World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Markets, profits soar amid signs of deepening slump

சரிவு ஆழமாகையில், சந்தைகள் இலாபங்கள் பெரிதும் உயர்கின்றன

Barry Grey
3 August 2010

Back to screen version

திங்களன்று குறைந்த பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளங்களுக்கு மத்தியில் முக்கிய வங்கிகளும் பெருநிறுவனங்களும் பெரும் இலாபங்களை அறிவித்துள்ள நிலையில், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பங்குச் சந்தைகள் அதிகம் உயர்ந்தன. ஐரோப்பாவில் பங்குகள் கண்டத்தின் மிகப் பெரிய வங்கியான HSBC மற்றும் பிரான்சின் மிக அதிக கடன் கொடுக்கும் BNP Paribas ஆகியவை எதிர்பார்த்த வருமானங்களைவிட அதிகம் என்று அறிவித்த பின் மூன்றுமாதம் இல்லாத அளவிற்கு உயர்ந்தன. சுரங்கப் பெருநிறுவனங்கள் BHP Billiton, Rio Tinto ஆகியவற்றின் பங்குகளும் விலை உயர்ந்தன.

அமெரிக்காவில் Dow 208 புள்ளிகள் அல்லது 1.99% அதிகரித்தது. மற்ற முக்கிய குறியீடுகளும் இதேபோன்ற ஏற்றங்களைக் கண்டன. கடந்த வெள்ளியன்று அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் வருடாந்த விகிதத்தில் முதல் காலாண்டில் இருந்த 3.7% ஐ விட, 2008 கடைசிக்காலாண்டில் இருந்த 5.0% ஐ விட 2.4 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்று வணிகத்துறை கொடுத்த அறிக்கை வந்த போதிலும் இந்த ஏற்றம் நடந்துள்ளது. எதிர்மறைப் பொருளாதாரத் தகவல்கள் திங்களன்று ஜூலை மாதம் அமெரிக்க உற்பத்தித் துறையில் சரிவு என்று வந்த அறிக்கையினால் வலுப்பெற்றன.

முன்னதாக ஜூலை மாதம் சர்வதேச நாணய நிதியம் உலகெங்கிலும் அடுத்த 18 மாதங்களுக்கு குறைவான பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணித்து, 2011 இற்கான அதன் முந்தைய அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, இலத்தின் அமெரிக்காவில் முக்கிய நாடுகளுக்கான மதிப்பீடுகளை கீழ்நோக்கி திருத்தியது.

இத்தகைய இரத்தச்சோகை பிடித்த வளர்ச்சி விகிதங்கள் வேலையின்மை கிட்டத்தட்ட மந்த நிலையில்தான் பல மாதங்களுக்கும், ஏன் ஆண்டுகளுக்கும் கூட, இருக்கும் என்பதை உறுதிபடுத்துகின்றன. விரைவில் வேலைகள் நிலைமை பற்றி கணிசமான முன்னேற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று சாதாரணமாக அமெரிக்க அதிகாரிகள் அறிவிப்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது.

ஐரோப்பாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசாங்கமும் மிகக்கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதுடன், நுகர்வு வரிகளை உயர்த்தி, சமூகநலத் திட்டங்களை அகற்றும் விதத்திலும் செயல்படுகின்றது. அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் அதன் மோசமான ஊக்க முயற்சிகளைக் கூட கைவிட்டுள்ளது. வேலையின்மை விகிதத்தைக் குறைக்கவோ, 26 மில்லியன் வேலை இல்லாதவர்கள், குறைந்த தகுதிக்கான வேலைகளில் இருக்கும் நிலையை மாற்றவோ அது எத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை. இதில் 6 மாதங்களுக்கும் மேலான வேலையில் இல்லாதவர்கள் கிட்டத்தட்ட 7 மில்லியன் பேர் அடங்குவர். மாறாக அது வரவிருக்கும் மாதங்களிலும் அடிப்படைச் சமூகநலத் திட்டங்களை வெட்டுவதற்கு உறுதி கொண்டுள்ளது.

தேக்கம் அடைந்துள்ள அல்லது குறைந்த விற்பனை மற்றும் குறைந்த இலாபக் காலங்களிலும் சர்வதேச முதலாளித்துவம் பரந்த வேலையின்மையை பயன்படுத்தி வேண்டுமென்றே ஊதியங்களைக் குறைத்தல், உற்பத்தியை அதிகரித்தல், பெருநிறுவன இலாபங்களை அதிகரித்தல், ஆகியவற்றின் விளைவுகளை பற்றி திங்களன்று நிதியச் சந்தைகள் கொண்டாடின.

