WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lankan government enlists services of former LTTE leader
இலங்கை அரசாங்கம் முன்னாள் புலிகளின் தலைவரின் சேவையை பெறுகின்றது
By Athiyan Silva
27 July 2010
Back to
screen version
இலங்கை இராணுவத்தால் 2009 மே மாதம் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தொடரும் பிளவுகள் பற்றி மேலும் சான்றுகள் கடத்த வாரத்தில் வெளியாகியுள்ளன. பிரபாகரன் இறந்த பின்னர் புலிகளின் தலைமையை எடுத்துக்கொண்ட கே.பி என்று அழைக்கப்படுகின்ற செல்வராசா பத்மநாதன் இலங்கை அரசாங்கத்துடனும் இராணுவ புலனாய்வு பிரிவுடனும் இப்போது செயலூக்கத்துடன் ஒத்துழைப்பு வழங்குவதாக பல செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன.
பத்மநாதன் பல வருடங்களாக புலிகளுக்கு நிதி திரட்டுபவராகவும் ஆயுதம் சேகரிப்பவராகவும் இருந்தார். கடந்த வருடம் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் பிரபாகரன் பத்மநாதனை புலிகளின் சர்வதேச பிரிவின் தலைவராக நியமித்தார். அமெரிக்கா மற்றும் ஏனைய பிரதான வல்லரசு நாடுகளுக்கு யுத்தத்தை நிறுத்துமாறு பலனற்ற வேண்டுகோள்களை தொடர்சியாக விடுப்பதே அங்கு அவரின் பணியாக இருந்தது. இலங்கை இராணுவம் தனது இரத்தக்களரி தாக்குதலை தொடர்ச்சியாக தொடுத்ததுடன் பத்தாயிரக்கணக்கான பொது மக்களை கொன்று, இறுதியாக புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சி இருந்த பிரதேசத்தையும் கைப்பற்றியதுடன் பிராபகரன் உட்பட உயர்மட்ட தலைவர்களை கொலை செய்தது.
புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து, பத்மநாதன் அதன் தலைமைத்துவத்துக்கு உரிமைகோரியதுடன், வெளிநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று சொல்லப்படுவதை அமைப்பதாக அறிவித்தார். அமெரிக்காவில் வசிக்கின்ற சட்டத்தரணியான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஒரு இணைப்பாளராக பத்மநாதனால் நியமிக்கப்பட்டார். வெளிநாட்டில் உள்ள ஏனைய புலிகள் இயக்க ஆதரவு பிரிவுகளுக்கிடையில், இந்த பிளவுபட்ட இயக்கத்தின் சொத்துக்களை நிர்வகிப்பது பற்றிய பிரச்சினை உட்பட, கசப்பான முரண்பாடுகள் வெடித்தன. அத்துடன் பிரதான வல்லரசுகளின் ஆதரவை எதிர்பார்த்த பத்மநாதன் குழு, உத்தியோகபூர்வமாக ஆயுதப் போராட்டத்தை கைவிட்டது.
பத்மநாதன் கடந்த ஆகஸட் மாதத்தில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, இலங்கைக்கு அணுப்பப்பட்டதை அடுத்து அவரது திட்டங்கள் எதிர்பாராத முறையில் முடிவுக்கு வந்தன. இலங்கை பத்திரிகைகளில் ஜூன் மாதத்தில் வெளியாகிய கட்டுரைகளின்படி, முன்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் இப்பொழுது அரசாங்கத்துடன் செயலூக்கத்துடன் வேலை செய்து வருவதுடன், புலிகளின் சர்வதேச நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்களை வழங்குவதோடு தனது ஆதரவாளர்களை கொழும்புடன் ஒத்துழைக்குமாறு உற்சாகப்படுத்துகின்றார்.
அத்தகைய செய்திகளை முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பத்மநாதன் இன்னமும் சொந்தமாக எந்தவொரு அறிக்கையையும் பகிரங்கமாக வெளியிடவில்லை. இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர், பல்வேறு தமிழ் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இரகசியமாக கையாடி அவற்றை ஒன்றுக்கொன்று மோதவிடுவதில் பல தசாப்தங்களாக அணுபவம் கொண்டவர்கள். 2004ல் புலிகளை பலவீனப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரிவை பிளவுபடுத்துவதில் அது பிரதான பங்கை வகித்தது. கிழக்கு மாகாணத்தின் உயர்மட்ட தளபதிகளான கருணா என்றழைக்கப்படுகின்ற வி.முரளிதரன், சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் ஆகியோர் இப்பொழுது கொழும்பு அரசாங்கத்தின் செயலூக்கம் கொண்ட அரசியல் பங்காளிகள். இராணுவமும் தனது இலக்கை அடைவதற்காக கட்டாயப்படுத்துவதிலும், சித்திரவதை செய்வதிலும் இழிபுகழ் பெற்றது.
எப்படியாயினும், பத்திரிகை செய்திகள் சரியாக இருக்குமாயிருந்தால், பத்மநாதன் ஒத்துழைப்பு வழங்க மனப்பூர்வமாக விரும்பியவர் என்பதை விட, அவர் தன்னை கைது செய்தவர்களுக்கு விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியவராக இருந்துவருவார். டி.பி.எஸ். ஜெயராஜ் ஜூலை 11 அன்று டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதிய பத்தியில், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய இராஜபக்ஷ முதன் முறையாக சந்தித்த போதே பத்மநாதன் அவரை ஈர்த்திருந்தார். அந்தச் சந்திப்பை கைது செய்தவருக்கும் கைது செய்யப்பட்டவருக்கும் இடையிலான "அழகான நட்பின் ஆரம்பம்" என தகவல் வட்டாரங்கள் வருணித்ததாக குறிப்பிடப்பட்டது. "கேபி வெளிநாட்டில் உள்ள புலிகளின் சொத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்க ஆரப்பித்துள்ளார். அரசாங்கம் புலிகளுக்கு சொந்தமான குறைந்த பட்சம் மூன்று கப்பல்களை 'தேடிப் பிடிக்க' முடிந்ததிற்கு கேபி க்கு நன்றி தெரிவித்தது".
பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் சகோதரனுமான இராஜபக்ஷ, கொடுமையான இராணுவ தாக்குதலின் சிற்பியாகவும் அதன் குற்றங்களுக்குப் பொறுப்பானவருமாக இருக்கும் நிலையில், அவருக்கும் பத்மாநாதனுக்கும் இடையிலான உறவு குறிப்பாக அருவருக்கத்தக்கது. அவர் கடுமையாக மறுத்த பொழுதிலும், மே 2009ல் சரணடைந்த நிராயுத பாணிகளான புலிகளின் தலைவர்களை கொலை செய்வதற்கு ராஜபக்ச தனிப்பட்ட முறையில் கட்டளையிட்டதற்கான கனிசமான சான்றுகள் உள்ளன. அப்போது புலிகளின் பேச்சாளராக இருந்த பத்மநாதன், அந்தக் கொலைகளை கண்டனம் செய்தார்.
தெளிவாக, ஒரு முக்கியமான அரசியல் சொத்தாக அரசாங்கம் பத்பநாதனை கருதுகிறது. ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் “புலிகளின் சர்வதேச வலையமைப்பை” தகர்ப்பதற்கு இந்தக் கைதி தகவல்களை வழங்குகிறார் என கோடாபய இராஜபக்ஷ அறிவித்ததுடன், ஜூன் 14-20 திகதிகளில் வெளிநாட்டில் உள்ள தமிழ் தலைவர்கள் இலங்கைக்கு வருவதற்கு வசதியளித்தார். ஊடக அமைச்சர் கெஹலியே ரம்புக்வெல்ல சர்வதேச யுத்தக்குற்ற விசாரணையில் “கேபி யை எமது சாட்சியாக உருவாக்க முடியும்” என ஜூன் 24 அன்று பெருமிதம் கொண்டார். பத்பநாதனுக்கு முக்கியமான அரசியல் பதவி வழங்கப்பட இருப்பதாக வெளியாகிய வதந்தியை அரசாஙகம் நிராகரித்தது --பிரதானமாக புலிகளின் தலைவருக்கு துணைபோவதாக எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு விமர்சனங்களின் காரணமாகவே அது நிராகரித்தது.
