World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைThe decay of parliamentary democracy in Sri Lanka இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் அழிவு By K. Ratnayake "தயவு செய்து எங்களுக்கு கெளரவமான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாருங்கள்" என்ற தலைப்பில் கடந்த வாரக் கடைசியில் சண்டே டைம்ஸ் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம், இலங்கையின் பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர்களின் இழிந்த தரத்தைப் பற்றியும் புலம்பியது. அந்த ஆசிரியர் தலைப்பு, நாடு ஏப்பிரல் 8 அன்று பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருந்த நிலையில், அரசியல் தரத்தை மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்து எழுதப்பட்ட பல கருத்துப் பகுதிகள் மற்றும் குறிப்புக்களின் ஒன்றாக இருந்தது. வாக்காளர்களில் பரந்த தட்டினர் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்க நிர்வாகங்களில் இருந்து அந்நியப்படுவதையும் மற்றும் அவற்றை எதிர்ப்பதையும் ஊடகங்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளன. அத்தகைய கட்டுரைகளின் நோக்கம், இலாப முறைமையின் அழிவு மற்றும் நெருக்கடியில் தங்கியிருக்கும், அடிநிலையில் இருக்கும் மூலகாரணங்களைப் பற்றி எந்தவொரு நெருக்கமான ஆய்வும் செய்வதில் இருந்து இத்தகைய உணர்வுகளை திசை திருப்புவதாகும். கடந்த பாராளுமன்றம் காட்ட வேண்டியிருந்த "முன்னேற்றமான சட்ட முறைமையின் வழியை" "காணக் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டவாறே அந்த ஆசிரியர் தலைப்பு ஆரம்பிக்கின்றது. அதிகப்படியான விதிமுறைகள் சிறிய திருத்தங்களை உள்ளடக்கியுள்ளதோடு அநேக பாராளுமன்ற உறுப்பினர்கள் "குழுக்களில் அமர்ந்து காலத்தை கடத்திய" போதிலும் "அவர்களது யோசனைகள் நிறைவேற்று அதிகாரத்தால் அலட்சியம் செய்யப்பட்டமை, அவசரகால விதிகள் விரிவாக்கப்பட்டமை, அற்ப விஷயங்களுக்காக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டமை போன்றவற்றை அது சுட்டிக்காட்டியுள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், பாராளுமன்றம் அரசாங்கத்துக்கு ஒரு முக்கியமான இறப்பர் முத்திரை ஆகியுள்ளது என்பதாகும். சண்டே டைம்ஸ் எளிமையான விளக்கத்தை கொடுக்கின்றது: "பாராளுமன்றத்தின் தரத்தில் இத்தகைய வீழ்ச்சிக்கான முதலாவது காரணம், அறிவுத்திறம் வாய்ந்தவர்கள் அங்கு நுழைவது குறைந்து விட்டதே." சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது ஊழியர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதையும் அரசியலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்கள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய பின்னர், அது சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு அரை மனதான வேண்டுகோள் விடுக்கின்றது. இறுதி ஆய்வுகளில், இந்த ஆசிரியர் தலைப்பு, புத்திஜீவிகள் மற்றும் மதிப்புக்குரிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு மாறாக, சலுகைகளை எதிர்பார்ப்பதாக வாக்காளர்களை குற்றஞ்சாட்டுகிறது. உண்மையில், முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவு, வாக்காளர்களில் பரந்த பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் சமூகத் தேவைகளை ஏதாவதொரு வழியில் நிறைவேற்றுவதற்கு ஆளும் வர்க்கம் இலாயக்கற்று இருப்பதுடன் முழுமையாக பிணைந்துள்ளது. 2005ல் குறுகிய வெற்றியைப் பெற்ற ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தைப் புதுப்பித்து, பொருளாதார சிரமங்களை கொண்டுவந்ததைத் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை. கடந் மே மாதம் புலிகளைத் தோற்கடித்த பின்னர், அவர் சமாதானமும் சுபீட்சமும் வரும் என வாக்குறுதி கொடுத்த போதிலும், வாழ்க்கைத் தரம் மேலும் சீரழிந்து போயுள்ளது. இராஜபக்ஷ மேலும் மேலும் எதேச்சதிகார ஆட்சியில் தங்கியிருக்கின்றார். அவர் உறவினர்கள், நெருங்கிய உதவியாளர்கள், உயர்மட்ட அதிகாரத்துவவாதிகள் மற்றும் ஜெனரல்களுடனான ஒரு சிறுகுழுவின் ஊடாக இயங்கியதோடு, சகல உறுப்பினர்களுக்கும் ஏதாவதொரு அமைச்சர் பதவியை கொடுத்து காத்துக்கொள்ள நேர்ந்த ஒரு ஸ்திரமற்ற பாராளுமன்றப் பெரும்பான்மையில் தங்கியிருந்தார். இதன் விளைவாக, பயன்படுத்துவதற்கு எளிதற்ற அமைச்சரவை, அதே போல் பாராளுமன்றத்தை ஜனாதிபதி பெருமளவில் அலட்சியம் செய்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற பிரதான எதிர்க் கட்சிகள் தனது இனவாதம், இராணுவவாதம் மற்றும் சந்தை சார்ந்த மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்துடன் உடன்பாடு கொண்டிருந்ததால், ஏறத்தாழ இராஜபக்ஷ பாராளுமன்றத்தில் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. எதிர்க் கட்சி வேட்பாளரான, யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இராஜபக்ஷவுக்கும் இடையில் நிச்சயமாக வாக்காளர்கள் உண்மையான வேறுபாடுகள் எதையும் காணாததால், ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையும் இராஜபக்ஷ அதிகாரத்தை வென்றார். சண்டே டைம்ஸ் பாராளுமன்றத்தின் தரம் குறைவதையிட்டு வெறுப்புக் கொண்டிருந்த போதிலும், எதிர்ப்பை நசுக்குவதற்கு அரசாங்கம் ஜனநாயக-விரோத வழிமுறைகளையும் குண்டர் நடவடிக்கைகளையும் பிரயோகிப்பதையிட்டு அதற்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஜனாதிபதி தேர்தல் முடிந்ததில் இருந்தே, ஜனாதிபதி எதிர்க் கட்சிகள், ஊடக விமர்சகர்கள் மற்றும் எதிர்க் கட்சி தொழிற்சங்க அலுவலர்கள் மீது திட்டமிட்ட பாய்ச்சலை மேற்கொண்டார். இதன் உச்ச கட்டமாக, சதிப் புரட்சியொன்றை திட்டமிட்டார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் பொன்சேகாவே கைது செய்யப்பட்டார். இந்த பீதியான மற்றும் அச்சுறுத்தலான சூழ்நிலையிலேயே பாரளுமன்றத் தேர்தல் நடக்கின்றது. அரசியலமைப்பை மாற்றக்கூடியவாறு, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதே அரசாங்கத்தின் தெரிவிக்கப்பட்ட குறிக்கோளாகும். ஜனாதிபதி ஏற்கனவே அமைச்சர்களையும் அரசாங்கத்தையும் நியமிக்கும் மற்றும் பதவி விலக்கும் அதிகாரம் கொண்ட விரிவான நிறைவேற்று அதிகாரங்களை உடையவர். பாராளுமன்றத்தில் வழமையாக நீடிக்கப்படும் அவசரகால நிலைமையின் கீழ், ஊடகங்களைத் தணிக்கை செய்வது மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையை தடை செய்வது உட்பட விரிவான மேலதிக அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு உண்டு. அரசாங்கம் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்குமானால், அது இராஜபக்ஷவை அதிகாரத்தில் மேலும் இறுக்கமாக அமர்த்தவும் அவரது ஜனநாயக-விரோத வழிமுறைகளை சட்டப்பூர்வமாக்குவதற்குமே ஆகும். இறுதி ஆய்வுகளில், இராஜபக்ஷவின் பொலிஸ்-அரச திட்டங்கள் எதிர்க் கட்சிகளை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டதாகும். கடுமையாக கடன்பட்டுள்ள அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறத் தள்ளப்பட்டதோடு, தேர்தல் முடிந்த கையுடன், தற்போது கிரேக்கத்தில் நடப்பது போன்ற முறையில், உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகளை ஆழமாக சீரழிக்கத் தள்ளப்படும். குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கையை திசையமைவுபடுத்துவது போன்ற கூர்மையான தந்திரோபாய வேறுபாடுகள் இருந்த போதிலும், இராஜபக்ஷவின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டம் அல்லது அவரது ஜனநாயக-விரோத வழிமுறைகளுடன் எதிர்க் கட்சிகளுக்கு அடிப்படை முரண்பாடுகள் கிடையாது. இலங்கை பாராளுமன்றத்தின் தங்குமிடத்தை "பண்பான அரசியல்வாதிகள்" ஆண்டனர் என்ற கற்பனையான கடந்தகாலத்தை சண்டே டைம்ஸ் விரும்புகிறது. ஆரம்பத்தில் இருந்தே, தீவின் மோசடி ஆளும் தட்டின் பிரதிநிதிகளான இத்தகைய "பண்பாளர்கள்" ஜனநாயக உரிமைகளை முழுமையாக அலட்சியம் செய்து செயற்பட்டதோடு உழைக்கும் மக்களை பிளவுபடுத்த இனவாத அரசியலை பயன்படுத்தினர். 