World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan election: SEP campaigns at irrigation workers' quarters இலங்கை தேர்தல்: சோ.ச.க. நீர் விநியோக தொழிலாளர் குடியிருப்பில் பிரச்சாரம் செய்தது By our reporters இலங்கையில் "[ஜனாதிபதி மஹிந்த] இராஜபக்ஷ [ஏப்பிரல் 8 பொதுத் தேர்தலில்] மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், அவர் அதை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார். அது ஒரு எதேச்சதிகார ஆட்சியாக இருக்கும்," என ஒரு நீர்விநியோக சபை பொறியியலாளர் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரக் குழுவிடம் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு இராஜபக்ஷ வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோளைப் பற்றியே அவர் இவ்வாறு தெரிவித்தார். பரந்தளவில் கவலை வெளியிட்ட அந்த பொறியியலாளர், ஜனவரி 26 ஜனாதிபதி தேர்தலின் பின்னர், வேலைத் தளங்களில் அரசியல் எதிரிகள் மீதான தாக்குதல் மற்றும் பிரதான எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது உட்பட, இராஜபக்ஷ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல்களை சுட்டிக் காட்டினார். "அரசாங்கம் நாட்டை எவ்வாறு ஆட்சி செய்யப்போகின்றது" என்பதை இந்த சம்பவங்கள் காட்டுவதாகத் தெரிவித்த அவர், "தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் ஏனைய கோரிக்கைகளுடன் போராட்டத்துக்கு வரும் போது அரசாங்கம் தாக்குதல்களை மேலும் உக்கிரமாக்கும். அது அத்தகைய போராட்டங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக்கொண்ட அவசரகாலச் சட்டங்களை பயன்படுத்தும்," என எச்சரிக்கை செய்தார். சோ.ச.க. ஏப்பிரல் 8 பொதுத் தேர்தலில் நாட்டின் தலைநகர் கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களில் 58 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கட்சியின் பிரச்சாரத்தின் போது சோ.ச.க. குழு கொழும்புக்கு தெற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் ரத்மலானையில் உள்ள நீர்வழங்கல் சபை ஊழியர்களின் குடியிருப்பில் பிரச்சாரம் செய்தது. நீர்வழங்கல் சபை தொழிலாளர்கள், சில தனியார் துறை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பப் பெண்களையும் எமது குழு சந்தித்தது. நாம் சோ.ச.க. தேர்தல் அறிவித்தலை விநியோகித்து கட்சியின் முன்நோக்கு மற்றும் வேலைத் திட்டத்தைப் பற்றி அவர்களுடன் கலந்துரையாடினோம். ஏறத்தாழ எங்களுடன் பேசிய எல்லா தொழிலாளர்களும், இராஜபக்ஷவின் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க திட்டமிட்டிருந்தவர்களும் கூட, மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாததோடு, அது தொழிலாள வர்க்கத்துக்கு பெரும் ஆபத்துக்களை கொண்டுவரும் என எச்சரித்தனர். இந்த நீர்வழங்கல் திணைக்களம், பெரிய மற்றும் சிறிய மட்டத்திலான நீர்விநியோகத் திட்டங்களை திட்டமிட, வடிவமைக்க, கட்டியெழுப்ப, இயக்க மற்றும் நிர்வகிக்கும் நோக்குடன், 1900 ஆண்டளவில் பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தால் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் தொழிலாளர்கள் வெள்ளக் கட்டுப்பாடு, வடிகால் மற்றும் உப்புக்கலவை கட்டுப்படுத்தல் உட்பட்ட துறைகளையும் சார்ந்தவர்களாக இருந்தனர். 1948ல் சுதந்திரத்தின் பின்னர் வந்த அரசாங்கங்கள் ஆரம்பத்தில் பேணிவந்த "சுய திருப்தி" பொருளாதார கொள்கையின் கீழ், அரசாங்கத்தின் விவசாய திட்டங்கள் மற்றும் ஏனைய விவசாயிகளுக்கு பொது வடிகால் வசதிகளை பராமரிப்பதும் திணைக்களத்தின் பிரதான பொறுப்புக்களில் ஒன்றாக இருந்தது. ஆயினும், 1977ல் இருந்து அமுல்படுத்தப்பட்ட, பொது நிறுவனங்களை மறுசீரமைக்கும் மற்றும் தனியார்மயப்படுத்தும் "திறந்த சந்தை" பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், திணைக்களத்தை கலைக்கவும் விவசாயிகளுக்கு தண்ணீரை விற்கவும் அரசாங்கம் திட்டமிட்டது. ஒரு நீர்வழங்கல் சபை தொழிலாளி தெரிவித்ததாவது: "பலவித திட்டங்களின் கீழ் எமது திணைக்களத்தை பிரிப்பதற்கான திட்டங்கள் உள்ளன. தற்போது எமக்கு இன்னமும் பல விபரங்கள் கிடைக்கவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் அதைப் பற்றி எங்களிடம் பேசினாலும், அவர்கள் அதை தடுக்கும் எதையும் செய்யவில்லை." ரத்மலானை வீட்டுத் திட்டத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. வீடுகளின் தரத்தைப் பொறுத்து, தொழிலாளர்கள் மாதம் 500 ரூபா முதல் மாத வாடகை கொடுத்து, மேலும் தமது மின்சார, தண்ணீர் கட்டணங்களையும் செலுத்துகிறார்கள். திணைக்களம் வீடுகளை சரியாக பராமரிப்பதில்லை என ஒரு ஊழியர் முறைப்பாடு செய்தார். "நேரத்துக்கு திருத்தங்களை செய்வதில்லை. கூரை ஒழுகுகிறது. கதவுகளும் ஜன்னல்களும் சேதமடைந்துள்ளன. சில வீடுகளுக்கு குழாய் நீர் இல்லை. அந்த குடும்பங்கள் அருகில் உள்ள வீடுகளில் அல்லது பக்கத்தில் உள்ள கோயிலில் இருந்து தண்ணீர் எடுத்து வரவேண்டும். வடிகால் அமைப்பும் உள்ளக பாதைகளும் சேதமடைந்துள்ளன. இங்கு தக்க கழிவகற்றும் முறைமை கிடையாது. இந்த வீட்டுத் திட்டத்தில் பல இடங்கள் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களாக மாறியுள்ளன. எவர் ஆட்சிக்கு வந்தாலும், நிலைமையில் மாற்றம் வரப்போவதில்லை. இன்னுமொரு தொழிலாளி சுமார் 1,000 சதுர மீட்டர்களுக்கு வெட்டப்பட்ட ஒரு ஏரிப் பகுதியை காட்டினார். அது அருகில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் வழங்க தோண்டப்பட்டிருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டு மாசுபட்டுள்ளது. எங்களுடன் பேசிய பல தொழிலாளர்கள், இராஜபக்ஷவின் அரசாங்கம் தமது பொருளாதார சுமைகளை குறைக்க சலுகைகள் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவுக்கு வாக்களித்திருந்தனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் கடந்த மே மாதம் முடிவடைந்ததால் தமக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என அவர்கள் நினைத்தனர். சிலர் சிங்கள பொது மக்கள் மீதான புலிகளின் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். பிரதான எதிர்க் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) செய்தது போல், இராஜபக்ஷ அர்சாங்கமும் இனவாத பதட்டங்களை கிளறிவிட அந்த சீற்றத்தை பயன்படுத்திக் கொண்டது. அவற்றுக்கு தொழிற்சங்கங்களும் முண்டு கொடுத்தன. சிலர் இராஜபக்ஷவை கண்டனம் செய்ய பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தனர். எவ்வாறெனினும், தமக்கு இப்போது அவர்களில் நம்பிக்கை கிடையாது என தெரிவித்தனர். அரசாங்க துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா (24 அமெரிக்க டொலர்) சம்பள உயர்வும் ஏனைய சலுகைகளும் வழங்குவதாக இராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதி "வெறும் வாக்குறுதி மட்டுமே" என ஒரு தொழிலாளி விமர்சித்தார். "யுத்தம் முடிவடைந்தாலும் சாதாரண மக்களுக்கு நிவாரணம் கிடையாது" என ஒருவர் அதிருப்தி தெரிவித்தார். ஓய்வுபெற்ற தமிழ் நீர்வழங்கல் தொழிலாளர் ஒருவர் இனவாத யுத்தத்தில் தனது கசப்பான அனுபவங்களை தெரிவித்தார்: "எனது குடும்பம் [வட இலங்கையில்] யாழ்ப்பாணத்தைச் சேர்ந்ததாக இருந்த போதிலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொழும்பில் வாழ்கின்றோம். 1983 [தமிழர் விரோத படுகொலைகள்] இன்னமும் எங்களது நினைவை பாதிக்கின்றன. எங்களது உயிரைப் பாதுகாக்க இடத்துக்கு இடம் மாறத் தள்ளப்பட்டோம். எனது மைத்துனருக்கு ஒரு கடை இருந்தது. ஆனால், அது வன்முறையில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது." அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்வழங்கல் சபையில் வேலை செய்திருந்தார். "நான் சிங்களத் தொழிலாளர்களுடன் எந்தப் பிரச்சினையும் இன்றி வேலை செய்தேன். இனவாத பிரச்சினைகள் அரசியல்வாதிகளாலேயே உருவாக்கப்பட்டன. மக்களை பிளவுபடுத்துவதற்காக இத்தகைய அரசியல்வாதிகள் இனவாதத்தை பயன்படுத்துகின்றார்கள் என்ற உங்களது கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் புலிகளுடனோ அல்லது அரசாங்கம் ஆயிரக்கணக்கான பொது மக்களுடன் அவர்களை நசுக்கிய விதத்துடனோ உடன்படவில்லை." வாழ்கைச் செலவு ராக்கட் வேகத்தில் அதிகரிப்பது மற்றும் பொதுக் கல்வி, இலவச சுகாதார சேவையில் வெட்டுக்களைப் பற்றி பல பெண் தொழிலாளர்களும் குடும்பப் பெண்களும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். வீட்டு மின்சாரப் பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் பல சேவைகளுக்காக ஒப்பந்த தொழிலாளர்களை வழங்கும் ஒரு தனியார் நிறுவனமான அபான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு குடும்பப் பெண், "இந்த நிலைமையை வறிய மக்கள் எப்படி தாங்க முடியும்? இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிப்பதில்லை என நாம் முடிவெடுத்துள்ளோம்," என கூறினார். ஒரு சாலை நிர்மான கம்பனியைச் சேர்ந்த தொழிலாளி, அரசாங்கத்தையும் எதிர்க் கட்சியையும் எதிர்த்தார். அவர் ஆரம்பத்தில் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்திருந்தார். "என்னை பல தடவை யூ.என்.பி. குண்டர்கள் தாக்கினர். ஒரு முறை அவர்கள் என்னை கூரிய ஆயுதத்தால் குத்தினர். ஸ்ரீ.ல.சு.க. எனக்கு உதவும் என்ற நம்பிக்கையில் நான் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டேன். ஆனால் பயனளிக்கவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களை ஏமாற்றிவிட்டனர். இம்முறை நான் யாருக்கும் வாக்களிக்க மாட்டேன்." பிரதேசத்தில் ஒரு அரசியல் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தால் தான் உதவி செய்வதாக அவர் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தார். வீடொன்றை வாடகைக்குப் பெறக் கூட முடியாதமையால், பல ஓய்வுபெற்ற நீர்வழங்கல் சபை தொழிலாளர்கள் வீட்டுத் திட்டத்துக்கு அருகிலேயே பலகையில் வீடுகளை அமைத்து வாழ்கின்றார்கள். ஓய்வுபெற்ற பின்னர் அவர்கள் வீடுகளை விட்டுவிட வேண்டும். சில வறிய நிலமற்ற குடும்பங்கள் இந்த கூடாரங்களில் வசிக்கின்றன. தமது குடும்பம் 15 ஆண்டுகளாக அங்கு வாழ்வதாக ஒரு ஓய்வுபெற்ற ஊழியரின் மகள் தெரிவித்தார். "ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல்வாதிகள் வந்து எங்களுக்கு வீடுகள் கட்ட இடங்கள் அல்லது வீடுகள் தருவதாக வாக்குறுதியளிப்பார்கள். தேர்தல் முடிவடைந்த உடன், அடுத்த தேர்தல் வரை எவரும் வரமாட்டார்கள். எங்களுக்கு தக்க தண்ணிர் அல்லது சுகாதார வசதிகள் கிடையாது. எங்களுக்கு நிரந்தர வருமாணமும் கிடையாது." இந்த பலகை வீடுகளில் இருக்கும் பலர் அன்றாடம் சில கூலித் தொழில்களை செய்கின்றனர். மூன்று பிள்ளைகளின் தாய் எம்மிடம் கூறியதாவது: "நாங்கள் பூக்களை சேகரித்து அதை விற்று வாழ்கின்றோம். ஒரு நாளைக்கு 200-300 ரூபா மட்டுமே உழைக்க முடியும். அது போதாது. எங்களால் எங்களது பிள்ளைகளுக்கு பால் அல்லது ஒழுங்கான சாப்பாடு கொடுக்க முடியாது. எங்களால் அவர்களை நல்ல பாடசாலைக்கு அனுப்பவும் முடியாது."ஒரு நீர் விநியோக சபை ஊழியரின் மகனான பல்கலைக்கழக மாணவன் ஒருவர், அரசாங்கம் அபிவிருத்தி பற்றி தற்பெருமை பேசிக்கொண்டாலும், அந்தத் திட்டங்கள் பெரும் வர்த்தகர்களின் உட்கட்டமைப்புக்காக திட்டமிடப்பட்டுள்ளதே அன்றி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அல்ல, என தெரிவித்தார். "சமுதாயத்தில் பெரும் சமத்துவமின்மை காணப்படுகிறது. பெரும் வர்த்தகர்கள் இலாபம் அடையும் அதே வேளை, மக்கள் துன்பம் அனுபவிக்கின்றனர். பொருளாதாரத்தில் பூகோள பிரச்சினை இருப்பது பற்றி எனக்குத் தெரியும். ஆயினும், அது இலங்கையை கடுமையாக பாதித்துள்ளது என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் ஏற்றுமதி மற்றும் ஏனையவற்றிலான வீழ்ச்சி பற்றி விளக்கிய போதே எனக்கு அது மனதில் பட்டது. "சோசலிசம் பற்றிய கொள்கை எனக்கு புதிது. அரசாங்கத்திடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவே வளம் உள்ளது, பல்கலைக்கழகங்களும் ஏனைய வசதிகளையும் கட்டியெழுப்ப அல்லது விரிவுபடுத்த பெருமளவில் செலவு செய்ய முடியாமல் இருப்பது நியாயமானது என நான் நினைத்தேன். எனவே தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பது சரியானது என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. எவ்வாறெனினும், தனியார் பல்கலைக்கழகங்கள் இலாபத்துக்கே அன்றி மாணவர்களின் நலனுக்காக அல்ல என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்" என்று அவர் தெரிவித்தார். |