World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGerman government statement on the Bundeswehr mission in Afghanistan The Chancellor's lies ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படை நடவடிக்கை பற்றிய ஜேர்மன் அரசாங்கத்தின் அறிக்கை அதிபரின் பொய்கள் By Ulrich Rippert ஆப்கானிஸ்தானில் கடந்த இரு வாரங்களில் நடைபெற்ற போரில் ஏழு ஜேர்மன் படையினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்களிடையே போருக்கு எதிரான எதிர்ப்பு கணிசமாகப் பெருகியுள்ள நிலையில், அதிபர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் CDU) நேற்று பாராளுமன்றத்திற்கு அரசாங்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். இதில் அவர் மீண்டும் ஜேர்மன் படைகளை (Bundeswehr) அங்கு நிலைநிறுத்துவதை நியாயப்படுத்தும் விதத்தில், இதற்கு "வேறு மாற்றீடு" இல்லை என்றார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் ஆற்றிய உரை பிரச்சார சொற்றொடர்கள், சிதைப்புக்கள் மற்றும் அப்பட்டமான பொய்களின் கலவை ஆகும். இது வடக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபனுக்கு எதிரான ஒரு இராணுவத் தாக்குதலை அரசியல் அளவில் தயாரிப்பதற்கு உதவுகிறது. அதைப் பற்றி கூட்டுப் படைகளின் தளபதியும் அமெரிக்க தளபதியுமான ஸ்டான்லி மக்கிரிஸ்டல் நேற்று முந்தைய தினம் பேர்லினுக்கு சென்றிருந்தபோது அறிவித்திருந்தார். முன்னாள் அதிபர் ஹெல்முட் ஷ்மித்தின் (சமூக ஜனநாயகக் கட்சி SPD) மேற்கோள் ஒன்றுடன் மேர்க்கெல் தன்னுடைய உரையை ஆரம்பித்தார். இளம் படையினர் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்கையில் தேர்ந்தெடுக்கப்படும் படையினர்கள் அதிருஷ்டசாலிகள், ஏனெனில் அவர்கள் சமாதான நோக்கங்களை தொடரும் ஒரு நாட்டிற்குத்தான் பணிபுரிவர் என்று ஷ்மித் கூறியிருந்தார். அவருடைய சொற்கள் "இந்த நாடு உங்களை ஒரு பொழுதும் தவறாகப் பயன்படுத்தாது" என்பது அதன் முழு உண்மை தன்மையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று மேர்க்கெல் கூறினார். ஹெல்முட் ஷ்மித் பற்றிய குறிப்பு சில விதங்களில் பயனுடையது. பெருகி வரும் போர் எதிர்ப்பு உணர்வை எதிர்கொள்ளும் வகையில் தன்னுடைய உரையின் ஆரம்பத்தில் மேர்க்கெல் தான் தன்னை சமூக ஜனநாயகவாதிகளுடன் கூட்டு என்ற தளத்தில் இருத்திக் கொள்ளுவதாக தெளிவு படுத்தினார். மக்களிடையே போருக்கு எதிராக இருக்கும் எதிர்ப்பிற்கு மாறாக அவர் போர்க் கட்சிகளின் பெரும் கூட்டணிக் கருத்தை முன்வைக்கிறார். எனவேதான் மேர்க்கெல் அல்லது அவருடைய உரையை எழுதுபவர்கள் ஷ்மித் பெயரை இழுக்கின்றனர். ஏனெனில் அவர் படையினர்களுக்கு கொடுத்த உறுதிமொழியான தவறாகப் பயன்படுத்தப்படமாட்டார்கள் என்பது இப்பொழுது வெளிப்படையாகவே முறிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளாக ஜேர்மன் படையினர்கள் முற்றிலும் பொய்யான, தவறான வழியில் போருக்காக ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்டனர் /அனுப்பப்படுகின்றனர். படையினர்களுக்கும் மக்களுக்கும் அப்பொழுதும் இப்பொழுதும் முறையாகப் பொய் கூறப்படுகின்றது. பல ஆண்டுகளாக இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானை "மறு கட்டமைக்க" என்று கூறப்பட்டது. ஆப்கானிஸ்தானில் போர்ப் படையினர்களை பயன்படுத்துவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்குத்தான் என்றும் ஜனநாயக, அரசியலமைப்பு கட்டமைப்புக்களின் வளர்ச்சியை இராணுவ ரீதியாக செய்வதற்கும்தான் என்று கூறப்பட்டது. ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்படுவதை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கும் பாராளுமன்றத்தின் முடிவுகளில் "போர்" என்னும் சொல் காணப்பட முடியாது. வெளிநாட்டு படையினர்களின் எண்ணிக்கை 130,000 என்று உயர்த்தப்பட்டாலும், ஆயிரக்கணக்கான ஆப்கானிய குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றாலும், இந்த நடவடிக்கை தொடர்ந்து "பாதுகாப்பு, வளர்ச்சிப் பணி" என்று தான் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. தன்னுடைய நேற்றைய உரையில் மேர்க்கெலும் இந்த மறுகட்டமைப்புப் பணி என்ற கற்பனையை தக்க வைக்க முயன்றார். ஆனால் போர் பெருகியுள்ள விதம் மற்றும் ஏராளமான படையினர்கள் கொல்லப்பட்ட தன்மையில் இதைத் தக்க வைப்பது கடினமாக உள்ளது. எனவே மேர்க்கெல் தான் "களத்தில் இருக்கும் படையினர்கள் போர் பற்றியோ, உள்நாட்டுப் போர் பற்றியோ பேசும்போது" பெரும் பரிவுணர்வு கொண்டுள்ளதாகக் கூறினார். எத்தகைய கோழைத்தனமான வாதம்! இராணுவ நடவடிக்கை எப்படி மதிப்பிடப்பட வேண்டும் என்பது பற்றியும், எதற்காக, எந்த வழிவகைகளைத் தொடரும் நோக்கத்தை அது கொண்டுள்ளது என்பது பற்றி அரசாங்கத்திற்கு தெரியாதது போல். இது இராணுவத்தைப் பயன்படுத்துகிறது, மாற்றுப் பெயர்களைக் கூறுகிறது, தவறான தகவல்களை கொடுக்கிறது. அதன்பின் படையினர்கள், "கொஞ்சம் இருங்கள், நாங்கள் இங்கு போரில் உள்ளோம், நாம் ஒரு ஆக்கிரமிப்பு படை என்று கருதப்படுகிறோம், எதிரி இன்னும் அதிக ஆதரவை உள்நாட்டு மக்களிடம் இருந்து பெறுகிறான், எங்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் வலுவாகிக் கொண்டிருக்கின்றன, நாங்கள் கூடுதலாக கொல்ல வேண்டியுள்ளது, நம்முடைய இழப்புக்களே பெருகிக் கொண்டிருக்கின்றன, நாம் இங்கு போரில் ஈடுபட்டுள்ளோம்" என்பவற்றால், அரசாங்கம் விடையளிக்கிறது: "உங்கள் பார்வையை நாங்கள் அறிகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பு, காலனித்துவ போர் பற்றி நாம் வெளிப்படையாக பேச முடியாது, அது மக்களால் ஏற்கப்பட மாட்டாது." அதிபரின் இரண்டாவது பொய்யாவது: "நம் இறந்துவிட்ட படையினர்கள் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்காக தங்கள் உயிர்களைக் கொடுத்துள்ளனர்." ஐ.நா.கணக்கின்படி, போர் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 50,000 பேர் ஆப்கானிஸ்தானில் உயிரை இழந்துள்ளனர். அதிக ஆயுதங்கள் கொண்ட ஆக்கிரமிப்பும், நவீன ஆயுதங்களால் பயிற்றுவிப்பை கொண்டதினால், ஒரு குறைந்த வளர்ச்சி உடைய நாட்டின் மக்கள் மீது சேதத்தை தோற்றுவிக்கிறது. இதற்கும் சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு?" சட்டத்தின் ஆட்சி "மக்களின் மிக மதிப்பு வாய்ந்த சொத்து" என்று மேர்க்கெல் விவரித்து முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் தன்னுடைய எதிர்மறை அனுபவத்தைக் குறிப்பிட்டார். ஆனால் ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகள் ஒரு முற்றிலும் ஊழல் ஆட்சியைத்தான் ஆதரித்து வருகின்றன. கடந்த கோடை காலத்தில் நடந்த தேர்தல் தெளிவாகத் தில்லுமுல்லுக்கு உட்பட்டிருந்தது. ஜனாதிபதி கர்சாயி உடைய சகோதரர் CIA உளவுத்துறையிடம் இருந்து பணம் பெறுபவர். மேலும் போதைப் பொருள் வணிகத்திலும் ஒரு முக்கிய நபராகும். கடந்த ஆண்டு போதைப் பொருள் உற்பத்தி 9.000 டன் கச்சா அபின் என்ற முறையில் மிக அதிக அளவை அடைந்தது. இதுதான் அங்கு உள்ள சட்டத்தின் ஆட்சியாகும். ஜனநாயகப் பிரச்சினை பற்றி மேர்க்கெல் தன்னையே முரண்படுத்திக் கொண்டார். ஆப்கானிஸ்தானில் "மேலைத்தேய மாதிரி ஜனநாயகத்திற்கு" பாடுபடுவது உண்மை நிலைக்கு எதிரானது என்றார் அவர். மாறாக Loya Jirga போன்ற அமைப்புக்கள் கூட முறையான சமூக அமைப்புக்கள் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், ஒரு மத்தியகால பழங்குடி சமூகத்தின் பழைய வடிவமைப்புக்கள் தக்க வைக்கப்படும். இந்தப் பின்னணியில் மேர்க்கெல் பலமுறையும் தான் புதிய ஆப்கானிய மூலோபாயத்திற்கு ஆதரவு தருவதாகவும் அது ஜனவரி மாதம் லண்டன் மாநாட்டில் ஏற்கப்பட்டது என்றும் வலியுறுத்தினார். இந்த மூலோபாயம் உள்ளூர் ஆட்சியாளர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு இடமளிக்கிறது. அதில் "நிதானப் போக்குடைய தாலிபனும்" உட்படும். இதை மேர்க்கெல் "பொறுப்பை ஒப்படைப்பது" என்று விவரித்தார். உண்மையில் இந்தப் புதிய மூலோபாயத்தின் பொருள் பிராந்திய இனவழித் தலைவர்கள் மற்றும் பிரபுக்களை வலுப்படுத்துவது என்று ஆகும். இது நாட்டை முன்னை விட அதிகமாக முடக்கும் விதத்தில் ஒரு நிரந்தர பழங்குடி, உள்நாட்டுப் போரில் தள்ளும். பிராந்திய பூசல்களை இடைவிடாது திருத்தி நடத்துதல் நாட்டை நிரந்தரமாக ஏகாதிபத்திய நலன்களின் தயவில் தள்ளிவிடும். "தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ளும் பாதுகாப்புக் கட்டமைப்பு" என்று அதிபர் குறிப்பிட்டது உண்மையில் ஏகாதிபத்தியத்தின் காலனித்துவக் கொள்கையின் மிகப் பழைய தந்திரோபாயமான "பிரித்தாளும் முறை"தான். ஆனால் ஆப்கானிய மூலோபாயம் மட்டும் ஜனநாயக நிலைமைகளை நகையாடவில்லை. உள்நாட்டிலும் அரசாங்கம் தான் ஜனநாயகத்தைப் பற்றி என்ன சிந்திக்கிறது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. மக்களில் 70 சதவிகித்திற்கும் மேலானவர்கள் எதிர்க்கும் போரை அது மிருகத்தனமான சக்தியுடன் தொடர்கிறது. அதிபரின் பொய்களில் மூன்றாவது, ஆப்கானிய போர் ஜேர்மன் பாதுகாப்பிற்கு உதவுகிறது என்பதாகும். மீண்டும் இவர் இதற்கான சான்றுகளைக் கொடுக்க சமூக