World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Emergency bailout plan for Greece: A new stage in world economic crisis

கிரேக்கத்திற்கு அவசரப் பிணை எடுப்புத் திட்டம்: உலகப் பொருளாதார நெருக்கடியில் ஒரு புதிய கட்டம்

Stefan Steinberg
12 April 2010

Back to screen version

2008 ல் லெஹ்மன் பிரதர்ஸால் துரிதப்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் உறுப்பு நாடு ஒன்றிற்கு முதல் முறையாக, அவசர அவசரமாக ஐரோப்பிய நாடுகள் பிணை எடுக்கும் முயற்சியானது ஒரு புதுக் கட்டத்தை அடைகிறது. கடந்த வார இறுதியில் கிரேக்கத்திற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைத்து ஒரு ஐரோப்பிய மீட்புப் பொதிக்கு ஏற்பாடு செய்வதற்கான பரபரப்பான முயற்சிகளானது கிரேக்க அரசாங்கம் கடன் செலுத்தத் தவறும் என்று ஊக வணிகக்காரர்கள் தீவிரப் பந்தயம் கட்டியது மற்றும் தரம் அளிக்கும் நிறுவனங்களின் அழுத்தத்தை அடுத்து இது நிகழ்ந்தது.

கிரேக்கத்திற்கு ஒரு ஐரோப்பிய அவசரத் திட்டம் என்பது இரு வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் காணப்பட்ட உடன்பாட்டைக் கணிசமாக மாற்றும் விதத்தைப் பிரதிபலிக்கிறது. மார்ச் மாதக் கடைசியில் பிரஸ்ஸல்ஸில் நடந்த கூட்டத்தில் ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்கள் கிரேக்கப் பொருளாதாரத்திற்கு பிணை எடுக்கும் பொறுப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்று ஜேர்மனிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்திருந்தனர். உச்சிமாநாட்டில் அதிபர் அங்கேலா மேர்க்கெல் தலைமையில் ஜேர்மனிய பிரதிநிதிகள் குழு கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு கடுமையான வட்டியைக் கொடுக்கத் தயாராக இருந்தால், கிரேக்க அரசாங்கத்திற்கு பணத்திற்கு உத்தரவாதம் கொடுக்கப்படும் என்றும், அத்தகைய உதவியும் "கடைசி பட்சமாகத்தான்" கிடைக்கும் என்றும் கூறியிருந்தனர்.

ஜேர்மனி சுமத்தியிருந்த நிலைமை ஐரோப்பா சர்வதேச நிதியச் சந்தைகளில் தற்பொழுது கிரேக்கத்திற்கு கிடைக்கும் வட்டி விகிதங்களைவிட சாதகமாக ஐரோப்பா கொடுக்காது என்பதற்கு ஏற்ப அறிவிப்பாக இருந்தது.

ஜேர்மனி கோரிய கடுமையான நிபந்தனைகளின் நோக்கம், கிரேக்க அரசாங்கம் அதன் கடுமையான செலவினக் குறைப்புக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து, ஏதென்ஸிற்கு இன்னும் சாதகமான விகிதத்தில் வங்கிகளை கடன்களைக் கொடுக்க நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு அழுத்தத்தை அதிகரிப்பது ஆகும். ஸ்பெயின், அயர்லாந்து, போர்த்துகல் மற்றும் இத்தாலி ஆகிய மற்றய அதிகக் கடனில் ஆழ்ந்துள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரஸ்ஸல்ஸில் இருந்து எளிதில் பணம் கிடைத்துவிடாது என்ற தெளிவான தகவலையும் ஜேர்மனி கொடுக்க விரும்பியது.

இந்தக் கணிப்புகள் இரு வாரத்திற்குள் நெருக்கடி தீவிரமான விதத்தில் தகர்க்கப்பட்டு விட்டன. ஐரோப்பிய நிதி மந்திரிகளை அவசரக்கால பொது வடிவத்தைத் தயாரிக்க, சர்வதேச வங்கிகள் மற்றும் ஒதுக்கு நிதியங்களை (hedge funds) சமாதானப்படுத்தும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. கிரேக்கப் பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டு, ஐரோப்பிய நாணயம் முறியும் திறனையும் எதிர்கொண்ட விதத்தில் ஜேர்மனிய அரசாங்கம் தயக்கத்துடன் ஐரோப்பியத் திட்டத்திற்கு தன் ஒப்புதலை அடையாளம் காட்டியது.

கடந்த வாரம், கிரேக்க நிதித்துறை அதிகாரிகள் வாஷிங்டனுக்கு பயணித்து அமெரிக்க வங்கிகள் கிரேக்க பத்திரங்களை வாங்குவதற்கு வலியுறுத்தினர். பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ "ஒரு வெளிப்பட்டுவரும் சந்தை" என்ற முறையில் கிரேக்கத்திற்கு உதவ வேண்டும் என்று முறையிட்டார். சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்படுவதை ஒட்டி, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதற்கு நாட்டின் தொழிற்சங்கங்கள் நம்பப்படலாம் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால் இந்த முறையீட்டிற்கு வோல் ஸ்ட்ரீட் அதிக வரவேற்பைக் கொடுக்கவில்லை. பாப்பாண்ட்ரூ அதைத்தொடர்ந்து கிரேக்கப் பொருளாதாரத்திற்கு பாதுகாப்பு வலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஐரோப்பிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

கிரேக்க அரசாங்கப் பத்திரங்களுக்கு வெடிப்பத் தன்மை நிறைந்த வட்டி விகிதம் அதிகரித்துள்ளபோது, ஏப்ரல் 8 அன்று 7 சதவிகிதத்திற்கும் மேல் என்று ஆனபோது, கிரேக்கப் பங்குச் சந்தைகள் பீதியான விற்பனையைக் கண்டன. கிரேக்க வங்கிப் பங்குகள் ஆபத்தாகச் சரிந்தன. ஒரு கிரேக்கச் செய்தித்தாள் ஏதென்ஸின் சந்தையில் "கறுப்பு வியாழன்" என்று அதைக் குறிப்பிட்டது. Independent ஏடு கிரேக்க நிதிய நெருக்கடி "அணுசக்தி வெடிப்புத் தன்மையை" கொண்டுவிட்டது என்று அறிவித்தது.

வியாழக்கிழமை பீதியான விற்பனை பல ஐரோப்பியப் பங்குச் சந்தைகளிலும் படர்ந்தது. ஒரு முழு அளவு நிதியப் பீதி மற்றும் யூரோ நாணயத்தின் மீது உறுதியான தாக்குதல் நேரக்கூடும் என்று அஞ்சிய ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் Jean-Claude Trichet ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கம் கடனைச் செலுத்த தாமதிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்று அறிவித்தார்.

பங்குச் சந்தைச் சரிவுடன் கிரேக்க வங்கிகளிடம் போட்டிருந்த பணத்தையிட்டு கவலையுற்ற சேமிப்பாளர்கள் வாங்குவதற்காக விரைந்ததும் வெளிப்பட்டது. நாட்டின் செல்வம் மிக்க அடுக்குகள் கிரேக்கத்திற்கு வெளியே நிதியங்களை அகற்றும் நடவடிக்கைகளும் இதற்கு முன் வந்திருந்தன.

அதே நேரத்தில் Fitch தரம் நிர்ணயிக்கும் நிறுவனம் கிரேக்கத்தின் நீண்ட கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தை BBB+ என்று குறைத்தது. கிரேக்கத் தேசிய வங்கி உட்பட ஐந்து வங்கிகளின் தரத்தையும் அது குறைத்துவிட்டது. ஒரு வர்ணனையாளர் கருத்துப்படி சர்வதேசச் சந்தைகளின் கிரேக்கம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டது அதை ஈராக்கிற்கு இணையாகச் செய்துவிட்டது.

கிரேக்கத் தாமதத்தை தவிர்க்க ஒரு அவசரக்கால பொதிக்கு பிரான்ஸும் இத்தாலியும் அழைப்பு விடுத்தன. இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியிடம் வெள்ளியன்று பேசியபின், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கிரேக்கத்திற்கு ஒரு உதவித் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயார் என்று அறிவித்தார்.

செப்டம்பர் 2008ல் லெஹ்மன் சரிவிற்கு முன் நடந்த பரபரப்பான பேச்சுக்களை நினைவுபடுத்தும் வகையில், அரசாங்கத் தலைவர்கள், நிதி மந்திரிகள் மற்றும் வங்கியாளர்கள் அவசர அவசரமாக சிந்தித்து திங்கள் காலை உலகச் சந்தைகள் திறப்பதற்கு முன் அறிவிக்கப்பட வேண்டிய திட்டத்தை உருவாக்கினர்.

திட்டத்தின் முக்கிய விவரங்கள் ஐரோப்பிய ஒன்றியம் 30 பில்லியன் யூரோக்களை கிட்டத்தட்ட 5 சதவிகித வட்டிக்கு கடனாகக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விகிதம் கிரேக்கத்தின் நீண்ட கால பத்திரங்களுக்கு வங்கிகள் தற்பொழுது கோரும் 7 சதவிகிதத்தைவிட குறைவாகும். ஆனால் ஐரோப்பாவின் பெரும் பொருளாதாரம் ஜேர்மனி கொடுப்பதை விட (3 சதவிகிதம்) அதிகம் ஆகும்.

யூரோவின் வருங்காலம் பாதிப்பிற்கு உட்படக்கூடும் என்று சுட்டிக்காட்டிய பில்லியனர்-முதலீட்டாளர் George Soros ஏப்ரல் 9 அன்று Bloomberg Radio வில், "கிரேக்கர்களுக்கு ஐரோப்பா அல்லது IMF சற்றே சலுகையான வட்டிவிகிதங்களில் உதவவேண்டும்.... யூரோவிற்கு உயர்வா, முறிவா என்ற நேரம் ஆகும் இது, எனவே ஐரோப்பா ஒன்றுபட்டு நீடிப்பதற்கான அரசியல் உறுதி உள்ளதா, இல்லையா என்ற பிரச்சினையும் வந்துள்ளது." என்றார்.

கிரேக்கத்திற்கு பிணை எடுப்புக் கொடுத்தல் என்னும் முடிவு தொலைவிளைவு உடைய பொருளாதார, அரசியல் உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது. முதலில் இது இதே போன்ற நிலையில் உள்ள மற்ற ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு ஐரோப்பாவின் வலுவான பொருளாதாரங்களிடம் நிதி உதவிக்கு முறையிட ஒரு முன்னோடியை தருகிறது.

ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய பெரும் பொருளாதாரங்கள் உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பெரும் அரசாங்கக் கடன்களைக் கொண்டுள்ளன, தங்கள் கடும் சிக்கனத் திட்டங்களையும் அவற்றின் வங்கி முறைகளைப் பிணை எடுக்க செலவழிக்கப்பட்ட பெரும் தொகைகளை மீட்க செயல்படுத்த உள்ளன என்பதுதான் உண்மையாகும். பொது நிதிகளை டிரில்லியன் கணக்கில் பெற்ற வங்கிகள் இப்பொழுது ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டிய வழிவகைகள் பற்றி ஆணையிடுகின்றன.

கிரேக்கத்திற்கான அவசரக்காலத் திட்டம் தொழிலாளர் வர்க்கத்திக்கு எந்த நிம்மதியையும் கொண்டுவராது. இதேபோன்ற EU-IMF திட்டம் ஏற்கனவே சிறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான லாட்வியா மீது சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலேயே மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை லாட்விய அரசாங்கம் சுமத்தியுள்ளது. இதையொட்டி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்திற்கு குறைப்பு உண்டு. பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள் அரசாங்கம் 45 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. வரிகளை அதிகரித்து, ஓய்வூதிய, குழந்தைகளுக்கான உதவிகளைக் குறைத்துள்ளதுடன் இப்பொழுது ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தை 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக கொண்டுள்ளது.

ஐரோப்பா முழுவதும் உள்ள ஆளும் உயரடுக்கு நெருக்கடியின் முழுச் சுமையும் தொழிலாளர் வர்க்கத்தின் முதுகில் ஏற்றப்பட வேண்டும் என்று உறுதியான முடிவில் ஒன்றாக உள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடி பெருகிய முறையில் கட்டுப்பாட்டை விட்டு மீறுகையில், தேசிய அரச நலன்களும் போட்டிகளும்தான் பெருகிய முறையில் முன்னே வந்துள்ளன. ஜேர்மனிக்கும் அதன் ஐரோப்பிய அண்டை நாடுகளுக்கும் இடையே பெருகும் பிளவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட Fiancial Times கட்டுரையாளர் Martin Wolf சமீபத்தில் எழுதினார்: "இந்தச் சங்கடத்தில் இருந்து வெளியேற திருப்தியான தீர்வு உள்ளதா? நான் காணும் வரை இல்லை. இது உண்மையிலேயே அச்சுறுத்துகிறது."

கடந்த இரு வாரங்களில் ஐரோப்பிய போக்குகளில் இருந்து இரு விடயங்கள் தெளிவாகியுள்ளன. முதலில் 2007-08 ல் வெடித்த நெருக்கடியில் இருந்து உலகம் மீள்வது என்பது தீவிர ஆதாரம் அற்றது என்பது ஆகும். உலகப் பொருளாதாரம் ஒரு புதிய நிதியப் பீதி என்ற கத்திமுனையில்தான், இன்னும் ஆழ்ந்த மந்தநிலை வரக்கூடும் என்ற நிலையில்தான் உள்ளது.

எதுவும் இன்னமும் தீர்க்கப்படவில்லை. மாறாக பெரிய வங்கிகளின் திவால்தன்மை தேசிய அரசாங்கங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன. இது முன்னோடியில்லாத அரசாங்கக் கடன் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது கிரேக்கம் போன்ற ஓரத்தில் நிற்கும் நாடுகளில் இருந்து முக்கிய சக்திகளுக்கும் பரவக்கூடும். அதில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவும் அடங்கும்.

இரண்டாவதாக சர்வதேச அளவில் நேர்த்தியான மூலோபாயம் எதுவும் நெருக்கடியைத் தடையின்றி, அமைதியான முறையில் தீர்க்கும் உடன்பாட்டிற்கான வாய்ப்பு இல்லை. மாறாக உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரச முறைக்கும் இடையே உள்ள அடிப்படை முரண்பாடு--முதலாளித்துவத்தின் இயல்பான முரண்பாடு--பெருகிய முறையில் தீவிரக் கொந்தளிப்பைக் கொண்டுள்ளது. ஜேர்மனியின் ஆக்கிரோஷ நிலைப்பாடும் ஐரோப்பாவிற்குள் பெருகும் பிளவுகளும் இந்த உலகப் போக்கின் மிகத் தீவிர வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

இவ் அபிவிருத்திகள் ஐரோப்பாவை ஒரு முற்போக்கான ஐக்கியப்பட்ட ஒன்றிணைவின் மூலம், தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலின்அவசரத்தை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றன. வங்கிகள் மற்றும் முக்கிய தொழிற்துறைகள் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கலுக்கான சோசலிசத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved