சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஏப்பிரல் 8 நடக்கவுள்ள
பொதுத் தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக மார்ச் 21 அன்று யுத்தத்தில் சீரழிக்கப்பட்ட
யாழ்ப்பாண நகரத்தில் ஒரு முக்கியமான பொதுக் கூட்டத்தை நடத்தியது. யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை,
புங்குடுதீவு, வட்டுக்கோட்டை மற்றும் நல்லூரில் இருந்து தொழிலாளர்கள், மாணவர்கள், குடும்பப் பெண்கள் மற்றும்
இளைஞர்களுமாக சுமார் 100 பேர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
நாடு பூராவும் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஒரு அங்கமாகவே இந்தக்
கூட்டம் நடந்தது. தீவின் வடக்கில் யாழ்ப்பாணம், பெருந்தோட்டப் பிரதேசத்தில் நுவரெலியா, தலைநகர்
கொழும்பு மற்றும் தெற்கில் காலி ஆகிய நான்கு மாவட்டங்களில் 58 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணக் கூட்டத்துக்காக சோ.ச.க. குழு யாழ்ப்பாணம்,
வட்டுக்கோட்டை, ஊர்கவாற்துறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கோப்பாய் போன்ற பல பிரதேசங்களில்
பிரச்சாரம் செய்திருந்தது. இந்தக் குழு கட்சியின் தேர்தல் அறிக்கையில் சுமார் 7,000 பிரதிகளையும் உலக
சோசலிச வலைத் தள கட்டுரைகளையும் விநியோகித்திருந்தது. காரைநகர் மற்றும் திருநெல்வேலியில் மேலும் இரு
கூட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.
T.
சந்திரசேகரன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்பாளர்களுக்குத் தலைமை வகிக்கும்
டி. சந்திரசேகரன் கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போது, "ஜனாதிபதி இராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடத்தினார். இப்போது அவர் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு
தனது கட்சிக்கான பலத்தை அதிகரிக்கவும் முயற்சிக்கின்றார். ஆனால் அவர் வரவு செலவுத் திட்டத்தை ஒத்தி
வைத்துள்ளார். காரணம் அவர் உழைக்கும் மக்களுக்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளை தயாரிக்கின்றார். அவர்
எந்தவொரு எதிர்ப்பின் மீதும் பொலிஸ் அடக்குமுறையை பிரயோகிப்பார். இந்த அச்சுறுத்தல்களை சந்திக்க உழைக்கும்
மக்கள் தயாராக வேண்டும்," என எச்சரித்தார்.
தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதன் பேரில் 1948ல் இருந்தே தமிழர்களுக்கு
எதிரான இனவாத பாரபட்சங்களை கொழும்பு ஆளும் தட்டு பயன்படுத்தி வந்துள்ளது என சந்திரசேகரன் விளக்கினார்.
1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தை மேற்கோள் காட்டிய சந்திரசேகரன், இந்த பாரபட்சங்களுக்கு எதிராக
தனது சொந்த தனியான முதலாளித்துவ அரசை கோருவதற்கே தமிழ் முதலாளித்துவம் நடவடிக்கை எடுத்தது என
விளக்கினார்.
"இதுவே தமிழீழ விடுதலைப் புலிகளதும் வேலைத் திட்டமாகும். இதை
அடைவதற்காக புலிகள் இந்திய அராசங்கத்தின் உதவியை நாடிய போதிலும் அது தோல்விகண்டது. புலிகள் தோல்விகண்டதில்
இருந்தே, அதன் ஊதுகுழலாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு தமிழ் அதிகாரப்
பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள ஆதரவளிக்குமாறு புது டில்லிக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றது."
இந்த முதலாளித்துவ போக்குக்கு எதிராக, ஒரு சோசலிச புரட்சியின் ஊடாக மட்டுமே தமிழ் வெகுஜனங்களால்
தமது ஜனநாயக உரிமைகளை காக்க முடியும் என சோ.ச.க. வலியுறுத்தியது என சந்திரசேகரன் விளக்கினார்.
நாட்டில் நீண்டகாலம் நிலவிய உள்நாட்டு யுத்தம் மற்றும் உலக நிதி
நெருக்கடியின் காரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றது என
சோ.ச.க. உறுப்பினர் கலா தெரிவித்தார். "உழைக்கும் மக்கள் வறுமையை எதிர்கொள்கின்றனர். அநேக இளைஞர்களுக்கு
தொழில் கிடையாது. மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்," என அவர்
மேலும் கூறினார்.
"மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமது பிரச்சினைக்கு தனியாக
தீர்வு தேட முடியாது. அவர்கள் தமது உரிமைகளுக்காகப் போராட தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட
வேண்டும். அவர்களது உரிமைகளுக்காகப் போராடுவதன் பேரில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் தேவைக்காக
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல் ரீதியில் கல்வியூட்டவே நாம் இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகிறோம்,"
என அவர் விளக்கினார்.
தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் புத்திஜீவிகள் மட்டுமல்ல உலகம்
பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் புலிகளின் தோல்வியில் இருந்து அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும் என
சோ.ச.க. யின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எம். தேவராஜா வலியிறுத்தினார். "புலிகளின் இராணுவத்
தோல்வியானது அவர்களின் பிரிவினைவாத மற்றும் இனவாத முன்நோக்கின் திவாலைக் குறிக்கின்றது. அவர்கள் தமிழ்
முதலாளித்துவ தட்டின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். தனது சொந்த முதலாளித்துவ அரசுக்கான
கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வதன் பேரில், புலிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட
பெரும் வல்லரசுகளதும் இந்தியாவினதும் உதவியைப் பெற முயற்சித்தனர்.
"இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் யுத்தத்தை தொடங்கிய போதும்,
புலிகள் அந்த சக்திகளின் பக்கமே திரும்பினர். ஆனால் அந்த அனைத்து சக்திகளும், 'பயங்கரவாதத்தை தோற்கடிப்பதன்'
பெயரில் கொழும்பு அர்சாங்கத்தை ஆதரித்தன. இலங்கையில் தமிழர் விரோத பாகுபாடுகளுக்கு எதிராக சிங்கள
தொழிலாளர்களின் அல்லது இந்திய அல்லது சர்வதேச தொழிலாளர்களின் ஆதரவை ஒரு போதும் புலிகள் கோரியதில்லை.
சிங்கள வறிய மக்கள் மீதான புலிகளின் பயங்கரவாத தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் கொழும்பு
அரசாங்கத்தின் முயற்சிக்கே உதவியது."
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற
எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு உட்பட தமிழ் அரசியல் கட்சிகள், வேறு வடிவங்களில் புலிகளின்
அரசியலையே தொடர்கின்றன என தேவராஜா தெரிவித்தார். "தொழிலாள வர்க்கத்தின் வேலைத்திட்டம், லியோன்
ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டமாகும். அதாவது தொழிலாள வர்க்கத்தின் தலைமையின்
கீழ் முன்னெடுக்கப்படும் ஒரு சோசலிச புரட்சியின் மூலம் மட்டுமே ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகளைத்
தீர்க்க முடியும் என்பதாகும். இது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை, இந்திய மற்றும் அனைத்துலக
தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுத்துவை அர்த்தப்படுத்துகிறது."
நந்த விக்கிரமசிங்க உரையாற்றுகிறார்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கொழும்பு அரசாங்கங்களால்
முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான உலக முதலாளித்துவ
வரலாற்றில் மிகவும் கொடூரமான பகுதியாகும் என விளக்கிய யாழ் மாவட்ட வேட்பாளர் நந்த விக்கிரமசிங்க உரையை
தொடர்ந்தார்.
75,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதோடு,
பத்தாயிரக் கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வெளிநாட்டில்
அகதிகளாக வாழ்கின்றார்கள். வடக்கில் வன்னிப் பிரதேசத்தில் முழு ஜனத்தொகையும் இடம்பெயர்ந்துள்ளது. அரசாங்கம்
இப்போது இந்தப் பிரதேசங்களில் 147 நிரந்தர இராணுவ முகாங்களை அமைக்க தயாராகின்றது. யுத்தத்தில்
தனிப்பட்ட இழப்புக்களை கொண்ட துன்பகரமான அனுபவத்தை பெறாத எவரும் இங்கு கிடையாது.
"புலிகளை கொடூரமாக நசுக்கிய பின்னர், கொழும்பு அரசாங்கம்
இப்போது ஒரு 'பொருளாதார யுத்தத்துக்கு' அழைப்பு விடுக்கின்றது. இதற்குப் பின்னால் ஒரு கடன் மலையே உள்ளது.
அது 4.1 ரில்லியன் ரூபாய்கள் [36 பில்லியன் அமெரிக்க டொலர்கள்] அல்லது 2009ம் ஆண்டு மொத்த தேசிய
உற்பத்தியில் 86.3 வீதமாகும். 2009ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 9.7 வீதம் வரை உயர்ந்தது. கடன்களோடு சம்பந்தப்பட்ட செலவுகள் கடந்த ஆண்டு மொத்த அரசாங்க
செலவில் 35 வீதத்தை விழுங்கிவிட்டதோடு இராணுவச் செலவு மேலும் 21 வீதத்தை விழுங்கிவிட்டது."
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை வெட்டிக் குறைப்பதன் பேரில்
சிக்கன நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் கோருகிறது என விக்கிரமசிங்க விளக்கினார். தேர்தலின் பின்னர்
அரசாங்கம் சம்பளத்தை வெட்டுவதோடு விவசாயிகளுக்கு மானியங்களை குறைத்து, இலவச கல்வி மற்றும்
சுகாதாரத்தை சீரழியச்செய்வதோடு வரிகளையும் உயர்த்தும், என விக்கிரமசிங்க தெரிவித்தார். ஏற்கனவே வறுமையில்
உள்ள வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது குறுகிய காலத்தில் அது முன்னெப்போதும் இல்லாத தாக்குதலைத்
தொடுக்கும்.
1976ல் வட மாகாணத்துக்கு பெருந்தொகையான துருப்புக்களை
அரசாங்கம் அனுப்பிய போது, சோ.ச.க. யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், "முதலாளித்துவ
யுத்தத்துக்கு ஒரு ஆளோ ஒரு சதமோ கொடாதே!" என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் மத்தியில் எழுப்பியது,
என அவர் கூறினார். "அப்போதிருந்தே, நாம் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி
திருப்பியழைக்குமாறு கோருகின்றோம். அந்தக் கோரிக்கையை நாம் தொடர்ந்தும் முன்வைக்கின்றோம்," என விக்கிரமசிங்க
வலியுறுத்தினார்.
இலங்கை சர்வதேச வங்கிளுக்கு வழங்க வேண்டிய கடன் இரத்துச் செய்யப்பட
வேண்டும், மற்றும் இது சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்திற்க்கான போரட்டத்தின் பாகமாகும் என விக்கிரமசிங்க
தெரிவித்தார். தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளின் பூகோள பண்பை பற்றி கவனத்தை திருப்பிய
அவர் தெரிவித்ததாவது: "இலங்கையில் விரிவடைய அச்சுறுத்தும் கடன் நெருக்கடி, வெறுமனே ஒரு தேசிய நிகழ்வு
அல்ல. கிரேக்க கடன் நெருக்கடியானது 2008ல் அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவுடன்
வெடித்த பூகோள பொருளாதார பின்னடைவின் புதிய கட்டத்தை குறிக்கின்றது. முழுமையான நிதிப் பொறிவை தவிர்ப்பதற்காக
உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் கடனில் மூழ்கியுள்ள வங்கிகளுக்கு ரில்லியன் கணக்கில் பணம் கொடுத்து பிணை
எடுத்துள்ளன. இப்போது கிரேக்க அரசாங்கம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமூக சேவைகளில் முன்னெப்போதும்
இல்லாத வெட்டுக்களை திணிக்கின்றது."
அரசாங்கங்களின் மற்றும் முதலாளிமாரின் தாக்குதல்களுக்கு எதிராக
கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் ஐரோப்பா பூராவும் நடத்தப்படும் வேலை நிறுத்தங்களை சுட்டிக்
காட்டிய விக்கிரமசிங்க, முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியின் சூழ்நிலையில் தொழிலாள வர்க்கப்
போராட்டத்தின் புதிய காலகட்டம் தொடங்கியுள்ளது என விளக்கினார். தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவ
நெருக்கடியை தீர்ப்பதற்கு, சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவை கட்டியெழுப்புவது அவசரமான பணியாகும். இந்தப் போராட்டத்தின் பாகமாக, இலங்கையில்
சோ.ச.க., ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு மற்றும் தெற்காசியா மற்றும உலகம் பூராவும் சோசலிச
குடியரசுகளின் வடிவில் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்கான முன்னோக்கை அபிவிருத்தி செய்கின்றது.
கூட்டத்தின் பின்னர், அதில் பங்குபற்றிய பலர் உலக சோசலிச வலைத்
தளத்துடன் உரையாடினர்.