World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: The TNA and the program of "self determination"

இலங்கை: தமிழ் தேசிய கூட்டமைப்பும் "சுயநிர்ணய உரிமை" வேலைத்திட்டமும்

By Wije Dias
2 April 2010

Back to screen version

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏப்பிரல் 8 இல் இலங்கையில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. இந்த விஞ்ஞாபனம், 26 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர், கடந்த மே மாதம் இலங்கை இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எப்படி? என்ற தெளிவான கேள்விக்கு பதிலளிப்பது ஒருபுறம் இருக்க, அந்தக் கேள்வியை எழுப்பவேயில்லை.

2001ல் பல தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் கலவையாக ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, கடந்த எட்டு ஆண்டுகளாக, "தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்" என்ற புலிகளின் போலி உரிமை கோரலை ஏற்றுக்கொண்டு, புலிகளின் விசுவாசமான ஊதுகுழலாக இயங்கி வந்தது. மேலும், கூட்டமைப்பின் நீண்ட விஞ்ஞாபனம், யுத்தத்தால் 75,000 உயிர்கள் பலியானதாகவும் பெருந்தொகையானவர்கள் நிரந்தர அகதிகளாக்கப்பட்டதாகவும் மற்றும் வடக்கு கிழக்கில் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும் வெறுமனே குறிப்பிடுகின்றது. இராணுவத்தின் கடைசி தாக்குதல்கள் பற்றிய அதன் சுருக்க குறிப்பு, இலங்கையில் புலிகள் இனிமேலும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் அல்லது இராணுவ சக்தியாக இல்லை என்ற உண்மையை குறிப்பிடவில்லை.

கடந்த மே மாதம் நிலைமை என்னவாக இருந்தது? ஜனவரியில் தமது நிர்வாக மையமான கிளிநொச்சியில் இருந்து விரட்டப்பட்ட புலிகள், தீவின் வடகிழக்கில் ஒரு சிறிய நிலத்துண்டுக்குள் தள்ளப்பட்டனர். இங்கு ஆட்டிலறித் தாக்குதல்களும் விமானக் குண்டுகளும் பொழியப்பட்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு, புலிகளின் எதிர்த் தாக்குதல் சிதறடிக்கப்பட்டதோடு புலிகளின் உயர் தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை முகாங்களுக்குள் தடுத்து வைத்திருந்ததோடு இன்னமும் அங்கு 100,000 பேர் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் "பயங்கரவாத சந்தேக நபர்களாக" இரகசிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் மதிப்பிழந்த முடிவு, அடிப்படையில் ஒரு இராணுவத் தோல்வியல்ல. மாறாக அது புலிகளின் அரசியல் திவாலின் விளைவாகும். ஒரு குறுகிய கரையோரப் பகுதிக்குள் சிக்கிக்கொண்ட புலிகள், தீவின் தமிழ் சிறுபான்மையினரில் பெரும் பகுதியினரின் செயலூக்கமான ஆதரவை இழந்தனர். உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, இலங்கையில் அல்லது அயலில் இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கக்கூட புலிகளின் தலைவர்கள் இயல்பாகவே இலாயக்கற்றிருந்தனர். அதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் உதவியளித்த இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் உட்பட "சர்வதேச சமூகம்" என சொல்லப்படுவதற்கு, மோதல்களை நிறுத்துமாறு அற்ப வேண்டுகோள் விடுக்குமளவுக்கு புலிகள் இறங்கி வந்திருந்தனர்.

இந்தத் தோல்வி, புலிகளின் "சுயநிர்ணய உரிமை" வேலைத்திட்டம் என்ற அரசியல் தர்க்கத்தில் இருந்து தோன்றியதாகும். ஈழம் என்ற தமிழ் முதலாளித்துவ தனி அரசு என்ற வடிவத்திலும் சரி, அல்லது முதலாளித்துவ இலங்கைக்குள் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு தமிழ் சுயாட்சி என்ற வேலைத்திட்டத்திலும் சரி, புலிகளின் அடிப்படை கோரிக்கை தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்ததே அன்றி, தமிழ் வெகுஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. உழைக்கும் மக்களுக்கு இத்தகைய அழிவை ஏற்படுத்திய அதே முன்நோக்குடன் தொடர்வதன் காரணமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பால் இத்தகைய பிரச்சினைகளைக் கூட அணுகமுடியவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி 1976ல் ஒரு தனியான ஈழத்தை முதலில் பரிந்துரைத்த போது, இந்தக் கோரிக்கை தமிழர்களுக்கு எதிரான தசாப்தகால உத்தியோகபூர்வ பாகுபாடுகளின் பின்னர், தமிழ் உயர்தட்டுக்களின் அதிருப்தியை பிரதிபலித்தது. பாராளுமன்றத்தில் திறமையைக் கையாளுவதன் ஊடாக தமது இலக்கை அடைவதில் தமிழர் விடுதலைக் கூட்டணி கண்ட வெறுக்கத்தக்க தோல்விக்கு பதிலிறுப்பாக புலிகளும் மற்றும் ஏனைய குழுக்களும் தோன்றின. சோசலிசக் கருத்துக்களை உச்சாடனம் செய்த அதே வேளை, இந்த சகல குழுக்களும், தமிழர்களுக்கு ஒரு தனியான முதலாளித்துவ அரசு என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவ வேலைத்திட்டத்தையே தமது கெரில்லாப் போராட்டத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம், "ஆரம்பத்தில் பல இராணுவக் குழுக்கள் இருந்தாலும், 1987ல் இருந்து, தமிழர்களுக்கு ஒரு தனியான தாய்நாட்டுக்காக போராடிய ஒரே இராணுவக் குழுவாக புலிகளே தோன்றியிருந்தனர்," என மென்மையாக பிரகடனம் செய்தது. இங்கு கூட்டமைப்பு தெளிவுபடுத்தாமல் ஒதுக்கியிருப்பது என்னவெனில், புலிகள் தமது போட்டியாளர்களை ஈவிரக்கமின்றி நசுக்கியதன் மூலமே முன்னணிக்கு வந்தனர் என்ற விடயத்தையே ஆகும். புலிகளின் வரலாறு பூராவும், தமது எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் மற்றும் படுகொலை செய்வதன் மூலமே "தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்" என்ற தமது உரிமை கோரலை அமுல்படுத்தினர். மேலும் மேலும் புலிகளின் வரி விதிப்புக்கள், பலவந்தமான ஆள் சேர்ப்பு மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் தமிழ் வெகுஜனங்களில் பெரும் பகுதியினரை தனிமைப்படுத்தியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், வடக்கும் கிழக்கும் ஒரு வரலாற்று தாயக அலகாகும் என புலிகளும் வலியுறுத்தினர். யுத்தத்தை சிங்கள மக்களுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டம் என்ற இனவாத பதத்தில் நோக்கிய புலிகள், ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் செய்த குற்றங்களுக்கு சாதாரண சிங்கள மக்களை குற்றஞ்சாட்டினர். 1990களில், தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் சகலரையும், இலங்கை இராணுவத்தின் ஒற்றர்கள் எனக் கூறி அவர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டே புலிகள் வெளியேற்றினர். மத்திய வங்கி, ரயில்பாதைகள் மற்றும் பஸ்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் உட்பட சிங்கள பொது மக்கள் மீதான அவர்களின் கண்மூடித்தனமான தாக்குதல்கள், சிங்கள அதி தீவிரவாதிகளின் தேவைகளுக்கே பயன்பட்டதோடு தீவில் இனவாத பிளவுகளை மேலும் ஆழப்படுத்தியது.

2009 மே மாதம், "சர்வதேச சமூகத்துக்கு" புலிகள் அழைப்பு விடுத்தமையானது, தனியான ஈழத்துக்கான அவர்களின் வேலைத்திட்டம் எப்பொழுதும் ஏதாவதொரு பெரும் வல்லரசின் அல்லது பிராந்திய வல்லரசின் ஆதரவை பெறுவதை அடிப்படையாகக் கொண்டது என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகிறது. தமிழ் கூட்டமைப்பு குறிப்பிடுவதாவது 1987ம் ஆண்டிலேயே இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு தீவின் வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமிக்க சமாதானப் படை என சொல்லப்படுவதை இந்தியா அனுப்பிவைத்தது.

இந்தியாவின் தலையீடானது, துணைக் கண்டத்தில் ஸ்திரப்பாட்டை அச்சுறுத்தும் மோதல்களுக்கு ஒரு முடிவுகட்டவே அன்றி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அல்ல. எவ்வாறெனினும், இந்திய-இலங்கை உடன்படிக்கையில் நம்பிக்கை வைத்து "அமைதிப் படையை" வரவேற்குமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்த புலிகள், இந்திய இராணுவமானது தமிழ் போராளிக் குழுக்களை பலவந்தமாக நிராயுதபாணியாக்க முயற்சித்த போது அவர்களுக்கு எதிராகத் திரும்பினர். இந்திய இராணுவத்துக்கு எதிராகப் போராட, தனது முதன்மை எதிரியான கொழும்பு அரசாங்கத்தில் புலிகள் தங்கியிருந்தனர். ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் கொழும்பு அரசாங்கம், தனது சொந்த வகுப்புவாத தேவைகளுக்காக புலிகளுக்கு இராணுவ உதவி செய்தது.

இந்த சம்பவத்தில் இருந்து அரசியல் முடிவுகளைப் பெறாத புலிகள், 1991ல் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததன் மூலம் இந்திய அரசாங்கத்தின் மேல் தாக்குதல் தொடுத்தனர். பின்னர் ஒரு பெரும் தவறாக புலிகளினால் அடையாளம் காணப்பட்ட இந்தப் படுகொலை, சர்வதேச ரீதியில் புலிகளின் நிலையை மேலும் பலவீனப்படுத்தியது. இந்தியா புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு தென் மாநிலமான தமிழ் நாட்டில் புலிகளின் ஆதரவாளர்களை அடக்கியது.

குளிர் யுத்தத்தின் முடிவைத் தொடர்ந்து சர்வதேச உறவில் ஏற்பட்ட மாற்றங்களால் புலிகள் தயாரின்றி இதற்குள் அகப்பட்டுக் கொண்டனர். மத்திய கிழக்கில் பலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்று, புலிகளும் தமது சோசலிச வாய்வீச்சுக்களை கைவிட்டு, திறந்த பொருளாதார கொள்கையை பகிரங்கமாக அணைத்துக்கொள்வதன் மூலம் பிரதிபலித்த புலிகள், ஏகாதிபத்தியத்திடம் ஒரு அனுசரணையை எதிர்பார்த்தனர்.

2001 செப்டெம்பர் 11ன் பின்னர், அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" இலக்காகிவிடாமல் தவிர்த்துக்கொள்ள திட்டமிட்ட புலிகள், பிரதான ஏகாதிபத்திய சக்திகளால் அனுசரனை வழங்கப்பட்ட "சமாதான முன்னெடுப்புகளில்" விரைவில் இணைந்துகொள்வதற்காக, சுதந்திர ஈழம் என்ற தமது கோரிக்கையை கைவிட்டு 2002ல் யுத்த நிறுத்தமொன்றில் கைச்சாத்திட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் முழுமையாக ஆதரித்த இந்தப் பேச்சுவார்த்தைகள், எந்தவொரு தீர்விலும் புலிகளுக்கு ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரத்தை மட்டுமே அமெரிக்காவும் இந்தியாவும் அனுமதிக்க விரும்புகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட போது, விரைவில் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. 2004ல், வடக்குக்கு எதிராக கிழக்கின் சொந்த "சுயநிர்ணய உரிமையை" தூக்கிப்பிடித்துக்கொண்டு, புலிகளின் கிழக்கு இராணுவப் பிரிவு பிரிந்து சென்ற போது, அவர்கள் தம்மை மேலும் பலவீனமாக்கும் பிளவை சந்தித்தனர்.

2006ல் ஜனாதிபதி இராஜபக்ஷ மீண்டும் தீவை யுத்தத்துக்குள் தள்ளிய போது, முழு "சர்வதேச சமூகமும்", அவர் 2002 யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக மீறியதைப் பற்றியும் ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதைப் பற்றியும் கண்டும் காணாதது போல் இருந்தது. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் இந்தியா உட்பட சகல நாடுகளும் இலங்கை இராணுவத்துக்கு ஆயுத தளபாட உதவிகள் செய்தன. வாஷிங்டனின் பலத்தை பயன்படுத்தி, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளை ஒரு "பயங்கரவாத அமைப்பாக" பிரகடனம் செய்து, தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து அவர்களுக்கு கிடைத்த இன்றியமையாத நிதி மற்றும் அரசியல் ஆதரவு தடைக்குள்ளாக்கப்பட்டன. தமக்கு கிடைத்த ஆதரவு சுருங்கிய நிலையில், மேலும் மேலும் நிர்ப்பந்த வழிமுறையை நாடிய புலிகள், தமது கட்டுப்பட்டுப் பிரதேசத்தில் இருந்த தமிழ் பொதுமக்களை மேலும் தனிமைப்படுத்தினர். 2009ல் புலிகளின் இராணுவத் தோல்வியானது அவர்கள் அரசியல் ரீதியில் தனிமைப்பட்டதன் இறுதி விளைவாகும்.

புலிகளின் தோல்வியை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துள் மீண்டும் நுழைந்துகொள்ள முயற்சிக்கின்றது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்காக பிரிந்து சென்றுவிட்டனர். ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளரான, 2006 மற்றும் 2009க்கும் இடையில் புலிகளுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை முன்னெடுத்தமைக்குப் பொறுப்பாளியான ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்தது. இந்த உண்மையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் ஓரங்கட்டியிருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல. இரு பிரிவினரும் கூட்டமைப்பை விமர்சித்து வெளியேறிய போதிலும், இந்த பலவித கோஷ்டிகளில் சகலரும், "சுயநிர்ணயத்தையே" தமது வேலைத்திட்டத்தின் அடித்தளமாகக் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளின் ஆயுதப் போராட்டத்தை அமைதியான எதிர்ப்பு மற்றும் பாராளுமன்றத்தில் திறமையைக் கையாளுதல் போன்றவற்றை பிரேரிப்பதன் மூலம் பதிலீடு செய்துள்ளது. "தமிழ் மக்களுக்கு எதிரான இவ் இன ஒழிப்புத்திட்டம் பற்றி உரிய பார்வையைச் செலுத்தி பொருத்தமானதும் தாக்கமானதுமான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்துவதற்காக இந்த விடயத்தை இந்தியாவுக்கும் மற்றும் சர்வதேச சமூகத்துக்கும் நேரடியாக எடுத்துச் செல்லுவோம்" என அதன் விஞ்ஞாபனம் பிரகடனம் செய்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சுயாட்சி என்ற அதன் முன்நோக்கு, நேரடி முதலீடுகள் சம்பந்தமான அதிகாரத்தையும் உள்ளடக்கியுள்ளதோடு பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதற்காக தமிழ் வர்த்தகர்கள் இலங்கைக்குத் திரும்பவேண்டும் என்ற வேண்டுகோளையும் உள்ளடக்கியுள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த விஞ்ஞாபனம் சாதாரணமாக ஒரு தந்திரோபாய மாற்றத்தை எடுப்பதோடு 1970களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேலைத்திட்டத்தின் பக்கம் திரும்புகிறது.

ஒட்டுமொத்த இலங்கை தொழிலாள வர்க்கமும் பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடனேயே, ஜனாதிபதி இராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தொடங்குவார். இது வாழ்க்கைத் தரத்தை அழிவுகரமாக வீழ்ச்சியடையச் செய்யும். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவர் பயன்படுத்திய சகல பொலிஸ்-அரச வழிமுறைகளும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்க பயன்படுத்தப்படும். தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்த் தாக்குதலுக்கும் தேவையான இன்றியமையாத முன்நிபந்தனை எதுவெனில், அவர்கள் ஐக்கியப்பட்டிருப்பதே --அதாவது, தொழிலாளர்கள் தம்மை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த சேவை செய்யும் சகல விதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை நிராகரிக்க வேண்டும்.

தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்தவரையில், முதலாளித்துவ வேலைத்திட்டமான தமிழ் தேசிய சுயநிர்ணயத்தை தீர்க்கமாக நிராகரிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. சுதந்திரத்தின் பின்னர் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இன்றியமையாத ஜனநாயகக் கடமைகளை முன்னெடுப்பதற்கு ஒட்டு மொத்த இலங்கை முதலாளித்துவமும் இலாயக்கற்றது என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளதோடு அது இனவாதம் மற்றும் வன்முறைகள் ஊடாகவே ஆட்சியை பேணிக்காத்து வருகின்றது. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது சகல உழைக்கும் மக்களும் எதிர்கொள்ளும் ஒரு வர்க்கப் பிரச்சினையாகும். மற்றும் இலாப முறையை தூக்கிவீச ஐக்கியப்பட்டுப் போராடுவதன் மூலம் மட்டுமே அதன் ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும். இந்த முன்நோக்கில் வழிநடத்தப்படும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. அது தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிக்கப் போராடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved