World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After French regional election victory

Socialist Party leaders call for austerity policies

பிரெஞ்சு பிராந்தியத் தேர்தல் வெற்றிக்குப்பின்

சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடும் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு அழைப்பு விடுகின்றனர்

By Kumaran Ira and Alex Lantier
2 April 2010

Back to screen version

மார்ச் மாத பிராந்தியத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சிக்குக் (PS) கிடைத்த வெற்றி தேசிய அதிகாரத்திற்கு திரும்பும் திறனுக்கான தயாரிப்பு என்று பரந்த முறையில் காணப்படுகிறது. அநேகமாக 2012 ஜனாதிபதித் தேர்தலில் இது நிகழக்கூடும். மார்ச் 23 வெளியிடப்பட்ட ஒரு Ifop கருத்துக்கணிப்பின்படி, பழைமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கான ஆதரவுத் தரம் 30 சதவிகிதமானது 2007 தேர்தலுக்குப் பிறகு மிகக் குறைவாக உள்ளது. மார்ச் 22 திகதி கருத்துக் கணிப்பு ஒன்று பிரெஞ்சு மக்களில் 58 சதவிகிதத்தினர் 2012 ல், இரண்டாவது தடவையாக சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள் என்று கூறுகிறது.

சோசலிஸ்ட் கட்சி முகம்கொடுக்கும் இடர்பாடு என்னவெனில், வாக்காளர்கள் சார்க்கோசியின் கடும் சிக்கன கொள்கைகளுக்கு தாங்கள் கொண்டுள்ள விரோதப் போக்கை வெளிப்படுத்த அதற்கு ஆதரவு கொடுத்திருந்தாலும், அதன் வேலைத்திட்டம் ஒன்றும் சார்க்கோசியிடம் இருந்து அடிப்படையில் வேறுபட்டது இல்லை என்பதாகும். இது ஜனாதிபதி பிரான்சுவா மிட்டராண்ட் (1981-1995) மற்றும் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் (1997-2002) காலத்தில் இருந்த சோசலிசக் கட்சி அரசாங்கங்கள் செய்திருந்த சமூக வெட்டுக்கள் மற்றும் தொழில்துறை சரிவுகளில் இருந்து நன்கு காணப்பட்டதோடு மட்டும் இல்லாமல், சோசலிசக் கட்சியினரின் கூட்டாளிகளான தற்பொழுதைய கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயினில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சியினரின் செயற்பாடுகளிலும் தெரியவருகின்றன. கிரேக்கக் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் இவை அனைத்தும் வங்கிகள், நிதியச் சந்தைகளைத் திருப்தி செய்ய சமூகச் செலவினங்களைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.

சிடுமூஞ்சித்தனமான முறையில் இக்கொள்கையை வெளிக்காட்டும் பணி, ஒரு சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதியும் பாரிஸ் புறநகர் Evry ன் மேயருமான Manuel Valls இடம் விழுந்துள்ளது. சமீபத்திய Le Monde முதல்பக்க பேட்டி ஒன்றில் "நாம் பேச்சளவு வனப்புக் கவிதை பாடுவதில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும்" என்ற தலைப்பில் அது வெளிவந்துள்ளது.

"வேறு ஒருவித அரசியலை இடது முன் வைக்க வேண்டும். பேச்சளவு வனப்புக் கவிதையை சோசலிஸ்ட் கட்சி கைவிட்டு, நம்பகத் தன்மை கொண்ட மாற்றீடு ஒன்றைத் தயாரிக்க வேண்டும்'' என்று வால்ஸ் விளக்கினார். அதாவது சோசலிஸ்ட் கட்சி வயிற்றிலடிக்கும் அரசியலுக்கு வாதிட வேண்டும், அதுதான் தொழிலாளர் வர்க்கத்திடம் ஆபத்தான எதிர்பார்ப்புக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்த்து மற்றும் நிதியச் சந்தைகளைக் கவலை கொடுத்தலையும் தவிர்க்கும் எனபதாகும்.

ஓய்வூதிய வெட்டுக்கள் வேண்டும் என்று அழைப்பு விடுத்த வால்ஸ் ஓய்வூதிய முறை தனியார்மயம் ஆக்கப்படுவதற்கான வாய்ப்பு பற்றியும் குறிப்புக் காட்டினார். "இடதின் பங்கு ஜனநாயக மாற்றங்களை மறுப்பது அல்ல, பற்றாக்குறைகளின் அளவை மறைப்பதும் அல்ல.... இடது, ஓய்வூதிய முறைக்கு வாதிட்டு, அதைப்பெறுவதற்கான பணி ஆண்டுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறலாம்."

இந்த ஆண்டு சார்க்கோசி தொழிற்சங்கங்களுடன் ஓய்வூதிய வெட்டுக்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் வேலை செய்யும் காலம் 41 ஆண்டுகளுக்கு மேல் என்றும் ஓய்வூதிய வயது 60க்கு மேல் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் அடங்கும். பிராந்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதன் முதன்மை செயலாளர் மார்ட்டின் ஓப்ரே உட்பட முக்கிய சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள், ஓய்வூதியம் பெறத் தகுதி உடைய வயது குறைந்தது 2 ஆண்டுகள் அதிகமாக, அதாவது 62 வயதாக ஆக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

இந்தப் பின்னணியில் ஓய்வூதியங்கள் பற்றி உடனடியான "தேசிய உடன்பாடு" வேண்டும், அதில் தொழிற்சங்கங்கள், முதலாளிகள், "பெரும்பான்மையில் இருப்பவர்கள்" அதாவது சார்க்கோசியின் UMP கட்சி ஆகியவை அடங்கியிருக்க வேண்டும் என்று வால்ஸ் கூறினார்.

பெப்ருவரித் துவக்கத்தில் சார்க்கோசி அரசாங்கம் 2010-2013 க்கான அதன் உறுதிப்பாட்டுத் திட்டத்தை ஐரோப்பிய ஆணையத்திடம் கொடுத்தது. இதில் பொதுப் பற்றாக்குறை 2013க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதத்திற்கு குறையும் என்று அது மதிப்பிட்டுள்ளது. இது அரசாங்கச் செலவினங்களில் 100 பில்லியன் டொலர்கள் குறைப்பைக் காட்டும்.

சிறிதும் தயக்கமின்றி வால்ஸ் அத்தகைய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்தார். Le Monde, "பற்றாக்குறையின் அளவு (சோசலிஸ்ட் கட்சியை) திரித்தலுக்கு இடமில்லாமல் செய்துவிடவில்லையா?" என்று கேட்டபோது, வால்ஸ், "பற்றாக்குறைகள் வரும் அரசாங்கங்களுக்கு பொறுப்புணர்வு, சிக்கனத்தன்மை தவிர வேறு விருப்புரிமைகளைக் கொடுக்காது" என்று பதில் கூறினார்.

வாரம் 35 மணி வேலைநேரம் என்று கூறப்படும் சட்டத்தையும் அவர் தாக்கினார் --அது சோசலிஸ்ட் கட்சி தலைமையில் ஓப்ரே மந்திரியாக இருந்த இடது பன்முக அரசாங்கத்தால் (1997-2002) ல் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்பொழுது சார்க்கோசியால் "நம் போட்டித்தன்மையைச் சேதப்படுத்துகிறது" என்று கூறப்பட்டு அகற்றப்பட்டுவிட்டது. சார்க்கோசி "flexicurity" அதாவது டச்சு முறை சமூக முறையை ஆதரிக்கிறார். அதன்படி தொழிலாளர்களை வேலையில் இருந்து அகற்றி வேலையின்மை நலன் தொகுப்பில் வைப்பது எளிதாகும்.

ஸ்பெயின் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியான வால்ஸ் நாட்டுப்பற்றுக்கு ஒரு வலதுசாரி வணக்கம் செய்தார். "வெளிநாட்டில் பிறந்திருந்தாலும், நான் பிரெஞ்சுக் குடிமகனாகியுள்ளேன், பிரெஞ்சு தேசிய கீதம் (Marseillaise) இசைக்கப்படும்போது, எப்பொழுதும் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்." UMP அரசியல்வாதிகளைப் பின்பற்றி, கடந்த ஆண்டு சார்க்கோசி நியமித்திருந்த பர்க்கா எதிர்ப்புக் குழுவில் சோசலிஸ்ட் கட்சி முழுமையாக பங்குபற்றி சமீப காலம் வரை இருந்த நிலையில், வால்ஸ் அனைத்துப் பொது இடங்களிலும் பர்க்கா தடை செய்யப்பட வேண்டும் என்ற பிற்போக்குக் கருத்திற்கு வாதிடுகிறார்.

சோசலிஸ்ட் கட்சிக்குள் ஒரு Blairite நபர் என வால்ஸ் நன்கு அறியப்பட்டுள்ளார். ஒரு வெளிப்படையான தடையற்ற சந்தை முறை, சோசலிஸ்ட் கட்சி கொள்கைகளுக்கு வலதுசாரி நியாயப்படுத்துதல் ஆகியவற்றை விரும்புகிறார். 2007 ஜனாதிபதி தேர்தலின்போது, சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகலான் ரோயலுக்கு அவர் நெருக்கமாக இருந்தபோது, வால்ஸ் கூறினார்: "பெரும்பான்மையுடன் சிறிது நாம் செல்லமுடியும், அவர்கள் நாம் உடன்படும் பொருள் பற்றி நாம் கூறுவதைப்பற்றி கவனித்துக் கேட்டால். நீதித்துறைக்கு கொடுக்க வேண்டிய வழிவகைகள் பற்றி நான் சிந்திக்கிறேன் --குற்றங்களுக்கு எதிரான போராட்டம், மற்றும் குடியேற்றப் பிரச்சினை போன்றவற்றில்." சார்க்கோசி, ரோயல் இருவரையும் எதிரொலித்த விதத்தில் அவர் சோசலிஸ்ட் கட்சி தன் எதிர்ப்பை "அரசாங்கம் உதவி அளிப்புக்களுக்கு எதிராக" தன் கருத்துக்களை வெளியிட வேண்டும்" என்றார்.

