World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Greek crisis and the fight for the United Socialist States of Europe

கிரேக்க நெருக்கடியும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்

Alex Lantier
24 April 2010

Back to screen version

கிரேக்கத்தில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பொதுத்துறை வேலைநிறுத்தமானது பிரதம மந்திரி ஜியார்ஜியோஸ் பாப்பாண்ட்ரூவின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் முக்கிய அரசியல் பிரச்சினைகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. சமூக ஜனநாயக PASOK அரசாங்கமானது மிகப் பெரிய வெட்டுக்களை ஊதியங்கள், வேலைகள், சமூகநலத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் செய்து, சர்வதேச வங்கியாளர்களுக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டிய மிக அதிகக் கடன்களுக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க கோருகிறது.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏப்ரல் 22ம் தேதி "பிரமைகள் தேவை இல்லை, செல்வந்தர்களுக்கு எதிரான போர்" என்ற கோஷங்களுடன் அணிவகுத்துச் சென்றனர். அரசாங்க ஆட்சித்துறை ஊழியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் மாலுமிகள் ஆகிய பலதரப்பினரும் மக்களின் பெருகிய சீற்றத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சமீபத்திய கருத்துக் கணிப்புக்களானது மக்களில் 86 சதவிகிதத்தினர் பாப்பாண்ட்ரூவின் வெட்டுக்கள் "நியாயமற்றவை" என்று தான் கருதுகின்றனர்.

வேலைநிறுத்தம் மற்றும் மக்கள் அபிப்பிராயம் ஆகியவற்றையும் மீறி, கிரேக்க முதலாளித்துவம் இன்னும் அதிக வெட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. நேற்று பாப்பாண்ட்ரூ உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை (IMF), கிரேக்கப் பிணை எடுப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கேட்டுக் கொண்டார். EU 30 பில்லியன் ஈரோக்களையும் IMF 12 பில்லியன் ஈரோக்களையும் கடனாகக் கொடுப்பதற்கு பரிமாற்றாக புதிய வெட்டுக்களுக்கு ஏதென்ஸ் உடன்படுகிறது. பாப்பாண்ட்ரூ "புதிய கடுமையான நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவுக் கருத்தைத் திரட்ட" செயல்படுகிறார் என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

பாப்பாண்ட்ரூவின் நிலைக்கு ஆதரவாக நிதியச் சந்தைகள் உள்ளன. அதாவது முக்கிய ஐரோப்பிய, சர்வதேச வங்கிகளில் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தவைகள். இவை கிரேக்கத்தைப் பொருளாதார ரீதியாக தாங்கள் கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு எதிரான எந்த வெளிப்பாடுகளையும் பொறுத்துக் கொள்ள மாட்டா. அவை கிரேக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை (bonds) வேலைநிறுத்தத்தின்போது விற்றன, வட்டிவிகிதத்தை உயர்த்தி, ஏதென்ஸ் புதிய கடன்களுக்கு கிட்டத்தட்ட 9 சதவிகித வட்டியை கொடுக்குமாறு செய்கின்றன. அத்தகைய விகிதங்களில் கடன் வாங்கினால் கிரேக்கம் திவாலாகிவிடும் என்று பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேக்கத்தின் மீது சர்வதேச மூலதனத்தின் தாக்குதலானது ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு சோதனை நடவடிக்கை தான். போர்த்துக்கலின் கடன் வாங்கும் செலவுகள் 5 சதவிகிதத்தை நோக்கி உயர்ந்து செல்கையில், செய்தி ஊடகமானது அந்நாட்டை வங்கிகளின் அடுத்த இலக்கு என்று பெருகிய முறையில் பேசுகின்றன. போர்த்துக்கலுக்கு பின்னர் இங்கிலாந்து அல்லது ஸ்பெயின் ஆக இருக்கும்.

கிரேக்க வேலைநிறுத்தங்களின் விளைவானது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முட்டுச் சந்து நிலையை உயர்த்திக் காட்டுகிறது. ஏனென்றால் தொழிற்சங்கங்களும் போலி இடது கூட்டுக்களும் முதலாளித்துவ தாக்குதலுக்கு மக்களின் பரந்த எதிர்ப்பை அடக்கி, காட்டிக் கொடுக்கும் வேலை செய்கின்றன.

