World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Indian writer Arundhati Roy threatened with prosecution under anti-terrorism law இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய்க்கு பயங்கரவாத-தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல் By Kranti Kumara கிழக்கு இந்திய மாநிலமான சட்டிஸ்காரின் பொலிஸ், புக்கர் பரிசு (Booker Prize) வென்ற நாவல் ஆசிரியரும், கட்டுரையாளரும் மற்றும் மனித உரிமைக்காக பிரச்சாரம் செய்பவருமான அருந்ததி ரோய்க்கு எதிராக மாநிலத்தின் கொடூரமான பயங்கரவாத-தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை தயாரிக்க "ஆராய்ந்து கொண்டிருக்கின்றது." அவுட்லுக் இன்டியா (Outlook India) சஞ்சிகையின் மார்ச் 29 வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், "மாவோவாதிகளை புகழ்ந்துள்ளதாக" ரோய் மீது குற்றஞ்சாட்டி விஸ்வஜித் மித்ரா என்பவர் பதிவு செய்த முறைப்பாட்டுக்கு பிரதிபலிப்பாகவே ரோய் மீதான தமது விசாரணைகளை பொலிஸ் தொடங்கியுள்ளது. "தோழர்களுடன் நடைப்பயணம்" என்ற தலைப்பில், சஞ்சிகையின் 33 பக்க ரோயின் கட்டுரையில், தண்டகாரன்ய பிரதேசத்திற்கு அவர் மேற்கொண்ட இரகசிய பயணத்தைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது. உயர்நில காட்டுப் பகுதியான தண்டகாரன்ய, பழங்குடி மக்கள் அல்லது ஆதிவாசிகள் வாழும் பிரதேசமாகும். எனவே அவரால் மாவோவாத கொரில்லா செயற்பாட்டாளர்களுடன் பேச முடிந்ததோடு, அதற்கு சாட்சியாகவும் உள்ளார். மித்ரா "ஒரு சாதாரண பிரஜையாக" குறிப்பிடப்படுகிறார். ஆனால், அவர் இந்தியாவின் அதிக ஜனத்தொகையைக் கொண்ட ஆந்திர பிரதேசத்தின் ஆளும் கட்சியான பகுஜன் சமாமஜ் கட்சி அல்லது பி.எஸ்.பீ. யின் ஒரு உள்ளூர் தலைவர் என்று தெரிவிக்கப்படுகிறது. சட்டிஸ்காரின் பொலிஸ் ஆணையாளர் நாயகம் (டி.ஜி.பீ.) விஸ்வ ரஞ்சன், "எந்தவொரு அடுத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முன்னதாக இந்த விவகாரம் விசாரிக்கப்படும்... நான் சட்ட வல்லுனர்களிடம் அவர்களது கருத்துக்களை தெரிவிக்குமாறும் ஒரு முடிவுடன் வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன்," என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மித்ராவின் முறைகேடான ஜனநாயக-விரோத "முறைப்பாடு" பாராட்டத்தக்கது என டி.ஜி.பீ. நம்புவது, அவரது மேலதிக கருத்துக்களில் எடுத்துக்காட்டப்படுகிறது. "அருந்ததி ரோய் ஏனையவர்களால் பிழையாக ஊக்குவிக்கப்பட்டிருந்தாரா அல்லது அவர் சிவில் சமூகத்தில் உண்மையில் ஒரு பெரியவரா என்பது எனக்குத் தெரியாது. எனக்கு எப்படித் தெரியும்? என ரஞ்சன் தெரிவித்தார். ரோய், சட்டிஸ்காரின் இழிபுகழ்பெற்ற விசேட பொதுசன பாதுகாப்புச் சட்டம் (2005) அல்லது சி.பி.எஸ்.ஏ. யின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அச்சுறுத்தப்பட்டுள்ளார். இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக் கட்சியினால் (பி.ஜே.பீ.) வரையப்பட்ட இந்தச் சட்டம், "சட்டவிரோதமான நடவடிக்கைகள்" பற்றிய ஒரு பெரும் வீச்சளவுகொண்ட வரைவிலக்கணத்தைக் கொண்டுள்ளது. அதன் பிரிவுகளின் கீழ், "பொது ஒழுங்குக்கு" "ஒரு ஆபத்தை அல்லது அச்சத்தை ஏற்படுத்தும்", அல்லது "நிர்வாகச் சட்டத்துக்கு" "ஒரு தடையை ஏற்படுத்தும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும்", அல்லது "சட்டத்தால் அமைக்கப்பட்ட" எந்தவொரு சட்டம் அல்லது நிறுவனத்துக்கு கீழ்படியாமையை "ஊக்குவிக்கும்" ஒரு நடவடிக்கை அல்லது ஒரு எழுத்து மூலமான அல்லது வாய்மொழி மூலமான தொடர்பும், சட்டவிரோதமானதாகும் மற்றும் ஏழு-ஆண்டுகால சிறைவாசத்தை விளைவாக்கும். சி.