தன்னுடைய வேட்பு நிலையை சோசலிஸ்ட் கட்சிக்காக 2010 ஜனாதிபதி துவக்கத் தேர்தல்கள் பற்றி கடந்த ஜூன் அறிவித்தபோது, வால்ஸ் கட்சி தன்னை "சோசலிஸ்ட்" என்று கூறிக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றார். "மேலிருந்து கீழ் வரை சோசலிஸ்ட் கட்சியின் செயற்பாட்டை நாம் மாற்ற வேண்டும்.....[மற்றும்] பெயரை மாற்ற வேண்டும், ஏனெனில் சோசலிசம் என்ற சொல்லே காலம் கடந்து பழையதாகிவிட்டது. இது 19ம் நூற்றாண்டுக் கருத்தாய்வுகளைக் குறிக்கிறது" என்று கூறினார்.

இத்தகைய பெயர் மாற்றம் சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரித் தன்மை, தொழிலாளர் வர்க்க எதிர்ப்புத் தன்மையை வெளிப்படையாகக் காட்டுவதால், சோசலிஸ்ட் கட்சியின் வாக்குத் தளம் அம்பலமாகும் என்பதால் அது ஏற்கப்படவில்லை. எனவே சமீபத்திய பேட்டியில், Le Monde கூச்சலிட்டது: "துவக்கத் தேர்வுகளில் வேட்பாளர் என்ற முறையில், வலதுசாரிச் சார்பு உடையவர் எனத் தோன்றுவதில் உள்ள ஆபத்தை நீங்கள் உணரவில்லையா?'

வால்ஸ் பதில் கூறினார்: "நான் இடது என்று எவருக்கும் நிரூபிக்கும் தேவையில் இல்லை. பணயத்தில் இருப்பது நம் நம்பகத்தன்மையும் இந்த கஷ்ட காலத்தில் ஆளும் திறனும்தான். இதுதான் என் வேட்புத்தன்மையின் நோக்கம்."

இத்தகைய அறிக்கை "இடது" அல்லது "தீவிர இடது" என்று பிரான்ஸில் அழைக்கப்படுபவற்றின் அழுகிய பேரழிவுத் தன்மையை அம்பலப்படுத்துகிறது. அதிகாரத்திற்கு வருவதற்காக சோசலிஸ்ட் கட்சி பல சொல் மாற்றங்களை செய்யும் திறமையைக் கொண்டுள்ளது என்று வால்ஸ் கருதுகிறார். இதற்கு பிரெஞ்சு அரசியலில் நிலைத்துள்ள இடதில் இருந்து எந்த சவாலும் வராது என்றும் நினைக்கிறார்.

உயர்மட்ட சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகளின் வலதுசாரிக் கருத்துக்களோ, அதன் சான்றுகளோ பிரெஞ்சு கம்யூனிஸ்ட கட்சி மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) ஆகிய சக்திகள் இடதில் ஒரு பகுதி என்று வலியுறுத்துவதை அதிர்விற்கு உட்படுத்தாது. அவர்கள் வெளிப்படையாகப் பேசினால், அவர்கள் தாங்களும் வால்ஸின் கருத்தில் பங்கு கொள்ளுவதாகவும், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் போராட்டம் ஆபத்து நிறைந்தது, கடந்த காலத்துடன் முடிவுற்றுவிட்டது என்று செய்துவிட வேண்டும் என்பர்.

மாறாக வால்ஸ் குட்டி முதலாளித்துவ தனிநபர்வாத முறையை தன் Le Monde பேட்டியில் காட்டுகிறார்: "புதிய நம்பிக்கை இடது தனிநபர் மேன்மையை வெளிப்படுத்த வேண்டும், ஒவ்வொருவரும் திறனுக்கேற்றபடி வளர அனுமதிக்க வேண்டும் என்று கூறவேண்டும் என்பதுதான்."

இந்த உடன்பாடுதான், பிரெஞ்சு, ஏன் ஐரோப்பிய "இடதால்" கொடுக்கப்படுகிறது. ஓய்வூதியங்கள், வேலைகளை இழக்கப்படுவதற்கு ஈடாக ஒவ்வொரு தனிநபரும் அசாதாரண சலுகையால் தான் இயல்பில் கொண்டுள்ள திறனைப் பெறுவர். தொழிலாளர்களுக்கு என்ன நேர்ந்தாலும், உலகில் மற்றவர்களுக்கு அனைத்தும் சிறப்பாக நடைபெறுகிறது என்பதைக் கூறாமல் உணர்த்துவதுதான் இது!


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved