World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan election result sets stage for class conflict இலங்கை தேர்தல் முடிவுகள் வர்க்க மோதலுக்கு களம் அமைக்கின்றன By K. Ratnayake வியாழக் கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களை வென்றுள்ளது. ஆனால், வரலாற்றிலேயே இந்தத் தேர்தலில் வாக்களிப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளமையும் மற்றும் பிரதான முதலாளித்துவக் கட்சிகளுக்கான ஆதரவு பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளமையும் ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபனத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் பரந்தளவிலான அதிருப்தி மற்றும் அந்நியப்படுத்தலை காட்டுகிறது. வாக்களித்தோரின் எண்ணிக்கை 52 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது 1948ல் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஏற்பட்ட மோசமான வீழ்ச்சியாகும். இதற்கு முன்னர் 64 வீதம் வரையே வீழ்ச்சியடைந்திருந்தது. மக்கள் கால் நூற்றாண்டுகால உள்நாட்டு யுத்தத்தை அனுபவித்த வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்தில், ஆகக் குறைந்த மட்டத்தில், 23 வீதமானவர்களே வாக்களித்திருந்தனர். இது தமிழ் சிறுபான்மையினரின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் உட்பட, சகல கட்சிகள் தொடர்பாகவும் ஒரு பொது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. 22 மாவட்டங்களில் 20 மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் மட்டுமே முழுமையாக வெளிவந்துள்ளன. டசின் கணக்கான வாக்குச் சாவடிகளில் சுதந்திர முன்னணியின் குண்டர்கள் எதிர்க் கட்சி ஆதரவாளர்களை வாக்களிக்கவிடாமல் தடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் பின்னர் கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுதந்திர முன்னணி 225 பாராளுமன்ற ஆசனங்களில் 117 ஆசனங்களை வென்றுள்ளது. இரு மாவட்டங்களுக்கான முடிவுகள் வெளிவந்த பின்னரும் மற்றும் தேசியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள 29 ஆசனங்களும் வழங்கப்பட்ட பின்னர் சுதந்திர முன்னணியின் மொத்த ஆசன எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதைப் போன்று, சுதந்திர முன்னணிக்கு கிராமப்புற மாவட்டங்களிலேயே அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன. அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியை இனவாத பதட்ட நிலைமைகளை கிளறிவிடுவதற்காக சுரண்டிக்கொண்டது. ஆனால், எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தேர்தல் தோல்விக்கான பிரதான காரணி, அவை அரசாங்கத்துடன் அடிப்படையில் எந்தவொரு வேறுபாடும் கொண்டிருக்காமையே ஆகும். இரு கட்சிகளும் யுத்தத்தையும் சந்தை-சார்பு பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தையும் ஆதரித்தன. "இந்த மிகையான வெற்றி மஹிந்த சிந்தனைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்" என ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ உடனடியாக பெருமைபட்டுக்கொண்டார். உண்மையில் இது ஒரு மெய்யான வெற்றியல்ல. இரண்டே மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும் போது, சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் சுமார் பத்து லட்சத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. (கண்டி மற்றும் திருகோணமலைக்கு அப்பால்) அதன் மொத்த ஆதரவு பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் சுமார் 30 வீதத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. அரசாங்கம் அரசிலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி இராஜபக்ஷவின் எதேச்சதிகார அரசாங்கத்தை பலப்படுத்தத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக பலமாக பிரச்சாரம் செய்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 10 முதல் 12 ஆசனங்கள் வரை பற்றாக்குறையை சுதந்தி முன்னணி எதிர்நோக்குவதாக நேற்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எவ்வாறெனினும், முடிவுகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், அரசாங்கம் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்க முயற்சிக்கும். அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் முதலாவது நடவடிக்கை, கடந்த நவம்பரில் இருந்து ஒத்தி வைகக்ப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டமாக இருக்கும். சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதாக இராஜபக்ஷ கூறிக்கொண்ட போதிலும், நாட்டின் பொருளாதாரம் பூகோள பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பெரும் கடன் சுமையில் மூழ்கியுள்ளது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருதந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த ஆண்டு கடனாகப் பெறத் தள்ளப்பட்டது. சர்வதேச நாணய நிதியம், அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை பாதியாகக் குறைப்பது உட்பட சிக்கன நடவடிக்கைகளை கோருகின்றது. தேர்தல் முடிவுகள் எதிர்க் கட்சிகளுக்கு பெரும் அடியாகும். ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவை சூழ ஐக்கியப்பட்டிருந்தன. பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், இராணுவத்தின் வெற்றிக்கு தாம் கொடுத்த ஆதரவை பயன்படுத்தி இராஜபக்ஷவை வெளியேற்ற அவை எதிர்பார்த்தன. கடைசி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்படுவதற்கு, இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்தை முன்னெடுத்த ஜெனரல் பொன்சேகா பொறுப்பாளியாவார். இந்த தேர்தல் கூட்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உடைந்து போனது. பாராளுமன்றத் தேர்தலில் யூ.என்.பி. யும் ஜே.வி.பி. யும் வெவ்வேறாக பிரச்சாரம் செய்தன. ஜே.வி.பி., சதிப் புரட்சியை திட்டமிட்டார் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் டசின்கணக்கான ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவுடன் தமது சொந்த ஜனநாயக தேசிய முன்னணியை (ஜ.தே.மு.) ஸ்தாபித்தது. இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகா, இராணுவ நீதிமன்றத்தில் எதிர்கொள்வது, சதிப் புரட்சி குற்றச்சாட்டுக்களை அல்ல, மாறாக, அவர் சீருடையில் இருக்கும் போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களையே ஆகும். திருகோணமலை மற்றும் கண்டி மாவட்ட முடிவுகளுக்குப் புறம்பாக, ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. வியாழக் கிழமை நடந்த தேர்தலில் பெற்ற மொத்த வாக்குகள் 1.2 இரண்டு மில்லியன்களாகும். இது ஜனாதிபதி தேர்தலில் அவை பெற்ற 3.7 மில்லியன்களை விட மிகக் குறைவாகும். தோல்வியை ஏற்றுக்கொண்ட யூ.என்.பி. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, முடிவுகளின் சட்டப்பூர்வத் தன்மையை கட்சி சவால் செய்யாது, மற்றும் "எதிர்காலத்தில் வாக்காளர்களை ஈர்க்க" மீண்டும் ஒழுங்குகளை செய்யும் எனத் தெரிவித்தார். இதுவரை யூ.என்.பி. 41 ஆசனங்களையே பெற்றுள்ளது. 2004 தேர்தலின் பின்னர், அதற்கு 81 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததோடு அது பிரமாண்டமான பாராளுமன்ற கூட்டணியாகவும் இருந்தது. ஆயினும், ஜனாதிபதி பதவியை தக்கவைத்திருந்த சுதந்திர முன்னணி, ஒரு ஸ்திரமற்ற கூட்டணியை ஒட்டுப்போட்டு அமைத்துக்கொண்டதோடு, அடுத்து வந்த காலத்தில் டசின்கணக்கான யூ.என்.பி. உறுப்பினர்கள் மற்றும் சிறிய கூட்டணி பங்காளிகளையும் அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதில் வெற்றி கண்டது. உழைக்கும் மக்கள் யூ.என்.பி. யை இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு பதிலீடாக கருதாத காரணத்தால் அவர்கள் யூ.என்.பி.க்கு வாக்களிக்கவில்லை. இலங்கை முதலாளித்துவத்தின் பழைய கட்சியான யூ.என்.பி., 1983ல் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடுத்தமைக்கு பொறுப்பாளியாகும். அதன் வர்த்தகர்களுக்கு சார்பான கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கும் யூ.என்.பி. இழிபுகழ் பெற்றதாகும். இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்த யூ.என்.பி., புலிகளின் தோல்வியின் பின்னர் கால் மில்லியன் தமிழ் பொது மக்களை அடைத்து வைக்கவும் அது ஆதரவு கொடுத்தது. ஜே.வி.பி. யைப் பொறுத்தளவில் ஐந்து வீதமே உள்ள அதன் தேர்தல் முடிவுகள் அழிவுகரமானதாகும். 27 ஆக இருந்த ஜே.வி.பி. யின் ஆசன எண்ணிக்கை ஜனநாயக தேசிய முன்னணிக்கு 5 அல்லது 6 ஆக குறையும். ஹம்பந்தொட்ட, மாத்தறை போன்ற தென் மாவட்டங்களில் ஜே.வி.பி. யின் கோட்டைகளாக கருத்தப்பட்ட போதிலும், தெற்கு உட்பட பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் கட்சி தூக்கியெறியப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மட்டுமே ஜ.தே.மு. சில ஆசனங்களை வென்றுள்ளது. தேசியப் பட்டியலில் அதற்கு மேலும் ஆசனம் கிடைக்கக் கூடும். யூ.என்.பி. மற்றும் சுதந்திர முன்னணிக்கு தலைமை வகிக்கும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் ஒரு பதிலீடாக ஜே.வி.பி. யை கருதிய பரந்த தட்டினர் மத்தியில் அது மோசமாக அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. ஜே.வி.பி. 2004ல் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டு அதன் ஒடுக்குமுறை கொள்கைகளை ஆதரிக்கத் தொடங்கிய போது, அதில் இருந்து வாக்காளர்கள் தூர விலகத் தொடங்கினர். 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவுக்கு ஆதரவு தேட முயற்சித்த போதிலும், 2008ல் அரசாங்கத்தில் நுழைவதா அல்லது இல்லையா என்ற பிரச்சினையில் பிளவுபட்டு, அது 12 பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்தது. இப்போது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் இன்னுமொரு சந்தர்ப்பவாத கட்சியாகவே ஜே.