World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Blood on whose hands in Afghanistan?

ஆப்கானிஸ்தானில் யாருடைய கரங்களில் குருதிக் கறை?

Alex Lantier
2 August 2010

Back to screen version

விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாங்கேயும் அவருடைய ஆதாரங்களும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தகவல் கொடுப்பவர்களைப் பற்றி வெளியிட்டதற்காக “அவர்கள் கரங்களில் குருதிக் கறை படிந்தவர்கள்” என்று ஒபாமா நிர்வாக அதிகாரிகளும் செய்தி ஊடகமும் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருப்பது இழிந்த அவதூறுகள் ஆகும். ஆப்கானிஸ்தானில் குருதியைக் கொட்டியதற்குப் பொறுப்பு போரைத் ஆரம்பித்த அமெரிக்க அரசாங்கத்திடம் தான் உள்ளது.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள், ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தின் மூலம் மேலும் குருதியைக் கொட்ட வெளிப்படையாகத் தயார் செய்கையில் இன்னும் இழிந்த தன்மையை உடையவை ஆகும். நேற்று நியூ யோர்க் டைம்ஸின் முதல் பக்கக் கட்டுரை “ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் புதிய குவிப்பு இலக்கு வைக்கப்படும் கொலையாகும்” என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. இது சிறப்பு நடவடிக்கைப் படைப் பிரிவு 373 ஐ பாராட்டியுள்ளது. அதுவோ இரகசிய கொலைக் குழு என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிய வருகிறது. கடந்த ஐந்து வாரங்களில் “கமாண்டோ தாக்குதல்களில் 130 குறிப்பிடத்தக்க கிளர்ச்சியாளர்களைக் கொன்றன” என்றும் கூறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டனின் சமீபத்திய வெகுஜனக் கொலைகளுக்கான திட்டங்கள் ஆப்கானிய மக்களை சரணடைய வைப்பதற்கு அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டவை. கடந்த செவ்வாயன்று செனட் வெளியுறவுக் குழு விசாரணையின் போது செனட்டர் ரிச்சர்ட் லுகர் விளக்கினார்: “பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால் நாம் நம் வலிமையை நிரூபிக்க வேண்டும். இது குருதி கொட்டும் தன்மையைக் காட்டுவது போல் தோன்றினால், நாம் பல தாலிபன்களைக் கொல்லுவது முக்கியமாகும்.”

திட்டங்களின் அடித்தளத்தில் இருக்கும் இத்தகைய பாசிச மனப்போக்கு, ஐரோப்பாவில் எதிர்ப்புச் சக்திகளை அடக்குவதற்கும் போர்த் தயாரிப்புக்களின் போதும் ஹிட்லரும் அவருடைய எடுபிடிகளும் கொண்டிருந்ததை விட மாறுபட்டவை அல்ல.

இன்றைய இழிந்த அரசியல் சூழ்நிலையில், செய்தி ஊடகங்கள்— முறையாக வேண்டுமென்றே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கொலைகளை மறைத்தவை— அசாங்கேக்கு (Assange) எதிரான பிரச்சாரத்திற்கு தங்கள் உதவியைத் கொடுகின்றன. கடந்த வியாழனன்று நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூட்டுப்படைகளின் தலைமைத்தளபதியான அட்மைரல் மைக் முல்லன், அசாங்கேயும் அவருடைய ஆதாரங்களும் “ஒரு ஆப்கானியக் குடும்பம் அல்லது சில இளம் இராணுவத்தினரின் குருதியை தங்கள் கரங்களில் கொண்டிருக்கக் கூடும்” என்றார்.

ஞாயிறன்று கிறிஸ்டியன் அமன்போர் ABC யின் “இந்த வாரம்” நிகழ்வில் தன்னுடைய விருந்தாளியான பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸை “இக்கசிவு அடிப்படையில் அதன் கரங்களில் குருதியைக் கொண்டுள்ளது” என்ற கூற்று பற்றிய கருத்தை வினவினார். அமெரிக்க இராணுவத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் ஆப்கானியத் தகவல் கொடுப்போரை வெளிப்படுத்தும் “அறவழிப் பொறுப்பு” பற்றிய பிரச்சினையில் “குற்றம் என்னும் தீர்ப்பு விக்கிலீக்ஸின் மீது தான் உள்ளது” என்றார்.

இத்தகைய வாஷிங்டனுக்கு தகவல் கொடுப்போர் மற்றும் குற்றம் சாட்டுபவர்களாக மாறுவர்களால் உலக சோசலிச வலைத் தளம் சலனமடையவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆப்கானிய மக்கள் வன்முறையுடன் சுட்டிக்காட்டி நியாயப்படுத்த நடக்கும் முயற்சிகளை நாம் இழிவுடன் உதறித்தள்ளுவோம். இவை இரண்டிற்கும் இடையே எவ்வித அரசியல், அறநெறிச் சமன்பாடும் கிடையாது.

பெரும் மார்க்சியவாதியான லியோன் ட்ரொட்ஸ்கி Their Morals and Ours என்பதில் எழுதியுள்ளபடி, “ஒரு அடிமையைத் தந்திரத்தாலும் வன்முறையாலும் சங்கிலியால் பிணைக்கும் அடிமைச் சொந்தக்காரரும், தந்திரத்தாலும் வன்முறையாலும் சங்கிலியை உடைத்தெறியும் அடிமையும்—எந்த இழிந்த பேடியும் நம்மிடம் அவர்கள் இருவரும் அறநெறி நீதிமன்றத்தின் முன் சமமானவர்கள் என்று கூறத் தேவையில்லை.”

எவருக்கும் “அறநெறிப் பொறுப்பு” பற்றி உரையாற்ற திரு. கேட்ஸுக்கு என்ன தகுதி உள்ளது? இன்று ஆப்கானிய மக்களுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் வெகுஜனக் கொலைகளை மேற்பார்வையிடும் நபர் அரச பயங்கரவாத்த்தின் கடினமான ஒரு அதிகாரத்துவத்தினர் ஆவார். 1996ம் ஆண்டு அமெரிக்கக் கொள்கை பற்றி உள்ளிருந்து கொடுக்கப்பட்ட விவரம், தக்க முறையில் நிழல்களில் இருந்து என்ற தலைப்பைக் கொண்டது, 1970, 1980 களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய குற்றங்களில் அவருடைய பங்கைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

ஒரு CIA பகுப்பாய்வாளர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinsk க்கு 1970 களில் உதவியாளராகவும் இருந்த கேட்ஸ் 1980 களில் ஒரு உயர்மட்ட CIA அதிகாரி ஆவார். அவருடைய சான்றுகள் எப்படி CIA அங்கோலாவில் UNITA குடிப் படைக்கு ஆதரவைக் கொடுத்தது என்பதைக் காட்டுகிறது. அதுதான் பல்லாயிரக்கணக்கான அங்கோலியர்கள் கொலைக்குக் காரணமாக இருந்தது. எப்படி நிக்கரகுவாத் துறைமுகங்களை வலதுசாரி கொன்ட்ரா எதிர்ப்பாளர்களுக்கு உதவ CIA பயன்படுத்தியது என்பதையும் அரசியல் படுகொலை நடத்தப்படுவதற்கான விதிமுறைகளைக் கொடுக்கும் “கொலைக் கையேடு” தயாரிக்க ஒப்புதலைக் கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே வாஷிங்டனின் குற்றம் சார்ந்த ஆப்கானிய கொள்கையில் கேட்ஸ் தொடர்பு கொண்டிருந்தார். சோவியத் படையெடுப்பிற்கு முன்னரே அமெரிக்கா சோவியத் ஆதரவு பெற்றிருந்த ஆப்கானிய அரசாங்கத்தை எதிர்த்த இஸ்லாமிய சக்திகளுக்கு இரகசிய உதவியைக் கொடுக்கத் தொடங்கியது. மார்ச் 1979 கூட்டம் பற்றிய கேட்ஸின் நினைவுகூரலில் ஒரு அதிகாரி கூறியுள்ளபடி, “சோவியத்துக்களை வியட்நாம் சகதி போன்ற நிலையில் இழுத்துவிடுதல்” என்பது தான் அமெரிக்க இலக்காக இருந்தது.

அப்பொழுது அமெரிக்கா சௌதி அரேபியா மற்றும் பாக்கிஸ்தானுடன் இரகசிய உடன்பாட்டை “உலகெங்கிலும் இருந்து தேவைப்படும் விநியோகங்களிலிருந்து அசாதாரண முறையில் வழியையும்..... வருங்காலத்தில் வெளியுதவி விரிவாக்குவதற்கு பரந்த அரங்கும் அமைக்கப்பட்டது, இவை அனைத்தும் CIA ஆல் நடத்தப்பட்டது.” நன்கு தெரிந்துள்ளபடி, இந்த விநியோக சங்கிலியில் “அனைத்தும் CIA ஆல் நடத்தப்படுவது”, ஒசாமா பில் லேடன் மற்றும் அவருடைய அரசியல் பங்காளிகள் பங்கு பெற்றிருந்தனர். இதுதான் அல் கெய்டாவின் தோற்றம், இந்த அமைப்புத்தான் செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது.

ஆப்கானிஸ்தான் மீது கிரெம்ளின் படையெடுத்தபோது, CIA தீவிர வலது இஸ்லாமியப் போர்ப் பிரபுக்கள் நடத்திய போராளிகள் கூட்டத்திற்கு நிதி கொடுத்து ஆதரவளித்தது. இது ஆப்கானிய மக்களுக்கு பேரழிவைத் தர வேறு எதையும் தராது என்று கேட்ஸ் அறிந்திருந்தார். அவர் எழுதினார்: “அரசியல் அளவில் இம்மக்கள் ஒன்றாக வருவது பற்றி எவ்வித போலிக் கற்பனைகளையும் எவரும் கொள்ள வேண்டாம்—சோவியத் தோல்விக்கு முன்போ, பின்னரோ. எப்படியும் CIA ல் எவரும் அத்தகைய கற்பனைகளை நினைத்தது இல்லை.”

அப்பொழுது முதல் ஆப்கானிஸ்தான் ஒரு உள்நாட்டுப் போரில் ஆழ்ந்துள்ளது. ஆப்கானிய உயிர்களைப் பற்றி முற்றிலும் இழிந்த கருத்தைக் கொண்ட அமெரிக்கச் செய்தி ஊடகத்தால் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் இதன் விளைவாக இறந்துள்ளனர்.

விக்கிலீக்ஸுக்கு எதிரான செய்தி ஊடகப் பிரச்சாரமானது அமெரிக்க அரசியல் சூழலில் இழிந்த தன்மைக்கு சாட்சியம் கூறுகிறது. செய்தி ஊடகமும் அரசாங்கமும் அசாங்கே மற்றும் அவருடைய ஆதாரங்கள் தைரியமாக முழு அரசியல் ஸ்தாபனத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக மன்னிப்பளிக்க மாட்டா. அவர்கள் வெளியிட்டுள்ள ஏராளமான ஆவணங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு புஷ், ஒபாமா நிர்வாகங்களின் மீது போர்க் குற்ற விசாரணை தொடர்வதற்கு சான்றுகளைக் கொடுக்கின்றன, மற்றும் அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் முக்கிய நபர்களின் உடந்தையும் அவற்றிற்கு இருந்தன.

அசாங்கேயும் அவருடைய ஆதாரங்களும் கசிவு பற்றிய எவ்விதக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். வாஷிங்டனில் உள்ள போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.