ஐரோப்பாவில் Stoxx 600ல் பங்கு குறியீட்டில் இருக்கும் கிட்டத்தட்ட 60 சதவிகித நிறுவனங்கள் ஜூலை 12ல் இருந்து பகுப்பாய்வாளர்களின் கணிப்பைவிட அதிகமாக வருவாயை ஈட்டியுள்ளன. அமெரிக்காவில் Standard & Poor’s 500 பங்குக் குறியீட்டில் உள்ள 70% நிறுவனங்களி்ன் வருமானங்கள் பற்றிய தகவலில் விற்பனை 9 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், இலாபங்கள் ஓராண்டிற்கு முன் இருந்ததைவிட 42 சதவிகிதம் அதிகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

வங்கியாளர்களும் பெரும் முதலீட்டாளர்களும், மத்திய வங்கிக் கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னன்கே திங்களன்று ஒரு உரையில் மத்திய வங்கி கூட்டமைப்பு வோல் ஸ்ட்ரீட்டிற்கு கொடுக்கும் கடனைக் கிட்டத்தட்ட வட்டியின்றி கொடுக்கும் விதத்தில் வட்டிவிகிதங்களை பூஜ்யத்தை ஒட்டி இருக்கமாறு தொடர்ந்து செய்யும் என்பதை உறுதிபடுத்தியதில் பெரும் ஊக்கம் பெற்றனர். அதே நேரத்தில் அவர் வேலையின்மை விகிதம் காலவரையற்று மிக அதிகமாகத்தான் இருக்கும் என்பதைத் தெளிவாக்கி, வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்கு மத்திய வங்கி கூட்டமைப்பிடம் திட்டங்கள் ஏதும் இல்லை என்றும் கூறிவிட்டார்.

அதே தினம் ஜனாதிபதி ஒபாமா ஒரு தொலைக்காட்சிப் பேட்டி கொடுத்தார்; அதில் பொருளாதாரக் கொள்கைகளின் வெற்றியைப் பாராட்டிப் பேசி, முழு மீட்பு வழியில் அமெரிக்கா “பாதிக்கும் மேல் வந்துவிட்டதாக” அறிவித்தார். ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர் 2009ல் 25 சதவிகித ஊதிய இழப்பை அனுபவித்துள்ள நிலை, வீடுகள் ஏலத்திற்கு விடப்படுவதால் ஆண்டிற்கு ஒரு மில்லியன் குடும்பங்களுக்கும் மேல் வீடுகளை இழந்துள்ள நிலை மற்றும் 1.4 மில்லியன் மக்கள் 99 வாரங்களாக வேலையில்லை, பலரும் அனைத்து நலன்களையும் இழந்து ரொக்க வருமானமின்றி உள்ளனர் என்ற நிலையில், ஒபாமா இவ்வாறு கூறுகிறார்.

ஐயத்திற்கு இடமின்றி கிரேக்கத்தில் சமூக ஜனநாயக அரசாங்கம் வார இறுதியில் பார ஊர்தி சாரதிகளின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தைப் பயன்படுத்தியதில் வெற்றி அடைந்துள்ளது பற்றியும் நிதியச் சந்தைகள் உற்சாகம் அடைந்துள்ளன.

பொருளாதார வல்லுனரும் நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளருமான போல் க்ருக்மன் திங்களன்று ஆளும் உயரடுக்கின் வர்க்கப் போர் மூலோபாயம் பற்றி வெளிப்படையாக எழுதினார். “ஒருக்காலத்தில் நினைத்தும் பார்க்கமுடியாத தரத்திற்கு பொருளாதார இடர்கள் வந்துள்ள நிகழ்வுப்போக்கு இப்பொழுது புதிய வழமை ஆகிக்கொண்டிருக்கிறது என்பதற்கான பெருகிய சான்றுகளைப் பற்றி, நம் ஆளும் உரடுக்கு சிறிதும் கவலைப்படவில்ல.”

“அதிகாரத்தில் இருப்பவர்கள் விரைவில், உயர் வேலையின்மை விகிதம் கட்டமைப்பிலேயே உள்ளது, பொருளாதார நிலைமையின் நிரந்தரமான ஒரு பகுதி என்று அறிவித்துவிடுவர்” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “இப்பொழுதில் இருந்து இரண்டு ஆண்டுகளில் வேலையின்மை இன்னும் உயர்ந்து காணப்படும், இப்பொழுது இருப்பதைவிட மிக அதிகமாக இருக்கும்….”என்றும் கூறியுள்ளார்.

இதுவரை இத்தகைய கொள்கையை சுமத்த முதலாளித்துவத்திற்கு உதவியுள்ள முக்கிய காரணி தொழிற்சங்கங்களின் துரோகமும் உடந்தையும் ஆகும். ஐரோப்பாவில் மத்தியதர “இடது”குழுக்கள் என்று தம் நட்பு அரசியல் அமைப்புக்களின் உதவியினால் தொழிற்சங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி கலைத்துவிட உதவுகின்றன. குறிப்பாக கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இது நடைபெறுகிறது. இவை மட்டுப்படுத்தப்பட்ட பெயரளவிலான வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்களை நடத்துகின்றன; அதே நேரத்தில் தங்கள் அரசாங்கங்களுடன் சர்வதேச வங்கிகள், நிதியச் சந்தைகள் கோரும் வெட்டுக்களைச் சுமத்த ஒத்துழைக்கின்றன.

அமெரிக்காவில் AFL-CIO மற்றும் போட்டி வெற்றிக்கான மாற்றம் (Change-to-Win) தொழிற்சங்கக் கூட்டமைப்பும் அரசியல் நிலைப்பாட்டில் சிறிது மாற்றம்கூட கொண்டுவரமுடியவில்லை. அவை எந்தத் திட்ட்டதையும் முன்வைப்பதில்லை, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, தங்கள் முயற்சிகள் அனைத்தையும் ஒபாமா நிர்வாகத்திற்கு அரசியல் மூடுதிரை கொடுக்க பயன்படுத்துகின்றன, தொழிலாள வர்க்கத்தின் சீற்றத்தை பொருளாதார தேசியவாதம் என்ற பிற்போக்குவாத திசைகளில் திசை திருப்புகின்றன.

அமெரிக்கத் தொழிற்சங்கங்களின் பங்கு கடந்த வாரம் ஒபாமா டெட்ரோயிட்டில் இரு கார்த் தயாரிப்பு ஆலைகளுக்கு வந்தபோது ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தால் நன்கு காட்டப்பட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் நிறுவனங்கள் தன்னால் பிணை எடுக்கப்பட்டு அமெரிக்க கார் தொழிற்துறை காப்பாற்றப்பட்டது பற்றி ஒபாமா பெருமையாகப் பேசினார்; இது அவருடைய கார்த் தயாரிப்பு நிபுணர்குழு (Auto Task Force) புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களின் ஊதியங்களை 14 டாலர் என்று பழைய தொழிலாளர்களுடைய ஊதியத்திற்குப் பாதி என்று குறைத்தது, ஆலைகளை மூடியது, பல்லாயிரக்கணக்கான கார்த் துறையுடன் தொடர்புடைய வேலைகளைக் குறைத்தது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் சுகாதார நலன்களை வெட்டியது ஆகியவை பற்றி ஏதும் கூறவில்லை.

செப்டம்பர் 2008 நிதியக் கரைப்பிற்கு இரு ஆண்டுகளுக்கு பின்னர், வங்கிகள் முன்னைக்காட்டிலும் இறுக்கமான பிடியைத்தான் அரசாங்கக் கொள்கைகள்மீது கொண்டுள்ளன. அவை வெகுஜன வேலையின்மையை தொடர்ந்து பயன்படுத்தி தொழிலாளர்களின் ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை அழிக்கும். இந்த நிலைமை தொழிலாள வர்க்கம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடியில் இருந்து முறித்துக் கொண்டு ஒரு பாரிய தொழில்துறை, அரசியல் போராட்டத்தை நிதிய பெருநிறுவன தன்னலக்குழு மற்றும் அதன் அரசியல் அடியாட்களுக்கும் எதிராக முன்னெடுக்கும்வரை நீடிக்கும்.

இதற்கு அனைவருக்கும் வேலைகள் அளிக்கக்கூடிய பாரிய பொதுப்பணிகளை ஆரம்பிக்கவும் மற்றும் பெருவங்கிகள், நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுதல் ஆகியவை தேவையாகும்.