இலங்கையில் நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் இன்னும் வெளிவராத
போதிலும், ஆரம்பத் தரவுகள் நாடு பூராவும் மிகவும் குறைந்தளவானவர்களே வாக்களிப்பில் பங்குபற்றியுள்ளனர்
என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இந்த முடிவானது, அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சிகள் உள்ளடங்கலாக
ஒட்டுமொத்த கொழும்பு அரசியல் ஸ்தாபனம் தொடர்பாக உழைக்கும் மக்களின் பரந்த தட்டினரின் மத்தியில் பரந்தளவிலான
அந்நியப்படுதல் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது.
அரசாங்க சார்பற்ற தேர்தல் கண்காணிப்பாளர்களின் படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட
14 மில்லியன் வாக்காளர்களில் 50 முதல் 55 வீதமானவர்களே தமது வாக்குகளை பிரயோகித்துள்ளனர். இந்த
வாக்களிக்காதோர் வீதம், 2004ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில்
இருந்ததைக் காட்டிலும் 20 வீதத்துக்கும் அதிகமானதாகும். கடந்த இரு தசாப்தத்தில் நடந்த ஜனாதிபதி மற்றும்
பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்களித்தோரின் சராசரி தொகை 65 முதல் 75 வீதம் வரையானதாக
இருந்தது.
உலக சோசலிச வலைத் தளத்துடன் (கீழே பார்க்கவும்) பேசிய வாக்காளர்கள்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை
முன்னணி (ஜே.வி.பி.) மீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் சீரழிந்துவரும் வாழ்க்கைத் தரம்
மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களில் அக்கறை காட்டிய போதிலும், தமது இழப்புக்களை எதிர்க்
கட்சிகள் மேம்படுத்தும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கவில்லை. ஒரு சாரதி விளக்கியவாறு: "யூ.என்.பி.
அல்லது ஜே.வி.பி. யார் ஆட்சிக்கு வந்தாலும், பெறுபேறு ஒன்றாகவே இருக்கும். எங்களைப் போன்ற சிறிய
மனிதர்கள் துன்பத்தை அனுபவிப்போம்."
யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், 20 வீதமானவர்கள் மட்டுமே
வாக்களித்துள்ளனர். இது ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்த 24 வீதத்தை விட குறைவாகும். தமிழ்
வாக்காளர்களில் அநேகமானவர்கள் பலவித தமிழ் கட்சிகள் உட்பட பிரதான கட்சிகள் மீது பகைமை
உணர்வுகொண்டுள்ளனர். கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த
அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்தை யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் முழுமையாக ஆதரித்தன. புலிகளின்
ஊதுகுழலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நான்கு குழுக்களாக பிரிந்துள்ளதோடு அவர்கள் அனைவருமே கொழும்பு
அரசியல் ஸ்தாபனத்துடன் ஒருங்கிணைந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பு, வடக்கில் உள்ள
ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் வக்காளிக்காமல் தடுக்கப்பட்டார்கள் என தெரிவித்துள்ளது. புலிகளின்
தோல்வியை அடுத்து, இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக
இராணுவத்தால் நடத்தப்படும் முகாங்களில் அடைக்கப்பட்டிருந்ததோடு, அவர்களது கிராமங்கள் நகரங்களில்
அவர்களை "மீளக் குடியேற்றும்" வரை பல மாதங்களாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். மெனிக்பார்ம்
தடுப்பு முகாமுக்கு அருகில் பலர் வரிசையில் நின்றிருந்த போதிலும், அவர்கள் வாக்காளர்களாக பதிவு
செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தீவு பூராவும் உள்ள வாக்காளர்கள், நீண்டகால மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர்
தமது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பினர். ஆயினும், 26 ஆண்டுகால யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட
அழிவு, பூகோள பொருளாதார நெருக்கடியினால் மேலும் குவிக்கப்பட்டு, வேலையின்மை மற்றும் வறுமையும் உயர்ந்த
மட்டுத்துக்கு வளர்ச்சி காண்பதற்கு மட்டுமே வழிவகுத்தது. வளர்ச்சிகண்டுவரும் சமூகப் பதட்ட நிலைமைகளுக்கு அரசாங்கத்தின்
பதிலிறுப்பு, எதிர்க் கட்சிகள், வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் சகல விதமான எதிர்ப்புக்களுக்கும்
எதிராக பொலிஸ்-அரச வழிமுறையை நாடுவதாகும்.
தேர்தல் தினம் அச்சுறுத்தல் சூழ்நிலையை குறித்தது. வாக்காளர்களுக்கு "பாதுகாப்பு
வழங்குதல்" மற்றும் "வன்முறைகளை தடுத்தல்" என்ற சாக்குப் போக்கில் 70,000 க்கும் அதிகமான பொலிஸ்
மற்றும் இராணுவத்தினர் அணிதிரட்டப்பட்டுள்ளனர். வாக்களிப்பை "கண்காணிக்க" தேர்தல் நிலையங்களுக்கு சிரேஷ்ட
பொலிஸ் அதிகாரிகள் வந்திருந்தனர். அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவப் படையும்
நிச்சயமாக ஆளும் கட்சிக்கு சார்பாக செயற்பட்டன.
இந்த தேர்தல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு ஜனநாயக-விரோத
அதிகாரங்களை வழங்கும் அவசரகாலச் சட்ட அமுலின் கீழேயே நடந்தது. ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலின்
பின்னர், அரசாங்கம் எதிர்க் கட்சி வேட்பாளரும் ஓய்வுபெற்ற ஜெனரலுமான சரத் பொன்சேகாவையும் மற்றும்
டசின் கணக்கான அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்தது. எதிர்க் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மீது பாய்ந்த
அரசாங்கம், பொன்சேகா விசுவாசிகள் என நம்பப்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவ உயர்மட்ட அதிகாரிகளை
அப்புறப்படுத்தியது.
பல இடங்களில் பொலிசாரின் முன்னிலையிலேயே தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றன.
தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் படி, பிரச்சார காலம் உட்பட நேற்று பிற்பகல் வரை 400
வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 202 தேர்தல் தினத்தன்று நடந்துள்ளன. இவற்றில் 84
சம்பவங்கள் பெரிய சம்பவங்கள் என அந்த அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.
அநேக வன்முறைகள் சுதந்திர முன்னணி குண்டர்களால் எதிர்க் கட்சிகளுக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்ட போதிலும், சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவை எதிர்க்
கட்சிகளால் அல்லது கட்சிக்குள்ளேயே உள்ள எதிரிகளால் நடத்தப்பட்டுள்ளன. ஏப்பிரல் 4 அன்று, குருநாகல்
மாவட்டத்தின் சுதந்திர முன்னணி ஆதரவாளரான பிரசன்ன ஜயவர்தன, அடையாளந்தெரியாத கும்பலால் சுட்டுக்
கொல்லப்பட்டார். சுதந்திர முன்னணி இந்தக் கொலைக்கு யூ.என்.பி. ஆதரவாளர்கள் மீது குற்றஞ்சாட்டியது.
கிழக்கில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பிலும், பெரும்பான்மையான தோட்டத்
தொழிலாளர்கள் வாழும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டத்திலும் பதட்டங்கள் குறிப்பிடத்தக்களவு அதிகமாக
இருந்தன. தேர்தல் தினத்தன்று, கண்டி மாவட்டத்தில் பொலிசார் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, நாவலபிட்டிய
தேர்தல் தொகுதியில் எதிர்க் கட்சி தேர்தல் முகவர்களை சுதந்திர முன்னணி குண்டர்கள் விரட்டியடித்ததாக
கண்காணிப்புக் குழுக்கள் அறிவித்துள்ளன. அந்தப் பிரதேசங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில், ஏப்பிரல் 5 அன்று, தேர்தல்
வன்முறைகளை பொலிசார் நிறுத்தாவிட்டால் தேர்தலை இரத்து செய்யப்போவதாக தேர்தல் அதிகாரிகள்
அச்சுறுத்தினர். இந்த விடயத்தில், ஒவ்வொரு கோஷ்டியும் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் விருப்பு
வாக்குகளுக்காக, சுதந்திர முன்னணிக்குள்ளேயே காணப்படும் கூர்மையான உள்மோதல் சம்பந்தப்பட்டதாகவே
இந்தக் குண்டர் தாக்குதல் தெரிகின்றது.
யூ.என்.பி., ஜே.வி.பி. மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எதிர்க்
கட்சித் தலைவர்கள், அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசுக்கு சொந்தமான ஊடகங்களை முழுமையாக
பயன்படுத்துவது உட்பட, அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது பற்றி முறைப்பாடு செய்வதற்காக செவ்வாய்
கிழமை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை சந்தித்தனர். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்
போது இத்தகைய நடவடிக்கைகளை பற்றி விமர்சித்த பின்னர், "பொலிஸ் மற்றும் அரச ஊடகத்தின் கட்டுப்பாடு"
தன்னிடம் இல்லை என திசாநாயக்க பிரகடனம் செய்தார்.
தேர்தல் தினத்தன்று, உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பல
மாவட்டங்களிலும் வாக்காளர்களுடன் உரையாற்றினர்.
அரசாங்கத்தின் மீதான தனது எதிர்ப்பை வெளிக்காட்ட யூ.என்.பி. தலைமையிலான
ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களித்ததாக காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடையை சேர்ந்த ஒரு தச்சுத்
தொழிலாளி தெரிவித்தார். "நாட்டில் ஜனநாயகம் கிடையாது. எதிர்க் கட்சிகள் மீதான வன்முறைகள்,
அரசாங்கம் இந்த நாட்டை எப்படி ஆளப் போகின்றது என்பதை காட்டுகின்றன. அரசாங்கம் பொன்சேகாவை
போலி காரணங்களுக்காக கைது செய்தது. அவர்கள் பலாத்காரமாக வாக்குகளைப் பெற முயல்கின்றனர். நான்
கண்டனத்தை வெளிப்படுத்த ஐ.தே.மு. வுக்கு வாக்களித்தேன். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால்
வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடையும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது," என அவர் தெரிவித்தார்.
கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகமவைச் சேர்ந்த இரு பஸ் சாரதிகள்,
தாம் இன்னமும் வாக்களிக்கவில்லை எனத் தெரிவித்தனர். "யாருக்கும் வாக்களித்து பயனில்லை என்பதால் நாம்
வாக்களிப்பதில் அக்கறை காட்டவில்லை. நாங்கள் வாழ்வதற்கு பெரும் போராட்டம் நடத்துகிறோம். எங்களுக்கு
ஒரு நாளைக்கு 1,700 ரூபாதான் [15 அமெரிக்க டொலர்கள்] கிடைக்கின்றன. ஆனால் எங்களால் வாரம் ஏழு
நாட்கள் வேலை செய்ய முடியாது. இந்தத் தொழில் அதிகம் களைப்பான தொழில். எனவே நாங்கள் ஒரு வாரத்தில்
நான்கு நாட்கள்தான் வேலை செய்வோம். எங்களது தொழில் ஸ்திரமற்றது.
"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி புலிகளை தோற்கடித்து யுத்தத்தை முடித்ததினால்
சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தோம். யுத்தம் முடிவடைந்தது ஒரு நிவாரணமாக இருந்தாலும், நாட்டின்
பொருளாதாரம் முன்னேற்றமடையும் என நாம் நினைக்கவில்லை," என ஒருவர் குறிப்பிட்டார்.
ஹோமாகமவில் உள்ள கட்டுமான தொழிற் பேட்டையில் ஒரு தொழிலாளி வாக்களிக்காமல்
இருக்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார்: "நான் எம்பிலிபிட்டியவைச் சேர்ந்தவன். நான் வாக்களிக்க சென்றால்
அதற்கு போக்குவரத்துக்கு 1,000 செலவாகும். யாருக்கும் வாக்களித்து பயனில்லாததால் அவ்வளவு பணத்தை செலவிடுவது
அர்த்தமற்றது என நான் நினைக்கிறேன். இந்த கைத்தொழில் பேட்டையைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் வாக்களிக்க
செல்லவில்லை. பிரயோசனமில்லாத வாக்களிப்பு ஏன் என்றே என்னைப் போல் இதர தொழிலாளர்களும் சிந்திக்கின்றார்கள்."
இதே பிரதேசத்தை சேர்ந்த இளம் கட்டுமான தொழிலாளர்கள், இந்தத் தேர்தல்
மோசடியானது எனத் தெரிவித்தனர். சகல அரசியல் கட்சிகள் மீதான தனது அதிருப்தியை ஒரு இளைஞர்
வெளிப்படுத்தினார்: "வறியவர்களின் வாக்குகளைப் பெறவேண்டியுள்ளதால் தேர்தல் காலத்தில் அவர்களுக்கு ஏதாவது
ஒன்றை விநியோகிப்பதோடு சகல வேட்பாளர்களும் பில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிடுகின்றனர்.
அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால், மக்கள் மீதான தாக்குதல்
நிச்சயமாக அதிகரிப்பதோடு, பொருள் விலை நிச்சயமாக மேலும் உயரும்."