் என்பதுடன் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஒரு நம்பத்தகுந்த வெளிப்படையான அறிக்கையையும் அளித்துக் கொண்டிருந்தார், மேலும் அதிகாரத்துவம் குறித்த அபாயங்களையும் எச்சரித்தார். "சோசலிசத்தை அடைவதற்கு," அவர் எழுதினார், "சில ஆழ்ந்த கடுமையான சமூக அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது: நீண்டதூர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார மற்றும் அரசியல் சக்தியின் மத்தியமயப்படுத்தப்படுதலை (centralization) எட்டுவதற்கான கண்ணோட்டத்தின் மூலமாக, அனைத்து சக்திவாய்ந்த மற்றும் இறுமாப்புமிக்க அதிகாரத்துவத்தை தடுப்பது எவ்வாறு சாத்தியப்படும்?" [22]
ஐன்ஸ்ரைன் அவரின் வயதிற்கு வந்த வாழ்நாள் முழுவதுமே மதத்தால் எவ்வித பயன்பாடும் இல்லாமல் வாழ்ந்தார், இது அவரை முற்றிலுமாக உருவாக்கப்படாத மத அடிப்படைவாதத்திற்கான ஒரு நோக்கத்தை உறுதியாக ஆதரிப்பவராக இறந்த பின் அவரை அடையாளப்படுத்துகிறது. அவர் தம்முடைய சொந்த குழந்தைகள் மதக் கல்வியைப் பெறுவதையே மறுத்தார் என்பதால், பள்ளிகளில் மதத்தைக் கொண்டு வரும் டெம்ப்ளெட்டன் அமைப்பின் (Templeton Society) முயற்சியை நிச்சயமாக எதிர்த்திருப்பார். அவர் பேசும் ஒருவகையான மத உணர்வு, எந்த மத வடிவத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்றைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் சடவாத இயற்கைக்கு சமமாக்கப்பட்டு கருதக்கூடிய, ஸ்பினோசா மெய்யியலில் இருக்கும் கடவுள் பற்றிய சடவாத கருத்துடன் பெரிதும் பொருந்தி நிற்கிறது.
|