பாப்பாண்ட்ரூ தன் வெட்டுக்களை தீவிரமாக்குகையில், தொழிற்சங்கங்களானது பாப்பாண்ட்ரூவிற்கு கேடயமாக உள்ளன. அவற்றின் நோக்கம் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை துண்டு துண்டாக அழைப்பு விடுத்து நடத்துவதன் மூலம் தொழிலாளர்களைக் களைப்பும் சலிப்பும் அடைய வைத்தல் ஆகும்.

GSEE என்ற தனியார் துறை தொழிற்சங்கம், ஏப்ரல் 22 வேலைநிறுத்தத்தில் பங்கு பெற மறுத்து விட்டது. அடுத்த மாதம் வரை தேதி குறிப்பிடாமல் வேலை நிறுத்தங்களை ஒத்தி வைப்பதாக அது காரணம் கூறியுள்ளது. ADEDY என்ற பொதுத் துறைத் தொழிலாளர் சங்கமானது முக்கிய துறைகளில் வேலை நிறுத்தங்களை செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளது. இதில் பொதுப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை அடங்குகின்றன.

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் Syriza உம் அலெக்சிஸ் சிப்ரஸின் தலைமையில் உள்ள கிரேக்கத்தின் போலி இடது கட்சியும் சிறிதும் வெட்கமின்றி அமெரிக்க எதிர்ப்பு உணர்வை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இது PASOK மற்றும் கிரேக்க முதலாளித்துவத்திற்கு எதிராக உள்ள மக்கள் சீற்றத்தை திசை திருப்புகிறது. தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு ஐரோப்பிய மற்றும் சர்வதேச போராட்டம் வளர்ந்து விடாமல் தடுக்க முற்படுகிறது.

EU-IMF திட்டத்திற்கு ஆதரவா எதிர்ப்பா என்பதை அறிய ஒரு வாக்கெடுப்பு வேண்டும் என்று சிப்ரஸ் அழைப்பு விடுத்துள்ளார். தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு தொழிலாளர்கள் தங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று Syriza வலியுறுத்துவதால், PASOK அரசாங்கத்தை எதிர்த்து தொழிலாள வர்க்கம் போராடுவதற்கு எந்தக் கொள்கையையும் முன்வைக்காததாலும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் திட்டம் அதனிடம் இல்லாததாலும், வாக்கெடுப்பிற்கான அதன் அழைப்பானது தொழிலாளர்களை பிணை எடுப்பிற்கு மறுப்பு காட்டுதல் என்பதையொட்டி நாடானது திவாலை ஏற்க வேண்டும் அல்லது IMF மற்றும் பிரஸ்ஸல்ஸின் ஆணைகளை ஏற்க வேண்டும் என்ற தெரிவைக் கொடுக்கிறது. இது இடதின் போலித்தன அரச ஸ்தாபன ஆதரவை பிணை எடுப்பிற்கு பிரதிபலிப்பதுடன் மிருகத்தன சிக்கனக் கொள்கைகளும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், Syriza ஆனது வாஷிங்டனை தளமாகக் கொண்ட IMF திட்டமிடப்பட்டுள்ள பிணை எடுப்பில் பங்கு பெறுவதற்கு அதன் எதிர்ப்பின் மீதும் கவனத்தைக் காட்ட முற்பட்டுள்ளது. இது எந்த வர்க்கக் கொள்கை அடிப்படையிலும் இல்லை, மாறாக கிரேக்க தேசியவாதத்தையும் முதிர்ச்சியற்ற அமெரிக்க எதிர்ப்புணர்வையும் தூண்டிவிடுவதற்குத்தான். ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்க அரசாங்கமும் வங்கிகளும், அமெரிக்க வங்கியாளர்களை விட கிரேக்கத் தொழிலாளர்களுக்கு ஏதோ குறைந்த விரோதப்போக்கைக் கொண்டிருந்ததைப் போல்!

இதே போக்கில் தான் Syriza சட்டம் இயற்றுபவரான Dimitris Papadimoulis, "IMF ஆனது கிரேக்க மக்களுக்கு மேலே எரிமலை சாம்பல் மேகம் போல் குவிந்துள்ளது" என்று கூறியுள்ளார். சிப்ரஸ் பாப்பாண்ட்ரூவின் "ஆலோசகர்கள் அட்லான்டிக்கின் மறுபுறத்தில் இருந்து வருகின்றனர்" என்று எச்சரித்துள்ளார்.

இத்தகைய தேசியவாத வெகுஜனத் திருப்தி பேச்சுக்களானது பாப்பாண்ட்ரூ மற்றும் PASOK ஆனது கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மிக உடனடியான எதிரியான கிரேக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் இவர்கள் எனக் காட்டுவதற்குப் பதிலாக வெளிச்சக்திகளின் பலிக்கு உட்பட்டு விட்டார்கள் எனச் சித்தரிக்கும் முயற்சியுடன் கைகோர்த்து நிற்கிறது. இத்தகைய அரசியல் கருத்தை வளர்க்க முற்படுபவர்கள், பரந்த மக்கள் அழுத்தமானது பாப்பாண்ட்ரூவை சிக்கனத் திட்டத்தை கைவிட வைக்கும் என்ற போலி நம்பிக்கைகளை தொழிலாள வர்க்கத்திற்கு கொடுத்து நிராயுதபாணியாக்குகின்றன. இது தோல்விக்கான பாதை தான்!

இத்தகைய உண்மையான ஆபத்து தொழிலாள வர்க்க சிதைவு நோக்குநிலையானது 1968 ல் இருந்து 1975 வரை இராணுவக் குழுவின் கீழ் நடந்த கிரேக்க இராணுவ ஆட்சிக்கு மீண்டும் திரும்பும் கதவைத்தான் திறந்துவிடும். ஒருவேளை தொழிலாள வர்க்கத்தின் வெட்டுக்களுக்கான எதிர்ப்புக்களை தகர்த்துவிட தொழிற்சங்கங்கள் தோல்வியுற்றால், கிரேக்க அரசியல் ஸ்தாபனத்திற்குள் அத்தகைய இராணுவத் திட்டங்களுக்கான ஏற்பாடுகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.

கிரேக்கத்திலோ, அப்படிப்பார்த்தால் எஞ்சிய ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ அதற்கும் அப்பாலோ நெருக்கடிக்கு சீர்திருத்த வகைத் தீர்வு எதுவும் இல்லை. உலக முதலாளித்துவ நெருக்கடியின் தர்க்கமானது புரட்சி அல்லது எதிர்-புரட்சி, சோசலிசம் அல்லது காட்டிமிராண்டித்தனம் என்ற பிரச்சினையைத்தான் எழுப்புகிறது.

சர்வதேச போராட்டத்தின் முன்னணிக்கு தள்ளப்படும் கிரேக்கத் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையானது தங்கள் போராட்டத்தை எப்படி தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் போலி இடது ஆதரவாளர்களின் துரோகப் பிடியில் இருந்து மீட்பது, தங்கள் சுயாதீன வலிமைமைய ஒரு புரட்சிகர மற்றும் சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவது என்பதுதான்.

கடும் சிக்கன மற்றும் பெரும் வேலையின்மை என்பதற்குப் பதிலாக, தொழிலாளர்கள் வங்கிகளை தேசியமயமாக்க கோர வேண்டும், பொதுச் சேவைகள் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் அவைகள் மாற்றப்பட வேண்டும், அதையொட்டி கிடைக்கும் செல்வமானது வேலைகளையும் கெளரவமான வாழ்க்கைத் தரங்களை அளிக்க திரட்டப்பட வேண்டும் என்றும் கோர வேண்டும். இது அடிப்படை தொழிற் துறைகளை தேசியமயமாக்குவதுடன் இணைக்கப்பட வேண்டும்.

பாப்பாண்ட்ரூவும் PASOK ம் அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக அதிகாரத்தை இராணுவத்திடம் ஒப்படைக்கத்தான் விரும்புவார்கள். கிரேக்கத் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள அரசியல் பணியானது PASOK அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது அல்ல, மாறாக அதை வீழ்த்தி அதற்குப்பதிலாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பதுதான்.

கிரேக்க தேசிய எல்லைகளிற்குள் மட்டும் இப் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. ஐரோப்பா நெடுகிலும், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் இதே எதிரியிடம் இருந்து இதே போன்ற தாக்குதல்களைத்தான் எதிர்கொள்கின்றார்கள்--அதாவது சர்வதேச முதலாளித்துவத்திடமிருந்து. குறிப்பாக இந்த நெருக்கடியானது ஐரோப்பாவை ஒரு முற்போக்கான, ஜனநாயக மற்றும் சமத்துவ அடிப்படையில் முதலாளித்துவ வடிவமைப்பின் கீழ் ஐக்கியப்படுத்துவது இயலாது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன முதலாளிகளின் ஐரோப்பிய ஒன்றியம் என்பதற்குப் பதிலாக கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதற்கு போராட ஐக்கியப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved