இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான பீஹார், மேற்கு வங்காளம் மற்றும் அஸாம்,
அதே போல் அயல் நாடான பங்களாதேஷையும் கடந்த செவ்வாய் இரவு ஒரு கடும் புயல் தாக்கியது. இதில்
100,000 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் குறைந்தபட்சம் 136 பேர் கொல்லப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏனையவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். உயிர் பிழைத்தவர்களில் அநேகமானவர்களுக்கு இன்னமும் உதவிகள் கிடைக்காததால்,
பல பிரதேசங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
பெரும்பாலானவர்கள் தூங்கிக்கொண்டிருந்த
இரவில் தாக்கிய இந்தப் புயல், கடந்த ஆண்டு மே மாதம் பங்காளாதேஷ் மற்றும் கிழக்கு இந்தியாவை தாக்கிய
அலையா என்ற சூறாவளியின் பின்னர், வீசிய மரணப் புயலாகும். செவ்வாய் கிழமை புயலில் 500,000க்கும் மேற்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்தியாவின் மிக வறிய மாநிலமான பீஹார் ஆகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
83 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் சுமார் 80,000
வீடுகள் சேதமாகியுள்ளன. ஒரு கிராமப்புற பிரதேசமான பூர்னியாவில், 17 சிறுவர்கள் உட்பட 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்னுமொரு கிராமப்புற பிரதேசமான அராரியாவில் 11 சிறுவர்கள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வீடுகளை இழந்துள்ளவர்களின் சரியான எண்ணிக்கை சனிக்கிழமை கணக்கிடப்படுவதோடு, 25,000 முதல் 30,000
வரையானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அராரியாவின் மாவட்ட நீதவான் உதயகுமார் நிருபர்களுக்குத் தெரிவித்தார்.
அராரியா மற்றும் பூர்னியாவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் அதிகமானவை
கிராமப்புற வறியவர்களின் குடிசைகளாகும். பீஹார் பிரதி முதலமைச்சர் சுஷில் குமார் மோடி ஊடகங்களுக்குத்
தெரிவித்ததாவது: "பாதுகாப்புக்காக மூங்கில் தண்டுகள் போடப்பட்டிருந்த தகரக் கூரைகள் புயலின் வேகத்தை
தாங்கிநின்ற அதே வேளை, மண் பூசப்பட்ட அல்லது அஸ்பஸ்டோ கூரைகளுக்கு கீழ் உறங்கிக்கொண்டிருந்தவர்கள்
முன்னெச்சரிக்கை இன்றி அகப்பட்டனர். துரதிஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்களில் பெருந்தொகையானவர்கள்
பெண்களும் சிறுவர்களுமாவர்."
பீஹார் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர், 2008 ஆகஸ்ட்டில்
அழிவுகரமான வெள்ளப்பெருக்கில் இருந்து மீண்டுகொண்டிருப்பவர்கள் மற்றும் மீளக் கட்டியெழுப்பிக்
கொண்டிருப்பவர்கள் ஆவர். அந்த வெள்ளப்பெருக்கில் இருபது இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.
உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி பீஹாரில் சுமார் 55 வீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்
வாழ்கின்றனர். மேற்கு வங்காளத்தில் 27 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ், ஒரு நாளைக்கு ஒரு
அமெரிக்க டொலரில் வாழ்கின்றார்கள்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு டினாஜ்பூர் மாவட்டத்தில், 42 சடலங்கள்
இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தலைமைச் செயலாளர் அசோக் மோஹன் சக்ரபர்தி தெரிவித்தார்.
"மேற்கு வங்காளத்தில் வடக்கு டினாஜ்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தொன்னூற்றி ஐந்து வீதமான
வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன," என பிரதேசத்தில் உதவி நடவடிக்கை இணைப்பாளர் ஜோபா பட்டாச்சார்ய நேற்று
நிருபர்களிடம் கூறினார். "பெண்களும் சிறுவர்களும் திறந்த வெளியில் முகாமிட்டுள்ளனர். அவர்களின் உடம்பில்
கொஞ்சமே உடுப்புகள் இருக்கக் கூடும், அவர்களுக்கு உணவு தேவை."
