WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
Indian security forces crack down on Kashmiri protests
காஷ்மீரிகளின் ஆர்ப்பாட்டத்தை இந்திய பாதுகாப்பு படைகள் ஒடுக்கினர்
By Arun Kumar
28 July 2010
Back
to screen version
இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீரில் இந்தியப் படைகளை ஈடுபடுத்தியும், கடந்த ஆறு வாரங்களில் ஏற்பட்ட மோதல்களில் 17 அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பலியாகியுள்ளபோதிலும் போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு (APHC) விடுத்த 5 நாள் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்ட அழைப்பை ஏற்று கடந்த திங்களன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டன.
மாநிலத் தலைநகரான ஸ்ரீநகரில் ஜூன் 11ந் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசினர். இதில் தஃபைல் மட்டூ என்ற 17வயது மாணவன் கொல்லப்பட்டதால், கடந்த மாதம் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. இதுதவிர, போலீசார் மற்றும் மத்திய துணைப் போலிஸ்படையினருடன் ஆங்காங்கே நடைபெற்ற மோதல் சம்பவங்களில் 16 பேர் இறந்தனர். பலியானவர்களில் 9 வயதேயான சிறுவனும் உள்ளடங்குகி்றான்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் அதன் கூட்டான தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் மேலும் அடக்குமுறையைக் கையாண்டது. பாதுகாப்புக்கான தேசிய அமைச்சரவைக் குழு, இம்மாத தொடக்கத்தில் கூடி காஷ்மீருக்கு இராணுவத்தினரை அனுப்பி போராட்டங்களை ஒடுக்க உத்தரவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் இவ்வாறு இராணுவத்தை ஈடுபடுத்தியது இதுவே முதன்முறையாகும். போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தத்தை சமாளிப்பது தொடர்பாக மாநில அரசுக்கு அறிவுரை வழங்க மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அனுப்பப்பட்டார்.
ஸ்ரீநகரிலும் பிற நகரங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் சாலைகளில் ரோந்து சுற்ற பயன்படுத்தப்பட்டதுடன், ஊரடங்கு சட்டமும் அமுல்ப்படுத்தப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளாக ஆயுதந் தாங்கிய பிரிவினைவாதக் குழுக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக இந்திய பாதுகாப்புப் படையினர் சட்டவிரோத கைது, சித்தரவதை, வழக்கு விசாரணை ஏதுமின்றி கொல்லுதல் போன்ற வழிகளைக் கையாண்டு வரும் இழிபெயரை கொண்டதாகும்.
கடந்த ஜூன் மாதம் போராட்டங்கள் வலுத்தபின் ஜம்மு-காஷ்மீரில் 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை ஏதுமின்றி சிறையில் தடுத்துவைக்க வகைசெய்யும் கொடுமையான பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (PSA) குறைந்தது 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் APHC தலைவர் சையத் அலி ஷா கிலானி, காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மியான் அப்துல் கயூம், பொதுச்செயலாளர் குலாம் நபி ஆகிய இரு முக்கிய வழக்கறிஞர்களும் அடங்குவர். தஃபைல் மட்டூவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதாலும் மற்றும் கற்களை வீசியதாலும் 15 வயது பள்ளி மாணவன் சேக் அக்ரம், "மாநிலத்திற்கு எதிராக சதித்திட்டம் வகுத்ததாகவும்” குற்றம்சாட்டப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்தியாவில் இருந்து தனி சுதந்திரம் வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும் பிரிவினைவாதக் குழுக்கள் ஏற்கனவே போராடி வந்ததன் தொடர்ச்சிதான் தற்போதைய போராட்டங்கள் எனக் கருதிவிடக் கூடாது. விலைவாசி உயர்வு, வறுமை அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் மோசமடைந்துவரும் மாநிலத்தின் சமூகநிலைமையினால் குறிப்பாக இளைஞர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையே அவர்களின் போராட்ட ஈடுபாடு எடுத்துக்காட்டுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் ஆர்ப்பாட்டம், பந்த், ஊரடங்கு போன்றவற்றால் பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வெறுப்படைந்து வருவதன் வெளிப்பாடுதான் இந்த வன்முறைக்கான அடிப்படைக் காரணம். பொருளாதார வளர்ச்சி ஏற்படும் மற்றும் டெல்லி அரசிடமிருந்து ஏதோ ஒருவகையில் தன்னாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கைகளையெல்லாம் அவர்கள் இழந்துவிட்டனர் என எகனாமிஸ்ட் இதழின் கட்டுரை விளக்குகிறது.
உடல்நலம், தகவல் தொடர்பு, கல்வியறிவு உள்ளிட்ட பல துறைகளில் ஜம்மு,காஷ்மீர் பிற மாநிலங்களைவிட பின்தங்கி உள்ளது என்பது கடந்த 2007ல் மாநில அரசு முதன்முறையாக மேற்கொண்ட பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. மாநிலத்தின் தனிநபர் வருவாய் தேசிய சராசரியில் மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவிலேயே அதாவது ரூ.17,174 என்ற குறைந்த அளவிலேயே (367 அமெரிக்க டாலர்) உள்ளது. வேலைவாய்ப்பற்றோர் விகிதம் தேசிய அளவிலான 3.09 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இங்கு 4.21 சதவீதமாக உயர்ந்துள்ளது'' என தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) மதிப்பிட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறும்போது, பாகிஸ்தான்தான் போராட்டங்களுக்கு காரணம் குற்றம் சாட்டினார். "எல்லைப் பகுதியில் ஊடுருவும் அந்நிய சக்திகளும், நாட்டின் ஐக்கியத்திற்கு சவாலாக விளங்கும் பிரிவினைவாதிகளும், பள்ளத்தாக்கில் பதற்றத்தையும், வன்முறையையும் உருவாக்க முயற்சிக்கின்றன'' என்றார் அவர். பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து, பொருளாதார உதவியும் அளிக்காததால் இந்திய ஆட்சிக்கு உருவாக்கியுள்ள பரந்த எதிர்ப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, இஸ்லாமிய பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி அளித்து வருவதாக இந்திய ஆளும்வர்க்கம் வழக்கமான குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறது.
போராட்டங்களை நசுக்க பாதுகாப்பு படையினரை அதிகளவில் ஈடுபடுத்தியதால் செய்தித்துறை மீதான ஒடுக்குமுறையுடனும் இணைந்துள்ளது. காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு தடை விதித்ததைக் கண்டித்து ஜூலை 4ந் தேதி வரையிலான 4 நாட்களில் ஏறத்தாழ 60 செய்தித்தாள்கள் வெளிவரவில்லை. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொலை தொடர்பாக தவறான செய்தியை ஒளிபரப்பியதாகக் கூறி ஜூலை 3ந் தேதி டெல்லியைச் சேர்ந்த தொலைக்காட்சியான News-X மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
"அண்ணளவாக 4 நாட்களாக செய்தித்துறையின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு காரணமாக காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள ஃபேஸ்புக், ட்விட்டர், ஓர்குட் (Facebook, Twitter, Orkut) உள்ளிட்ட சமூக வலைப்பின்னல்களைத் தவிர அங்குள்ள மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வேறு வழியில்லை'' என Greater Kashmir கூறுகிறது.
"ஃபேஸ்புக் மூலமாக கல்லெறி சம்பவங்களை நியாயப்படுத்தியதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும்'' ஏராளமான இளைஞர்கள் மீது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டிய மாநில அரசு அவர்களுக்கு போலீஸ் பிடிவிறாந்து அனுப்பியது. இப்போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையாக ஏர்டெல், ஏர்செல், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், வோடபோன் (Airtel, Aircel, Tata Indicom, Reliance, Vodafone) உள்ளிட்ட மொபைல் தொலைபேசி சேவைகள் மூடப்பட்டன. அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மட்டுமே தொடர்ந்து இயங்கியது.
மிகவும் பதட்டமான அரசியல் நிலைமையின் தீவிரத்தை தணிப்பதற்காக வகையில், முதல்வர் உமர் அப்துல்லா ஜூலை 5ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். மொத்தம் 11 தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் இதில் கலந்து கொண்டன. போலீசாரின் அடக்குமுறைக்கான பரந்த மக்களின் எதிர்ப்பை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் காஷ்மீர் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) கூட்டத்தை புறக்கணித்தது.
போலீசார் நிகழ்த்திய படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துவது என்ற ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்துத்வா அமைப்பான பாரதிய ஜனதா கட்சி (BJP) தவிர இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளும் அரசின் தீர்மானத்தை ஆதரித்தன. இவ்வாறு விசாரணை நடத்துவது நாட்டின் பாதுகாப்பு படையினரை மனத்தளர்ச்சியடைய செய்துவிடும் என வலதுசாரி பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது.
காஷ்மீரில் அடக்குமுறையைக் கையாளும் மத்திய அரசாங்கத்தின் கொள்கையை ஆதரிப்பதில் நீண்ட வரலாற்றை கொண்ட ஸ்ராலினிச மார்க்ஸிட் கட்சியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது. பரந்துபட்ட ஆத்திரத்தை தணிக்கும் முயற்சியாக, இக்கட்சியின் மாநிலச் செயலாளரான முகமது யூசுப், "அனைத்துக் கட்சிகளும் ஒன்றின்மீது மற்றொன்று சேற்றை வாறி இறைக்க வேண்டாம்' என கேட்டுக் கொண்டார்.
அரசியல் சீர்குலைவால் இப்பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக மோசமடைந்துள்ள நிலையில் காஷ்மீர் கட்சிகள் ஆக்கப்பூர்வமாக எந்தத் தீர்வையும் எட்டவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே இப்பிராந்தியத்தை யார் ஆள்வது என்ற போட்டி 1947இல் பிரிட்டிஷ் இந்தியாவை பிற்போக்குத்தனமாக இனரீதியாக பிரித்தது முதல் நீடித்து வருகிறது. சுதந்திரமடைந்த சில மாதங்களிலேயே இரு நாடுகளுக்கும் இடையே காஷ்மீர் தொடர்பான முதலாவது போர் மூண்டது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் தங்களுக்கு சொந்தம் என்று பாகிஸ்தானும், இந்து மகாராஜா ஆட்சி புரிந்ததால் தங்களுக்கே சொந்தம் என இந்தியாவும் வலியுறுத்தி வந்தன.
இதன் காரணமாகவே "கட்டுப்பாட்டு எல்லை' (Line of Control) என அழைக்கப்படுவதனூடாக காஷ்மீர் உண்மையாக பிரிக்கப்பட்டது. தனது ஆட்சிக்கு எதிர்ப்பு வலுத்ததன் விளைவாக, ஜம்மு-காஷ்மீர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், ஆயுதங்களைக் கொண்டு ஊடுருவலை அடக்குதல் ஆகியவற்றையே 1980களில் இருந்து கடைப்பிடித்து இந்தியா தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி வருகிறது.
காஷ்மீர் எதிர்க்கட்சிகளில் சில, "சுதந்திரமான' காஷ்மீர் அல்லது அண்டைநாடான பாகிஸ்தானுடன் இணைப்பதை ஆதரிக்கின்றன. இவை இரண்டுமே உழைக்கும் மக்களின் விருப்புகளான ஜனநாயக உரிமை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவாது. அனைத்து முதலாளித்துவ பிரிவுகளிலுமிருந்து சுயாதீனமாக உழைக்கும் வர்க்கத்தினரும் ஒடுக்கப்பட்ட மக்களும் 1947ல் உருவாக்கப்பட்ட பிற்போக்கான முதலாளித்துவ அரசு அமைப்புகளுக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தினூடாக பெருகிவரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்குவது மட்டுமே தீர்வாக அமையும்.
|