WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
EU, Australia and Canada impose tough sanctions on Iran
ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சுமத்துகின்றன
By Peter Symonds
30 July 2010
Back to
screen version
ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் தீவிரச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU), கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை டெஹ்ரானுக்கு எதிராக அதன் அணுசக்தித் திட்டங்கள் பற்றி இந்த வாரம் புதிய பெரும் தடைகளைச் சுமத்தின. ஈரான் மீது அழுத்தம் கொடுக்கும் வழிவகை என்று கூறப்பட்டாலும், இத்தடைகள் போருக்கு அரங்கமைக்க ஒரு ஆபத்தான மோதலை இன்னும் அதிகமாக இவை தோற்றுவிக்கின்றன.
அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் அனைத்தும் ஒருதலைப்பட்சத் தன்மையானவை, ஐ.நா. பாதுகாப்புக்குழு கடந்த மாதம் ஒப்புக்கொண்ட அபராதங்களுக்கும் அப்பால் செல்லுபவை. ஈரான் பலமுறையும் அது அணுவாயுதங்களைக் கட்டமைக்கத் திட்டமிடுகிறது என்பதை நிராகரித்து அனைத்துத் தடைகளும் அணுசக்தி பரவா ஒப்பந்தத்தின் கீழ் உள்ள உரிமைகளை மீறுகிறது என்றும் நிராகரிக்கிறது. ஒப்பந்தப்படி யுரேனியச் செறிவு உட்பட அணுசக்தி எரிபொருள் உற்பத்திச் சுற்றின் பல கூறுபாடுகளை ஒரு நாட்டினால் மேற்கொள்ளப்படலாம்.
ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் திங்களன்று ஒரு வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியறவுக் கொள்கைத் தலைவர் கத்தரின் ஆஷட்ன் செய்தி ஊடகத்திற்குக் கூறினார்: “ஈரானுக்கு சக்திவாய்ந்த தகவலை அனுப்பியுள்ளோம். அதன் அணுசக்தித்திட்டம் தீவிர கவலையைப் பெருகிய முறையில் எங்களுக்கு அளிக்கிறது என்பதே அத்தகவல்.” இந்நடவடிக்கைகள் ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானின் எண்ணெய், எரிவாயுப் பிரிவில் முதலீடு செய்வதையும் மற்ற வணிகத் தொடர்புகளை நிறுத்துவதையும் தடை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
27 வெளியுறவு மந்திரிகளும் “அனைத்து வணிக, நிதியப்பணிகள், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விசாத் தடைக்கு கூடுதல் நடைமுறைகள் மற்றும் சொத்துக்கள் முடக்கம் பற்றி விரிவான, வலுவான தொகுப்பு நடவடிக்கைகளுக்கு உடன்பட்டனர்” என்று ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை ஒன்று அறிவித்துள்ளது. இதன் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் பொருளாதாரத் தடைகள் ஈரானிய வங்கிகள், இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை மற்றும் இஸ்லாமியக் குடியரசின் கப்பல் போக்குவரத்து வணிகம் ஆகியவற்றை இலக்கு கொள்ளும்.
கனடாவும் இதேபோன்ற தடைகளை திங்கன்று அறிவித்தது, அதில் ஈரானின் எரிசக்திப் பிரிவில் கனடா எதுவித புதிய முதலீட்டிற்கும் தடை, வங்கி உறவுகளில் தடைகள் மற்றும் அணுசக்தித் திட்டத்திற்குப் பயன்படக்கூடிய பொருள்கள் விற்பனையின் தடை ஆகியவை அடங்கியுள்ளன. ஆஸ்திரேலிய அரசாங்கமும் நேற்று இதைத் தொடர்ந்து சுற்றுலா, நிதியத் தடைகளை ஈரானின் வங்கி, சுற்றுலாப் பிரிவுகளில் 110 க்கும் மேற்பட்ட வணிகங்கள், தனிநபர்கள் மீது சுமத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா போலவே ஈரானின் எண்ணெய், எரிவாயுத் துறையின் நடவடிக்கைகளிலும் தடையைச் சுமத்தியது.
ஐரோப்பியத் தடைகள், குறிப்பாக ஈரானியப் பொருளாதாரத்திற்கு பெரும் சேதம் கொடுக்கும் திறனை உடையவை. ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக ஈரானின் மிகப் பெரிய வணிகப் பங்காளி ஆகும். இதன் ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங்கில் ஈடுபட்டு, நாட்டிற்கு பில்லியன் கணக்கான மதிப்புடைய பொருள்களை விற்கிறது. ஒரு ஐரோப்பிய ஒன்றியத் தூதர் பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: “தடைகள் துல்லியமான இலக்கைக் கொண்டவை. காப்பீடு, வங்கி, நவீன எரிசக்தித் தொழில்நுட்பம் ஆகியவை இனி மற்ற வணிகப் பங்காளிகளிடம் இருந்து கிடைக்காது.”
ஈரானின் எரிசக்தித் துறையில் ஐரோப்பிய பெருநிறுவனங்களின் தொடர்பு தடைக்குட்படுத்தப்படுவது நீண்ட காலமாக உள்கட்டுமானம் குறைவாக இருப்பதை இன்னும் அதிகப்படுத்தும். நாட்டில் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் மிக அதிகம் இருந்தாலும், மூலதன முதலீடு இல்லாதது தீவிரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. சுத்திகரிப்புத் திறன் வசதிகள் குறைவினால், அதன் பெட்ரோலியத் தேவைகளில் கிட்டத்தட்ட 30-40 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் சூழ்நிலையில் ஈரான் உள்ளது.
இந்த மாதம் முன்னதாக அமெரிக்க காங்கிரஸ் அதன் ஒருதலைப்பட்சத் தடைகளை சுமத்தியது. அச்சட்டம் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியை முடக்கி ஈரானியப் பொருளாதாரத்தை மண்டியிட வைக்கும் நோக்கத்தைக் கொண்டது. இப்புதிய சட்டத்தின்படி, சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஈரானுக்கு விற்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க நிதிய முறை, சந்தைகளில் இருந்து ஒதுக்கப்படும்.
அமெரிக்கச் சட்டமானது ஈரானுடன் மட்டும் இல்லாமல் கடந்த மாதம் ஐ.நா.பாதுகாப்புத் தீர்மானத்திற்கு ஒப்புக்கொண்ட சீன, ரஷ்யா போன்ற நாடுகளுடனும் அழுத்தம் ஏற்படும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. ஐ.நா.தீர்மானத்தில் ஈரானிய எரிசக்தித் தொழில் அபராதங்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. சீனா பெரிய அளவில் ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்கிறது, ஈரானிய எரிவாயு வயல்களில் பரந்த முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ரஷ்யா சமீபத்திய ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் பற்றி கோபமான விடையிறுப்பு கொண்டுள்ளது. இவை “ஏற்கத்தக்கது அல்ல” என்றும் “ஐ.நா.பாதுகாப்புக் குழுத் தீர்மானங்களின் விதிகளுக்கு கவனமான, திட்டமிட்ட ஒருங்கிணைந்த இழிவுணர்வை” காட்டுகின்றன என்றும் அறிவித்துள்ளது.
ஐ.நா.பாதுகாப்புக் குழுத் தடைகள் சுமத்தப்படுவதற்கு மட்டும் ஒபாமா நிர்வாகம் ராஜதந்திரத் தாக்குதலை மேற்கொள்ளவில்லை, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஒருதலைப்பட்ச அபராதங்களை செயல்படுத்தவும் அழுத்தம் கொடுக்கிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலக கருத்துப்படி, அதன் ஆயுதம் பரவாத, மற்றும் ஆயுதக்கட்டுப்பாடு பற்றிய சிறப்பு ஆலோசகர் ரோபர்ட் ஐன்ஹார்ன் தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் அடுத்த மாதம் பயணிப்பார். அமெரிக்க நிதியமைச்சு அதிகாரி ஸ்டுவர்ட் லெவி ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், லெபனான் மற்றும் பஹ்ரைனுக்குச் செல்லுவார், மற்றொரு உயர்மட்ட அதிகாரி பிரேசிலுக்கும் ஈக்வடோருக்கும் செல்வார்.
தானும் ஒரு மூத்த நிதியமைச்சரக அதிகாரியும் சீனாவிற்கு ஆகஸ்ட் பிற்பகுதியில் சென்று அமெரிக்க கவலைகளை “மிக உயர்ந்த மட்டத்திற்கு” தெரிவிக்க உள்ளதாகக் கூறினார். “பாதுகாப்புக் குழுத் தீர்மானங்களை மிக நேர்மையாகச் செயல்படுத்த அவர்கள் உதவ வேண்டும், அதைத் தவிர பொறுப்புடைய நாடுகள் ஈரானில் இருந்து ஒதுங்கும்போது அந்த இடத்தை “நிரப்புதல்” கூடாது என்பதற்கும் அவர்கள் உதவி தேவை” என்றார். “நிரப்புதல்” என்பது ஐன்ஹாரன் கருத்துப்படி அமெரிக்கா சுத்திகரிப்புப் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையை சீனா அதிகப்படுத்தக்கூடாது, அல்லது மற்ற நாடுகள் வெளியேறியுள்ள நிலையில் எரிசக்தித் துறையில் முதலீடுகள் விரிவாக்கக் கூடாது—இதற்கு ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் பெய்ஜிங் ஒப்புதல் கொடுக்கவில்லை.
ஈரானின் எண்ணெய், எரிவாயு மீதான குவிப்பு அமெரிக்கச் செயற்பாட்டின் உண்மை உந்துதல்களை உயர்த்திக் காட்டுகிறது. இதில் அணுவாயுதக் கட்டமைப்புத் திட்டம் இருப்பதாகக் கூறப்படுவதுடன் எத்தொடர்பும் இல்லை. தெஹ்ரானின் அணுசக்தித் திட்டங்களை ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்கள் ஈரானில் ஆதாயம் பெறுவதைக் குறைக்கும் விதத்தில் வாஷிங்டன் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவிலுள்ள எரிசக்திக் கொழிப்பு உடைய பகுதிகளில் மேலாதிக்கம் செலுத்த விரும்பும் அதேநேரத்தில் அமெரிக்கப் பரந்த விழைவுகளை ஏற்பதற்கு ஈரான் ஒத்துழைக்கும் வகையில் ஒரு ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முயல்கிறது.
திங்களன்று ஐரோப்பிய ஒன்றியத் தடைகளைச் சுமத்துகையில், ஈரான் சர்வதேச அணுசக்தி அமைப்பிற்கு (IAEA) தான் கடந்த ஆண்டு தெஹ்ரானில் அதன் ஆய்வு சுத்திகரிப்பு ஆலைக்குத் தேவைப்படும் எரிபொருள்களுக்கான குறைவூதிய யுரேனியத்தை பரிமாற்றம் செய்யும் தற்காலிக உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடக்கத் தயார் என்று தெரிவித்துள்ளது. புதனன்று அமெரிக்க அரச வெளியுறவுச் செயலகமானது வாஷிங்டன் பேச்சுக்களில் பங்கு பெற மற்ற முக்கிய சக்திகளுடன் “முழுத் தயாரிப்புடன் உள்ளது”, சுத்திகரிப்பு ஆலைத்திட்டம் மற்றும் ஈரானிய அணுசக்தித் திட்டம் பற்றி பரந்த முறையில் என்று அறிவித்தது.
ஆனால் இத்தகைய பேச்சுக்கள் நடந்தாலும், அணுசக்திப் பரிமாற்ற உடன்பாடு அல்லது தற்போதைய மோதலை நிறுத்தக்கூடிய வகையில் பேச்சுவார்த்தையை புதுப்பிக்க வகையில்லை. கடந்த மாத ஐ.நா. பாதுகாப்புக் குழு வாக்களிப்பிற்கு முன், பிரேசில், துருக்கி மற்றும் ஈரான் ஆகியவை பகிரங்கமாக ஒரு திருத்தப்பட்ட பரிமாற்ற உடன்பாட்டு பற்றி அறிவித்தன. அது வாஷிங்டனால் தயக்கமின்றி நிராகரிக்கப்பட்டது. ஈரானுடன் முந்தைய பேச்சுக்களில் அமெரிக்கா பங்கு பெற்றதின் முக்கிய காரணம் ஐரோப்பிய சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்குத்தான். அவை புஷ் நிர்வாகத்தின் ஒருதலைப்பட்ச செயல்களால் விரோதத்திற்கு உட்பட்டிருந்தன. அதேபோல் சீனா மற்றும் ரஷ்யா எழுப்பும் ஆட்சேபனைகளை நடுநிலையாக்கும் நோக்கமும் இருந்தது. நோக்கத்தை அடைந்த நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு அதன் இறுதி எச்சரிக்கைகளை அளிக்கும் ஒரு அரங்காத்தான் எந்த எதிர்காலப் பேச்சுக்களையும் பயன்படுத்தும்.
புதிய ஐ.நா. தடைகளை ஏற்றதைத் தொடர்ந்து அமெரிக்க ஆளும் வட்டங்களில் உள்ள விவாதத்தின் குறிப்பிடத்தக்க கூறுபாடு வாஷிங்டனின் நோக்கத்தை சாதிக்க பொருளாதார அபராதங்களின் உதவும் தன்மை பற்றி வெளிப்படையான அவநம்பிக்கைத்தனம் தான். மீண்டும் புதிதாக “இராணுவ விருப்புரிமை” பற்றிய உந்துதல் உள்ளது. இத்தன்மையை கருத்தில் கொண்டு CIA முன்னாள் இயக்குனர் மைக்கேல் ஹேடன், புஷ்ஷின் கீழ் பணிபுரிந்தவர், “என் சொந்த நினைப்பு, [ஈரானுக்கு எதிரான ஒரு இராணுவத் தாக்குதல்] அனைத்து விளைவுகளிலும் மோசமானது ஒன்றாக இராது என்பதுதான்.”
எந்தச் சான்றையும் அளிக்காமல், ஈரானின் அணுவாயுதம் அடையவேண்டும் என்ற உந்துதல் “தவிர்க்க முடியாத தன்மையைக்” கொண்டுள்ளது என்று ஹேடன் கூறினார். தெஹ்ரான் உண்மையில் அணுவாயுதம் தயாரிக்காமல் போகலாம் என்று ஒப்புக் கொண்ட ஹேடன் குறுகிய காலத்தில் தயாரிக்கும் ஆற்றலை அது பெறுவது என்பது “ஆயுதம் உண்மையில் இருப்பதை விட உறுதிப்பாட்டைக் குலைக்கும்” என்றார். ராஜதந்திர நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகள் ஆகியவை திறனற்றவை என்ற அவர், “நாம் ஈடுபட வேண்டும். அவர்கள் முன்னேறுகின்றனர். நாம் பொருளாதாரத் தடைகளுக்கு வாக்களிக்கிறோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறுகின்றனர். நாம் தடுக்க முற்படுகிறோம், வேண்டாம் என்கிறோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறுகின்றனர்.”
இத்தகைய உணர்வுகள் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக்கினாலும் கூறப்பட்டன. அவர் இந்த வாரம் வாஷிங்டனுக்கு ஈரான் மீதான பேச்சுக்களையும், மத்திய கிழக்கு சமாதான வழிவகை எனக் கூறப்படுவது பற்றியும் பேச வந்திருந்தார். கடந்த வாரம் அவர் வாஷிங்டன் போஸ்ட்டிடம் “பொருளாதாரத் தடைகள் இப்பொழுதுள்ள முறையில் செயல்படும் என்று நினைக்கவில்லை.” மிகக் கடுமையான அபராதங்கள் பற்றி சர்வதேச ஒருமனதான முடிவு இல்லை என்று குறிப்பிட்டு, அவர் மேலும் கூறியது: “ஒருவேளை குறிப்பிட்ட கட்டத்தில் பொருளாதாரத் தடைகள் வேலை செய்யவில்லை என்பதை நாம் உணர்வோம்.” ஈரான் அணுவாயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதை இஸ்ரேல் அனுமதிக்காது என்று பலமுறையும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. பலமுறையும் அணுசக்தி நிலையங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் அல்லது அமெரிக்கா என்று எதனால் தொடக்கப்பட்டாலும், ஈரானுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பு பரந்த பிராந்திய மோதலை ஏற்படுத்துவதோடு இதில் ரஷ்யா, சீனா உட்பட முக்கிய சக்திகளும் அடங்கும். மத்திய கிழக்கில் ஒரு அமெரிக்க இராணுவ ஆக்கிரோஷச் செயல் புதிதாக மேற்கொள்ளுவதற்கு, கடுமையான பொருளாதாரத் தடைகள் தேவை என்னும் ஒபாமா நிர்வாகத்தின் உந்துதல் அடுத்த கட்டத்திற்குத் தடையின்றி இழுத்துச் செல்லும்.
|