ஜனநாயகவாதிகளை நம்பினார். முன்னாள் SPD பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஸ்ட்ரகற், ஜேர்மன் பாதுகாப்பு ஹிந்து குஷ்ஷில் பாதுகாக்கப்படுகிறது என்று கூறியதை இவர் மேற்கோளிட்டார். "இன்று ஆப்கானிஸ்தானில் ஆபத்தில் இருப்பது என்ன என்பது பற்றி வேறு எவரும் இவ்வளவு தெளிவாக, துல்லியமாக, பொருத்தமாக வெளிப்படுத்தியது இல்லை" என்று மேர்க்கெலின் பாராட்டு ஒலித்தது. வரைபடத்தைப் பார்த்தால் நாட்டின் புவியியல் தன்மை புலப்படும். இது பாக்கிஸ்தான் மற்றும் ஈரானுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. சர்வதேச பாதுகாப்புக் கொள்கைக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று அதிபர் தொடர்ந்து கூறினார். ஆப்கானிஸ்தானில் ஆபத்தான பயங்கரவாதிகள் பயிற்சி பெறுகின்றனர், அண்டை நாடுகளிலும் பயங்கரவாதிகள் அணுவாயுதங்களை பெற அல்லது அணுவாயுதத்தை தயாரிக்கத் தேவையான பொருட்களை பெற "களவாக குண்டுகளை" தயாரிக்கக் கூடிய ஆபத்து உள்ளது. ஆனால் அவர் கூறாதது என்ன என்றால், கடந்த எட்டு ஆண்டுகளில் போர் தீவிரம், விரிவாக்கம் அடைந்துள்ளது பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையை முன்னேற்றுவிக்கவில்லை. ஆனால் கணிசமாக மோசமாகத்தான் செய்துவிட்டது. இந்தப் பின்னணியில் வாராந்திர ஏடான Der Spiegel ன் சமீபத்திய பதிப்புக்களில் சில படையினர்கள் கொடுத்துள்ள அறிக்கைகள் குறிப்பிடத்தகுந்தவை. 30 வயது காப்டன் Jan S., பெரிய வெள்ளியன்று இவருடைய பிரிவு தாக்குதலுக்கு உட்பட்டு மூன்று பேர் இறப்புக்களை சந்தித்த நிலையில், தற்போதைய படையினர்கள் நிலைநிறுத்தலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டதுடன் ஒப்பிட்டார்: "அந்த நேரத்தில் நாங்கள் வெளியே செல்ல முடிந்தது, எங்கள் வாகனங்களும் மக்களிடையே சென்றன. இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது. ஏப்ரல் மாதம் எங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலில் எங்கள் செயற்பாட்டுப் பகுதியில் பல இடங்கள் வரைபடத்தில் செல்லக்கூடாத பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இது பெரும் ஏமாற்றத்தை தருகிறது. என்னுடைய வீரர்களுக்கும் எனக்கும் அது திகைப்பைக் கொடுக்கிறது." வெளிப்படையாகக் கூறாமல், இந்த அறிக்கையானது இராணுவ நடவடிக்கையை அதிபரும் அவருடைய திமிர்பிடித்த பாதுகாப்பு மந்திரிகளும் பாசாங்குத்தன போர்ப் பிரச்சாரத்தில் கூறியதற்கு முற்றிலும் எதிரானதைத்தான் சாதித்துள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது. தன்னுடைய கொள்கை அறிக்கையில் ஒரு சிறு வாக்கியத்தில் ஒரு முக்கியமான கருத்தை மேர்க்கெல் குறிப்பிட்டார். அதாவது, 1989, 1990 ஆண்டுகளின் நிகழ்வுகள் பற்றி அவர் விரும்பினாலும் அவர் பேச முடியாது என்று கூறியவிதத்தில். அந்த நேரத்தில் சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பத்து ஆண்டு நடவடிக்கைகளுக்கு பின்னர் பெரும் இழப்புக்களுடன் வெளியேறியது நடைபெற்றது. மேர்க்கெல் நாட்டின் வரலாறு பற்றி பேச விரும்பாததற்கு காரணம் புரிந்து கொள்ள முடியாதது அல்ல. அவர் எப்படி அல் கெய்டாவும் பல இஸ்லாமிய போராளிக் குழுக்களும் 1980 களில் CIA யால் நிறுவப்பட்டன, அமெரிக்காவால் சோவியத் துருப்புக்களை எதிர்க்க ஆயுதங்கள் அளிக்கப்பட்டன என்பது பற்றிக் கூற வேண்டியிருக்கும். அப்பொழுது ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக (1977-1981) இருந்து இப்பொழுது ஒபாமாவின் ஆலோசகராக இருக்கும் Zbigniew Brzezinski பற்றிப் பேச வேண்டியிருக்கும். அவர் தன்னுடைய புத்தகங்களில் "யூரோசிய நிலப்பகுதிகள்"--மீண்டும் ஆப்கானிஸ்தான் பற்றிய குறிப்பு--கட்டுப்பாட்டிற்குள் வருவதுதான் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தைக் பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேர்க்கெல் காபூலில் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு எதிரான போர் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு நீண்ட காலம் முன்னரே தயாரிக்கப்பட்டுவிட்டன என்று அறிவிக்க வேண்டியிருக்கும். எச்சூழ்நிலையிலும் பேர்லின், அமெரிக்கா முழுமையாக அப்பகுதியில் கட்டுப்பாட்டைக் கொள்ள பேர்லின் அனுமதிக்காது, பல தசாப்தங்களாக ஜேர்மனி நெருக்கமான பொருளாதார, அரசியல் உறவுகளை ஆப்கானிஸ்தானில் இருந்த பல அரசாங்கங்களுடன் கொண்டிருந்தது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், இந்த வரலாற்றை மேர்க்கெல் விவாதித்தால் தற்போதைய இராணுவ நடவடிக்கை ஒரு காலனித்துவ வெற்றிப் போர் என்பது தெளிவாகும். ஆனால் இது வெளிப்படையாக எந்தச் சூழ்நிலையிலும் கூறப்படக்கூடாது. அரசாங்க அறிக்கையை தொடர்ந்து வந்த விவாதத்தில், SPD தலைவர் Sigmar Gabriel தன்னை முழுமையாக அதிபரின் பக்கத்தில் இருத்திக் கொண்டார். ஆனால் போர் பற்றி வெளிப்படையாக பேசுவது குறித்து எச்சரிக்கை விடுத்தார். தற்பொழுதைய பிரச்சாரத்தைக் கைவிட்டால், மக்களுக்கு போரை நியாயப்படுத்துவது இன்னும் கடினமாகிவிடும் என்று அவர் கூறினார். பசுமைக் கட்சியின் Jurgen Trittin அதிபருக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் எதிரிடையான நிலைப்பாட்டையும் கொண்டார். அரசாங்கம் அனைத்து அலங்காரச் சொற்களையும் கைவிட்டு போரை வெளிப்படையாக அப்படியே அழைக்க வேண்டும் என்றார். இடது கட்சியின் செய்தித் தொடர்பாளர் Gregor Gysi போர் பற்றிக் குறைகூறி பொருளாதார, சமூக மறுகட்டமைப்புக்கள் முற்றிலும் தவறானவை என்பதற்கு, சில ஐ.நா. புள்ளிவிவரங்களைக் காட்டிக் குறைகூறினார். ஆனால் அவரும் ஒரு சொல்கூட இந்தக் காலனித்துவ போரின் உண்மைத்தன்மை பற்றி கூறவில்லை. மக்களுடைய பெருகிய எதிர்ப்பு உள்ள நிலையில், இடது கட்சியானது அரசாங்கத்தின் பாதுகாப்பு வால்வ் ஆக செயற்படுகிறது. இதனுடைய விமர்சனமானது எதிர்ப்பை தொடர்ந்து கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் அரசியலின் பக்கம் சாய்ந்துள்ளது. ஆகவே இந்த இடது கட்சியானது போர்க் கூட்டணியின் இடது பக்கத்தின் முக்கிய வடிவத்தை இது கொடுக்கிறது. |