World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The international significance of the Sri Lankan election

இலங்கை தேர்தலின் அனைத்துலக முக்கியத்துவம்

K. Ratnayake
6 April 2010

Back to screen version

இலங்கையில் ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பொதுத் தேர்தலின் உடனடி முடிவு என்னவாக இருந்தாலும், அது ஒரு திருப்பு முனையை குறிக்கும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஒரு "பலமான அரசாங்கத்துக்காக" பிரச்சாரம் செய்கின்றார். அத்தகைய அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்தவும், நாட்டின் கால் நூற்றாண்டுகால உள்நாட்டு யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச இயந்திரத்தை பயன்படுத்தவும் முயற்சிக்கும்.

உலகம் பூராவும் உள்ள ஆளும் தட்டுகளின் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு முன்னேற்றமான வெளிப்பாடே இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களாகும். 2008ல் வெடித்த பூகோள நிதி நெருக்கடிக்கு பிரதிபலித்த அரசாங்கங்கள், ரில்லியன் கணக்கான டொலர்கள் கடன்களை வாங்கி, அதை பொதுக் கணக்கில் எழுதி வைத்துள்ளன. இப்போது அந்தக் கடன்கள் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கறக்கப்படவுள்ளன. பொதுச் சேவைகளை கலைக்கவும் தொழில் மற்றும் ஊதியங்களை வெட்டிக் குறைக்கவும் மற்றும் வரிகளை உயர்த்தவும் ஒரு பரீட்சார்த்தக் களமாக இப்போது கிரேக்கம் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை ஜனநாயக முறையில் முன்னெடுக்க முடியாது என்பதற்கு இலங்கை ஒரு எச்சரிக்கையாகும்.

கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த அரசாங்கத்தின் யுத்தத்தால் இலங்கையின் பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. பூகோள பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு நாட்டின் ஏற்றுமதியை பாதித்ததோடு, இராஜபக்ஷ தனது யுத்தத்துக்கு செலவிடுவதற்காக பெருந்தொகை கடன் வாங்கினார். கடந்த ஜூலையில் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்ட அவர், 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனாகப் பெறத் தள்ளப்பட்டார்.

வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்காமல் நான்கு மாதங்கள் தாமதித்த அரசாங்கம், 2011ல் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் வழியில் ஒரு வரவு செலவுத் திட்டத்தை கொண்டுவரத் தள்ளப்படும். அரசாங்கத்தின் செலவுகளில் முக்கால் பகுதி ஏற்கனவே கடன் பிரச்சினையை தீர்க்க செலவிடப்பட்டுள்ளது. மேலும் 21 வீதம், இராஜபக்ஷ கலைக்க விரும்பாத இராணுவச் செலவுக்கு செலவிடப்படுகின்றது. ஜனத்தொகையில் அறுவரில் ஒருவர் ஏற்கனவே மாதம் 27 அமெரிக்க டொலர்கள் என்ற உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது என்பதன் அர்த்தம், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை பெருமளவில் சிதைப்பதாகும்.

அரசாங்கம் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு எதிர்ப்பையும் சட்டவிரோதமானதாக கருதுகிறது. பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய இராஜபக்ஷ, "அடுத்த பாராளுமன்றம் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முன்னிலைப்படுத்தும் அரசியல் கட்சிகளை தடைசெய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்", என சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார். இத்தகைய தடை, ஆரம்பத்தில் தமிழ் பிரிவினைவாதம் அல்லது சுயாட்சியை பரிந்துரைக்கும் கட்சிகளை இலக்கு வைக்கும் அதே வேளை, அரசாங்கமானது எதிர்க் கட்சிகள் நாட்டுக்கு எதிரான "சர்வதேச சூழ்ச்சியின்" ஒரு பாகமாக இருப்பதாக மிகப் பரந்தளவில் குற்றஞ்சாட்டி வருகின்றது.

ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், அரசாங்கமானது எதிர்க்கட்சி வேட்பாளரும் ஓய்வுபெற்ற ஜெனரலுமான சரத் பொன்சேகாவும் அவரது டசின் கணக்கான ஆதரவாளர்களும் சதிப் புரட்சி ஒன்றை திட்டமிட்டார்கள் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்களை கைது செய்தது. கடந்த இரு மாதங்களில், எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது "காணாமல் ஆக்கப்பட்டனர்", வலைத் தளங்கள் தடுக்கப்பட்டன மற்றும் எதிர்க்கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தவர்கள் தாக்கப்பட்டனர். இந்த ஜனநாயக-விரோத வழிமுறைகள் யுத்தத்தையும் இராஜபக்ஷவின் சந்தை-சார்பு வேலைத் திட்டத்தையும் ஆதரித்த முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் மீது அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்டதல்ல. மாறாக, அவை தொழிலாள வர்க்கத்துடன் மோதிக்கொள்வதற்கான தயாரிப்பாகும்.

இராஜபக்ஷ தனது செயலாட்சியில் பெருந்தொகை அதிகாரங்களை கொண்டுள்ளார். தற்போதைய அரசியலமைப்பின் கீழ், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அமைச்சரவை பதவிகளை வகிக்க முடியும், அரசாங்கத்தை பதவி விலக்க முடியும், பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க முடியும் மற்றும் தேர்தலுக்கும் அழைப்பு விடுக்கவும் முடியும். எதிர்க்கட்சிகள் பாராளுமன்றப் பெரும்பான்மை ஒன்றைப் பெற்றாலும், இராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டை கைவிடுவார் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. கடந்த நான்கு ஆண்டுகளாக, அவர் உறவினர்கள், ஜெனரல்கள் மற்றும் நெருங்கிய ஆலோசகர்கள் அடங்கிய ஒரு ஜனாதிபதி குழு ஊடாக விளைபயனுடன் ஆட்சி செய்தார். இந்தக் குழு மேலும் மேலும் அரசியலமைப்பையும் நீதிமன்றத்தையும் மற்றும் சட்ட முறைமையையும் அலட்சியம் செய்து வந்தது. இப்போது ஆளும் கூட்டணியானது தான் விரும்பியவாறு அரசியலமைப்பை மாற்றக் கூடிய வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காகப் பிரச்சாரம் செய்கின்றது.

இராஜபக்ஷ விசாரணையின்றி தடுத்து வைக்கவும், ஊடக தணிக்கையை திணிக்கவும் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தடை செய்யவும் அனுமதிக்கும் அவசரகாலச் சட்டத்தை அமுலில் வைத்துள்ளார். ஆயிரக்கணக்கானவர்கள் ''விடுதலைப் புலிகளின் சந்தேகத்தின்'' பேரில் தற்போது அவசரகால விதிகள் மற்றும் அதோடு இணைந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், குற்றம் சுமத்தப்படாமல் மற்றும் தண்டனை வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபரில் துறைமுகம், மின்சார சபை, நீர்வழங்கல் சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலும் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் எடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை தடை செய்ய அவர் தனது அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தினார். கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு அல்லது "காணாமல் ஆக்கப்பட்டதோடு", இதற்காக எவர் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்ற உண்மை, தொழிலாள வர்க்கத்துக்கு கிடைக்கவிருப்பது என்ன என்பது பற்றிய ஒரு முன்னெச்சரிக்கையாகும்.

கடந்த வாரம், தேர்தலில் தேர்வு செய்யப்படாத, நாட்டின் பிரமாண்டமான இராணுவ இயந்திரத்துக்கு பொறுப்பாளியும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய இராஜபக்ஷ, கூட்டமொன்றில் உரையாற்றிய போது, "உள்நாட்டில் அல்லது வெளியில் இருந்து எந்தவொரு இடைஞ்சலும் இன்றி இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க பாராளுமன்றத்தில் ஒரு அதி பெரும்பான்மையைக் கொண்ட பலமான அரசாங்கம் இன்றியமையாததாகும்" என வலியுறுத்தினார். அரசாங்கத்தின் திட்டங்கள் தெளிவானவை: தேர்தல் முடிந்த கையோடு, தனது பிற்போக்கு பொருளாதார வழிமுறைகளுடன் முன்செல்லவும் மற்றும் எந்தவொரு எதிர்ப்பையும் இரும்புக் கால்காளால் நசுக்கவும் திட்டமிட்டுள்ளது.

தயாரிக்கப்படுவது என்ன என்பது பற்றி தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கவும் மற்றும் அவர்களை ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமாக அணிதிரட்டவும் பிரச்சாரம் செய்ய சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தலை பயன்படுத்திக்கொள்கிறது. எதிர்க் கட்சிகளான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) அரசாங்கத்துடன் எந்தவொரு அடிப்படை வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. சகல அரசியல் போக்குகளையும் சார்ந்த தொழிற்சங்கங்கள், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் தடுத்தன. போலி இடதுசாரி அமைப்புக்களான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும், இத்தகைய தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஊடாக உழைக்கும் மக்கள் தமது உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற ஆபத்தான மாயையை முன்நிலைப்படுத்துகின்றன.

இலங்கையிலான எச்சரிக்கை அறிகுறிகளை ஏனைய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் நிராகரித்தால் அது முன்யோசனையற்ற நடவடிக்கையாகவே இருக்கும். இராஜபக்ஷ அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் எதேச்சதிகார வழிமுறைகள், மூன்றாம் உலக நாடுகள் என சொல்லப்படுபவைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரின் கீழ், உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள், ஏற்கனவே அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது குறிப்பிடத்தக்களவு தாக்குதல்களை தொடுத்துள்ளன.

கிரேக்க கடன் நெருக்கடி பற்றி மார்ச் 17 வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியதாவது: "மக்களால் பெருமளவில் எதிர்க்கப்படும் வழிமுறைகளையே வங்கிகள் கோருவதால், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சில பகுதிகள், ஜனநாயக ஆட்சியை கைவிடுவதைப் பற்றி சிந்திக்கின்றன. இப்போது வங்கிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இந்த மூன்று நாடுகளும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் வரை எதேச்சதிகார ஆட்சியையே கொண்டிருந்தன என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். 1967 மற்றும் 1974க்கும் இடையில் ஒரு கொடூரமான இராணுவ ஜுன்டா நேட்டோவின் ஆதரவுடன் கிரேக்கத்தை ஆண்டது. போர்த்துக்கல்லில், 1926ல் ஸ்தாபிக்கப்பட்ட பாசிச சர்வாதிகாரம் 1974 வரை தூக்கிவீசப்பட்டிருக்கவில்லை. மற்றும் ஸ்பெயினில் 1975ல் பிராங்கோவின் மரணத்தின் பின்னர், உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தும், பாசிச சர்வாதிகாரத்தில் இருந்து மேற்கத்தைய ஐரோப்பிய முறையிலான முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு மாறுவதற்கு 36 ஆண்டுகள் எடுத்தது."

இலங்கையில் தற்போது கட்டவிழ்ந்து வரும் நிகழ்வுகள், அந்த எச்சரிக்கைகளின் முக்கியத்துவத்தையும் மற்றும் சோசலிசத்துக்காகவும் திவாலான இலாப முறைமையை தூக்கி வீசுவதற்குமான ஒரு பொதுப் போராட்டத்தில் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் ஐக்கியப்படவேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved