WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Pakistani floods: A man-made not a natural disaster
பாகிஸ்தான் வெள்ளம்: மனிதனால் உருவாக்கப்பட்டதே அன்றி இயற்கை அழிவு அல்ல
Wije Dias
7 August 2010
Use
this version to print | Send
feedback
பாகிஸ்தானில் 80 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கின் விளைவாக விரிவடைந்துவரும் துன்பங்கள், தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி, குறிப்பாக அமெரிக்கா உட்பட அதன் சர்வதேச பங்காளிகள் மற்றும் ஒட்டு மொத்த இலாப முறைமை மீதே அழிவுகரமான அவதூறு சுமத்துகிறது. பருவ மழை இயற்கைச் சக்திகளால் பெய்யும் அதே வேளை, அரசாங்கத்தின் தசாப்தகால அலட்சியம் மற்றும் முறையான திட்டமிடல் மற்றும் உட்கட்டமைப்பு இன்மையாலேயே மனித அழிவு குவிகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இதுவரை 12 மில்லியன் என்றும், சுமார் 132,000 சதுர கிலோமீட்டரில் இருந்த 650,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் நதிம் அஹமட் நேற்றுத் தெரிவித்தார். உத்தியோகபூர்வமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆகும். இது அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் தங்குமிடம், உணவு விநியோகம் மற்றும் துப்புரவான நீர் இன்றி தவிக்கின்றனர்.
வடமேற்கு பாகிஸ்தானை ஏற்கனவே வெள்ளநீர் நாசமாக்கியுள்ளதோடு நாட்டின் தெற்கை நோக்கி ஓடும் சிந்து நதிக்கு வடிந்தோடிக்கொண்டிருக்கின்றது. குறைந்தபட்சம் 70 நகரங்களும் கிராமங்களும் கடந்த 48 மணிநேரமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அரை மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளதோடு சிந்துவில் 11 மாவட்டங்கள் அபாயப் பட்டியலில் உள்ளன. வானிலை ஆய்வாளர்கள் மேலும் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளதால் மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கவுள்ளன.
முன்னெச்சரிக்கை விடுக்காமை அல்லது தயார் நிலையில் இருக்காமை, அத்துடன் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளில் நிலவும் பெரும் பற்றாக்குறை தொடர்பாக ஏற்கனவே பரந்தளவில் சீற்றம் காணப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாங்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், அரசாங்கம் இன்றியமையாத உதவிகளைக் கூட வழங்கத் தவறியமை தொடர்பாக விமர்சிப்பதாக ஒரு தொகை செய்திக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிஃப் அலி ஸர்தாரி தற்போது பிரிட்டனுக்கு பயணித்திருப்பதை குறிப்பிட்ட பத்தி எழுத்தாளர் அயிஷா டம்மி ஹஸ் தெரிவித்ததாவது: "அவர் பாகிஸ்தானுக்கு திரும்பும்போது, அவரது நிரம்பி வழியும் புன்முறுவலைப் போன்றே எதிர்ப்பு ஆறும் நிரம்பிவழியும்."
பாகிஸ்தானில் மில்லியன் கணக்கானவர்கள் துன்பத்தை அனுபவிக்கும் போது ஐரோப்பாவுக்கான தனது பயணத்தை இரத்துச் செய்யத் தவறியமைக்காக எதிர்க் கட்சி அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஸ்ர்தாரியை கடுமையாகக் கண்டித்தனர். "துன்பமான நேரத்தில் ஜனாதிபதி எம்முடன் இருப்பார் என மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில், ஸர்தாரி இன்பப் பயணம் செல்வது வெறுப்பூட்டுகிறது," என எதிர்க் கட்சி சட்ட வல்லுனர் அஷான் இக்பால் வாஷிங்கடன் போஸ்டுக்குத் தெரிவித்தார். ஏற்கனவே அலட்சியத்துக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸர்தாரி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமருனை சந்தித்த பின்னர், குழம்பிப் போயுள்ள பிரிட்டிஷ்-பாகிஸ்தான் உறவுகளைப் பற்றி குறிப்பிடுகையில், "புயல் வரும் புயல் போகும்", என பிரகடனம் செய்தார் --ஆனால் நிதானமாய் கூறினால், வார்த்தைகளின் தேர்வு உயர்ந்தளவில் உணர்ச்சியற்று இருந்தது.
தனது பயணத்தை முன்னெடுக்க ஸர்தாரி எடுத்த முடிவு, நாட்டின் வறுமைப் பிடிக்குள் உள்ள வெகுஜனங்கள் பற்றி ஆளும் கும்பலின் அலட்சத்தையும் ஏளனத்தையும் பிரதிபலிக்கின்றது. ஆனால் அது அவரது அரசாங்கத்தைப் பற்றிக்கொண்டுள்ள ஆழமான அரசியல் நெருக்கடியையும் சுட்டிக் காட்டுகின்றது. வாஷிங்டன் சார்பாக அது இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக நடத்தும் யுத்தம், மற்றும் கோடிக்கனக்கான மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை மேலும் குவிக்கும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி முன்னெடுக்கும் சிக்கன கொள்கைகளால் அரசாங்கம் ஏற்கனவே அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
"பயங்கரவாதம்" பற்றிய விடயத்துக்கு வரும்போது "இரு வழிகளையும் பார்ப்பதாக" பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரிட்டிஷ் பிரதமர் குறிப்பாக விமர்சித்த பின்னரே உறவுகளை ஒட்டு போடுவதற்காக ஸர்தாரி பிரிட்டனுக்குப் பறந்தார். பாகிஸ்தானின் அயல் நாடும் பிராந்திய எதிரியுமான இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக வந்திருந்த வேளை கமரூன் இதை பேசியிருந்ததால் இந்த விமர்சனம் ஆகவும் கசப்பாக இருந்தது. நெருக்கமான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளை, கெமரூனின் கருத்துக்கள், ஆப்கானிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் இராணுவத்தின் இழிவான யுத்தத்தை உக்கிரப்படுத்துமாறு ஸர்தாரிக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கத் தலைமையிலான முயற்சிகளின் ஒரு பாகமாகவே இருந்தது.
ஒரு பக்கம் அமெரிக்க அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவில் தங்கியிருந்தாலும், மறுபக்கம் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கத் தலைமையிலான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான பரந்த வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஸர்தாரி ஏற்கனவே ஒரு அரசியல் கத்தி முனையில் நடந்துகொண்டிருக்கின்றார். பெவ் பூகோள அனுகுமுறை திட்டங்கள் என்ற அமைப்பு கடந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில், 20 வீதமானவர்களே ஸர்தாரியை உறுதியானவராக நம்புகின்றனர். இது அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதவிக்கு வரும்போது 64 வீதமாக இருந்தது. மேலும், 59 வீதமானவர்கள் அமெரிக்காவை ஒரு எதிரியாகக் கணிப்பதோடு 17 வீதமானவர்கள் மட்டுமே அமெரிக்கா பற்றி விருப்ப மனப்பான்மையுடன் நோக்குகின்றனர்.
பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு போன்ற யுத்தத்தால் ஏற்கனவே நாசமாக்கப்பட்டு இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிருப்தியும் சீற்றமும் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பது நிச்சயம். ஒரு ஆண்டுக்கு முன்னர், இஸ்லாமிய போராளிகளை நசுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இராணுவம் ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் 20,000 துருப்புக்களை இறக்கியது. குறைந்தபட்சம் இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததோடு இலட்சக்கணக்கானவர்கள் கூட்டம் நிறைந்த மற்றும் இழிநிலையிலான அகதி முகாங்களில் தங்கத் தள்ளப்பட்டார்கள். இப்போது இவர்களில் அநேகமானவர்கள் இதே நிலைமையை எதிர்கொள்கின்றனர்.
வாஷிங்டனில் இப்போது வெள்ளப்பெருக்கு பற்றி நிரம்பிவழியும் அக்கறை, ஆப்பாக் யுத்த்தம் என சொல்ப்படுவதன் மீது வெள்ளத்தின் சாத்தியமான தாக்கம் பற்றியதாக உள்ளது. அரசாங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை காட்டி, தமது சொந்த நிவாரண உதவிகளை வழங்குவதன் மூலம், இஸ்லாமிய அமைப்புக்கள் முன்னேற்றமடையும் ஆபத்து உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை, இந்தோனேஷியா மற்றும் ஏனைய நாடுகளையும் அழித்து இலட்சக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்கும் மில்லியன் கணக்கானவர்கள் வீடுகளை இழக்கவும் வழிவகுத்த 2004 டிசம்பர் சுனாமியை அடுத்து, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டோலீஸா ரைஸ் தெரிவித்த கருத்துக்களையே இத்தகைய சிடுமூஞ்சித்தனமான கணிப்புக்கள் நினைவூட்டுகின்றன. இந்தத் துன்பம் அமெரிக்காவுக்கு அதன் போக்கை உயர்த்துவதற்கு "ஒரு சந்தர்ப்பத்தை" பிரதிநிதித்துவம் செய்கின்றது என ரைஸ் பிரகடனம் செய்தார். இலங்கையில் முதல் முறையாக தீவில் அமெரிக்க துருப்புக்களை இறக்கவும் இலங்கை இராணுவத்துடன் பிணைப்பை பலப்படுத்தவும் புஷ் நிர்வாகம் சுனாமியைப் பயன்படுத்திக்கொண்டது.
இதே போல்தான் ஒபாமா நிர்வாகத்தின் நிவாரண உதவியும் அமெரிக்க மூலோபாய நலன்களால் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சுதந்திரம் என்ற போலித் தோற்றத்தை பராமரிக்க, முன்னர் பாகிஸ்தான் அரசாங்கமும் இராணுவமும் நாட்டுக்குள் அமெரிக்க இராணுவப் படைகளின் இருப்பை மட்டுப்படுத்தியிருந்தன. மனிதாபிமான உதவி என்ற வகையில், அமெரிக்கா ஒரு அற்பத் தொகையை வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆரம்பத்தில் வாக்குறுதியளித்திருந்த வெறும் 10 மில்லியன் அமெரிக்க டொலரை வியாழக்கிழமை 25 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்த்தியுள்ளது. மறுபக்கம், கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ், அயலில் ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 60 பில்லியன் டொலர்களை வழங்க அங்கீகாரமளித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட அழிவு, பல ஆண்டுகால அலட்சியத்தின் விளைவாகும். பருவ மழை ஒவ்வொரு ஆண்டும் பெய்வதோடு தொடர்ந்தும் வெள்ளம் ஏற்பட்ட போதிலும், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முறையான வெள்ள எச்சரிக்கை முறைமையை மேம்படுத்தவும் வெள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தவறியுள்ளன. தற்போதைய வெள்ளப்பெருக்கும் சரி, காஷ்மீரில் 2005 பூமியதிர்ச்சி அழிவின் போதும் சரி, எந்த இயற்கை அழிவின் போதும் நடவடிக்கை எடுக்க உட்கட்டமைப்பு திட்டமிடப்பட்டவில்லை. 2005ல் அமெரிக்காவில் ஏற்றபட்ட கத்தரினா சூறாவளியின் போதும் சரி, மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு பிரச்சினையிலும் சரி, தனியார் சொத்தாலும் சந்தை எதேச்சதிகாரத்தாலும் ஆளப்படும் சமூக ஒழுங்கின் கீழ் விவேகமான திட்டமிடல் சாத்தியமற்றதாகும். சமுதாயத்தில் அதி வறிய தட்டினரே தவிர்க்கமுடியாமல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள அழிவுக்கான பொறுப்பு, பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீதும் அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் நிச்சயமாக சுமத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வறுமை நிலையும், நூற்றாண்டுக்கு மேற்பட்ட ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் உற்பத்தியாகும். வறியவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான சமூக இடைவெளி, உற்பத்தியின் பூகோள மயமாக்கத்தாலும் பாகிஸ்தானை மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதாலும் கடந்த மூன்று தசாப்தங்களாக விரிவுபடுத்தப்பட்டது. பூகோள பொருளாதார நெருக்கடியின் எழுச்சியுடன், சர்வதேச நிதி மூலதனமானது அரசாங்க செலவுகளில் கடுமையான வெட்டுக்களை கோருகின்றது. இது சமூக உட்கட்டமைப்பில் மேலும் சீரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, 1947ல் பிரிட்டஷ் இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தானாகவும் மற்றும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவாகவும் இனவாத முறையில் பிரிக்கப்பட்டமை, தேசிய எல்லைகளை குறுக்கே கடக்கும் இத்தகைய ஆறுகளில் விசாலமான வெள்ளக் கட்டுப்பாட்டு முறைமையை ஸ்தாபிப்பதற்கு கடக்க முடியாத தடைகளை இட்டுள்ளன. சிந்து நதியின் கட்டுப்பாடு சம்பந்தமாக இரு எதிரிகளும் தமது கசப்பான முரண்பாடுகளை தொடரும் அதேவ வேளை, வெள்ளப்பெருக்கு பாகிஸ்தானை மட்டுமன்றி இப்போது இந்தியக் கட்டுப்பாட்டிலான காஷ்மீரையும் பாதித்துள்ளது. அங்கு நேற்றுவரை 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள்.
சாதாரண உழைக்கும் மக்களின் இன்றியமையாத தேவைகளுடன் இலாப அமைப்பு ஒத்திருக்க முடியாது என்பதை வெளிக்காட்டும் இன்னுமொரு துன்பமே இந்த புதிய அழிவாகும். ஒரே தீர்வு அனைத்துலகவாத சோசலிச தீர்வு மட்டுமே. முதலாளித்துவத்தை தூக்கிவீசவும் மற்றும் வெள்ளம், பூமியதிர்ச்சி போன்ற இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைப்பதற்குத் தேவையான வளங்களை திட்டமிட்டு வழங்கவும் கூடிய, உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தின் மூலம் அதை பதிலீடு செய்யவும் பாகிஸ்தானிலும் தெற்காசியா பூராவும் தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரள வேண்டும்.
|