வி.பி. பரந்தளவில் கருதப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில், வாக்காளித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தமை, முன்னர் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் கட்சிகள் தொடர்பாகவும் வெகுஜனங்களின் அதிருப்தியையும் சீற்றத்தையும் அளவிட்டுக் காட்டுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, இராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு குறைந்த கெடுதியாக கருதி பொன்சேகாவை ஆதரித்தது. வியாழக் கிழமை தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு 12 ஆசனங்களை வென்றுள்ளதோடு திருகோணமலை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்தவுடன் மேலும் சில ஆசனங்களை அது பெறக்கூடும். ஆனால், தமிழ் வாக்காளர்களின் அறுதிப் பெரும்பான்மையைப் பெரும் நிலையில் அது இல்லை. ஊடகங்களும் ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபனமும், தீவு பூராவும் வாக்களித்தோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதன் முக்கியத்துவத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றன. நம்பமுடியாத அளவிற்கு குத்துக்கரணமடித்த போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும, எதிர்க் கட்சிகளை குற்றஞ்சாட்டினார். அவர்கள் "பிரதேசங்களில் உக்கிரமாக பிரச்சாரம் செய்திருந்தால் வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கக் கூடும்" என அவர் கூறினார். யூ.என்.பி. பொதுச் செயலாளர் அத்தநாயக்க, முடிவுகளுக்கு வாக்காளர்களின் அக்கறையின்மை மீது குற்றஞ்சாட்டினார். "அரசாங்கம் அடிக்கடி தேர்தல் நடத்தியதாலும் மற்றும் நாட்டுக்கு அது பெரும் செலவாக அமைந்ததாலும்" அது "மக்கள் மத்தியில் ஆர்வக் குறைவையும் அலட்சியப் போக்கையும்" ஏற்படுத்தியுள்ளது, எனத் தெரிவித்தார். இதே பாதையில் சென்ற டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த எடுத்த முடிவு, "நேற்றைய தேர்தலில் மக்களின் பங்களிப்பில் பெரும் வீழ்ச்சியை விளைவாக்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளது. யதார்த்தத்தில், உழைக்கும் மக்களுக்கும் அரசியல் ஸ்தாபனத்துக்கும் இடையிலான பிரமாண்டமான பிளவை இந்த முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. எந்தவொரு பிரதான கட்சியினதும் பொய் வாக்குறுதிகள் மீது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கு இனிமேலும் நம்பிக்கை கிடையாது. மற்றும் அநேகமானவர்கள் வாக்களிக்காமலேயே தமது அந்நியப்படுதலையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள், வாழ்க்கைத் தரத்தை மேலும் வெட்டிக் குறைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை இராஜபக்ஷ அரசாங்கம் அமுல்படுத்தத் தொடங்குகின்ற நிலையில், வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கு களம் அமைக்கும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தயாரிக்கப்பட்டுவரும் கொடூரமான தாக்குதல்களைப் பற்றி தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவும், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் தீவிரவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட பலவித முதலாளித்துவ முண்டுகோல்களில் இருந்தும் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதை ஆரம்பிக்கவும் இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்தது. ஆளும் தட்டுக்கள் மற்றும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் மீதான அதிருப்தியும் சீற்றமும் மட்டும் போதாது என நாம் தொழிலாளர்களை எச்சரிக்கின்றோம். இலங்கையிலும் உலகம் பூராவும் வங்குரோத்து முதலாளித்துவ முறைமைக்கு எதிராக ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டமும் கட்சியும் அவசியமாகும். இந்தத் தேர்தலில் ஒரு சோசலிச மாற்றீட்டுக்காகப் போராடியது சோ.ச.க. யும் அதன் வேட்பாளர்களும் மட்டுமே. கட்சி சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பை -371 வாக்குகளை- அது போட்டியிட்ட நான்கு மாவட்டங்களில் பெற்றுள்ளது. வாக்களித்தவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தட்டில் மிகவும் வர்க்க நனவு கொண்டவர்களே. அவர்கள் சோ.ச.க. யில் இணைந்துகொள்ள விண்ணப்பிப்பதை பற்றி கடுமையாக அக்கறை செலுத்த வேண்டும். அதே சமயம், தொழிலாள வர்க்கம் இப்போது எதிர்கொள்ளும் அரசியல் ஆபத்துக்களில் கடுமையான அக்கறை காட்டுமாறும், உலக சோசலிச வலைத் தளத்தில் அன்றாடம் வெளியாகும் எமது வேலைத் திட்டத்தையும் முன்நோக்கையும் வாசிக்கத் தொடங்குமாறும் மற்றும் அடுத்து வரவுள்ள வர்க்க மோதல்களுக்காக இந்தக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் நாம் பரந்தளவில் வேண்டுகோள் விடுக்கின்றோம். |