தமிழ் சுகாதார அமைப்பின் [ரி.எச்.ஒ] தலைவரான சார்ல்ஸ் அந்தோனிதாஸ், தமிழ் பிரதிநிதிகள் இலங்கைக்கு சென்றது பத்மநாதனுடைய ஊக்குவிப்பினாலேயே என்பதை பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். "மனிதாமானப் பிரச்சனைகள் சம்பந்தமாக அரசாங்கத்துடன் கலத்துரையாடுவதற்கு நாங்கள் முயற்சித்தோம். ஆனால் நீண்டகாலமாக வெற்றியளிக்கவில்லை. பின்பு சடுதியாக இந்த சந்தர்பம் கிடைத்த போது, அதை ஏற்க வேண்டும் என தீர்மானித்தோம்", என அன்தோனிதாஸ் கூறினார். "சமரசத்துக்கான நடவடிக்கைகளின் பங்காளராக" பத்மநாதனை அரசாங்கம் கருதுகின்றது என மேலும் அவர் கூறினார்.
ஜூலை ,5 அன்று கோட்டாபய இராஜபக்ஷ சண்டே ஒப்ஸ்சேவருக்கு பின்வருமாறு விளக்கினார்: "புலிகளின் பிரிவினைவாத கருத்தை மீண்டும் உயிர் பெறச்செய்வதில் பயனில்லை என கேபி உறுதியாக அவர்களுக்கு தெரிவித்தார். தமிழ் மக்களின் உறுதியான எதிர்காலத்திற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பற்றியும் அவர் அவர்களுக்கு விளக்கியதோடு தமிழர்களுக்கான சிறந்த எதிர்காலத்துக்காக அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்யவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.”
பத்மநாதனின் முன்முயற்சியுடனும், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடனும் வட-கிழக்கு புனர்வாழ்வும் மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நெர்டோ) என்ற புதிய அரச சார்பற்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரதானமாக முன்னைய புலி போராளிகளுக்கு கல்வியூட்டுவதற்கும், இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் உதவும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் பேணுவதற்கும் அந்தப் பிரதேசத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதற்கும் கொழும்பு அரசாங்கம் வகுத்துள்ள திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றது.
தமிழ் பொது மக்களை கொல்லுவதற்கும், கால் மில்லியனுக்கும் மேலான தமிழ் பொது மக்களை "நலன்புரி கிராமங்களில்" கடும் காவலின் கீழ் அடைத்து வைத்ததற்கும் பொறுப்பாயிருந்த இராஜபக்ஷ அரசாங்கத்துடனான பத்மநாதனின் நெருக்கமான ஒத்துழைப்பை வெளிநாட்டிலுள்ள ஏனைய தமிழ் குழுக்கள் விமர்சித்துள்ளன. ஆயிரக் கணக்கான தமிழர்கள் எதுவித விசாரணையும் இன்றி பயங்கரவாத சந்தேகநபர்கள் என்ற பேரில் மறைவிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
சகல முன்னால் புலிகளின் குழுக்கள் மற்றும் தமிழ் கட்சிகள், ஏதோ ஒரு வழியில் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியினருடனோ அல்லது வல்லரசுகளுடனோ கூட்டுச் சேர முயற்சிக்கின்றன. புலிகளின் முன்னாள் பாராளுமன்ற ஊதுகுழலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டி அமைப்புக்களாக பிளவடைந்துள்ளது. சிலர் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அதே வேளை, ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக நின்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தமிழ் கூட்டமைப்பு ஆதரித்தது. இராணுவத் தளபதி என்ற முறையில், புலிகளை தோல்விக்கு இட்டுச் சென்ற கொடூரமான தாக்குதல்களுக்கு பொன்சேகா நேரடி பொறுப்பாளியாக இருந்தார்.
கடந்த பெப்ரவரியில், பல்வேறு முன்னாள் புலிகள் அமைப்புக்கள் லண்டனில் ஒன்று கூடி உலக தமிழ் பேரவையை அமைத்தன. இது இலங்கையில் இருந்து வெளியேறி உலகத்தின் பல பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு தமிழர்களின் "உரிமைக் குரல்" என உரிமை கோரப்பட்டது. கடந்த தொழிற்கட்சி அரசாங்கத்தின் ஆதரவுடனும், அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் றொபேட் பிளாக்கின் ஆசியுடனும் பிரிட்டனின் பாராளுமன்ற கட்டிடத்தில் அது கூடியது. அதில் பிரிட்டனின் வெளியுறவு செயலாளர், எதிர்கட்சி பேச்சாளர் ஆகியோர் உரையாற்றினார்கள். அமெரிக்காவினதும், பிரிட்டனதும் தலையீட்டுக்கும் இலங்கையில் மனித உரிமை பற்றிய கரிசனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மாறாக, இது இந்தப் பிரச்சினையையும் உலகத் தமிழர் பேரவையையும் உபயோகித்து இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதையும், கொழும்பில் வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை கீழறுப்பதையும் இலக்காகக் கொண்டதாகும்.
பத்மநாதனதும், இந்த சகல அரசியல் குழுக்களினதும் அரசியல் குத்துக்கரணம், அவை நேர் வழியில் இருந்து விலகியதால் ஏற்பட்டதல்ல, மாறாக புலிகளின் முதலாளித்துவ பிரிவினைவாத வேலைத்திட்டத்தின் உற்பத்தியாகும். தனியான தமிழீழ முதலாளித்துவ அரசு என்ற புலிகளின் முன்னோக்கு, தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற மக்களதும் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு மாறாக, தமிழ் உயர் தட்டினரின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. புலிகள் தமது இலக்கை அடைவதற்கு எப்பொழுதும் பெரும் வல்லரசுகளின் அல்லது பிராந்திய வல்லரசுகளின் ஆதரவையே நாடி வந்துள்ளனர்.
புலிகளின் இராணுவத்தோல்வி முதன்மையாக அதன் அரசியல் வேலைத்திட்டத்தின் விளைவாகும். இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது சர்வதேச தொழிலாள வர்கத்திற்கோ அழைப்பு விடுவதற்கு இயல்பாகவே இலாயக்கற்ற புலிகளின் தலைவர்கள், இராஜபக்ஷவின் யுத்தத்திற்கு ஆதரவு கொடுத்த சக்திகளையே தலையிடுமாறு பயனற்ற வேண்டுகோளை விடுத்தார்கள். இராணுவ பொறிவை தொடர்ந்து புலிகளின் சிதைந்த பகுதிகள், கொழும்பு ஸ்தாபனத்திடம் ஒரு அரசியல் தங்குமிடத்தை பெறுவதற்கான அல்லது ஏதாவதொரு வல்லரசினது அடைமானப் பொருளாக இருப்பதற்கான வாய்ப்பைத் தேடினார்கள்.
எவ்வாறாயினும், தமிழ் தொழிலாளர்களுக்கும் கிராமப்புற ஏழை மக்களுக்கும் அத்தகைய விருப்பத் தேர்வு கிடையாது. சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கோரிக்கையை இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கின்ற நிலையில், தமது சிங்கள மற்றும் முஸ்லீம் சமதரப்பினரைப் போலவே தமிழர்களும் வாழ்க்கைத் தரங்களின் மீதான பாரிய தாக்குதலை எதிர்கொள்கின்றார்கள். வட-கிழக்கில் பாதுகாப்பு படைகள் தொடர்ச்சியாக ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகின்றன.
புலிகளின் இனவாத முன்னோக்கை நிராகரித்து, சோசலிச வேலைத் திட்டத்தின் பக்கம் திரும்பி, தொழிலாளர்- விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடுவதற்காக அடிப்படை பகுப்பாய்வு அவசியமானது. தமது பொது வர்க்க நலன்களுக்கான போராட்டத்தில் மொழி மற்றும் இன பேதங்களை கடந்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். அத்தகைய ஒரு முன்நோக்குக்காகப் போராடும் ஒரே ஒரு அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். அது, தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகின்றது.
|