ஏ.எஃப்.பி. செய்திச் சேவையின்படி, அஸாம் மாநிலத்தில் நான்குபேர்
உயிரிழந்திருப்பதோடு 500 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. பங்களாதேஷில் இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு
12,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
தமது உறவினர்கள் இறந்து போன கதைகளையும், தமது சொத்துக்களும் பயிர்களும்
மற்றும் மந்தைகளும் அழிக்கப்பட்ட கதைகளையும் தப்பிப் பிழைத்தவர்கள் சொல்கின்றார்கள். மேற்கு வங்காள
குடும்பப் பெண்ணான நமிதா பிஸ்வாஸ், தாம் தூங்கும் போது வீட்டின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் அவரது கனவர்
உயிரிழந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பீஹாரின் பூரனியா மாவட்டத்தில் லுகானி என்ற கிராமத்தைச் சேர்ந்த நஜ்முல்,
புயல் தாக்கும் போது தனது மனைவி மற்றும் ஐந்து மாதங்களுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து குழந்தைகளுடன்
மண்ணால் செய்யப்பட்ட ஒரு அறைவீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரது வீட்டின் தகரக் கூரை பறந்து போன
பின்னர், நஜ்முல் தனது பிள்ளைகளை வெளியில் வீசியதன் மூலம் அவர்களைக் காப்பாற்றிக்கொண்ட போதிலும், அவரது
மனைவி சகீரா சுவரின் கீழ் நசுங்கிப் போனார். "நான் கடும் முயற்சி எடுத்த போதிலும் அவள் இறந்து
போனாள்" என நஜ்முல் நிருபர்களுக்குத் தெரிவித்தார்.
மாநில அரசாங்கங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு
அறிவித்துள்ளதுடன் காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்
பொருட்கள் கொடுப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளன. ஆயினும், பாதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்களுக்கு
எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. "பீஹாரில் இன்னமும் உதவிகள் விநியோகிக்கப்படவில்லை, அது திங்கட்
கிழமை கிடைக்கும் என நான் நினைக்கின்றேன்," என (பல சர்வதேச உதவி முகவரமைப்புக்களை கொண்டு
அமைக்கப்பட்ட) இன்டர் ஏஜன்ஸி குழுவின் இயக்குனர் சன்ஜை பாண்டே நேற்று ராய்ட்டரின் அலேர்ட் நெட்டுக்குத்
தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உட்கட்டமைப்பு சீரழிந்து போயுள்ளதால் நிவாரண
முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வேரோடு சாய்ந்துள்ள மரங்களும் மின்சார மற்றும் தொலைபேசி துண்டிப்பும்
நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக முன்னேற்பாடு செய்ய எடுக்கும் ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு பெரும் தடையாக
உள்ளன. வானிலை அவதான நிலையத்தில் இருந்து புயல் பற்றிய முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை என பல
கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.
பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மீது
ஹெலிகொப்டரில் பறந்து நடித்துக் காட்டினார். நிவாரண நடவடிக்கைகள் துரித கதியில் நடப்பதாக அவர்
கூறிக்கொண்டார். உண்மையில், ஆகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் முற்றிலும்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பீஹாரின் பூர்னியா மாவட்டத்தில் லுகானி கிராமத்தில் இருந்து இந்தியன்
டெலிகிராப் செய்தி வெளியிட்டது. "இன்று இந்த கிராமத்தில் ஒரு அரச அதிகாரியைக் கூட
காணக்கிடைக்கவில்லை," என அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. "மாவட்ட அதிகாரிகள் ஒருபுறம் இருக்க,
இதுவரை கிராமத்து தலைவர் கூட எங்களை வந்து பார்க்கவில்லை" என 70 வயதான கிராமத்து முதியவர்
சிக்கந்தர் மையா தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான மேற்கு வங்காள இடது முன்னணி
அரசாங்கம், முழுமையாக அழிந்த வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப வெறும் 10,000 ரூபாவும் (225 அமெரிக்க
டொலர்) பாதி சேதமடைந்த வீடுகளை திருத்த 2,500 ரூபாவும், மற்றும் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு
200,000 ரூபாவும் கொடுப்பதாக அறிவித்துள்ளது. புயலில் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு 150,000 ரூபா
நட்ட ஈடு கொடுப்பதாக பீஹார் மாநில அரசாங்கமும் அறிவித்துள்ளது. முற்றிலும் போதாத இந்தத் தொகை,
புயலில் பாதிக்கப்பட்ட மிக வறிய மக்களை இந்திய அதிகாரிகள் நடத்தும் விதத்தையும் அவர்களை அலட்சியப்படுத்தும்
விதத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
மேற்கு வங்காளத்தில் இடது முன்னணி அரசாங்கம், மாநிலத்தின் வடக்குப் பகுதியில்
கரன்டிகி மற்றும் ஹெமெடாபாத் கிராமங்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் கிராமத்தவர்களுக்கு எதிராக பொலிஸை
நிறுத்தி வைத்துள்ளது. "அரசாங்க அலுவலகத்தைச் சூழ மேலும் நிவாரணங்கள் கோரி ஆயிரக்கணக்கான கிராமத்து
மக்கள் சீற்றத்துடன் ஆர்ப்பாட்டம் செய்ததோடு அதிகாரிகள் அலுவலகங்களை திறக்க வந்த போது அவர்களையும்
தாக்கினர்," என மேற்கு வங்காள நிவாரண அமைச்சர் மொரடாஜா ஹொசைன் தெரிவித்தார். "சில ஆர்ப்பாட்டக்காரர்கள்
மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமமான கரன்டிகியில் கிராம அலுவலக எல்லை மதிலையும் தாண்டி, களஞ்சிய
சாலையை உடைத்து தார்பொலித்தீன் விரிப்புக்களையும் ஏனைய நிவாண பொருட்களையும் கொண்டு சென்றனர்."
கரன்டிகி வாசியான ஜப்பர் ஷெயிக் ஏ.எஃப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்ததாவது:
"நிவாரணப் பொருட்கள் போதாமையால் கிராமத்தவர்கள் ஆத்திரமடைந்துள்ளதோடு சில இடங்களுக்கு இன்னமும்
நிவாரணங்கள் போய் சேரவில்லை."
இன்னுமொரு மேற்கு வங்காள கிராமமான ராம்பூரில், "அரசாங்க அலுவலகங்கள்
மற்றும் பாடசாலைகளை சூழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், நிவாரண மற்றும் காப்பாற்றும் நடவடிக்கைகள் மிகவும்
மெதுவாக நடப்பதற்கு எதிராக அதிருப்தியில் சத்தம்போட்டனர்" என ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் செய்திச்
சேவைக்குத் தெரிவித்தார்.
மாநிலத்தின் உத்தர் டினாஜ்பூர் மாவட்டத்தில், பல மணித்தியாலங்கள் மாநிலத்தின்
நெடுஞ்சாலையை தடை செய்து ஆர்ப்பாட்டம் செய்த குழுவினரை நேற்று பொலிசார் கலைத்தனர். அந்த மக்கள்
புயலில் தமது வீடுகளை இழந்திருந்ததோடு அவர்கள் தமது குடும்பங்களுக்கு அடிப்படை தங்குமிடத்தை வழங்க
பொலித்தீன் விரிப்புக்களை உடனடியாக விநியோகிக்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. வியாழக் கிழமை
அரசாங்க களஞ்சியத்தில் தார்பொலித்தீன் விரிப்புக்களை இறக்கிக்கொண்டிருந்த போது ஏக்கமுற்றிருந்த
உள்ளூர்மக்கள் றக் வண்டியில் இருந்த தார்பொலித்தீன் விரிப்புக்களை தாமே எடுத்துக் கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள், இத்தகைய அழிவுகளின் போது வழமைபோல்
அக்கறைகாட்டுவதாக வக்குறுதியளித்து, ஆனால் சிறிய உதவி அல்லது கொஞ்சமும் உதவி செய்யாமல், அடுத்த
அழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத, மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும்
அரசாங்கத்தின் மீது ஆழமடைந்திருக்கும் அதிருப்தியின் அறிகுறியாகும்.