World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குTensions mount between Washington and its puppet in Kabul வாஷிங்டனுக்கும் அதன் காபூல் கைப்பாவை ஆட்சிக்கும் இடையே அழுத்தங்கள் பெருகுகின்றன Patrick Martin வியாழக்கிழமை ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஆப்கானிஸ்தானில் உள்ள அரசியல் உண்மைகள் பற்றிய அபூர்வமான காட்சியைக் கொடுக்கும் அமெரிக்காவினதும் மற்றும் பிற நேட்டோ துருப்புக்கள் தன் நாட்டில் "ஆக்கிரமிப்பாளர்கள்" என்று கருதக்கூடும் என்ற எச்சரிக்கை ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்கச் செய்தி ஊடகப்பிரிவுகளில் இருந்து கடுமையான எதிர்ப்பை பெற்றது. தன்னுடைய ஆட்சியின் ஊழல் மற்றும் திறமையின்மை பற்றி வாஷிங்டனிலும் மேலைச் செய்தி ஊடகங்களிலும் குறைகூறியவர்களை கண்டிக்கும் விதத்தில், "அவர்கள் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை விரும்பினர். ஒரு அடிமைத்தன அரசாங்கத்தை விரும்பினர்" என்று கர்சாய் கூறினார். ஆப்கானிய பாராளுமன்றம் வரும் இலையுதிர்காலத்தில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களை மேற்பார்வையிட உள்ள நாட்டின் தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களையும் நியமிக்கும், கர்சாயி உடைய அதிகாரத்தை அகற்ற ஆப்கானிய பாராளுமன்றம் வாக்களித்த மறுநாள் இந்த வெடிப்பு வந்தது. இந்த முடிவு அமெரிக்க தூதர் கொடுத்த பெரும் அழுத்தத்தில் எடுக்கப்பட்டுள்ளது. "இந்த நிலைமையில் ஆக்கிரமிப்பிற்கும் ஒத்துழைப்பு-உதவி என்பதற்கும் இடையே மிக மெலிதான திரைதான் உள்ளது" என்று கர்சாய் அறிவித்தார். ஆப்கானிய அரசாங்கம் மேலை சக்திகளின் கைக்கூலி அரசாங்கம்தான் என்ற முடிவிற்கு மக்கள் வந்தால், தலிபான் தலைமையில் உள்ள எழுச்சி "ஒரு தேசிய எழுச்சியாகிவிடும்" என்று அவர் எச்சரித்தார். அமெரிக்க தலைமையிலான போர் ஆப்கானிஸ்தானில் எத்தகைய விளைவுகளைக் கொடுக்கும் என்று கர்சாய் எச்சரித்தாரோ, அது ஏற்கனவே வந்துவிட்டது என்பதை நியூயோர்க் டைம்ஸின் ஞாயிறு பதிப்பில் வந்துள்ள அசாதாரண அறிக்கை ஒன்று தெளிவுபடுத்துகிறது. சமீபத்தில் அமெரிக்க மரைன்களால் ஒபாமா போர் விரிவாக்கத்திற்கு உத்தரவிட்ட பின் நடந்த முக்கிய தாக்குதலில் வெற்றிபெறப்பட்ட மார்ஜா மாவட்டத்தில் இருந்து வந்த முதல் பக்கத் தகவல் ஒன்றில், டைம்ஸின் நிருபர் ரிச்சர்ட் ஏ. ஒப்பல் ஜூனியர், தங்கள் தளங்களைத் தவிர மற்றப் பகுதிகளில் மரைன்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை, தலிபான் இன்னும் எழுச்சியைக் கொண்டுள்ளது, அமெரிக்க ஆக்கிரமிப்புடன் ஒத்துழைப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பதிலடிக்கு இலக்காக ஆக்கப்படுகின்றன என்று எழுதியுள்ளார். பெரும்பாலான அமெரிக்க நிதி உதவியில் நடைபெறும் மறுகட்டமைப்புக்களில் பணி நிறுத்திவைக்கப்படும் கட்டாயத்திற்கு உள்ளாயிற்று. ஒப்பல் முடிவுரையாக: "மார்ஜாவில் தலிபான் ஒரு தனிப்பட்ட போராளிக்குழு என்று இல்லை. ஒரு ஒற்றைக் கட்சி உள்ள சிறுநகரத்தின் ஒரே அரசியல் அமைப்பிற்கு ஒப்பான இயக்கமாக இருக்கும் தலிபானுடன் மரைன்கள் மோதியுள்ளனர். தலிபானின் செல்வாங்கு எங்கும் உள்ளது. சற்றே திடுக்கிட்டுவிட்டதாக மரைன்களே ஒப்புக் கொண்டுள்ளனர்'' கூறினார். "எதிரி என்ற சொல்லின் வரையறையை நாம் மறுமதிப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளது" என்று டைம்ஸிடம் ஹெல்மாண்ட் மாநிலத்தின் சிறப்புப் படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் தளபதி லாரி நிக்கல்ஸன் கூறினார். "இங்கு பெரும்பாலனவர்கள் தங்களை தலிபான்கள் என்றுதான் அடையாளம் கொண்டுள்ளனர்." ஆப்கானிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிடுபவர்கள் தவிர்க்க முடியாமல் மேலைச்செய்தி ஊடகத்தால் "தலிபான்கள்" என்று விவரிக்கப்படுகின்றனர். இது அமெரிக்கத் தலைமையிலான இராணுவ தலையீட்டிற்கு ஒரு "ஜனநாயக", "முற்போக்கான" மறைப்பைக் கொடுக்கும் முயற்சி ஆகும். கர்சாய் தெரிவிப்பதும், நடைமுறையில் டைம்ஸ் உறுதி செய்வதும் அமெரிக்க நேட்டோ தலைமையிலான போர் கிட்டத்தட்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிராகக் இயக்கப்படும் போர் என்பதாகும். கர்சாயின் உரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போரின் யதார்த்த தன்மையை மூடியிருந்த மறைப்பை அகற்றுகிறது. அதன்படி அமெரிக்க மக்கள் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு காலமாக 9/11 பயங்கரவாதத்தாக்குதல்களை எதிர்கொள்ளும் போர் அது என்றுதான் கூறப்பட்டு வந்துள்ளனர். உலகச் சந்தைக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை மிக அதிக அளவு அளிக்கும் மத்திய ஆசியாவில் அமெரிக்க நலன்களைக் பாதுகாப்பதற்காக ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தைக் கொண்ட ஒரு மிருகத்தனமான காலனித்துவவகைப் போரில்தான் அமெரிக்கா இங்கு ஈடுபட்டுள்ளது. அமெரிக்க ஆயுதங்கள், டாலர்கள் ஆகியவற்றால் முழுமையாகக் காக்கப்படும் ஒரு அரசாங்கத்தின் தலைவர் தன்னுடைய எஜமானர் பற்றி பகிரங்கமாகச் சாடியிருப்பது அசாதாரணமானது ஆகும். இதை இரு காரணிகள் மூலம் விளக்க முடியும்: அமெரிக்க குண்டுகள், ராக்கெட்டுக்கள், இரவுநேர கமாண்டோ தாக்குதல்கள், அப்பட்டப் படுகொலைகள் ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான நிரபராதி மக்கள் கொல்லப்படுவதால் ஆப்கானிய மக்களுக்கு ஆக்கிரமிப்பின்மீது ஏற்படுட்டுள்ள பெருகிய விரோதப் போக்கு மற்றும் ஆப்கானிய அரசாங்கத்தின் பெயரளவிலான தலைவர் என்ற பங்கில் இருந்துகூட கர்சாய் தான் பெருகிய முறையில் ஒதுக்கப்படுவதாக உணர்ந்திருப்பது என்ற இரண்டும்தான் அவை. தேர்தல் அதிகாரிகள் கூட்டத்திற்கு ஆப்கானிய ஜனாதிபதி ஆற்றிய உரை, காபூலுக்கு பாரக் ஒபாமா வந்து சென்ற நான்கு நாட்களுக்குள் வந்துள்ளது. அந்த வருகையின் போது அமெரிக்க ஜனாதிபதி கர்சாய் உடன் மோதும் போக்கைக் கொண்டிருந்தார். ஒபாமா கர்சாயை அவருடைய ஆட்சியில் உள்ள ஊழல் மற்றும் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நடைபெற்ற தில்லுமுல்லுகள் பற்றி கடிந்துரைத்ததாக வெளிவந்துள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஐயத்திற்கு இடமின்றி கர்சாய் சமீபத்தில் ஈரான், மற்றும் சீனாவிற்குக் காட்டும் பரிவுணர்வுகளும் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். வாஷிங்டனிடம் இருந்து கர்சாயின் கருத்துக்களுக்கு உடனே விடையிறுப்பு வந்தது. வெள்ளை மாளிகை செய்தி ஊடகச் செயலர் ரோபர்ட் கிப்ஸ் இந்த அறிக்கை "உளைச்சல்" தருகிறது என்றும் "உண்மையான கவலை அளிப்பதற்குக் காரணம்" என்றும் கூறியுள்ளார். வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் பிலிப் கிரெளலி கர்சாய் பேசியதை "பொறுப்பற்றது" என்று கூறினார். அமெரிக்க அதிகாரிகள் கர்சாய் கருத்துக்களில் உள்ள அரசியல் ஆவேசத்தை கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர். காபூலில் உண்மை அரசியல் சக்தியாக உள்ள தூதர் கார்ல் ஐக்கன்பெர்ரி, அடுத்த நாள் அமெரிக்க வெளிவிவகார செலாளர் ஹில்லாரி கிளின்டனுடன் ஒரு நீண்டதொலைபேசி உரையாடலின் பின்னர் ஆப்கானிய ஜனாதிபதியை அவருடைய உரை பற்றி "தெளிவுபடுத்துமாறு" கோரியுள்ளார். ஆனால் தங்கள் ஆப்கானியக் கைப்பாவையிடம் இருந்து வந்துள்ள வெடிபோன்ற தாக்குதல் அமெரிக்க அதிகாரிகளை கடின நிலையில் தள்ளிவிட்டது. கர்சாயியின் கருத்துக்களை கிறுக்குத்தனம் என்று உதறித்தள்ளுவது--"கர்சாயின் கூக்கூரல்" என்று நியூயோர்க் டெய்லி நியூஸ் தலையங்கம் -ஒரு பைத்தியக்காரரை அதிகாரத்தில் இருத்துவதற்கு 1,000 அமெரிக்க சிப்பாய்களையும், பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களையும் உயிரிழக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற பொருள் ஆகிவிடும் என்று அது குறிப்பிட்டது . ஏப்ரல் 3ம் தேதி தலையங்கம் ஒன்றில் நியூயோர்க் டைம்ஸ் கர்சாயியின் குறைகூறலை "மனச்சிதைவுற்றது" என்று கூறி, அவருடைய அறிக்கைக்கு அமெரிக்காவில் அரசியல் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஏனெனில் "இது ஜனாதிபதி ஒபாமாவின் மூலோபாயத்தை ஒட்டி இன்னும் அதிகமான அமெரிக்க துருப்புக்கள் 30,000 பேர் அனுப்பப்பபட்டதற்கு உள்ள மிகக் குறைந்த பொதுமக்கள் ஆதரவையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." "ஆப்கானிஸ்தானத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு திரு.கர்சாய் ஊக்கம் கொடுக்கிறார்" என்று தலையங்கம் முடிவாக "இன்னும் சிக்கல் நிறைந்த கொள்கை விவாதத்தை அமெரிக்க உயிர்கள் அவரை அதிகாரத்தில் இருத்துவதற்கு தியாகம் செய்யப்படுகின்றன என்ற எளிய கருத்தாக கூறவருவது போல் அவருடைய உரை உள்ளது. ஆப்கானிஸ்தானின் வருங்காலம், மற்றும் இவருடைய வருங்காலமும் கூட அழிவதற்கு இதைவிட நல்ல வழியை நினைப்பது கடினம்" எனக்கூறியுள்ளது. கடைசிச் சொற்றடர் தீய போக்கைக் கொண்டுள்ளது. இது 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முந்தைய அமெரிக்க கைப்பாவை அரசாங்கம் வாஷிங்டனை குறைகூறியதை நினைவுபடுத்துகிறது. 1963ல் தெற்கு வியட்நாமில் ஜனாதிபதி Ngo Dinh Diem, ஊழல், திறமையின்மை, வாக்களிப்புத் தில்லுமுல்லுகள் பற்றி இதேபோன்ற குறைகூறல்களை எதிர்கொள்ளுகையில் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கொலை செய்யப்படுவதற்கும், அமெரிக்க இராணுவக் குறுக்கீடு இன்னும் தீவிரமாக நடப்பதற்கும் அரங்கை அமைத்தார். ஞாயிறு பிற்பகல் தன்னுடைய வலைத் தளத்தின் முதல் பக்கத்தில் வெளியிட்ட மற்றொரு கட்டுரையில் டைம்ஸ் இதே பொருள் பற்றி மீண்டும் கூறியது. அதில் கர்சாய் தன்னுடைய பாராளுமன்றப் பிரிவினருடைய கூட்டத்தில் அமெரிக்கா பற்றிய குறைகூறலை தீவிரப்படுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. "நீங்களும் சர்வதேச சமூகமும் அழுத்தத்தை அதிகரித்தால், நான் தலிபானுடன் சேர்ந்துவிடுவேன் என்று உறுதிளிக்கிறேன்" என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கர்சாய் தொடர்பான அமெரிக்கக் கொள்கையில் மூன்று விருப்புரிமைகளை டைம்ஸ் பட்டியலிட்டுச் சிந்தித்துள்ளது: "படைகள் திரும்பப் போய்விடும் என்று அச்சுறுத்துதல், உண்மையிலேயே திரும்பப் பெற்று, இராஜதந்திர முறையைப் பின்பற்றுவது- இதுவரை அது எந்த முடிவையும் கொடுத்தது இல்லை, அல்லது அரசாங்கத்தில் மக்கள் பங்கை விரிவாக்க வழிவகைகள் காணல்." ஒரு ஆக்கிரமிப்பு நாட்டில் இத்தகைய அனைத்து "பங்கு பெறுதல்களும்" ஆக்கிரமிக்கும் சக்தியின் ஆணையில் நடைபெறும்போது கடைசி "விருப்புரிமை" பொருளற்றது ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆயுதக்கிடங்கில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நடவடிக்கையின் வனப்புரைப் பெயராக அது இருக்கும்--அதாவது வாஷிங்டன் ஏற்பாடு செய்து, செயல்படுத்தும் இராணுவத்தின் மூலம் நடக்கும் ஆட்சி மாற்றமே அதுவாகும். தாஜிக் சிறுபான்மையைத் அடித்தளமாகக் கொண்ட முன்னாள் வடக்குக் கூட்டின் (Northern Alliance) பிரிவுகள் ஒபாமா நிர்வாகத்தின் தக்க ஆதரவுடன் அத்தகைய நடவடிக்கையை செய்யும் திறனை உறுதியாகக் கொண்டவர்கள். அத்தகைய வாய்ப்பு பற்றிய விவாதங்கள் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் CIA வில் நடந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதைத்தவிர, அதை எப்படி காபூல் ஆட்சியில் கூடுதலான "மக்கள் பங்கு பெறுதல்" என்று காட்டுவது என்பது பற்றியும் இருக்கும். |