World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greece: Union betrayal of truck driver’s strike sets stage for further attacks

கிரேக்கம்: பார ஊர்தி சாரதிகள் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கம் காட்டிக் கொடுத்ததானது மேலதிக தாக்குதல்களுக்கு அரங்கமைக்கிறது

By Robert Stevens
3 August 2010

Back to screen version

30,000 டிரக் டிரைவர்களால் நாடு தழுவிய வேலைநிறுத்தம் 6 நாட்கள் மேற்கோள்ளப்பட்டதை தொழிற்சங்கம் காட்டிக் கொடுத்ததானது PASOK பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் ஆட்சி, முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரான அதன் தாக்குதலை முடுக்கிவிட அரங்கு அமைத்துக் கொடுத்துள்ளது.

கடந்த வாரம் பார ஊர்தி சாரதிகள் சங்கமான Panhellenic Union of Commerical Land Transportations (PSXEM) வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதற்கு ஒரு குறுகிய பெரும்பான்மையை வாக்கெடுப்பில் பெறுவதில் வெற்றி பெற்றது. சமூக ஜனநாயக PASOK அரசாங்கத்தின் முதல் கோரிக்கைகளை அனைத்தையும் ஏற்றவிதத்தில் உடன்பாடு காண தொழிலாளர்கள் வாக்களித்தனர்.

அரசாங்கமானது பார ஊர்திகளுக்கு உரிமம் வழங்கும் முறையை நீக்குவதற்கான முடிவை எதிர்த்து பார ஊர்தி சாரதிகள் வேலை செய்வதை நிறுத்தியபோது, ஜூலை 26ல் வேலைநிறுத்தம் தொடங்கியது.

இப்பொழுதுள்ள முறைப்படி பார ஊர்தி சாரதிகள் அரசாங்கத்திற்கு 100,000 முதல் 200,000 யூரோக்கள் வரை அரசாங்கத்திற்கு தங்கள் பார ஊர்திகளை ஓட்ட உரிமம் பெறுவதற்கு கொடுக்கின்றனர். இதன் பின் பார ஊர்தி உரிமையாளர்கள் இந்த உரிமங்களை மீண்டும் விற்க முடியும். இந்த நடவடிக்கைகள் “மூடப்பட்ட வியாபாரம்” என அழைக்கப்படுபவற்றில் “தாராளமயம்” கொண்டுவரக்கூடும் என்று அஞ்சிய பல சாரதிகள், தங்களை இது திவாலாக்கக்கூடும், உரிமங்களையும் இழக்க வைக்கும் என்று நினைத்தனர். ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியமும் கிரேக்கத்தின் பிணை எடுப்புப் பொதிக்கு 110 பில்லியன் யூரோக்கள் ($142 பில்லியன்) கொடுக்கும்போது சுமத்திய நிபந்தனைகளில் ஒன்று தாராளமயமாக்கப்பட வேண்டும் என்பதாகும்.

பார ஊர்தி துறையின் மூலோபாய முக்கியத்துவம் இந்தத் தொழில்துறை நடவடிக்கை விரைவில் பொருளாதாரம் முழுவதையும் முடக்கி, நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறைகளையும், கிரேக்கத் தீவுகளில் உணவுத் தட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியது. வார இறுதிக்குள் பெரிய ஏதென்ஸ் பகுதியில் 95 சதவிகித பெட்ரோல் நிலையங்களில் இருப்பு இல்லாமல் போயின. இதே போன்ற நிலைமை தான் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான தெசலோனிகியிலும் ஏற்பட்டது.

வேலைநிறுத்தத்தின் மூன்றாவது நாளன்று அரசாங்கம் அவசரச் சட்டம் ஒன்றை சிவில் அணிதிரள்வு ஆணை (Civil Mobilisation Order) என்ற வடிவமைப்பில் இயற்றியது. இதன்படி பார ஊர்தி சாரதிகள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் இல்லாவிடில் பார ஊர்திகள் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படும், அவர்களும் ஐந்து ஆண்டுகால சிறைவாசத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று இருந்தது.

அப்படியிருந்தும்கூட, பார ஊர்தி சாரதிகள் ஆணையை ஏற்க மறுத்து, வேலைநிறுத்த நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி, வெள்ளியன்று வேலைநிறுத்தம் தொடரவேண்டும் என்றும் வாக்களித்தனர். இதை எதிர்கொள்ளும் விதத்தில் இராணுவம் அணிதிரட்டப்பட்டது, இராணுவ வாகனங்கள் விமான நிலையங்கள், மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டன. எதிர்ப்புக்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலகப் பிரிவு பொலிஸ் பார ஊர்தி சாரதிகளை தாக்கியது. மற்ற அதிக ஆயுதங்களேந்திய பொலிஸ் பிரிவுகள் பார ஊர்திகளை சுத்திகரிப்பு நிலையத்திற்குக் காவலாக உடன் சென்றன.

பார ஊர்தி சாரதிகளின் நடவடிக்கையானது PASOK யின் கடும் சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்குத் தீவிர சவாலாயிற்று. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டு இறுதியில் தோற்கடிக்க உத்தரவாதம் கொடுத்தன.

வேலைநிறுத்தம் சிதைக்கப்பட்டதற்கு PSXEM ஆனது கிரேக்கத்தின் இரு தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் ஆதரவையும் பெற்றது. கிட்டத்தட்ட பல மில்லியன் தொழிலாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு GSEE எனப்படும் கிரேக்க பொதுத் தொழிலாளர் கூட்டமைப்போ அல்லது ADEDY எனப்படும் ஆட்சி ஊழியர்கள் கூட்டமைப்போ, ஒரு வேலைநிறுத்தம் அல்லது எதிர்ப்பைக் கூட டிரைவர்களுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யவில்லை. GSEE யின் வலைத்தளம் பூசலைப் பற்றி ஒரு கட்டுரை அல்லது அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.

பெருகிய முறையில் கடினமான வேலைநிறுத்தம் முழுவதையும் PSXEM ஆனது போக்குவரத்து அமைச்சரகத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஞாயிறன்று சாரதிகள் மீண்டும் வேலைக்குத் திரும்ப அழைப்புவிடுத்தது. அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தில் இருந்து பெரும் அழுத்தம் வந்த போதிலும், இராணுவம் அணிதிரட்டப்பட்டு, தொழிற்சங்கங்களின் இழிந்த பங்கு இருந்தபோதிலும், ஒரு குறுகிய பெரும்பான்மையில் தான் சாரதிகள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வாக்களித்தனர்.

தகவல்களின்படி, அரசாங்கமானது சிவில் அணிதிரள்வு ஆணையைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டால் வேலைநிறுத்தம் முடிவிற்கு வரும் என்று ஜொர்ஜாடோஸ் கூறியதாகத் தெரிகிறது. ஞாயிறு மாலை கடைசி நேரத்தில் அரசாங்கமானது தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை முறியடித்து விட்டதை உட்குறிப்பாக ஒப்புக் கொண்டு, ஆணையைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டது.

PSXEM வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்ட அறிக்கையில் கூறுவது: “சந்தைக்கு உணவு, எரிபொருள் இன்னும் பல பொருட்கள் வழங்கப்படாததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு குறுகிய பெரும்பான்மையின் பொறுப்புணர்வை அடுத்து வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.”

“சந்தை” செயல்படுவது உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று மேற்கோளிட்டு, PSXEM இன் அறிக்கை அரசாங்கத்தின் அறிக்கை போலவே அமைந்திருந்தது. அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஜியோர்ஜோஸ் பெடலோடிஸ் “சந்தைகள் திறக்கப்பட வேண்டிய கடமை இருந்த தால்” வேலைநிறுத்தம் முடிக்கப்பட வேண்டியிருந்தது என்றார்.

மேலும் PSXEM வெளிப்படுத்தியுள்ள “பொறுப்புணர்வு” அதன் உறுப்பினர்களுடைய நலன்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கும் நாட்டிற்குமான கடமையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

கிரேக்க நாளேடு Kathemerini இந்த உடன்பாட்டினால் அரசாங்கமானது சாரதிகளிடம் தான் 2013 காலக்கெடு, அவர்களின் தொழில் பிறருக்கு அளிக்கப்படுவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடத்தாது என்றும் அதையொட்டி கொடுக்கப்படும் உரிமைகள் இனி தடைக்குட்படாது” என்பதையும் தெளிவுபடுத்தி விட்டது என்று கூறியுள்ளது. மேலும் போக்குவரத்து மந்திரி டிமிடிரிஸ் ரெப்பாஸ் தான் “வரித் தள்ளுபடிகள், சமூக நலன்களில் சரிசெய்தல், சிறப்பு விகிதங்களில் வணிக வளர்ச்சியை சாரதிகள் பெரும் வாய்ப்பு ஆகியவை பற்றிப் பேசத்” தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றி கோடிட்டுக் காட்டும் சட்டவரைவு அடுத்த மாதம் அளிக்கப்பட உள்ளது. உடன்பாட்டின் அடிப்படையில் ரெப்பாஸ் தான் தொழிற்சங்கங்களுடன் “அவர்கள் மற்றொரு வேலைநிறுத்தம் செய்யாமல் இருந்தால்” இன்னும் பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாகக் கூறினார் என்று Kathemerini தகவல் கொடுத்துள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், அரசாங்கத் திட்டத்தின் முக்கிய தளம்—சாலை சரக்குத் துறையை இன்னும் போட்டிக்கும் கட்டுப்பாடற்ற தன்மைக்கும் திறந்துவிடுவது—இப்பொழுது சாரதிகள் சங்கங்களால் முழுமையாக ஏற்கப்பட்டுவிட்டது.

போக்குவரத்து மந்திரி ரெப்பாஸ் டிரக் டிரைவர்கள் அடைந்த தோல்வி கிரேக்க அரசாங்கம் அதன் பெரும் பொதுத்துறைக் கடனை அடைப்பதற்காக கடன் வாங்குவதைத் தொடர்வதில் முக்கியம் கொண்டுள்ளது என்று குறிப்பாகத் தெரிவித்தார். “இத்துறையைத் திறந்துவிடுவதைத் தவிர, மாற்றீட்டுத் தீர்வு ஏதும் இல்லை, ஏனெனில் நாங்கள் IMF, EU விற்கு உறுதியளித்துள்ளோம்.”

பார ஊர்தி சாரதிகள் வேலைநிறுத்தம் ஏதென்ஸுக்கு “டிரோய்கா” எனப்படும் ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் IMF ஆகியவற்றில் இருந்து 30 பேர் அடங்கிய குழு ஒன்று வந்ததுடன் சேர்ந்திருந்தது. அவர்களுடைய நோக்கம் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டம் செயல்படுத்தப்படுவது பற்றி இன்னும் மதிப்பீடு செய்தல் ஆகும். அதன் வெற்றியைப் பொறுத்துத்தான் இன்னும் 9 பில்லியன் யூரோ கடனுக்கு ஒப்புதல் உள்ளது.

இந்த வருகை பற்றிக் குறிப்பிட்ட பைனான்சியல் டைம்ஸ், “டிரோய்கா எனப்படுவது இன்னும் விரைவாக பொருள்கள், பணிகள் சந்தைகளை தாராளமயமாக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அடுத்த சுற்றுத் தாராளமயம் வக்கீல்கள், உறுதிப் பிரமாணம் கொடுப்பவர்கள், மருந்துகள் விற்பனையாளர்கள், கட்டிடக்கலைஞர்கள், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் கணக்காளர்களைக் கருத்திற் கொள்ளும்” என்று கூறியுள்ளது.

திங்களன்று கிரேக்கச் செய்தித்தாட்களின் தலைப்புக்கள் பொதுப் பயன்பாடுகள் மற்றும் அமைப்புக்களில் (DEKO) இன்னும் ஆயிரக்கணக்கான வேலைக் குறைப்புக்கள் பற்றிய அரசாங்கத்தின் திட்டத்தைக் கூறின. PASOK ஆனது 900 பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றாக இணைப்பது, நூற்றுக்கணக்கான பணிகள், துறைகள் ஆகியவற்றைத் தகர்ப்பதின் மூலம் கிட்டத்தட்ட 500 பில்லியன் யூரோக்களை செலவினங்களில் சேமிக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது.

Adesmeytos Typos, ஆயிரக்கணக்கான வேலைகளை DEKO வில் வெட்டுவது என்பது “வீங்கியுள்ள ஆட்சித் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான டிராய்க்காவின் ஆணைகளுடன் இயைந்துள்ளது” என்று கூறியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் இருந்து, PASOK ஆனது தொழிலாள வர்க்கத்தின் பெருகிய சீற்றத்தையும் மீறி தொடர்ந்து சிக்கன நடவடிக்கைகளுக்கு சட்டம் இயற்றி வந்துள்ளது. தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி இடது குழுக்களிலுள்ள அதன் ஆதரவாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினால் தான் அரசாங்கம் பல பில்லியன் கணக்கான வெட்டுக்களைச் செயல்படுத்த முடிந்தது.

தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதலும் ஆளும் உயரடுக்கை இன்னும் தாக்குதல்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது. ஜூன் மாதம் முதலீட்டு நிறுவனமான Levant Partners ன் Antonis Kamaris கிரேக்க அரசாங்கமானது கப்பலுக்கு அடியே சேர்ந்துகொள்ளும் குப்பைத் தொகுப்பு போல் குவிந்துள்ள நலன்களை தொடர்ந்து அகற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பார ஊர்தி சாரதிகள் தோல்வி கிரேக்கத்தின் ஆளும் வட்டங்களால் தங்கள் நீண்ட கால நோக்கங்களுக்கு முக்கியம் என்று பாராட்டப்படுகிறது. “மூடப்பட்ட” தொழில்களைத் தாராளமயமாக்குதல் என்பது வருங்காலத்திற்கு கிரேக்கப் போட்டிப் பொருளாதாரத்திற்கு முக்கியம் என்று ஏதென்ஸைத் தளமாக க் கொண்ட IOBE சிந்தனைக்குழுவின் Yannis Stournaras கூறியுள்ளார். “நிதிய உறுதிப்பாட்டைவிட இது இன்னும் முக்கியமானது, ஏனெனில் சந்தையின் செயல்பாடு இதையொட்டி தடைக்கு உட்படுகிறது. இச் சந்தைகள் திறக்கப்பட்டுவிட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் உயரும்.”

ஆனால் மற்றவர்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை, தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவுகளும் பூசலில் தள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்னர்.

Public Power Corporation உடன் வரவிருக்கும் பூசல்களைப் பற்றிப் பேசுகையில், Panteion பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் துணைப் பேராசிரியராக உள்ள Seraphim Seferiades கூறினார்: “இது ஒரு கடினமான மோதலாக இருக்கும். இப்பொழுது அரசாங்கம் வெற்றிபெற்றது போல் தோன்றும்.ஆனால் இப்பொழுது முதல் அனைத்தும் அமைதியாகப் போய்விடும் என்ற முன்கருத்து தவறாகிவிடும்.”

“பார ஊர்தி சாரதிகள் ஒரு தனிக் குழுவினர், அரசாங்கம் அவர்களைப் பேச்சுமுறையில் தோற்கடிப்பது எளிதாயிற்று. ஆனால் இன்னும் கடுமையான வேலைநிறுத்தங்களை நாம் காணக்கூடும், எதுவும் எளிதில் சமூக அழுத்தங்களைச் சூடேற்றும்.”

அரசாங்கம் அதன் தாக்குதலை விரிவாக்குகையில் இன்னும் வர்க்கப் போராட்டம் வரக்கூடும் என்று Seferiades சரியாக எதிர்பார்க்கையில், கிரேக்க பார ஊர்தி சாரதிகள் மூலம் பெறப்பட்டுள்ள அனுபவங்கள் இப்போராட்டங்களின் வருங்காலப் போக்கிற்கு எச்சரிக்கையாக இருக்கும். கிரேக்கத்திலும், ஐரோப்பா முழுவதிலும் தொழிற்சங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை சிதைத்து தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்கின்றன.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள் அவற்றின் பிற அரசாங்கக் கருவிகள் உட்பட தொழிற்சங்கங்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்துடன் இணைந்துள்ளது. சமூகத்தை சோசலிச மறுகட்டமைப்பிற்காக போராடுவதற்கான போராட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு எதிரான முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழிலாள வர்க்கப் போராட்ட அமைப்புக்களை நிறுவுதல் அவசியாகும்.