World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan government boasts about low level of strikes இலங்கை அரசாங்கம் வேலை நிறுத்தங்கள் குறைந்த மட்டத்தில் இருப்பதையிட்டு தற்பெருமை கொள்கின்றது By Sujeewa Amaranath கொழும்பில் கடந்த வாரம் சர்வதேச தொழில் அமைப்பால் (ஐ.எல்.ஓ.) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு செயலமர்வு, வாழ்க்கைத் தரம் சரிவது பற்றியும் வேலையின்மை அதிகரிப்பது பற்றியும் தொழிலாளர் மத்தியில் வளர்ச்சி காணும் சீற்றத்தை அடக்குவதற்கு இலங்கை அரசாங்கமும் கூட்டுத்தாபன தட்டுக்களும் எந்தளவுக்கு தொழிற் சங்கங்களை நம்பியிருக்கின்றன என்பதை கோடிட்டுக் காட்டியது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு பேசிய தொழில் உறவு மற்றும் மனித வள அமைச்சின் செயலாளர் மஹிந்த மதிகாஹேவா, நாட்டின் தனியார் துறையில் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை பிராந்தியத்தில் ஏனைய நாடுகளை விட குறைவாகவே உள்ளன என பெருமையாகக் கூறினார். "நாட்டில் தனியார் துறையில் வேலை நிறுத்தங்கள் குறைந்து வருவதற்கான காரணம், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், இலங்கையில் தொழில் உறவுகள் உறுதியாக இருப்பதேயாகும்," என அவர் பிரகடனம் செய்தார். தீவின் அனைத்து முதலீட்டு வலயங்களிலும் "தொழிற்துறையில் தொழிற்சங்கங்கள் ஒரு உறுதியான வடிவமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை கூட்டு நடவடிக்கை சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னெடுப்பிலும் மற்றும் கூட்டு பேரம்பேசல்களிலும் தொழிற்துறையின் இலாபத்துக்காக செயலூக்கத்தைத் தூண்டுபவையாக உள்ளன," என பிரகடனம் செய்த மதிஹேவா, தொழிற்சங்கங்களின் வகிபாகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். இந்த செயலமர்வுக்குள் முதலாளிமாரின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலை தீவில் இருந்து அரசாங்க அதிகாரிகளும் கொண்டுவரப்பட்டிருந்தனர். இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கான ஆடை ஏற்றுமதியில் தங்கியிருப்பவையாகும். ஆடைத் தொழிற்துறையை கடுமையாகப் பாதித்த 2008-09ல் தோன்றிய பூகோள பொருளாதார பின்னடைவு, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும் பத்தாயிரக்கணக்கான தொழில்கள் இழக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. ஐ.எல்.ஓ. அதிகாரி கரீன் கர்டிஸ், தொழில்களை அழித்தல் மற்றும் பெரும் நிறுவனங்களை மறுகட்டமைப்பு செய்தலை முன்னெடுப்பதற்காக தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைப்பதற்கு கம்பனிகளை ஊக்குவிப்பதே இந்த செயலமர்வின் நோக்கம் என தெளிவுபடுத்தினார். "நெருக்கடி வரும்போது, கூட்டு பேரம்பேசல் உடன்படிக்கைகளின் மூலம், கம்பனிகளும் அவற்றின் தொழிலாளர்களும் கூட்டாக முடிவுகள் எடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும். தற்போதைய பொருளாதார சரிவின் காரணமாக ஒரு ஆரோக்கியமான பேச்சுவார்த்தையை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்," என அவர் குறிப்பிட்டார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் "உறுதியான தொழில் உறவுகள்" பற்றி தொழில் அமைச்சின் செயலாளர் மதிஹாஹேவா பெருமையாக பேசுவது சரியாக இந்த வர்க்க உறவைப் பற்றியே ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் போது, தனியார் மற்றும் அரசுத் துறை சார்ந்த சகல தொழிற் சங்கங்களும், தமது வாழ்க்கைத் தரத்தை காத்துக்கொள்ள தொழிலாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நசுக்குவதற்கு "தேசிய பாதுகாப்புக்காக" அர்ப்பணித்தல் என்ற பெயரில் அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் ஒத்துழைத்தன. கடந்த மே மாதம் புலிகள் தோல்வியடைந்த பின்னர், இராஜபக்ஷ "தேசத்தை கட்டியெழுப்புவதற்கான" "பொருளாதார யுத்தம்" என தான் கூறியதற்கு உழைக்கும் மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தினார். புலிகளுக்கு எதிரான மோதலின் போது செய்தது போலவே, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் "பொருளாதார யுத்தத்தின்" வழியில் விழுந்தன. இந்த "பொருளாதார யுத்தம்" நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமடையும் போது உக்கிரமடைய மட்டுமே செய்யும். ஏப்பிரல் 8 பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், இராஜபக்ஷ தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை உக்கிரமாக்குவதோடு எந்தவொரு எதிர்ப்பையும் தணிக்க தொழிற்சங்கங்களிலேயே கனமாக தங்கியிருப்பார். தனியார் துறையில், குறிப்பாக ஆடைத் தொழிற்துறையில் தொழிற்சாலை மூடுவிழா மற்றும் வேலை நீக்க அலையை நெறிப்படுத்துவதில் தொழிற்சங்கங்களை மிகவும் நெருக்கமாக ஒருங்கிணைத்துக்கொள்வதற்காக கடந்த ஆண்டு தேசிய தொழில் ஆலோசனை குழுவை (தே.தொ.ஆ.கு.) இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தியது. 2009 மார்ச்சில், 220 தொழிற்சாலைகள் மூடப்பட்டதோடு 70,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் தொழிலை இழந்தனர். கடந்த ஏப்பிரலில் நடந்த தே.தொ.ஆ.கு. கூட்டத்தில், வேலைநீக்கத்தையும் வேலை நேரங்களையும் குறைப்பதை துரிதப்படுத்த கம்பனிகளை அனுமதிப்பதற்காக, ஊழியரின் சேவையை நிறுத்தும் சட்டத்தின் (ஊ.சே.நி.ச) இயக்கத்தை நிறுத்துவதற்கு முதலாளிகளின் பிரதிநிதிகளுடனும் அரசாங்கத்துடனும் 12 பிரதான தனியார் துறை தொழிற்சங்கங்கள் உடன்பட்டன. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற எதிர்க் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் இந்த உடன்படிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம், இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏதாவது நட்ட ஈட்டை வழங்குவதற்கான வழிவகைகளைத் தேடுவதற்காக மூன்று பகுதியினர் அடங்கிய குழுவொன்றை ஸ்தாபிக்க தே.தொ.ஆ.கு. உடன்பட்டது. முதலாளிமார், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைச்சும் ஏற்றுக்கொண்ட பிரேரணைகளில் ஒன்று, "உரிமைகோரப்படாத" ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஒதுக்கீட்டில் இருந்து பணத்தை திருப்பிப் பெறுவதாகும் --அதாவது தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்காக ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியை சூறையாடுவதாகும். மிகவும் போராளிக்குணம் கொண்ட மாற்றீடாக காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி. சார்பு அனைத்து கம்பனிகளின் ஊழியர் சங்கம், "தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை திணிப்பதற்கு" தொழிலை இழந்தவர்களுக்கான தேசிய நிலையம் என்ற ஒன்றை ஸ்தாபித்துள்ளது. அனைத்து கம்பனிகளின் ஊழியர் சங்கத்தின் தலைவரும் தொழிலை இழந்தவர்களுக்கான தேசிய நிலையத்தின் இயக்குனருமான வசந்த சமரசிங்க, அரசாங்கம் பதிலளிக்காவிட்டால் "போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என கடந்த ஆண்டு தெரிவித்தார். ஆயினும், தொழில் இழப்புக்கள் தொடர்ந்த போதிலும் எந்தவொரு "போராட்டமும்" நிறைவேற்றப்படவில்லை. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு 12,500 ரூபா (109 அமெரிக்க டொலர்) அடிப்படை மாத சம்பளக் கோரிக்கையை அனைத்து கம்பனிகளின் ஊழியர் சங்கம் கைவிட்டது ஏன் என உலக சோசலிச வலைத் தள நிருபர் கேட்ட போது, "இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பதற்கு இது நல்ல நிலைமை அல்ல" என வசந்த சமரசிங்க பதிலளித்தார். தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதானது, பெரும் வர்த்தக தட்டின் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்கான தனது விருப்பத்தை வெளிக்காட்டுவதற்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.வி.பி. எடுக்கும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும்.ஜனவரி 26 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இப்போதைய பாராளுமன்ற தேர்தலின் போதும், அரசாங்கம் தனியார் துறை சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிப்பதாக வாக்குறுதியளித்தது. சுதந்திர வர்த்தக வலயத்தையும் உள்ளடக்கும் முதலீட்டுச் சபை, அதன் சம்பளத்தை 15 வீதத்தால் அதிகரிக்கும் --"அடிப்படை சம்பளம் அன்றி, ஒரு மூடிமறைப்பு அதிகரிப்பாகும்"-- என கடந்த மாதம் தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இத்தகைய வாக்குறுதிகளில் நம்பகத் தன்மை மிகக் குறைவு. தனது பொருளாதார சாதனைகள் குறித்து அரசாங்கம் பெருமை பேசும் அதே வேளை, இலங்கை பொருளாதாரம் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது. ஆடைத் தொழிற்சாலை துறையை பொறுத்தவரையில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் பதிவுகள் சம்பந்தனமாக ஒரு தீர்மானத்தை எட்ட முடியாவிட்டால், ஆறு மாதங்களில் ஜி.எஸ்.பி.+ வர்த்தக சலுகையை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும், அதே போல் அமெரிக்காவும், எதிரியான சீனாவின் செலவில் கொழும்பில் தனது செல்வாக்கை பெருக்கிக்கொள்ள இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய விவகாரத்தை சுரண்டிக்கொள்கின்றன. ஜி.எஸ்.பி.+ வர்த்தக சலுகை அகற்றப்பட்டால், அது தீவின் ஆடை ஏற்றுமதி துறைக்கும் மொத்தத்தில் பொருளாதாரத்துக்கும் எதிரான பெரும் அடியாக இருக்கும். இலங்கை ஆடைத் தொழிற்சாலை உற்பத்தியில் 60 வீதம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மொத்த ஏற்றுமதியில் 46 வீதத்துக்கும் மேற்பட்ட தொகை, கடந்த ஆண்டு 7.08 பில்லியன் டொலர் பெறுமதியானவையாகும். ஐரோப்பிய சந்தைகளுக்கு சுங்கவரியின்மை வசதியை வழங்கும் ஜி.எஸ்பி.+, இலங்கைக்கு சுமார் 136 மில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும். அது நிறுத்தப்படுவதானது, இலங்கையின் ஏற்றுமதிக்கு சுமார் 9.6 வீத சுங்கவரி விதிக்கபடுவதையே அர்த்தப்படுத்துகிறது. மேலதிக செலவுகளை தாங்க முடியாது என ஏற்கனவே ஆடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை சங்கத்தின் கூட்டமைப்பின் தலைவரான ஏ. சுகுமாரன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "ஏற்றுமதியாளர்களுக்கு ஆகக் கூடிய செலவுடையதாக இருக்கும். பலர் 10-15 வீத எல்லைக்குள் வேலை செய்கின்றனர் என நான் நினைக்கவில்லை. சில கொள்வனவாளர்கள் சுமையின் பகுதியை தாங்க தயாராக இருந்தாலும் அதுவே பிரச்சினையாக இருக்கும்." மத்திய வங்கியின் புள்ளி விபரங்களின்படி, முன்னைய ஆண்டை விட 2009ல் ஆடை ஏற்றுமதி 8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. சம்பள அதிகரிப்புக்குப் பதிலாக, ஆடை தொழிலாளர்கள் புதிய சுற்று தொழிற்சாலை மூடல்கள், வேலை இழப்புக்கள் சம்பள மற்றும் நிலைமைகள் சீரழிக்கப்படுவதை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே தொழிலாளர்களுக்கு நெருக்கடி அதிகம். சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மத்தியில் செயல்படும் தாபிந்து ( Da Bindu) ஒத்துழைப்பு நிறுவனத்தை சேர்ந்த சமிலா துஷாரி கடந்த மாதம் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: "2005ல் தொழிலாளர்களுக்கு ஒரு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை வழங்கும் ஒரு ஊதியத்தை நாம் கணக்கிட்டோம். அப்போது அது மாதம் 12,500 ஆக இருந்தது. இப்போதைய வாழ்கைத் ஊதியம் கிட்டத்தட்ட 16,705 ஆக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான ஆடைத் தொழிற்சாலை யுவதிகள் மாதம் 10,000 ரூபாவே பெறுகின்றனர். அப்படியானால் தற்போதைய செலவில் ஒழுக்கமாக வாழ்வது ஒரு புறம் இருக்க அவர்கள் எப்படி ஒழுங்காக சாப்பிட முடியும்?"தொழிலாளர்கள் தமது உரிமைகளை காக்க தொழிற் சங்கங்களில் தங்கியிருக்க முடியாது. முன்னரைப் போலவே, இலங்கையின் "சர்வதேச போட்டித் தன்மையை" பேணிக் காக்க அரசாங்கத்தினதும் முதலாளிமாரதும் கோரிக்கைகளை அமுல்படுத்தும் உபகரணமாக தொழிற்சங்கங்கள் செயற்படும். அந்தப் பணியை தொழிற்சங்கங்களால் செய்ய முடியாவிட்டால், இராஜபக்ஷ அரசாங்கம் தனது "பொருளாதார யுத்தத்துக்கு" உழைக்கும் மக்கள் மத்தியில் இருந்து எழும் எதிர்ப்பை நசுக்க, புலிகளுடனான மோதலின்போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்தும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே, ஏப்பிரல் 8 தேர்தலின் பின்னர் தமது வாழ்க்கைத் தரத்தின் மீது பெரும் தாக்குதல்களை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் என எச்சரிக்கும் ஒரே கட்சி ஆகும். அதன் வேட்பாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை காக்க, தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் தட்டின் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை தொழிலாளர்கள் அமைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர். அத்தகைய ஒரு போராட்டமானது, முதலாளித்துவத்தை தூக்கி வீசவும் சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, உழைக்கும் மக்களின் எரியும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சமுதாயத்தை மறு கட்டமைப்பு செய்யவும் இலங்கையிலும் உலகம் பூராவும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் தலைமையில் இடம்பெற வேண்டும். |