1948ல் பாராளுமன்றத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, ஜனத்தொகையில் சுமார் 10 வீதமாக இருந்த, ஒரு மில்லியன் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை அபகரிப்பதாக இருந்தது. ஒரே ட்ரொட்ஸ்கிச இயக்கமான, பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியுடன் ஐக்கியப்பட்ட இந்திய போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சி மட்டுமே, இந்த மோசமான ஜனநாயக-விரோத நடவடிக்கையை எதிர்த்தது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக அன்றைய கால முதலாளித்துவ பத்திரிகையில் "பண்பாளர்களாக" வருணிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களது வர்க்க நலன்களுக்காக போராடுவதன் பேரில், தொழிலாளர்களுக்கு கல்வியூட்டி அவர்களை அணிதிரட்டுவதற்கான ஒரு வழியாக பாராளுமன்றத்தை பயன்படுத்திய புரட்சிகர மார்க்சிஸ்டுகளே ஆவர். லங்கா சமசமாஜக் கட்சி பாராளுமன்ற அரசியலுக்கும் மற்றும் முதலாளித்துவ கட்சிகளுக்கும் அடிபணிந்ததில் அதன் சீரழிவு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. இது லங்கா சமசமாஜக் கட்சி 1964ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் நுழைந்துகொண்டதுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு, தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு மோசமான அடியாக இருந்ததோடு, முதலாளித்துவ அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. கொள்கைப் பிடிப்பான தொழிலாள வர்க்க எதிர்ப்பு இல்லாமல் போனமை, தற்போதுள்ள முதலாளித்துவ கட்சிகள் மட்டுமன்றி விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பி. போன்ற குட்டி முதலாளித்துவ தீவிரவாத கருவிகளும் தலைதூக்குவதற்காக இனவாதத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் அனுமதியளித்தது. இறுதியாக அது 1983ல் உள்நாட்டு யுத்தமாக வெடித்தது. உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் பரந்த முன்னெடுப்பின் பாகமாக, ஐக்கிய தேசியக் கட்சி அரசங்கம் சந்தை-சார்பு மறுசீரமைப்புக்களை நோக்கி திரும்பியுடன் யுத்தத்தின் தொடக்கம் சம்பந்தப்பட்டுள்ளது. இந்த மோதல்கள் அடிப்டையில் ஒரு தமிழர்-விரோத யுத்தம் அல்ல. மாறாக, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதை குறிக்கோளாகக் கொண்டிருந்தது. உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் தொடர்ச்சியான அழிவுடன் சேர்த்தே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அது மறுபக்கம் முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதான பகைமையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இது வாக்குகளை வெல்வதற்காக பழிபாவத்திற்கு அஞ்சாத பல துண்டு கட்சிகள் கூட்டணி சேர்வதில் பிரதிபலித்தது. பண்பாளர்களின் அரசியலுக்கு திரும்புதல் என்று சண்டே டைம்ஸ் பிரேரிக்கும் தீர்மானம், வெறுமனே கேலிக்கூத்தானதாகும். இலங்கையில் வர்க்க பதட்ட நிலைமைகள் மிகவும் தீவிரமாக உள்ளன. இதனால் தோன்றுவது என்னவெனில் ஒரு பொலிஸ்-அரச அரசாங்கமாகும். இது சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச மூலதனமும் கோரும் நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தி, தீவின் செல்வந்த பெரும் நிறுவன தட்டின் நலன்களை ஈவிரக்கமின்றி காப்பதற்குத் தயங்கப் போவதில்லை. தொழிலாள வர்க்கம் தேவையான அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி சமூகத் தேவைகளை இட்டு நிரப்பக்கூடிய வாறு சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக மறுகட்டமைப்பு செய்ய முயற்சிக்கும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சொந்தமாக சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாள வக்கத்தின் நலன்களை காக்க முடியும். பாராளுமன்ற கூட்டு மற்றும் சூழ்சித்திட்ட அரசியலின் மூலம் இதனைக் காக்க முடியாது. நெருங்கிவரும் இராஜபக்ஷவின் "பொருளாதார யுத்தம்" பற்றி உழைக்கும் மக்களை எச்சரிக்கவும் அவர்களுக்கு கல்வியூட்டவும் மற்றும் பல தசாப்தங்களாக நசுக்கப்பட்டு வந்த வர்க்கப் போராட்ட வழிமுறைகளை புதுப்பிக்கவும் சோசலிச சமத்துவக் கட்சி ஏப்பிரல் 8 தேர்தலில் போட்டியிடுகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காக்க வேலைத் தளங்கள், தொழிலாள வர்க்க பிரதேசங்கள் மற்றும் நகரங்களிலும் கிராமங்களிலும் நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்குமாறு ஊக்குவிப்பதற்கு சோ.ச.க. இந்தப் பிரச்சாரத்தை பயன்படுத்தும். எமது வேட்பாளர்கள் சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை எதிர்ப்பதோடு இலங்கை, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காவும் சோசலிசத்துக்காவும் முன்னெடுக்கும் போராட்டத்தின் அடிப்படையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடுகின்றனர். |