பீ.எஸ்.ஏ., இந்தியாவிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் உள்ள சமூக விடுதலை அமைப்புக்களால் பரந்தளவில் கண்டனம் செய்யப்பட்டது. இந்த சட்டவிதிகளின் உண்மையான இலக்கு, ஏற்கனவே 2004ல் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பின் மாவோவாத கிளர்ச்சியாளர்கள் அல்ல, மாறாக, மாவோவாதிகளை நசுக்குவதில் ஜனநாயக உரிமைகளை இரும்புக் கால்களால் நசுக்கும் மற்றும் கண்மூடித்தனமான வன்முறைகளைப் பயன்படுத்தும் அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படைகளையும் விமர்சிக்கும் சமூக விடுதலையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனையவர்களுமே ஆவர் என அவர்கள் குற்றஞ்சாட்டினர். சி.பீ.எஸ்.ஏ. நிறைவேற்றப்படுவதற்கு அரை ஆண்டுக்கு முன்னதாக, சட்டிஸ்கார் அரசாங்கம் சல்வா ஜுதும் ("தூய்மைபடுத்தும் வேட்டை") என்ற பெயரில் ஒரு மாவோவாத-எதிர்ப்பு படையை அமைத்தது. இந்தப் படை, அரசாங்க-விரோத கிளர்ச்சிக்கு ஆதரவளிப்பதாக சந்தேகிக்கப்பட்ட கிராமங்களுக்கு தீ மூட்டி எரித்தது உட்பட பல அட்டூழியங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. ரோய்க்கு எதிரான நடவடிக்கையானது கிழக்கு இந்தியாவின் "பழங்குடியினர் வாழும் பகுதியில்" மாவோவாத கிளர்ச்சிகள் மீது குவிக்கப்படும் அரசியல்-ஊடக ஆரவாரங்களுக்கு மத்தியிலேயே தலைநீட்டியுள்ளது. இந்த மாத முற்பகுதியில், இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பசுமை வேட்டை என்ற பெயரில் நாடு பூராவும் கூட்டாக மேற்கொண்ட கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை, சட்டிஸ்காரின் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோவாத கொரில்லாக்கல் 76 பாதுகாப்பு படையினரை கொன்றதில் பெரும் பின்னடைவைக் கண்டது. (பார்க்க: "இந்திய அரசாங்கம் மாவோயிஸ்டுக்கள் மற்றும் பழங்குடிகள் மீதான போரில் பின்னடைவைச் சந்திக்கின்றது") சுரங்கங்கள், அணைக்கட்டுகள் மற்றும் ஏனைய பெரும் வர்த்தக "அபிவிருத்தி" திட்டங்களுக்காக பழங்குடியினரின் மரபுரிமை நிலங்களை அபகரிப்பதற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை நசுக்குவதே பசுமை வேட்டை நடவடிக்கையின் உண்மையான நோக்கம் என எச்சரித்து, அதை கண்டனம் செய்த பொருளாதார மற்றும் அரசியல் வார வெளியீடுகளின் ஆசிரியர்களைப் போல், ரோய் மற்றும் ஏனையவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சகல விதமான வேண்டுகோள்களும், தண்டேவாட அழிவை அடுத்து இந்திய தொலைக் காட்சி மற்றும் பத்திரிகையில் கருத்துத் தெரிவிப்பர்களிடம் இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சாரத்துக்கு எண்ணெய் வார்ப்பதற்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தானே உதவியிருந்தார். பசுமை வேட்டை நடவடிக்கையை தூக்கிப் பிடித்த அவர், இந்திய ஆளும் தட்டின் சுரண்டல் மற்றும் அடக்குமுறை கொள்கைகளே, பயங்கரவாதம் பற்றி கவணிக்காதது போல் இருந்த, இல்லையெனில் அனுமதித்த, இந்தியாவின் பிரமாண்டமான பழங்குடி பிராந்தியம் இப்போது வன்முறையில் மூழ்கியுள்ளதற்கான அடிப்படை காரணமாகும் என வலியுறுத்தியவர்களை மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தின் மேல் சபையான இந்தியாவின் ராஜ்ய சபையில் ஏப்பிரல் 15 அன்று உரையாற்றிய சிதம்பரம்: "மனித உரிமை அமைப்புக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒரு முட்டாள்தனமான மனக்கோட்டையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என நான் நினைக்கின்றேன். அவர்கள் [இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாத)] ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை தூக்கி வீசி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டால், அவர்கள் இந்த நாட்டில் ஏதாவதொரு மனித உரிமை அமைப்பை இயங்க விடுவார்களா? அவர்கள் இந்த நாட்டில் ஏதாவதொரு அரச சார்பற்ற அமைப்பை அனுமதிப்பார்களா? அங்கு ஒரு பாராளுமன்றம் இருக்குமா? எனக் கேட்டார். உள்துறை அமைச்சர் அருந்ததி ரோய் பற்றியும் தோண்ட முயன்றார். சீற்றத்தில் தனக்கே ஒரு தோரணையை உருவாக்கிக்கொண்ட சிதம்பரம், "33 பக்க கட்டுரையை எழுதியவர்கள் 33 பக்க கட்டுரைகளை எழுத அனுமதிக்கப்படுவார்களா? 33 பக்க கட்டுரை ஒன்றை பிரசுரிக்க ஒரு சஞ்சிகை அங்கு இருக்குமா?" எனக் கேட்டார். குறிப்பிடத்தக்க வகையில், ரோயை அச்சுறுத்தி மற்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதை கண்டனம் செய்வது ஒரு புறம் இருக்க, சிதம்பரம் ரோய்க்கு எதிரான விசாரணையை உடனடியாகக் கைவிட வேண்டும் என சட்டிஸ்காரின் பி.ஜே.பீ. அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவில்லை. ரோய் இந்திய முதலாளித்துவ ஸ்தாபனத்தின் பகைமையை சம்பாதித்துக்கொள்வாரேயானால், அது பழங்குடி மக்களுக்கு அபிவிருத்தியையும் ஜனநாயகத்தையும் கொண்டுவர யுத்தத்தை முன்னெடுப்பதாக கூறும் அவர்களது பாசாங்குத்தனத்தை உடனடியாக நிராகரித்து அப்பலப்படுத்திய காரணத்தினாலேயே ஆகும். ஒரு திறமையான எழுத்தாளரான அவர், இந்திய அரசால் கைவிடப்பட்டு மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள ஆதிவாசிகளின் தலைவிதியை பற்றி பேசுவதோடு, சட்டிஸ்கார் மற்றும் முழு கிழக்கு பழங்குடி எல்லைப் பகுதிகள் மீதான தனது அதிகாரத்தை மீண்டும் பெறும் இந்திய அரசாங்கத்தின் முயற்சியின் பின்னால் உள்ள அடிப்படை இலாப நலன்களையும் விளக்குகின்றார். "கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா மற்றும் மேற்கு வங்காள அரசாங்கங்கள், பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான புரிந்துணர்வு உடன்படிக்கைகளை பெரும் நிறுவனங்களுடன் கைச்சாத்திட்டுக்கொண்டுள்ளன. இவை ஸ்டீல் பேன்ட்ஸ், மிருது-இரும்பு தொழிற்சாலைகள், மின்சார நிலையங்கள், அலுமீனிய சுத்தீகரிப்பு, தண்ணீர் அணைக்கட்டு மற்றும் சுரங்கங்களை அமைப்பதற்காக அனைத்தும் இரகசியமாக செய்துகொள்ளப்பட்டுள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கை அசல் பணமாக மாறவேண்டுமெனில், பழங்குடி மக்கள் அகற்றப்பட வேண்டும். அதற்காகவே இந்த யுத்தம்," என ரோய் எழுதியுள்ளார். அரசுக்கு எதிராக அடிக்கடி நிகழும் வன்முறை சார்ந்த எதிர்புக்கள் உட்பட பழங்குடி மக்களின் எதிர்ப்பானது, மாவோவாதிகளுக்கும் முன்னதாகவே தோன்றியது என்பதை சுட்டிக்காட்டும் ரோய், பழங்குடி மக்கள் தசாப்த காலங்களாக எதிர்கொண்ட கொடூரங்கள், அலட்சியம் மற்றும் இடப்பெயர்வுகளே அவர்களில் கணிசமான பகுதியினர் மாவோவாத ஆயுதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரள்வதற்கு காரணமாய் இருந்தது என்பதை சரியாகக் கண்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோவாதிகள்) அரசியல் பற்றி எழுதும் போது அவர் புலனாற்றல் குறைந்தவராக உள்ளார். ஆனால் அவர் குற்றங்காண்பதற்கு உரியவர் அல்ல. ரோய் மாவோவாத கிளர்ச்சியாளர்கள் பற்றி முழுமையாக புகழ்ந்திருந்தாலும் கூட, அவரது செய்திகளும் கருத்துக்களும் அரசியலமைப்பினால் பாதுகாக்கப்படும் பேச்சு சுதந்திரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் ஆமெரிக்க ஆளும் தட்டைவிட எந்தவிதத்திலும் குறைந்துவிடாத இந்திய ஆளும் தட்டானது, ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டு மொத்த தாக்குதல்களையும் மற்றும் மாற்றுக்கருத்துக்களை மேலும் மேலும் குற்றத்துக்குள்ளாக்குவதையும் நியாயப்படுத்துவதற்காக கடந்த தசாப்தம் பூராவும் ஒரு வெளிப்படையான "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" தோற்றுவித்துள்ளது. சட்டிஸ்காரின் கொடூரமான சி.பீ.எஸ்.ஏ. யினால் வெறுக்கப்படும் முதல் நபர் ரோய் அல்ல. சட்டிஸ்கார் அரசாங்கத்தை விமர்சித்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டனர். அரசாங்கம் வழங்கத் தவறிய அடிப்படை சேவைகளை பழங்குடி பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதில் செயலூக்கத்துடன் இயங்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் உறுப்பினர்களும், சி.பீ.எஸ்.ஏ. யின் கீழ் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஆகவும் மோசமாக அடக்கப்பட்ட மற்றும் அரசியல் ரீதியில் வரையறைக்குட்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கிய ஒரு பிரசித்தி பெற்ற வைத்தியரான டாக்டர். பின்யக் சென், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் பேர்போனவராவார். அவர் சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் என்ற பெயரிலான அரச சார்பற்ற அமைப்பின் உப- தலைவராவார். டாக்டர். சென், சிறைவைக்கப்பட்டிருந்த மாவோவாத தலைவர் ஒருவருக்கு சிகிச்சை அளித்த பின் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் 2007 மே மாதம் கைது செய்யப்பட்டதோடு சட்டிஸ்கார் மத்திய சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான பிரச்சாரம் இந்திய உயர் நீதிமன்றத்தை தலையிட நெருக்கியதன் பலனாக, நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்ய கட்டளையிட்டதால் மட்டுமே அவர் விடுதலையானார். ஆயினும், பின்யக் சென்னுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் எவையும் நீக்கப்படாததோடு இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தனது ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது. "மாவோவாதிகளுடன் தொடர்பு" வைத்திருந்தார் என்ற போலி குற்றச்சாட்டின் பேரில் சட்டிஸ்கார் சிறையில் 90 நாட்களை கழித்த விவரணத் திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான அஜெய் 2008 ஆகஸ்ட்டில் விடுதலையானதை கொண்டாடுவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிய, டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் நந்தானி, அரசை பீதியான சூழ்நிலை பற்றிக்கொண்டுள்ளது என சுட்டிக்காட்டினார். சி.பி.எஸ்.ஏ. யின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பீதியினால், சல்வா ஜுதும் நடவடிக்கையின் கொடூரங்கள் பற்றிய செய்திகளை செய்தி நிறுவனங்கள் வழமைபோல் இருட்டடிப்புச் செய்கின்றன. இன்னுமொரு சுயாதீன சட்ட ஆய்வாளரான உஷா ராமநாதன், இந்த சட்டத்தின் மத்தியகாலப் பண்பை சுட்டிக்காட்டினார். அந்தச் சட்டத்தின் ஒரு உப பிரிவு, அதன் பிரிவுகளை விமர்சிப்பதையே "சட்டவிரோதமாக்கும்" ஒரு விதியை உள்ளடக்கியுள்ளது. |